” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரதான சூத்திரதாரி கண்டறியப்பட்டிருந்தால் அது பற்றி நீதிமன்றத்தக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது தவறு.”
இவ்வாறு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தயாசிறி ஜயசேகர,
” உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவில் நானும் உறுப்பினராக இருக்கின்றேன். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன நேற்று (நேற்று முன்தினம்) அக்குழுவுக்கு வருகை தந்திருந்தார்.
நிஷாம் காரியப்பர் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.
இந்நிலையில் ஊடகங்கள் எம்மை தொடர்புகொண்டு இது பற்றி வினவுகின்றன. இதன் பின்னணியில் (தாக்குதலின்) இந்தியா இருந்ததது என அவர் (ரவி செனவிரத்ன) கூறவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் அவ்வாறான அறிவிப்பை வெளியிடவில்லை.
உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவுக்கு வந்து இதனை சொல்ல வேண்டியதில்லை. பிரதான சூத்திரதாரி யாரென நீதிமன்றத்திடம் சென்று கூறவேண்டும்.
நிஷாம் காரியப்பர் புதிய எம்.பி., தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயத்தை அவர் டுவிட் செய்தது தவறு.” – என்றார் தயாசிறி.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பில் சபையில் விவாதம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி இணங்கியுள்ளது.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போது ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், இலங்கை அரசாங்கம் ஏன் வாக்கெடுப்பு கோரவில்லை, உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதற்குரிய திட்டங்கள் எவை என்பன உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையாற்றினார்.
அவரின் உரையின் பின்னர் இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இடமளிக்கப்பட வேண்டும் என்று எதிரணி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க கோரிக்கை விடுத்தார்.
அதற்கு ஆளுங்கட்சி இணங்குகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பதிலளித்தார்.
இன்றைய தினம் 2025 உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதுக்குரியோர் யார் என்ற தெரியாத நிலையில், தனக்கு தான் நோபல் பரிசு தர வேண்டும் என்று வெளிப்படையாக கூறி வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆசை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நோபல் பரிசு எனக்குத்தான் தரவேண்டும், உலக நாடுகளின் மத்தியில் பல போர்களை நிறுத்தி உள்ளேன் என்று அவர் அடித்து வரும் தம்பட்டத்தை அவரை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சில நாடுகள் உற்சாகமாக வரவேற்கின்றன.
ஏற்கனவே 7 போர்களை நிறுத்தி உள்ளேன், தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளதும், முக்கியத்துவம் பெறுகிறது. அவரின் கணக்கின்படி இது 8வது போர்நிறுத்தம் ஆகும்.
அமைதிக்கான ஜனாதிபதி டிரம்ப் என்று வெள்ளை மாளிகை தமது எக்ஸ் வலை தள பதிவில் வெற்றி வீரனான டிரம்ப் நடந்து வருவது போன்ற ஒரு படத்துடன் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் 20 அம்ச திட்டத்தை முன்வைத்தார்.
இதுதொடர்பாக எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 6-ம் திகதி அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இஸ்ரேல் அரசின் மூத்த அமைச்சர் ரோன் டெர்மர் தலைமையிலான குழுவும், ஹமாஸ் மூத்த தலைவர் காலில் அல் ஹையா தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் நேற்று சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ,
” பாஸ்தீனத்தின் காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழு ஒப்புக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக இருதரப்பும் முதல்கட்ட அமைதி திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. இதன்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
வரும் திங்கள்கிழமை பிணைக் கைதிகள் விடுவிக்கப்படக்கூடும். காசாவில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கோடு பகுதிக்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் திரும்புவார்கள்.
இருதரப்பு இடையே அமைதியை நிலைநாட்ட முதல் அடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தையின்போது கத்தார்,
எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் சமரச தூதர்களாக செயல்பட்டன. அந்த நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காசா மட்டுமன்றி ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் அமைதி திரும்பும். ” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் டெல் அவிவ் நகரில் நேற்று இரவு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் காசா போர் நிறுத்தத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.
வரும் 12-ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்து நாட்டுக்கும் அவர் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
2010 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இலங்கை அரசியலில் மஹிந்த சூறாவளியே வீசியது. அந்த அரசியல் சூறாவளியால் கட்சிகள் ஆட்டம் கண்டன. மறுபுறத்தில் மஹிந்த தரப்பு களத்தில் மையங்கொண்டு – தனக்கான இருப்பை வலுப்படுத்திக்கொண்டது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட முக்கியமான கட்சிகளுக்குள்ளும் பிரித்தாளும் அரசியல் நகர்வை மஹிந்த வெற்றிகரமாக நிறைவேற்றிவந்தார். பஸிலின் தலைமையிலேயே இதற்குரிய அரசியல் ஒப்பரேஷன் அரங்கேறியது.
