உலகலாவிய மோதல் வெடிக்கும்: எலான் மஸ்க் எச்சரிக்கை!
உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க், எச்சரித்துள்ளார்.
உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் விவாதித்ததற்குப் பதிலளிக்கும் விதமாகவே மஸ்க் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஹண்டர் ஆஷ் என்ற எக்ஸ் பயனர், அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன. போர் அச்சுறுத்தல் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் செயலற்றுப் போயுள்ளன, எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளராகவும் உள்ள எலான் மஸ்க் இதற்கு பதிலளிக்கையில்,
“போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று நீங்கள் கேட்கலாம். என் கணிப்புப்படி 2030-க்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும் ” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது இந்தக் கருத்து குறித்து எலான் மஸ்க் குறிப்பிட்டோ அல்லது விரிவாகவோ எதுவும் கூறவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராக மஸ்க் பெற்ற அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரது இந்தக் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விசேடஅமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய சில முடிவுகளை எடுப்பதற்காகவே இக்கூட்டம் நடைபெறுகின்றது என தெரியவருகின்றது.
மரக்கறி விலைப்பட்டியல் (03.12.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (03.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
எதிரணி தலைவர்களுடன் ரணில் இன்று விசேட சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டையும் மக்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பது, எதிரணிகளால் எப்படியான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பன பற்றி ஆராயவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“ இந்தமுறை ஏற்பட்டுள்ள அனர்த்தத்தால் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு பாதிப்பும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. அதனால் கடந்த காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த அனுபவமுள்ள தலைவர் என்றவகையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, இந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் உடனடி நிவாரணங்கள் கிடைக்கச் செய்யும் நோக்கில் 16 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை ஒன்றை அரசாங்கத்துக்கு வழங்கி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களை மீள இயல்பு நிலைக்கு கொண்டுவர எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என ஆராயவே இன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா ஜனாதிபதி நாளை இந்தியா வருகிறார்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அரசு முறை பயணமாக நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
அவரது பயணத்தின் போது ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து அதிநவீன எஸ் 500 ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்திய – ரஷ்ய 23-வது வருடாந்திர உச்சி மாநாடு டிசம்பர் 4, 5-ம் திகதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் நாளை டெல்லிக்கு வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி புடினும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, அணுசக்தி, தொழில்நுட்பம் குறித்து தலைவர்கள் இருவரும் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணைகளை வாங்க கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரை 3 எஸ் 400 ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியிருக்கிறது. மீதமுள்ள 2 தொகுப்புகள் அடுத்த ஆண்டில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது எஸ்-400 ஏவுகணைகள் மிக முக்கிய பங்கு வகித்தன.
அதேவேளை,ஈ ரஷ்யாவிடம் இருந்து எஸ்யு-57 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்த போர் விமானங்களுக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்திருக்கிறது.
215 பாரிய மண்சரிவு அனர்த்தங்கள் பதிவு!
நாட்டில் கடந்த சில தினங்களாக 215 பாரிய மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, மொனறாகலை மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களிலேயே மேற்படி பாரிய அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், சிறு அளவிலான மண்சரிவு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
வெள்ளத்தில் சிக்கிய வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கும் உதவி 25,000 ரூபாவாக அதிகரிப்பு
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
”இடர் முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக” நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட போது தெரிவித்தார்.
இந்த உதவித் தொகையை வழங்குதற்காக 7.5 பில்லியன் ரூபா (750 கோடி ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை வரவு செலவுத் திட்டத்தில் அனர்த்த முகாமைத்துவத்திற்காக ஒதுக்கப்பட்ட 30 பில்லியன் ரூபாவில் இருந்து வழங்கப்படுவதாகவும் நிதியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
திறைசேரியால் பேணப்படும் நிதி முகாமைத்துவம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் வெற்றி என்பவற்றின் காரணமாக இந்த அதிகரிப்பை மேற்கொள்ள முடிந்ததாகவும் நிதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு நிதி வழங்குவதன் ஊடாக, பிரஜைகளின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது துரிதப்படுத்தப்படும் என்று செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கான பொறிமுறை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தமது பிரதேச கிராம சேவகர்களுடன் தொடர்பு கொண்டு இந்த நிதியைப் பெற முடியும் என்றும் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
மேலதிகமாக நிவாரணம் தேவைப்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பரிந்துரைகளின்படி நிதியை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!”
