Home Blog Page 186

2 மில்லியன் பேர் பாதிப்பு: 607 பேர் உயிரிழப்பு!

2 மில்லியன் பேர் பாதிப்பு: 607 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

214 பேர் காணாமல்போயுள்ளனர்.

4 ஆயிரத்து 164 வீடுகள் முழமையாகவும், 67 ஆயிரத்து 505 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

43 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் 5 லட்சத்து 86 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்து 82 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால் 25,000 டின்மீன் பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

14 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இந்த டின்மீன் தொகை, இன்று (05) பிற்பகல், மாலைதீவு உயர் ஸ்தானிகரால் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) செயல்பாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான் தர்மவிக்ரம, மேற்கு கடற்படைப் பகுதியின் பிரதிப் பிராந்தியத் கட்டளை அதிகாரி கொமடோர் அருண விஜேவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் டயனா பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாலைதீவு அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த உணவுப் பொருட்களை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னறிவிப்புகள் வெளியாகும்போது தூங்கிக்கொண்டிருந்த அரசு: சஜித் சீற்றம்

வளிமண்டலவியல் திணைக்கள் அதிகாரிகள் 15 நாட்களாக முன் அறிவிப்புச் செய்து கொண்டிருந்த வேளை, தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம், அனர்த்தம் ஏற்பட்ட பின்பு வானிலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த முன்னறிவுப்பை உரிய தரப்பினர் நவம்பர் 11 முதல் வெளியிட்டு வந்தனர்.

வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் , வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தென்கிழக்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றமும், பலத்த காற்றும் வீசும்.

அத்துடன், இலங்கையின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று தெரிவித்தனர். இது பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறக்கூடும் என்று முழு நாட்டிற்கும் தகவல் வெளியிட்டனர்.

ஊடகங்களுக்கு முன்வந்து இது குறித்து தெரியப்படுத்திய காலப்பிரிவில் நாட்டில் மழை காணப்படவில்லை.

வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதானிகள் மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதானிகள் ஊடக சந்திப்புகளை நடத்தி, இந்த புயல் அவதானம் தொடர்பில் மக்களை தெளிவூட்டி வந்தனர்.

நவம்பர் 11, நவம்பர் 12, நவம்பர் 14 மற்றும் நவம்பர் 17 ஆகிய திகதிகளில் குறித்த அதிகாரிகள் இது தொடர்பாக வெளிக்கொணர்ந்து முன்னறிப்புச் செய்து கொண்டே வந்தனர்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கூட நவம்பர் 21 மற்றும் நவம்பர் 22 ஆகிய திகதிகளில் இந்த விடயம் குறித்து நாட்டிற்கு அறிவித்தார்.

நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மீண்டும் ஒருமுறை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் பணியைச் செய்து வந்தன .

நவம்பர் 11 முதல் நவம்பர் 15 வரை இந்த மோசமான வானிலை நிலைமை தொடர்பிலான விடயங்கள் வெளிவந்தபோதும் கூட, இடர் முகாமைத்தைவ நிலையத்தின் நடவடிக்கைகளின் செயலற்ற தன்மைக்கான காரணங்கள் யாது என கேள்வி எழுப்புகிறோம்.

தற்சமயம் வளிமண்டலவியல் திணைக்களத்தினரை நோக்கி விரல் நீட்டாமல் இடர் முகாமைத்துவ செயல்பாட்டில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும்.

இந்த சூறாவளி புயலால் இந்த நாட்டு மக்கள் தங்கள் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, அனாதைகளாக விடப்பட்டுள்ளனர். நாட்டில் பல துறைகள் சீர்குலைந்து, மில்லியன் கணக்கான மக்கள் வீடிழந்து தவிக்கும் நேரத்தில், இந்த மோசமான வானிலை குறித்த விடயங்களைச் சரியாக முன்வைத்த அதிகாரிகள் மீது அச்சுறுத்தல்களை விடுக்காது, இந்தப் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறுகளைத் திருத்திக் கொள்வதே மிக உயர்ந்த கடமையாக அமையும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகவும், விரைவான சேவைகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே, அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு எதிர்க்கட்சி கோரியது.
ஆனால் அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது. இவ்வாறு ஊடகங்களை அடக்குமுறைக்குட்படுத்த நாம் இந்த அவசரகால நிலையை கோரவில்லை .

புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வசதி: கூட்டுத்திட்டம் ஜனவரியில் ஆரம்பம்!

புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்காக நிதி அமைச்சு மற்றும் வங்கிகள் இணைந்து ஒரு கூட்டுத்திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் புதிய தொழில்முயற்சியாளர்களுக்குக் கடன் வழங்குவதற்காக எண்பதாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகையை பயனுள்ள வகையில் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்குவதற்காகவே இந்தக் கூட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்தக் கடன் வசதிகள் எந்தெந்தத் துறைகளுக்கு வழங்கப்படவுள்ளன என்றும் சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் செயன்முறை குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டுவதற்காக ஒரு செயலமர்வை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் அனைத்துத் தொழிலாளர்களினதும் தகவல்களை ஒரே ஒரு அமைப்பிற்குள் சேகரிப்பதற்காக, கைத்தொழிலாளர்களுக்கான தேசியத் தரவு முறைமை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்தார்.

