Home Blog Page 3

சம்பள அதிகரிப்பைபெற மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டுமா?

மேலதிக கொழுந்து பறிப்பு உட்பட சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பை பெறுவதற்கு மேலதிக கொழுந்து பறிக்க வேண்டுமா என நாடாளுமன்ற உறப்பினர் கலைச்செல்வி எழப்பிய கேள்விக்க பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“சம்பள அதிகரிப்பு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதற்கமைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர்களுக்கு மேலதிக சுமையை திணிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை.

இத்தனை கிலோ பறித்தால்தான் சம்பள அதிகரிப்பு என புதிய எல்லையை நாம் நிர்ணயிக்கவில்லை. வேறு நிபந்தனைகளும் முன்வைக்கப்படவில்லை.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. எனவே, ஏதேனும் நிபந்தனை விதிக்கப்பட்டால் அது பற்றி தெரியப்படுத்தலாம். அமைச்சு உரிய தலையிடகளை மேற்கொள்ளும்.” – என்றார்.

அதேவேளை, நிரந்த தொழிலாளர்களுக்கு 400 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெறுகின்றது. தற்காலிக தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 200 ரூபா கிடைக்கப்பெறுகின்றது எனவும் அமைச்சர் கூறினார்.

முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இன்று 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இவற்றுடன், அவருக்கு 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சரண குணவர்தன தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்தச் சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்ததில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு எதிராக நான்கு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தது.

அனைத்து நான்கு குற்றப்பத்திரிகைகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா நான்கு ஆண்டுகள் கடுழிய சிறைத்தண்டனை விதித்தார்.

எவ்வாறாயினும், இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை விபரம்!

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின்கீழ் 76 ஆயிரத்து 44 தோட்டத் தொழிலாளர்கள் நிரந்த தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.

18 ஆயிரத்து 955 பேர் தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (09) தற்போது நிரந்தர மற்றும் தற்காலிக அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் வழங்கிய பதில்களில் வெளியிடப்பட்ட புள்ளி விவரம் வருமாறு ,

பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகளின்கீழ் 76,044 பேர் நிரந்தரத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.

18,955 பேர் தற்காலிக தொழிலாளர்களாவர்.
மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின்கீழ்
2,736 பேர் நிரந்தர தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். தற்காலிக தொழிலாளர்கள் இல்லை.

அரச பெருந்தோட்ட கூட்டுதாபனதாபனத்தின்கீழ் நிரந்தர தொழிலாளர்களாக 1, 524 பேரும், தற்காலிக தொழிலாளர்களாக 573 பேரும் வேலை செய்கின்றனர்.

 

2000 முதல் 2026 வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு விபரம்….!

🛑 2000 முதல் 2026 வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு விபரம்….!

🛑 தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ஆம் ஆண்டில் நாள் சம்பளமாக 121 ரூபா வழங்கப்பட்டுவந்த நிலையில், குறித்த ஆண்டில் 20 ரூபா சம்பள அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

🛑 2001 ஆம் ஆண்டில் சம்பள நிர்ணய சபை ஊடாக 6 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

🛑 2002 ஆம் ஆண்டில் கூட்டு ஒப்பந்தத்தின்கீழ் 26 ரூபா அதிகரிக்கப்பட்டு, நாள் சம்பளமாக 147 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

🛑 2003 ஆம் ஆண்டில் நாள் சம்பளம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின்கீழ் நாள் சம்பளம் 47.50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

🛑 2006 ஆம் ஆண்டில் கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் 65.50 ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

🛑 2007 ஆம் ஆண்டில் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 30 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

🛑 2009 ஆம் ஆண்டில் கூட்டு ஒப்பந்தத்தின்கீழ் 115 ரூபா சம்பள அதிகரிப்பு , தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

🛑 2011 ஆம் ஆண்டில் 110 ரூபா அதிகரிப்பு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
2013 இல் கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் 105 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

🛑 2014 இல் நிர்ணய சபையால் 284 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.

🛑 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்த பேச்சு ஊடாக 110 ரூபா சம்பள அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

🛑 2019 இல் கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் 20 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

🛑 2021 ஆம் ஆண்டில் 150 ரூபா அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

🛑 2022 இல் வரவு- செலவுத் திட்டம் ஊடாக 100 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

🛑 2024 ஆம் ஆண்டில் சம்பள நிர்ணய சபை ஊடாக 350 ரூபா அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,350 ரூபா கிடைக்கப்பெற்றது.