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து ‘பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொன்கோடியா, எஸ்கடேல், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்’ அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் அவர் வழங்கி வைத்தார்.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நிலவும் கடும் காலநிலை சீர்கேடு காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பலர் தமது வீடுகளையும் உடைமைகளையும் இழந்து இடைத்தாங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஜீவன் தொண்டமான் மேற்கொண்ட இந்த நிவாரணப் பணியில், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகத்தர்கள், இ.தொ.கா உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து செயல்பட்டனர்.
மேலும், இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் வழங்கும் செயற்பாடானது மலையக பிரதேச பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிர் நாட்களுக்குள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், உதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள்
இலங்கைக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள்
– பல உலகத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தமது அனுதாபத்தை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக அறிவிப்பு
நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்து, இலட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் விரிவடைந்து வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. எமது நாட்டின் பிரதான நட்பு நாடுகள் நேரடியாக தலையிட்டு உதவி வருகின்றன. பல உலகத் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளும் கடந்த தினங்களில் ஜனாதிபதியுடன் தொலைபேசி ஊடகவும் வேறு வழிகளிலும் தொடர்பு கொண்டு தங்கள் அனுதாபத்தையும், மீளக் கட்டியெழுப்புவதற்கான தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளன.
இந்தியா
தற்போதைய நிலைமையை துரிதமாக சீரமைப்பதற்கு இந்தியா உதவி அளித்து வருகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, இந்த கடினமான வேளையில் இலங்கை மற்றும் அதன் மக்களுடன் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், மீட்பு மற்றும் புனரமைப்பு முயற்சிகளுக்காக சாகர் பந்து செயற்பாட்டின் கீழ் தொடர்ந்து உதவி அளிப்பதற்கும், இலங்கையின் மீள்கட்டமைப்பில் தேவையான அனைத்து ஆதரவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முதலில், இந்திய INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி ஆகிய கடற்படைக் கப்பல்கள் மூலம் நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதோடு தொடர்ந்து உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானும் தனது ஆதரவை வழங்கி வருவதோடு தமது கடற்படையின் PNS SAIF கப்பல் ஊடாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது.
அமெரிக்கா
ஆற்றங் கரைகளை வலுப்படுத்தவும், நீர் மட்ட உயர்வைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்கா 20,000 பொலிசெக் உரைகளை நன்கொடையாக வழங்கியது. அதே நேரத்தில் ஜெனரேட்டர்கள், அடுப்புகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் கூடாரங்களை உலக உணவுத் திட்டத்தின் (WFP) ஊடாக வழங்க உள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்தியதோடு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு இலங்கை சார்பாக ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்தார். தற்போதைய அனர்த்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த கோர், அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும் இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும் என்பதை வலியுறுத்தினார்.
இலங்கை அண்மைக் காலத்தில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் இதன் பொது சுட்டிக்காட்டப்பட்டது.
அவுஸ்திரேலியா
அனர்த்த நிலைமையில் துரித மீட்பு மற்றும் மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க அவுஸ்திரேலியா உறுதியளித்தது.
அதே சமயம் நேபாளமும் நிவாரண முயற்சிகளுக்கு 200,000 அமெரிக்க டொலர்களை பங்களிப்பதாக அறிவித்துள்ளது.
மாலைதீவு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை சமூகத்திற்கு மாலைதீவு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. 50,000 அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கவும் இடம்பெயர்ந்தவர்களுக்காக 25,000 டின்மீன்களை நன்கொடையாக வழங்கவும் மாலைதீவு உறுதியளித்துள்ளது.
இது தவிர மாலைதீவில் உள்ள இலங்கை வர்த்தக சமூகம் தற்போதைய மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக 33,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகமும் மீட்பு, அவசர உதவி வழங்கல் மற்றும் துரித மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக உதவி வழங்கி வருவதோடு தேவையான ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், சீனா, துருக்கி, கியூபா, பங்களாதேஷ், ஐரோப்பிய ஒன்றியம், பலஸ்தீனம் மற்றும் நிகராகுவா உள்ளிட்ட பல நாடுகளும், பல சர்வதேச பங்காளிகளும் இந்த அனர்த்தம் மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படும் இந்த நிலைமையில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளன .
அனர்த்த முகாமைத்துவத்திற்காக கிடைக்கும் இந்த இராஜதந்திர கூட்டாண்மை மற்றும் வலய ஒத்துழைப்பு இலங்கையின் மீளமைப்பு முயற்சிகளை துரிதப்படுத்தி வலுப்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் இந்த சர்வதேச ஆதரவு மிகவும் முக்கியமானது.