கட்சி தாவல், காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு என துரோக அரசியலுக்கே உரிய அத்தனை அம்சங்களும் எதிரணியில் அரங்கேற, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் வலுவிழந்தே காணப்பட்டது.
தொடர் தேர்தல் தோல்விகளால் ஐதேக தலைமைப்பதவியில் மாற்றம் வேண்டும் என உள்ளக மோதல் உக்கிரமடைந்தது. தலைமைக் கதிரையில் ரணிலின் உடும்புப்பிடி தொடர்ந்ததால் ஐதேகமீதான கட்சி ஆதரவாளர்களின் அதிருப்தியும் உச்சம் தொட்டது.
இதற்கிடையில் சில உள்ளக புரட்சி குழுக்கள் உதயமாகின. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தனது தலைமைப்பதவியை தக்கவைத்துக்கொண்டார். மஹிந்த அணியும் ஆசியும் அவருக்கு இருந்தது என்பது கசப்பான உண்மையாகும்.
2012 நடுப்பகுதிக்கு பிறகு மஹிந்த தரப்பு பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தது. எல்லா வழிகளிலும் அரசியல் தலையிடி ஏற்பட்டது. சர்வதேசத்துடனும் முரண்பட்ட கொள்கையே பின்பற்றப்பட்டு வந்தது. எனினும், உறுப்பினர்களை விலைக்கு வாங்கியேனும் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக்கொண்டுவந்தனர்.
யானைபோல அமைச்சரவை பெருகிக்கொண்டே சென்றது. ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் மக்கள் மத்தியிலும் அதிருப்தி உருவானது.
மின்சார கதிரை, ஒற்றையாட்சி, புலி என பழைய புராணங்கள் பாடப்பட்டாலும் 2013 இறுதியாகும்போது வலுவான எதிரணி இருந்தால் மஹிந்தவை வீழ்த்தலாம் என்ற நிலை உணரப்பட்டது.
அப்போதுதான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு 2014 செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க முன்வந்தார் ஹரின் பெர்ணான்டோ.
அவரின் அந்த துணிகரமான அரசியல் முடிவால் பிளவுபட்டிருந்த ஐதேகவுக்கு ஒன்றுபடுவதற்குரிய சூழல் உதயமானது. பதுளையில் ரணிலும், சஜித்தும் ஒரே மேடையில் ஏற, ஐதேக ஆதரவாளர்கள் மத்தியில் புத்தெழுச்சி ஏற்பட்டது. மஹிந்த தரப்புக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பதற்குரிய ஒரு வாய்ப்பாக அத்தேர்தலை பயன்படுத்த மக்களும் முன்வந்தனர்.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் 51 சதவீத வாக்குகளைப் பெற்று மஹிந்த அணி ( ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி – வெற்றிலை சின்னம்) வெற்றி பெற்றிருந்தாலும் ஐதேகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்தது. ஊவாவில் மஹிந்த தரப்புக்கு 19 ஆசனங்கள் கிடைக்கப்பெற ஐதேகவுக்கு 13 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. ஜே.வி.பி. சார்பில் இரு உறுப்பினர்கள் தெரிவாகினார்கள்.
எதிரணிக்கு ஊவா மண்ணில் இருந்து கிடைத்த அந்த எழுச்சிதான் 2015 இல் மஹிந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பிள்ளையார் சுழி போட்டது எனலாம். ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கு பின்னரே மஹிந்த அணியில் இருந்து மைத்திரிபால சிறிசேன பிரித்தெடுக்கப்பட்டு, பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.
இப்போது எதற்காக இந்த பதிவு என்ற வினா எழக்கூடும்.
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி தற்போது இடம்பெற்றுவருகின்றது.
இரு கட்சிகளும் ஒரு கட்சியாக சங்கமிக்குமா அல்லது கூட்டணியா என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்பட்படவில்லை. ஆனால் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற உறுதியான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.
ஜனநாயக நாடொன்றில் எதிரணியானது வலுவாக காணப்பட வேண்டும். அதுவும் ஆளுங்கட்சி பலமாக இருக்கும் நிலையில், எதிரணி வலுவிழந்தால் அது ஜனநாயகத்தக்கு அச்சுறுத்தல். அந்தவகையில் எதிரணி வலுவடைவது வரவேற்கக்கூடிய விடயம்.