🛑 2026 ஆம் ஆண்டில் வரலாறில் முதன்முறையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபா சம்பள அதிகரிப்பு இடம்பெற்றது. கம்பனிகள் 200 ரூபாவும், அரசாங்கம் 200 ரூபாவும் வழங்கின.

இதற்கமைய தற்போது நாள் சம்பளமாக 1,750 ரூபா வழங்கப்பட்டுவருகின்றது.
தகவல்மூலம் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு.

ஆர்.சனத்
raasanath@gmail.com

உக்ரைனுக்கான ஆதரவு தொடரும்: ஆஸ்திரேலியா, ஜேர்மன் உறுதி!

ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான 3 ஆவது பாதுகாப்பு கொள்கை ஆலோசனை கூட்டம் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது.

இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இரு நாடுகளும் தங்களது பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நலன்களின் அடிப்படையில், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில் நெருக்கமாகச் செயல்பட இக்கூட்டத்தில் உறுதியேற்றன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை அமைச்சர்கள் திட்டவட்டமாகக் கண்டித்ததுடன், ரஷ்யா தனது படைகளை முழுமையாகவும் நிபந்தனையின்றியும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினர்.

உக்ரைனுக்கு தங்களது ஆதரவு தொடரும் என்பதை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின.

ரஷ்யாவிற்கு இராணுவ ஆதரவு வழங்குவதை பிற நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும், ரஷ்யா மீது செல்வாக்கு செலுத்தும் நாடுகள், குறிப்பாக சீனா, அமைதியை நிலைநாட்ட நேர்மறையான பங்கை ஆற்ற வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் நாடுகளின் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மனிதாபிமான பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர்கள், அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களை மதித்து பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் நடத்தி வரும் ஆபத்தான தாக்குதல்களையும், வர்த்தகக் கப்பல்களுக்கான அச்சுறுத்தல்களையும் அவர்கள் கண்டித்தனர்.

சர்வதேச சட்டத்தின்படி, இந்த நீர் வழியில் கட்டணமற்ற, பாதுகாப்பான போக்குவரத்தை ஈரான் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, தைவான் நீரிணைப் பகுதியில் அமைதி மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ராணுவ வீரர்களின் நடமாட்டம் மற்றும் தளவாடப் பரிமாற்றத்தை எளிதாக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், சைபர் அச்சுறுத்தல்கள், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் ஒன்றிணைந்து செயல்பட இரு நாடுகளும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.

போர் வீரர் என்பதற்காக குற்றத்தில் ஈடுபட்டால் மறைக்க முடியுமா?

” போரை முடிவுக்கு கொண்டுவர பங்களிப்பு வழங்கினார் என்பதற்காக, எவரேனும் குற்றச்சாட்டின் ஈடுபட்டால் அதனை நியாயப்படுத்த முடியுமா? முடியாது. எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து இடம்பெறவேண்டும்.”

இவ்வாறு கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சுரேஷ் சலே, எனக்கு எதிராக இழிப்பீடுகோரி வழக்கு தொடுத்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்றிருந்தவேளை, அவர் என்னை சந்தித்தார்.

பாதர், உங்களை கஷ்டத்துக்குள் தள்ளுவதற்காக நான் இந்த வழக்கை தொடுக்கவில்லை. எனது பெயரை காக்கவே போட்டுள்ளேன். எம்மால் சமரசத்துக்கு வரமுடியும் எனக் கூறினார்.

சமரசத்துக்கு வருவதற்காக உங்கள் நிபந்தனை என்னவென நான் சுரேஷ் சலேவிடம் வினவினேன். பாதர் நீங்கள் விடுத்த அந்த அறிவிப்பில் இருந்து எனது பெயரை விலக்கிக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்ய முடியாது என நான் திட்டவட்டமாகக் கூறினேன். எனது அறிவிப்பு சரியானது என்பதில் நான் உறுதியாக நின்றேன். சமரசம் தேவை இல்லை, வழக்கை தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் கூறினேன்.

