Home Blog Page 252

235 நாட்களுக்கு பிறகு சிக்கிய செவ்வந்தி: ஒப்பரேஷன் அரங்கேறியது எப்படி?

 

பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் பிரதான மூளையாளியாக செயற்பட்ட 26 வயதான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ளன.

கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

சட்டத்தரணிபோல வேடமிட்டுவந்த நபரொருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றார். எனினும், சம்பவத்துக்கு மறுநாள் அவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், பெண் சட்டத்தரணிபோல் வேடமிட்டு சட்டப்புத்தகத்துக்குள் துப்பாக்கியை மறைத்து, அதனை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுவந்த இஷாரா செவ்வந்தி தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் பல பகுதிகளிலும் தேடுதல் வேட்டை இடம்பெற்றது. அவர் சிக்கவில்லை. அவர் கடல் வழியாக வெளிநாடொன்றுக்கு தப்பிச்சென்றிருந்தார். பின்னர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சர்வதேச பொலிஸாருக்கும் இது பற்றி தெரியப்படுத்தப்பட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கணேமுல்ல சஞ்ஜீவவைக் கொலை செய்வதற்குரிய ஒப்பந்தத்தை வெளிநாட்டில் இருந்து வழங்கிய நிழல் உலக தாதா கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள குழு உறுப்பினர்கள் சிலர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கை மற்றும் இந்தோனேசிய பொலிஸார் இணைந்தே அவர்களை மடக்கிப்பிடித்திருந்தனர்.
கெஹேல்பத்தர பத்மேவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இலங்கையின் விசேட பொலிஸ் குழுவொன்று நேபாளம் சென்றுள்ளது. அங்குள்ள பொலிஸாரின் ஒத்துழைப்பையும் பெற்று இஷாரா செவ்வந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக நேபாளத்தில் மூன்று நாட்கள்வரை ஒப்பரேஷன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேபாளம் தலைநகர் காத்மண்டு பகுதியில் மலைப்பகுதியொன்றில் அமைந்திருந்த வீடொன்றில் தலைமறைவாகி இருந்த நிலையிலேயே அவர் சிக்கியுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பிறகு செல்வந்தி 4 நாட்கள் இலங்கையில் தலைமறைவாகி இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே அவர் தலைமறைவாகி இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. பின்னர் இந்தியாவுக்கு தப்பிச்சென்று அங்கு மூன்று வாரங்கள் தங்கி இரு
ந்த பின்னரே நேபாளம் சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு ஆண்களும், இரு பெண்களுமே நேபாளத்தில் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் செந்தவந்தி போல் இருந்துள்ளார் எனவும், போலி கடவுச்சீட்டு ஊடாக செவ்வந்தியும், அவரும் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே. பாய் என்பவரே செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார் என தெரியவருகின்றது. இவர் நிழல் உலக தாதா கெஹேல்பத்தர பத்மேயின் சகாவெனவும் தெரியவருகின்றது.
செவ்வந்தியுடன் இணைந்து அவரும் வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார். இவர் ஊடாகவே செவ்வந்திக்குரிய பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

கைதானவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு: 2 கோடி ரூபா நிதிக்கு அனுமதி

இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை, நீதி அமைச்சு வழங்கியுள்ளது.

நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பபாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த கட்ட அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என அகழ்வாய்வு நிபுணர்கள் கூறுகின்றனர்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்றைய தினம் (ஒக்டோபர் 13), யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம், வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளுக்கான நிதி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்ட 19 மில்லியன் ரூபாய் எங்களுக்குக் கிடைத்துள்ளது.”

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், சட்டத்தரணிகள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் அகழ்வாய்வு நிபுணர்களுடன் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியைப் பார்வையிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகழ்வாய்வு பணிக்குப் பொறுப்பான நிபுணர்கள், அகழ்வாய்வு நடைபெறும் இடத்தில் சில இடங்களில் ஏற்கனவே மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இந்த நாட்களில் அப்பகுதியில் மழை பெய்து வருவதால், இந்த நேரத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியாது எனவும் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை நவம்பர் 3, 2025 அன்று மீண்டும் விசாரிக்க நீதவான் தீர்மானித்துள்ளார்.

முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

செம்மணி சித்துப்பாத்தி மனித தைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில், குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பை ஆகியவை அடங்கும்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி மன்னார் சதொச மனிதப் புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்கள் உட்பட 376 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

காணி உரிமை தொடர்பில் நாடாளுமன்றில் ஆவணம்: ஆதரவு கோருகிறார் ஜீவன்

மலையக மக்களுக்கான காணி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைப்பதற்கு நான் தயார். அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஏனைய மலையக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஏனைய கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகளையும் தெரிந்து கொள்ள முடியும் என இலங்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மறைந்த தலைவர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் சந்திரசேகரன் காலங்களில் கட்டப்பட்ட சுமார் 30 000 வீடுகளில் 15 000 வீடுகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. வீடுகளுக்கு மாத்திரமின்றி கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தளங்களுக்கும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. எனவே இந்த விடயத்தில் யார் செய்தது எனப் பெயர் பதித்துக் கொள்ளும் போட்டிகளை கைவிட வேண்டும். தற்போது மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் கூட அமைச்சரவையில் இல்லை என்பது துரதிஷ்டவசமான ஒரு விடயமாகும்.

எனவே அமைச்சுப்பதவி இல்லாவிட்டாலும் வரவு – செலவு திட்டத்தில் மலையக மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்திக் கொள்வதற்கேனும் முயற்சிக்க வேண்டும். முன்னாள் நல்லாட்சி காலத்தில் 4 ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்கு காணி அனுமதிப்பத்திரம் (Permit) வழங்கப்பட்டது. அதன் பின்னர் அது காணி உரித்தாக்கப்பட்டது. எனினும் நாம் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்த காலப்பகுதியில் 1000 காணி உரிமங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றையே தற்போதைய பெருந்தோட்ட பிரதி அமைச்சர் , அட்டனிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயனாளிகளிடம் கையளித்திருந்தார்.

ஆனால் இந்த அரசாங்கம் பொறுப்பேற்று ஓராண்டு கடந்தும் வெறும் 237 காணி உறுதிப்பத்திரங்கள் மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளமை ஒரு வேடிக்கையான விடயமாகும். இவ்வாறு தயாரிக்கப்பட்டவற்றில் வெறுமனே 10 காணி உறுதிப்பத்திரங்கள் மாத்திரமே பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வின் போது மக்களிடம் கையளிக்கப்பட்டன. எஞ்சியோருக்கு பயனாளிகளாக அவர்கள் தெரிவு செய்யப்பட்டமையை குறிப்பிட்ட ஒரு காகிதமே வழங்கப்பட்டது. அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். இந்திய வீட்டுத்திட்டம் மாத்திரமின்றி, இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டமானாலும் இதுபோன்றதொரு கடிதம் பயனாளிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எமது ஆட்சியில் முழுமையாக நிர்மானப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட 1000 வீடுகளையே மக்களிடம் கையளித்தோம். மாறாக இவ்வாறான காகிதங்களை வழங்கி மக்களை ஏமாற்றவில்லை. 2020 – 2024 காலப்பகுதியில் 1500க்கும் மேற்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றை வழங்குவதற்கு நாம் பிரம்மாண்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவில்லை. காணி உரித்து என்பது மக்களின் உரிமை சார்ந்த விடயமாகும். அதில் அரசியல் இலாபம் தேட முயற்படுவது பொறுத்தமற்றது. பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமம் வழங்கப்படுவதை பெரும்பான்மையினர் விரும்பவில்லை. ஆளுங்கட்சிக்குள்ள தலைவர்கள் இதனை எதிர்க்கின்றனர்.

எனவே இவ்வாறான சவால்களை கட்சி பேதங்கள் இன்றி அனைத்து மலையகத் தமிழ் பிரதிநிதிகளும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமம் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களால் தமது சுய முயற்சியில் வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ள முடியும். இதற்காண ஆவணமொன்றை தயாரித்து அனைவரும் ஒற்றுமையாக அதில் கையெழுத்திட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என அழைப்பு விடுக்கின்றேன். அதன் பின்னர் இது குறித்து அனைத்து கட்சிகளினதும் நிலைப்பாடு என்ன என தெரிந்து கொள்வோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணி உரிமத்தை வழங்குவதற்கு தயாராகவே இருந்தார். அதற்காக 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டையும் வழங்கியிருந்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளது நிலைப்பாடுகளையும் கேட்றிந்து கொள்வோம். மலையக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் கட்சி பேதங்கள், பதவிகளுக்கு அப்பால் இந்த ஆவணத்தில் கையெழுத்திட தயாரா? இந்திய வீட்டுத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு எமது ஆட்சி காலத்தில் முன்னுரிமையளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குஃபாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது. இது தவறாகும். அனர்த்தங்களால் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் உரிய உதவிகள் வழங்கப்படும்.

