Home Blog Page 218

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான அஜித் தோவலை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

கடல்சார் தொடர்புகள், திறன் விருத்தி மேம்பாடு, நவீன தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், தெற்காசிய நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துதல் என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் எழும் சவால்களை எதிர்கொள்ள தகவல் பரிமாற்றம், பிராந்திய அபிவிருத்திக்கான முன்முயற்சிகள் மற்றும் நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது

கலஹாவில் இபோச பஸ்மீது மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி: 9 பேர் காயம்!

கலஹா, தெல்தோட்டை வீதியில் ஹால்வத்த பகுதியில் இபோச பஸ்மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

கண்டியில் இருந்து தெல்தோட்டை நோக்கி இன்று (6) பிற்
பகல் பயணித்த பஸ்மீதே இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளது.

காயமடைந்தவர்கள் கலஹா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

 

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவும்!

 

“தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் மீண்டும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரனால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால், சில நிபந்தனைகளை அவர் கூறியுள்ளார். அவை என்ன நிபந்தனைகள் என இதுவரை எமக்குத் தெரியாது. பேச்சுவார்த்தை ஊடாக இணைய முடியும். பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தம் இல்லை.”

– இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி முறைகளை விடுத்து அரசு ஆளுநர் ஆட்சியை நடத்துவதை நிறுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றது. இதனடிப்படையில் பார்க்கும் போது அடுத்த வருடமும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் அரசு இல்லை எனத் தெரிகின்றது.

எல்லை நிர்ணய வேலைகளை விரைவில் மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த வேண்டும்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளைக் கோரியிருக்கின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் கைத்துப்பாக்கிகளைக் கோரியிருக்கலாம்.

கடந்த அரசுகள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருந்தது. ஆனால், இந்த அரசு பாதுகாப்பு வழங்காத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம். அரசு முதலில் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்க வேண்டும்.” – என்றார்.

கணவனுக்கு எதிராக போதைப்பொருள் குற்றச்சாட்டு: என்.பி.பி. உறுப்பினர் ராஜினாமா!

 

கணவன் போதைப்பொருளுடன் கைதாகியுள்ள நிலையில், அவரது மனைவியான தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகியுள்ளார்.

அநுராதபுரம், எப்பாவல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய குறித்த அதிபருக்கு சொந்தமான எப்பாவல பகுதியிலுள்ள ஹோட்டலொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரான அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மகனும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பெலியகொடை பிரதேச சபை உறுப்பினரானார். பெலியகொடை பகுதியிலுள்ள அவர்களது வீடும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.

பதவி விலகல் கடிதத்தை கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் நகல் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி முழு வீச்சுடன் செயல்பட்டுவருகின்றது. எனவே, சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும், நாட்டில் ஒரு நல்ல அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க தேசிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலுமே அவர் பதவி விலகியுள்ளார்.

2026 பாதீடு: 8 ஆம் திகதி விவாதம் ஆரம்பம்: டிசம்பர் 5 இறுதி வாக்கெடுப்பு!

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவுசெலவுத்திட்ட உரை/ வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) நாளை (07) பி.ப. 1.30 மணிக்கு நிதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிப அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான முழுமையான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 நவம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

2025 செப்டம்பர் 26 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது.
அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.

இக்காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். அத்துடன், குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் மு.ப 9.30 மணிக்கும், ஏனைய நாட்களில் மு.ப 9.00 மணிக்கும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

அதற்கமைய, இக்காலப் பகுதியில் ஒவ்வொரு நாளும் நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு மேலதிகமாக வாய்மூல விடைக்கான ஐந்து கேள்விகள் மற்றும் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்வி ஒன்றுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இக்காலப் பகுதியில் பி.ப 6.00 மணிவரையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடத்துவதற்கும், வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் பி.ப 6.00 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு 50:50 என்ற அடிப்படையில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகள் தொடர்பான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுகாதாரத்துறைக்கு இந்தியாவிடம் உதவி கோரினார் சஜித்!

 

இலங்கை மருத்துவத் துறையில் நிலவும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறைக்கு தீர்வு காண இந்திய அரசின் ஆதரவை வழங்குமாறு திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டாவை சந்தித்து, கோரிக்கை விடுத்தார்.

இது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் இன்னுமொரு நடவடிக்கையாகும்.