எனவே, இழப்பீட்டு வழக்கில் இருந்து என்னை பாதுகாப்பதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.
வுpசாரணைகளில் வெளியான சாட்சிகளை அடிப்படையாகக்கொண்டே அவர் கைது செய்யப்பட்டிருக்கக்கூடும்.

அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சுரேஷ் சலே மட்டும் அல்ல பாதுகாப்பு தரப்பினர் எவரேனும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் அதனை நாம் மதிக்கின்றோம். இதற்காக அவர்கள் தவறிழைத்திருந்தால் அதனை மூடி மறைக்க முடியாது.

படுகொலை செய்வதற்கு எந்தவொரு படையினருக்கும் உரிமை கிடையாது. குற்றச்செயல்களில் ஈடுபட, கொள்ளைகளில் ஈடபடவும் எந்தவொரு படையினருக்கும் உரிமை கிடையாது. எனவே, நாட்டுக்கான சேவை என்பது வேறு, குற்றச்செயல் என்பது வேறு. இவை இரண்டையும் நாம் பிரித்து பார்க்க வேண்டும்.

இதற்கமைய நாட்டுக்காக சேவை செய்திருந்தால் நாம் அதனை மதிப்போம். அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சித்திரவதை இடம்பெற்றுள்ளதா அல்லது இல்லையா என்பது நீதிமன்றம் ஊடாகவே தெரியவரவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைப்பு என்பது புதிய விடயம் அல்ல. இதற்கு முன்னரும் பலர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே, தனி நபருக்காக சட்டத்தை மாற்றும் அணுகுமுறை பின்பற்றப்படக்கூடாது. விசாரணை தொடர்ந்து இடம்பெறவேண்டும்.

உங்கள் தாய் அல்லது தந்தையை படை வீரர் ஒருவர் கொன்றுவிட்டார். அவர் போரில் ஈடுபட்டவர், போரை முடிக்க பங்களிப்பு செய்ததால் விசாரணை தேவை இல்லை, தண்டனை தேவை இல்லை எனக் கூறமுடியுமா? எனவே, குற்றத்தின் முன் தகுதி, தராதரம் என்பது முக்கியம் அல்ல. விசாரணைக்கு எவரும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது.’ – என்றார்.

டயஸ்போராக்களின் தேவைக்காகவே சுரேஷ் சலே குறிவைப்பு: பதறுகிறது மொட்டு கட்சி!

“புலி டயஸ்போராக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே சுரேஷ் சலே இலக்குவைக்கப்பட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பயங்கரவாத தடைச்சட்டம் தவறானது என சுட்டிக்காட்டியே ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தது. ஆனால் அச்சட்டத்தை பயன்படுத்தியே சுரேஷ் சலேவை தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடக்கும்போதும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் சுரேஷ் சலே எமது நாட்டில் இருக்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் சலே ஏன் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்?

இந்த அரசாங்கம் ஆட்சிக்குவருவதற்கு புலி டயஸ்;போரா உட்பட அடிப்படைவாதிகளே ஆதரவளித்தனர். நாட்டின் பாதுகாப்பை சீர்குலைப்பதும், எதிர்காலத்தில் பிரிவினைவாதம் ஏற்பட்டால் நாட்டுக்காக முன்னிலையாபவர்கள் ஒடுக்குவதுமே இவர்களின் நோக்கம்.

எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரிவினைவாதிகளின் தேவைகளையே நிறைவேற்றிவருகின்றது.

புலிகளை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு நல்கி இந்நாட்டுக்கு அமைதியை கொண்டுவந்தவர்தான் சுரேஷ் சலே. இன்று மக்களால் சுதந்திரமாக வாழ முடிகின்றதெனில் அதற்கு சுரேஷ் சலே போன்றவர்களின் அர்ப்பணிப்புதான் காரணம்.’ – என்றார் சாகர காரியவசம்.

மரக்கறி விலைப்பட்டியல் (09.06.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

23 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இலங்கை சாதனை!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது.

சபினா பூங்காவில் நடைபெறவிருந்த 3-வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ரத்தானதை அடுத்து, தொடரின் முதல் போட்டியில் பெற்ற 41 ரன்கள் வித்தியாச வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி கோப்பையை வென்றது.

நடுவர்கள் பலமுறை மைதானத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எனினும், பராமரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, 20 ஓவர்கள் கொண்ட சுருக்கப்பட்ட போட்டியைத் தொடங்குவதற்கான இறுதி நேரமான இரவு 8.02 மணிக்குள் ஆட்டத்தைத் தொடங்குவது சாத்தியமில்லை என அவர்கள் முடிவெடுத்தனர்.

