நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மழையால் தாமதம்!
யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும் தொடர்ச்சியான மழையால் அகழ்வு தாமதிக்கப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் நீதிவான் உள்ளிட்ட குழுவினர் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பகுதியைப் பார்வையிட்டனர்.
இதன்போது, அந்த இடம் ஒரு களிமண் தரையாகக் காணப்பட்டது. தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் அந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமானது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, இந்த வழக்கு மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கபப்ட்டது.
இதேவேளை, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவால் புதைகுழி அகழ்வுக்குக் கோரப்பட்ட நிதி, நீதி அமைச்சால் அனுமதிக்கப்பட்டு அதற்கான தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழில் கோர விபத்து: பிரபல விளையாட்டு வீரர் பலி!
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது விளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , செம்மணி பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை , குறித்த விபத்து இடம்பெற்ற வேளை வீதியில், பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து , வயல் வெளிக்குள் பாய்ந்து விபத்துக்களாகியமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு குறித்து பெருந்தோட்ட நிறுவன பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவை மற்றும் தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்கு ஏற்ப, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கும் பரிந்துரை குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த சம்பள அதிகரிப்பு முறை தொடர்பில் தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
பெருந்தோட்டத் தொழிற்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இங்கு ஜனாதிபதியிடம் விளக்கினர்.
தோட்டத் தொழிற்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த விடயத்தில் அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலை வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த பெருந்தோட்ட நிறுவனப் பிரதிநிதிகள், இந்தத் துறையின் முன்னேற்றம் தொடர்பான தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, தொழில் ஆணையர் நாயகம் நதீகா வட்டலியத்த மற்றும் ஏனைய அதிகாரிகள், இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் Agarapatana & Kotagala Plantation PLC, Kelani Valley Plantation PLC, Malwatte Valley Plantation PLC, Balangoda Plantation PLC, Browns Plantation PLC, Kahawatte Plantation PLC, Kegalle Plantation PLC, Agalawatta Plantation PLC ஆகிய தோட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இலங்கை, சீன பிரதமர்கள் சந்திப்பு!
பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீனப் பிரதமர் லி கியாங்குடன் பீஜிங்கில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகத் தலைவர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ கடன் வழங்குநர்களுடனான சிறிலங்காவின் அண்மைய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், அவர் சீனப் பிரதமரிடம் விளக்கிக் கூறியுள்ளார்.
ஒரு முக்கிய வளர்ச்சி பங்காளியாக சீனாவின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சிறிலங்கா பிரதமர், பாதை மற்றும் அணை முன்முயற்சியின் (BRI) கீழ் நடந்து வரும் மற்றும் முன்மொழியப்பட்ட திட்டங்கள் தொடர்பான சிறிலங்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடதாசி அல்ல, காணி உரித்தே கையளிப்பு! பண்டாரவளையில் நடந்தது என்ன?
” 234 பயனாளிகளுக்கு நேற்று (‘ஒரிஜினல் ஒப்பு”) அசல் காணி உரித்து வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் 2 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கும் இந்த காணி உரித்து வழங்கப்படும்.
பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போது ஏற்கனவே கட்டப்பட்ட 237 வீடுகளின் பயனாணிகளுக்கு காணி உரித்தும், எதிர்காலத்தில் கட்டப்படவுள்ள வீடுகளின் பயனாளிகளுக்கு அதற்குரிய ஆவண பத்திரமும் வழங்கப்பட்டது. நாம் பொய்யுரைக்கவில்லை.
காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே மலையகத்திலுள்ள எதிரணி அரசியல் பிரமுகர்களால் போலி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கடந்த காலங்களில்தான் கடதாசி வழங்கப்பட்டது. நாம் காணி உரித்தையே வழங்குவோம்.”
கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மேற்கண்டவாறு கூறினார்.
என்.பி.பி. அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கைக்கு பிரான்ஸ் தூதுவர் பாராட்டு!
பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்டுக்கும் (Rémi Lambert) , மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், பிரான்ஸ் தூதுவர் அலுவலத்தின் உதவி செயற்பாட்டுப் பிரதானி மெதிவ் ஜோன் (Matthiev JOHN)மற்றும் ஊடக உத்தியோகத்தர் தினேஷா இலேபெரும ஆகியோரும் இணைந்திருந்ததுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை முதன்மையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் குறித்தும் பிரான்ஸ் தூதுவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவுகின்ற இராஜதந்திர உறவுகளை எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதுபோல, இலங்கைக்குள் தேர்தலின் பின்னர் வன்முறைகள் நிலவாமை தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்திய தூதுவர் ரெமி லெம்பர்ட், திசைகாட்டி அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடம் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதுபோல, ஊழல் மோசடித் தடுப்பு மற்றும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பல் நடவடிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் தூதுவர் பாராட்டினார்.
இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்கள், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஊழல் மோசடியை தடுப்பதற்கும் நிதி வீண்விரயத்தை குறைப்பதற்கும் நிறைவடைந்த காலப்பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், 2026 ஆம் ஆண்டாகும்போது பொருளாதாரத்தை வலிமைப்பெற செய்விப்பதற்கும், அதை நிலையாக வைத்துக்கொள்வதற்குமான நோக்கத்துடன் தாம் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதல், கடல் வளத்தை பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவத்திற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் பிரான் தூதுவர் ரெமி லெம்பர்ட் இதன்போது தெரிவித்தார்.
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்தி தொடர்ந்து பேணுவதற்கும், பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் பிரான்ஸின் முதல் வரிசை முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.
இலங்கையுடன் தொடர்புகளை பேணும்போது ஒருபோதும் திரைமறைவு நிகழ்ச்சி நிரல் இருக்காது என்றும், எதிர்காலத்தில் அரச தலைவர்கள் பிரான்ஸில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் இதன்போது அழைப்பு விடுத்தார்.
ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது!
கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரையில் ஆட்டோவில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களை வட்டவளை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.
25 மற்றும் 27 வயதுடைய வெலிமடை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மருதானை பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டுபவர்கள் என தெரியவந்துள்ளது.
ஈசி கேஸ் முறையில் பணத்தை பெற்றுக்கொண்டு, வீதிகளில் அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் போதைப்பொருளை வைத்துவிட்டுச் செல்கின்றனர் என வட்டவளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
மருதானையில் இருந்து வெலிமடை நோக்கி இவர்கள் ஆட்டோவில் இன்று (13) பயணித்துக்கொண்டிருந்தபோது, வட்டவளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சோதனைச் சாவடியில் அவர்களது ஆட்டோ நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இதன்போது கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.
இவர்கள் வசமிருந்து 4 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
10 பேர்ச்சஸ் காணிரை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும்!
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதியே அதிகம் கதைத்திருந்தார். எனவே, பண்டாரவளையில் அசல் காணி உரித்து வழங்கப்படும் என நம்பி இருந்தேன். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. கடசாதி ஆவணமே கையளிக்கப்பட்டுள்ளது.
2015 இல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பமானது. ஒரிஜினல் டீட் வழங்கப்பட்டது. இது பொய்யென ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். ஆனால் அவர்களின் ஆட்சியின்போது அவர் அதனையே வழங்கினார்.
நல்லாட்சி காலத்தில் எல்லோருக்கும் காணி உரிமை வழங்க முடியாமல்போனது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தற்போதைய ஜனாதிபதி ஆட்சியின்கீழ் எமது மக்களுக்கு காணி உரிமை வழங்க முடியும். 10 பேர்ச்சஸை வழங்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன். பணடாரளையில் கட்டப்படும் வீடுகளுக்கும் விரைவில் அசல் உரித்து வழங்கப்படும்.
நல்லாட்சி காலத்திலேயே மலையக பகுதிகளில் அதிகளவான வீடுகள் கட்டப்பட்டன. அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றால் நல்லது. ஆனால் கம்பனிகள் இன்னும் பதிலை வழங்கவில்லை. எனினும், வருட இறுதிக்குள் சம்பள உயர்வு கிடைக்குமென ஜனாதபதி கூறுகின்றார். இதனை நான் நம்பவில்லை.
தோட்டங்களை மக்களுக்கு பிரித்து கொடுத்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். இந்திய வீட்டுத் திட்டத்தை விரைவில் நிறைவு செய்யுமாறு கோருகின்றேன். எமது மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணிவை வழங்கினால், அவர்களால் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள முடியும். அதுவே சிறந்த திட்டம்.
நாம் களவெடுக்கவில்லை. மக்களுக்கும் இது தெரியும். எனவே, அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். சில அமைச்சர்கள் பொய்யுரைப்பதுதான் பிரச்சினை.” – என்றார் திகாம்பரம்.
மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத் திட்டம்: இலங்கை – இந்திய வீடமைப்புத் திட்டமாக்கப்பட வேண்டும்
” இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வீடமைப்புத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும்போது இலங்கையின் ஏனைய மக்களுக்குச் சிக்கல்கள் இன்றி நிறைவுபெறும்போது மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதில் இழுபறி நிலை காணப்படுகின்றது. இதற்கு காரணம் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை இல்லாமையாகும். எனவே பெருந்தோட்ட வீடமைப்புக்கு இந்தியா நிதியுதவி வழங்கும் போது இலங்கை அரசு அதற்கான காணி உரித்தினை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ‘இலங்கை – இந்திய வீடமைப்புத் திட்டமாக’ மாற்றியமைக்கப்படல் வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கபட்டுள்ள மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத்திட்டத்தின் நான்காம் கட்டமான 2000 வீடுகளை அமைப்பதற்காக பண்டராவளையில் இடம்பெற்ற நிகழ்வில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணம் தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து மலையக அரசியல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் வீடமைப்புத் திட்டங்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுககாக முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால், அத்தகைய உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் இலங்கை அரசு அதற்கு சமாந்திரமான பங்களிப்பை வழங்கும்போதே அது மக்களுக்கு உண்மையான பயனைப் பெற்றுக்கொடுப்பதாக அமையும். பண்டாரவளையில் வழங்கிவைக்ப்பட்ட ஆவணத்தில் ‘இலங்கை அரசின் ஆதவுடன் இந்திய அரசின் பூரண நிதிப்பங்களிப்புடன்’ என தடித்த எழுத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டாயிரம் வீடுகளுக்கு இலங்கை அரசு வழங்கிய ஆதரவு என்ன ? எனும் கேள்வியே இங்கு எழுகின்றது. மேற்படி வீடமைப்புத் திட்டத்துக்காக இந்தியா முழுமையான நிதிப்பங்களிப்பை வழங்கும்போது இலங்கை அரசே அதற்கான காணியினை வழங்க வேண்டும்.
அதனை உறுதி செய்து அமைச்சரவைத் தீர்மானத்தை எடுத்து இந்திய வீடமைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்க காணி உரித்தினை வழங்கவெண்டிய இலங்கை அரசு வெறுமனே ஆதரவு வழங்குகிறோம் என இந்திய வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளை உறுதி செய்யும் கடிதங்களைக் கொடுப்பது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்த்தின் நடிவடிக்கை அல்ல.
நல்லாட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்திய வீடமைப்புத்திட்ட பயனாளிகளுக்கு ‘சின்னக்கர ஒப்பு’ என சொல்லப்படும் காணி உறுதிகள் அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் வழங்கிவைக்கப்பட்டன. பண்டாரவளை விழாவில் தற்போதைய காணி அமைச்சரையே காணவில்லை. மாவட்ட காணி மறுசீரமைப்பு ஆணையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பதுகூட தெரியவில்லை. இப்படி துறைக்கு பொறுப்பானவர்கள் இல்லாமல் அரசாங்கம் வழங்கும் ‘ஆதரவு’ தான் என்ன? வீடமைப்பு குறித்து பெருந்தோடட சமூக நலன் பிரதி அமைச்சர் கருத்து கூறினால், அந்த வீடு அமைந்திருக்கும் காணி குறித்து அமைச்சர் லால்காந்தவே பொறுப்பேற்க வேண்டும்.
நல்லாட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர், காணி அமைச்சர், மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் இணைந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் ஊடாகவே காணி உறுதிகள் உறுதி செய்யப்பட்டன. அப்படி ஒரு அமைச்சரவைப்பத்திரம் தற்போதைய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்தாகத் தெரியவில்லை. நல்லாட்சி அரசாஙகத்தின்போது கட்டிமுடிக்க்பட் வீடுகளுக்கு உறுதி வழங்கப்பட்டமை முதல் கட்ட முடிவாகும். ஆப்போது ஒரு உறுதிப்பத்திரம் காணி மறுசீரமைப்பினால் வழங்கப்பட்டுள்ளதால் தற்போதைய அரசாங்கம் அந்த இடத்தல் இருந்து ஆரம்பித்து காணி உறதியை வழங்கி வீடமைப்புத் திட்டததை ஆரம்பித்து வைத்து இருக்கலாம்.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் 65 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு பூரண நிதியீட்டம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 14 ஆயிரம் வீடுகள் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு என உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்தத் திட்டத்தில் மலையகத்துக்கு வெளியே வட-கிழக்குத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட 40 ஆயிரம் வீடுகளும் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட 6 ஆயிரம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் மலையகத்தில் இந்தி வீடமைப்பென்பது 14 ஆணடுகள்; இழுபறியாகவே உள்ளது. இலங்கையில் ஏனைய மக்களுக்கு இத்தகைய காணிப்பிரச்சினை இல்லாததால் அவை சிச்கல் இன்றி நிறைவுபெறுகின்றன.
எனவே மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத் திட்டமானது இலங்கை – இந்திய வீடமைப்புத் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டு இந்தியா பெற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு வீட்டுக்குமான காணித்துண்டினை அதற்கான உரிமத்துடன் இலங்கை அரசாங்கம் வழங்குதல்; வேண்டும் என புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.