இலங்கையின் தேசிய சுகாதார கட்டமைப்பினூடாக பல தசாப்த காலமாக இலவச சுகாதார வசதிகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போது அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் பல மருந்துகளின் பற்றாக்குறை, அவற்றைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான மக்களை கடுமையாக பாதித்துள்ளதென சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

ஒரு சில மருந்துகள் தனியார் துறையினூடாக மாதிதிரமே பெற்றுக்கொள்ள முடியுமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அரச மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் அச்சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும், இந்தியா வழங்கும் அவ்வொத்துழைப்பை மரியாதையுடன் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் இலங்கையின் சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் கடந்த காலத்தில் வழங்கிய பங்களிப்பையிட்டும் கௌரவ சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்தார்.

குறிப்பாக, 2016 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பிக்கப்பட்ட ‘1990 – சுவ செரிய’ அம்புலன்ஸ் சேவையை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அச்சேவையை அறிமுகம் செய்ததினூடாக நாடு முழுவதும் அவசர மருத்துவ பதிலளிப்பு கட்டமைப்பு வலுவடைந்ததாகவும்,அது “உயிர் காக்கும் கூட்டாண்மை” என விவரிக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது, ஔடத ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது மற்றும் அனைவருக்கும் அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியம் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் விரிவாக கலந்துரையாடினர்.

 

தென்னாபிரிக்காவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை: ஜி – 20 மாநாடும் புறக்கணிப்பு!

 

தென்னாபிரிக்காவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜி – 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அத்துடன், ஜி -20 நாடுகளில் தென்னாபிரிக்கா அங்கத்துவம் வகிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜி – 20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பு கடந்த வருட மாநாட்டின்போது தென்னாபிரிக்காவுக்கு வழங்கப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் குறித்த மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை தென்னாபிரிக்கா செய்துள்ளது.

மாநாட்டுக்கு தென்னாபிரிக்கா ஜனாதிபதியே தலைமை தாங்குவார். ஆபிரிக்க மண்ணில் இம்முறையே முதன்முறையாக ஜி – 20 மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தென்னாரிக்காவில் வெள்ளையர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், இனப்படுகொலை நடத்தப்படுவதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்கொரியா, அமெரிக்கா, தென்னாபிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஆபிரிக்க ஒன்றியம் என்பன ஜி – 20 கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

 

இறம்பொடையில் குளவிக்கொட்டு: எழுவர் பாதிப்பு!

இறம்பொடை, வெதமுல்லை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், எழுவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆண் தொழிலாளர்கள் ஐவரும், பெண் தொழிலாளர்கள் இருவருமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
கௌசல்யா.

மாகாணசபை ஆட்சியில் மொட்டு கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக மாறும்!

மாகாண சபைத் தேர்தல் நடக்கும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதாக இருந்தால் பழைய முறைமையின்கீழ் அதனை செய்யலாம். நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் அதற்குரிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றலாம்.

ஆனால் தேர்தல் நடத்தப்பட்டால் தமக்கு ஏற்படும் நிலை குறித்து அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால்தான் எல்லை நிர்ணய விடயத்தைக் காண்பித்து இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஜனாதிபதிதேர்தலில் 2.5 சதவீத வாக்குகளை கிடைக்கப்பெற்றன. அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அது 10 சதவீதமாக அதிகரித்தது.

எனவே, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும். மாகாணசபைகளில் முதலமைச்சர் உட்பட ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கட்சி மாறும்.” எனவும் டிவி சானக குறிப்பிட்டார்.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

ஹங்குராங்கெத்த ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிடம் திறப்பு

0
நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இலங்கையில் முதன்முதலில் தேயிலை பயிரிடப்பட்ட வரலாற்றுச்...

2.5 மில்லியன் டொலர் திருட்டு – விசாரணைக்கு உதவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள்

0
நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணையக் குற்றவாளிகள் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருடிய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, அவுஸ்ரேலிய அதிகாரிகள் உதவி வருவதாக அவுஸ்ரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார். இந்த...

சாம்பியனானது பசறை தமிழ் மகா வித்தியாலயம்!

0
பசறை வலய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற இருபது வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில், 2026 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை பசறை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கைப்பற்றினர். இந்த வெற்றியின் பின்னணியில் மாணவர்களின் விடாமுயற்சி மற்றும்...