ரணிலும், சஜித்தும் ஒரே கட்சியாகவோ அல்லது பொது கூட்டணியாகவே சங்கமித்து ஐதேக சார்பு முகாமை – வாங்கு வங்கியை வலுப்படுத்த வேண்டும் என்பதே இரு கட்சிகளின் ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
அடுத்த வருடம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் இரு தரப்புகளும் பொது கூட்டணியாக களமிறங்கினால் அதற்கு மக்கள் மத்தியிலுள்ள வரவேற்பை கணித்துக்கொள்ள முடியும்.
நாமலை வலுப்படுத்தும் அரசியில் நகர்வை விட்டுவிட்டு ஐதேகவும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு மையப்புள்ளிக்குள் வருவது நல்லது.
மாகாணசபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஜீவன் தொண்டமான் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” எல்லை நிர்ணய விவகாரத்தை கையாளும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கே உள்ளது. அப்பணி முடிந்ததும் தேர்தல் பற்றி தீர்மானிக்கப்படும். பழைய முறைமையா அல்லது புதியை முறைமையா என்பது பற்றி சிறந்த கலந்துரையாடலை நடத்தி முடிவொன்றை எடுக்கலாம். தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் – செம்மணியில் விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத் தூபி அன்றைய தினமே அதே இடத்தில் மீளக் கட்டப்பட்டுள்ளது.
அணையா விளக்கு நினைவுத் தூபி விஷமிகளால் நேற்று அதிகாலை அடித்து உடைக்கப்பட்டிருந்தது.
“யாழ்ப்பாணம் வரவேற்கின்றது” என்ற வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி ‘அணையா விளக்கு’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது ‘அணையா விளக்கு’ ஏற்றபட்டது. போராட்டத்தின் முடிவில் அந்தப் பகுதியில் ‘அணைய விளக்கு’ நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த நினைவுத் தூபியைத்தான் விஷமிகள் நேற்று அதிகாலை அடித்து உடைத்திருந்தனர். இதையடுத்து நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
” தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின் 105 ஆவது பக்கத்தில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், அது முன்னெடுக்கப்படாது, முந்தைய அரசாங்கத்தின் இணக்கப்பாடு அதே வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது போன்ற இன்னும் பல விடயங்கள் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்போம், ரூ.9000 கட்டணத்தை ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைத்து நிவாரணம் வழங்குவதாகச் சொன்னாலும் அது எதுவும் நடக்கவில்லை. மின்சாரக் கட்டணத்தை 15% குறைத்தனர். இப்போது மீண்டும் 6.8% ஆல் மின்சார கட்டணத்தை அதிகரிக்கப் போகின்றனர். செலவுகளைச் சரியாகக் கணக்கிடாமலே இவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
159 பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, IMF இன் தாளத்திற்கு ஆடுவது ஏன்? என்பதில் எமக்கு பிரச்சினை காணப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடாமல், மாற்றத்தை வேண்டியே, தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்தே மக்கள் ஆணையைப் பெற்றுத் தந்தனர். 2028 முதல் நாம் ரூ. 5 பில்லியன் கடனைச் திருப்பிச் செலுத்த வேண்டும். நமது நாட்டின் முதலீட்டுச் சூழலில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறுகிறது.
கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது, நிறுவன மற்றும் அதிகாரிகள் மற்றும் அதிகாரத்துவ தோல்வி, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தொடர்பில் முன்கூட்டியே கணிக்க இயலாமை, வெளிப்படைத்தன்மையில் காணப்படும் பிரச்சினைகள், கட்டமைப்பு சார் பிரச்சினைகள், அரச நிறுவனங்கள் தொடர்பான பாரதூரமான பிரச்சினைகள் என குறிப்பிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் பல சிக்கல்கள் காணப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளன. நமது நாட்டின் ஆடை ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தை வாய்ப்பைக் கொண்ட அமெரிக்கா கூட இப்போது இதைச் சொல்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
🟩 நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது.