எனவே இந்த வீட்டுத்திட்டத்துக்குள் அவர்களை உள்வாங்குவது நியாயமற்றது. லயன் அறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் துயர நிலைமை மாற்றப்பட வேண்டும் என்பதே இந்திய வீட்டுத்திட்டத்தின் நோக்கமாகும். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் சுமார் 46 000 வீடுகள் எவ்வித சிக்கலும் இன்றி நிர்மானித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மலையகத்தில் 14 000 வீட்டுத்திட்டத்தை கூட நிறைவு செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. இதற்கு பிரதான காரணம் காணிக்கான உரிமை பெருந்தோட்ட நிறுவனங்களிடம் காணப்படுகின்றமையாகும். எனவே தோட்டக் காணிகளை அரசாங்கத்தின் பொறுப்பிலெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

பொன்சேகா சொற்போர்: பதிலடி கொடுக்க வேண்டியதில்லை என்கிறது மொட்டு கட்சி!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்கு தெரியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ராஜபக்சக்களுக்கு எதிராக சரத்பொன்சேகா தற்போது கடும் சொற்போர் தொடுத்துவருகின்றார். இறுதிப்போரில் நடந்த சம்பவங்களையும் வெளிப்படுத்தி வருகின்றார். வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தெற்கு அரசியலில் பெரும் அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பொன்சேகாவின் அறிவிப்புகள் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மொட்டு கட்சி செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டண அதிகரிப்பு நிறுத்தம்: சஜித்!

2020 பெப்ரவரியில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி 30 ஆண்டுகளாக தேர்தல்களுக்கு முகம்கொடுத்த அரசியல் கட்சியாக சிலர் கருதினாலும், ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 4 தேர்தல்களை மட்டுமே எதிர்கொண்டுள்ளன. இக்காலப் பிரிவினுள் இந்நாட்டில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பெரும் பணிகளை ஆற்றி வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கமும், மின்சார சபையும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க மின்சாரக் கட்டணத்தை 6.8% ஆல் அதிகரிக்க முனைந்த போது, அண்மைய நாட்களாக நானும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் நாடு முழுவதும் சென்று மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம் என்று கூறி வந்தோம்.

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று காலையிலயே நிராகரித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று (14) கண்டியில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் வகிபாகம் என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதல்ல, மாறாக மக்களுக்கான உண்மையான பொறுப்பை நிறைவேற்றுவதாகும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த இந்த முடிவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நியாயமற்ற மின்சாரக் கட்டண அதிகரிப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தின் காரணமாகவே நிறுத்தப்பட்டது. எதிர்வரும் நாட்களில் இந்த மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கூறியதன் பிரகாரம், ரூ.9000 கட்டணம் ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணம் ரூ.2000 ஆகவும், 33% ஆலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறைக்காத பட்சத்தில், இந்நாட்டு மக்களுடன் சேர்ந்து வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்த சமயம், ​​முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட IMF ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் தெளிவான அதிகாரத்தோடு ஆட்சியில் இருக்கும் இவர்கள் இன்னும் இந்த ஒப்பந்தத்தை மாற்றவில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் அடிமைகளாக மாறி விட்டனர். இந்நாட்டு மக்கள் இப்போது மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலயே வாழ்ந்து வருகின்றனர்.

இன்று நாட்டின் 50% க்கும் அதிகமானோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். மின்சாரக் கட்டணங்களை அதிகரித்து, சாதாரண மக்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. டீல் இல்லாத, மக்களைக் காட்டிக் கொடுக்காத, நடைமுறைக்கு ஏற்ற, மக்கள் நலன் சார்ந்த, எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டு மக்களின் மனித மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

“இரத்தினபுரி மாவட்டத்தில் 15,000 குடும்பங்கள் அபாயகரமான பகுதிகளில் வசிப்பு”

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று (14) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிதியாண்டில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு மீள் கையளிக்க இடமளிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் மூலம் தேவையான அபிவிருத்திப் பணிகள் நடைபெறாததுடன், பணம் விரயமாகும் என்றும், ஒரே திட்டத்திற்கு மீண்டும் மீண்டும் பணம் ஒதுக்குவதால், புதிய திட்டங்களை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் அரச திட்டங்களாக நிர்மாணப்பணிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்ட போதிலும், அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் பராமரிப்பு தொடர்பில் உரிய மதிப்பீடுகள் இடம்பெறாததால், அதன் ஊடாக அரசாங்கத்திற்கு மேலதிக செலவினங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை சார்க் கலாசார நிலையம், அநுராதபுரம் கேட்போர் கூடம் போன்ற பல கட்டிடங்களின் பராமரிப்புச் செலவு அதிகமாக
உள்ளதால் அவற்றை பொறுப்பேற்க எந்த நிறுவனமும் முன்வராத நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா பங்களாக்கள், விடுதிகள், பொது வர்த்தக நிலையங்கள் போன்ற கட்டிடங்கள் வெறிச்சோடிய இருண்ட இடங்களாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான நிறுவனங்களை தனியார் துறை நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமான பொறிமுறையாகும் என்றும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 15,000 குடும்பங்கள் அபாயகரமான பகுதிகளில் வசிப்பதாகவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 2763 குடும்பங்கள் மாத்திரம் வசிப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதன்போது சுட்டிக்காட்டியது.