அதற்கமைய, அந்தத் தரவு முறைமையில் பதிவுசெய்து கொள்வதற்காக அனைத்துத் தொழில் முயற்சியாளர்களையும் அறிவுறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அந்தத் தரவு முறைமையில் பதிவுசெய்து கொள்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும் இங்கு கருத்துத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்குப் பிணையில்லாத கடன் வசதிகளை வழங்குவது குறித்தும் குழுவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அத்துடன், வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அந்தத் தொழிற்சாலையின் பிரதானிகள் குழுவில் தகவல்களைச் முன்வைத்தனர். அதற்கமைய, தொழிற்சாலையில் இருந்த குறைபாடுகளைச் சரிசெய்து, இதுவரை காணப்பட்ட மாதாந்த 150 – 180 மெட்ரிக் டொன் உற்பத்தித் திறனை 400 மெட்ரிக் டொன் வரை அதிகரிக்க முடிந்துள்ளதாக அந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அத்துடன், இந்நாட்டில் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள தேசிய ஆலோசனைக் கையேடு குறித்தும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

தற்போது குழப்பமான வகையில் நடைமுறையில் உள்ள அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை மேலும் முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அடுத்த ஜனவரி மாதம் இந்தக் கையேடு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு யோசனை!

இலங்கையை மீட்பதற்கு சர்வதேச உதவி அவசியம். எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை உடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளருமான் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையானது நாட்டு மக்களுக்கு சொந்தமானது. மாறாக ஆட்சியாளர்களுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்களுக்கு நாட்டை ஆள்வதற்குரிய தற்காலிக அதிகாரமே வழங்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு போதுமானளவு அனுபவம் இல்லை. எனவே, அனுபவம் உள்ளவர்கள் கூறும் ஆலொசனைகளை ஏற்பதற்கு தயாராக வேண்டும்.
இலங்கையை மீட்பவதற்கு சர்வதேச உதவி அவசியம்.

எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்துமாறு கோருகின்றோம். இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு எதிரணிகளும் ஒத்துழைப்பு வழங்கும்.”- என்றார்.

மற்றுமொரு போரை நிறுத்தினார் ட்ரம்ப்: அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

ஆபிரிக்க நாடுகளான கொங்கோ மற்றும் ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார்.

இதில் கொங்கோ, ருவாண்டா இடையே உடன்பாடு ஏற்பட்டது. இரு நாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப ஒப்புக்கொண்டன.

இதையடுத்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் கொங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் கொங்கோ ஜனாதிபதி பெலிக்ஸ் ஷிசெ கெடி, ருவாண்டா ஜனாதிபதி பால் ககாமே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து கொங்கோவில் உள்ள கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெட்டி எடுக்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இது ஆப்பிரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள், உலகிற்கு ஒரு சிறந்த நாள். இன்று, பலர் தோல்வியடைந்த இடத்தில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். உலகம் முழுவதும் நாங்கள் அமைதியை நிலை நாட்டுகிறோம்.

இதுவரை யாரும் கண்டிராத அளவில் போர்களை நாங்கள் தீர்த்து வருகிறோம். இதுவரை 8 போர்களை தீர்த்துவிட்டேன். மேலும் இன்னொரு போரை தீர்க்க முயற்சி நடக்கிறது. அது ரஷியா- உக்ரைன் போர். அதனை நிறுத்த நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

புடினுக்கு இராணுவ அணி வகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு!

இந்தியா வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த புடின், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து, புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய ராணுவ அணிவகுப்பை புதின் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து, மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி புடின் அஞ்சலி செலுத்தினார்.

ஆயிரத்துக்கு மேற்பட்ட குளங்கள் சேதம்!

அனர்த்த நிலைமையால் விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 1160 சிறு குளங்கள் சேதமடைந்துள்ளன.

இவற்றில் 125 சிறு குளங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.

747 சிறு குளங்களுக்கு பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரம், வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள சிறு குளங்களே அதிகளவில் சேதமடைந்துள்ளன.

இந்த குளங்களுக்கு முன்னுரிமையளித்து அவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கான விரைவான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதி ஒதுக்கீடும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் 15,958 குளங்கள் தற்போது பராமரிக்கப்படுகின்றன.

நிவாரணம் வழங்க சென்ற கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து காரொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (22) மலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், நானுஓயா சாமர்செட் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நோர்வூட்டில் இருந்து நுவரெலியா ராகலை பகுதிக்கு இயற்கை அனர்த்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு மீண்டும் நோர்வூட் நோக்கிப் பயணித்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...

ஈரான் அணிக்கு பதிலாக இத்தாலியை இணைக்குமாறு யோசனை!

0
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை இணைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சிறப்பு தூதுவரான பாலோ ஜாம்போலி Paolo Zampolli கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் ட்ரம்பின் மிக முக்கிய சகாக்களில்...

காவத்தை சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்!

0
கஹாவத்தை, நீலாகாமம் இலக்கம் 01 தோட்டப்பிரிவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜாராம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "கஹாவத்தை...