உலக வங்கியின் அறிக்கையின் படி, நமது நாட்டில் வறுமை மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. வறுமை அதிர்வுகள் உருவாகி, 2019 உடன் ஒப்பிடும்போது உண்மையான ஊதியங்களும் தொழிலாளர் படை பங்கேற்பும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றன. ஒரு வீட்டலகின் பண்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல், வேலைவாய்ப்பு உருவாக்கம் பலவீனமான மட்டத்தில் காணப்படுகின்றன, ஊட்டச்சத்து குறைபாடு உயர் மட்டத்தில் காணப்படுகின்றன, உணவு பாணங்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன என்று உலக வங்கி கூறுகிறது. செல்வந்த குடும்பங்களை விட வறிய குடும்பங்கள் மூன்று மடங்கு அதிகமாக உணவுக்காகச் செலவிடுகின்றன. வறுமைக் கோட்டிற்கு உள்ளேயும், அதற்கு அண்மித்த நிலையில் ஏராளமான மக்களும் காணப்படுகின்றனர் என்று உலக வங்கி குறிப்பிடும் போது, நமது நாட்டில் 50% ஆனோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர் என்று Center For poverty analysis குறிப்பிடுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
🟩 2028 இல் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது?
இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், நமது நாடு திருப்திப்படக் கூடிய நேரடி அந்நிய முதலீட்டைப் பெறுகிறதா, புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குகின்றனவா, வேலையின்மை விகிதத்தைக் குறைக்கின்றதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்து வருகிறதா? வறுமையை ஒழிக்க சரியான வேலைத்திட்டம் காணப்படுகின்றனவா? என்ற விடயங்களைப் பார்க்கும்போது, 2028 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் 5 பில்லியன் டொலர் கடன் தொகையை திருப்பிச் செலுத்த பல சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெளிவாகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜெனீவா தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களின் போது, 47 நாடுகளில் 43 நாடுகள் நமது நாட்டின் அரச கொள்கை குறித்து நேர்மறையாகப் பேசின என தெரிவிக்கப்பட்டன. அவ்வாறு சாதகமாக பேசினால், ஒரு நாடாக எம்மால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை எதிர்த்திருந்தால், எங்களுக்கு சாதகமாகப் பேசிய 43 நாடுகளின் வாக்குகளை எமக்கு சாதகமாக பெற முடியாமல் போனது ஏன் என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றன என்று எதிர்க்ட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
🟩 ஜெனீவாவில் எங்களுக்கு ஆதரவான 43 நாடுகளின் வாக்குகளைப் பெற முடியாமல் போனதற்கான காரணம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த 47 நாடுகளில் 43 நாடுகள் நமக்கு ஆதரவாக இருந்தால், அந்நாடுகளை எமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்ற முடியாமல் போனமை பிரச்சினைக்குரிய விடயமாகும். இது நமது நாட்டின் இராஜதந்திரக் கொள்கையில் காணப்படும் ஓர் பலவீனமாகும். 2009 யுத்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கையால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை வெல்ல முடிந்தது. அன்று, எமக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. இதற்கான முக்கிய காரணம் வெற்றிகரமான மற்றும் வலுவான இராஜதந்திர தலையீடு காணப்பட்டமையாகும். மனித உரிமைகள் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கலாநிதி தயான் ஜயதிலக, தனியாக 29 வாக்குகளைத் திரட்டினார். இப்போது நடந்திருப்பது கடுமையானதொரு பிரச்சனையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 முற்போக்கு தேசியவாதத்தால் நாம் ஒன்றாய் இணைந்து முன்னோக்கிச் செல்வோம்.
எனவே, இந்த தருணத்திலாவது கூட, இந்தத் தோல்வியில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, ஒரு நாடாக, இன, மத, நிறம், சாதி, வர்க்க மற்றும் கட்சி வேறுபாடுகளை களைந்து, முற்ப்போக்கு தேசியவாதத்தை, இலங்கையர் என்ற அடையாளத்தை எமது பக்க பலமாக மாற்றி, அனைவரும் ஒன்றாய் இணைந்து, ஒரு தாய் பிள்ளைகள் போல, நல்லிணக்கம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவற்றை வலிமையாகக் கொண்டு, நாட்டின் பிரச்சினைகளை நாட்டிற்குள்ளேயே தீர்த்துக் கொண்டு, இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண வேண்டும். உள்நாட்டில் நல்லிணக்க செயல்முறை முறையாக முன்னெடுத்தால், வருடாந்தம் ஜெனீவா செல்லும் பிரச்சினையை தீர்ததுக் கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...
‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண்.
ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’.
சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...
பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார்.
இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த வழக்கு விசாரணைக்கு...
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அநீதிகளுக்கு எதிராக இரத்தினபுரி...
மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
63 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இவர் ரணமுரேகம பகுதியில் தங்கியிருந்த...