இரத்தினபுரியை பாதிக்கும் வெள்ளத்தை கட்டுப்படுத்த களுகங்கையின் இரண்டு கிளை நதிகளை பயன்படுத்தி Dry Dam திட்டம் முன்மொழியப்பட்ட போதிலும், அதற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2014 இற்குப் பிறகு மேற்கொள்ளப்படவில்லை என நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இதன்படி, இரத்தினபுரி வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்கு மிகவும் பொருத்தமான செயற்திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பல குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதுடன், இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார். பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து, பாதுகாப்பற்ற சிறுவர்களை இனங்கண்டு கண்காணிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் இங்கு சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, அது குறித்த நடவடிக்கைகளை நாளாந்தம் மேற்கொண்டு தற்போது ஓரளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

மாவட்டத்தில் உள்ள சுரங்கத் தொழிற்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இரத்தினக் கற்களின் பெறுமதி சேர்ப்பதற்கான ஆய்வுகூடத்துடன் கூடிய வர்த்தக நிலையம் ஆரம்பிக்கும் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தற்போது பயன்படுத்தப்படாத, அதிக வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட இரத்தினபுரி நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரிய காணிகளை செயற்திறனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சாந்த பத்மகுமார மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், இரத்தினபுரி மாநகர சபை மேயர் கே.ஏ.டி.ஆர். இந்திரஜித் கடுகம்பல, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

இந்திய முதலீடு, நன்கொடை, வீட்டுத் திட்டம் பற்றி ஆராய்வு!

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை பிரதிநிதித்துவம் செய்து நவ்யா சிங்லா (Navya Singla) அவர்களும் இணைந்து கொண்டிருந்தார்.

இதன்போது, நாட்டின் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்ட வீடுகளற்ற மலையக மக்களுக்கு வீட்டுரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் வெற்றி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் இவற்றுடன் சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்குவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.

இந்த வீடுகளை வழங்கும் கருத்திட்டத்திற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு தோழர் டில்வின் சில்வா இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

எதிர்வரும் காலத்தில் இந்திய முதலீடுகள் மற்றும் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், கடல் தொழிற்றுறை ஆகிய துறைகளில் இந்தியா பெற்றுக்கொண்ட முன்னேற்றம் பற்றிய அனுபவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நோபல் பரிசு விவகாரம்: நோர்வே தூதரகத்தை மூடியது வெனிசுலா!

 

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்தார்.

இந்நிலையில், நோர்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நோர்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாவுக்கு பரிசு அறிவித்ததற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சஜித், ரணிலுடன் அரசியல் கூட்டு கிடையாது: மொட்டு கட்சி திட்டவட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் அரசியல் ரீதியிலான கூட்டு பயணம் கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒருமித்தக்கொள்கையுடையக் கட்சிகளாகும். அந்த தரப்புகள் இணைவது பிரச்சினை இல்லை. அதனை வரவேற்கின்றோம்.
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கை தனித்துவமானது.

ஒற்றையாட்சி, தேசிய பொருளாதாரம் என்பவற்றை மையப்படுத்தியது. எனவே, மேற்படி தரப்புகளுடன் அரசியல் ரீதியில் எமக்கு கூட்டு கிடையாது. ஆனால் ஜனநாயகம் மற்றும் ஏதேச்சாதிகாரத்துக்காக எதிரணியாக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய இடங்களில் ஒன்றிணைவோம். மாறாக அரசியல் ரீதியில் கூட்டு கிடையாது.” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

மருத்துவத்துறைக்குத் தடம் பதிக்கும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!

0
​தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) சித்தியடைந்து, மருத்துவ பீடத்துக்கு (Medical Faculty) நுழையத் தகுதி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும்...

பல பகுதிகளில் இன்றும் மழை!

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல், காலி...

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...