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் மழையால் ரத்தானது இரு அணிகளின் முகாம்களிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த முடிவு வருகை தந்துள்ள இலங்கை சிங்கங்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவு மண்ணில் இலங்கை அணி பெறும் முதல் ஒருநாள் தொடர் வெற்றி இதுவாகும் (இதற்கு முன் 2003-ல் வென்றிருந்தது).

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கேரி கிர்ஸ்டன் மற்றும் புதிய ஒருநாள் போட்டி கேப்டன் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு இது ஒரு சாதகமான தொடக்கமாக அமைந்தாலும், வீரர்கள் களத்தில் விளையாடுவதை மேலும் பார்க்க அவர்கள் விரும்பியிருப்பார்கள்.

“தொடரை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி, அந்த ஒரே ஒரு போட்டியில் மூன்று துறைகளிலும் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டோம்,” என்று மெண்டிஸ் கூறினார்.

“அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாக எங்களுக்கு அதிக போட்டிகள் இல்லை, கேப்டனாக எனது முதல் தொடர் வெற்றியைப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நிர்வாகப் பணியாளர்களின் ஆதரவும் கிடைத்தது.” அத்துடன் அவர் தனது பந்துவீச்சுப் படையையும் பாராட்டினார்.

மேற்கிந்திய தீவுகள் அணியைப் பொறுத்தவரை, இந்த வானிலையும் அதன் விளைவாக ஏற்பட்ட தொடர் தோல்வியும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஏமாற்றமளிக்கும் பின்னடைவாகும்.

முதல் போட்டியின் தோல்விக்கு பழிவாங்கக் கிடைத்த வாய்ப்பு பறிபோனது மட்டுமின்றி, மூன்று ஆண்டுகளில் சொந்த மண்ணில் அவர்கள் சந்திக்கும் முதல் தொடர் தோல்வியும் இதுவாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்குத் தேவையான முக்கியமான ஐசிசி (ICC) தரவரிசைப் புள்ளிகளைப் பெறும் அவர்களின் முயற்சிக்கு இந்த முடிவு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது ஒருநாள் தரவரிசையில் பத்தாவது இடத்தில் நீடிக்கிறது, இது நேரடியாகத் தகுதிபெறும் முதல் எட்டு இடங்களுக்கு வெளியேயாகும். அவர்கள் அடுத்து நியூசிலாந்து (உலக எண் 2) மற்றும் இந்தியா (எண் 1) அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளனர்.

வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர் போராட்டம்!

 

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட வெவண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களால், றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ‘திட்வா’ புயலின் போது ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக, வெவண்டன் தோட்டம் மக்கள் வசிப்பதற்கு உகந்த பகுதியல்ல என மண் பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, வெவண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் தற்காலிகமாக றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது குறித்த மாணவர்களை றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திலிருந்து நீக்கி, அருகில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு அனுப்ப கொத்மலை கல்வி வலயம் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பெற்றோர்கள், “தமது பிள்ளைகளைத் தூரத்திலுள்ள அயல் பாடசாலைகளுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அனுப்ப முடியாது” எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், தமது கிராமத்திற்கு அருகிலேயே பாதுகாப்பானதொரு இடத்தில் புதிய பாடசாலைக் கட்டிடத்தை அமைத்துத் தருமாறும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துஷாரி தென்னகோன், பிரதேச செயலாளர் நதீர லக்மால் மற்றும் மண் பரிசோதனை அதிகாரி புத்திக பண்டார விஜயகோன் உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட அதிகாரிகள், இப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். மேலும், இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றி உரிய கவனத்தை ஈர்க்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர இதன்போது தெரிவித்தார்.

சினிமா

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

செய்தி

சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு!

0
“சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைகளை திசைதிருப்பவே சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு பயணம் தடை விதிக்கப்பட்ட பின்னரே குழப்பம் அடைந்துள்ளனர்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...

ஆட்சி மாற்றம் குறித்து கனவு காணும் பொருளாதாரக் கொளையாளிகள்!

0
“ராஜபக்சக்கள் பொருளாதாரக் கொலையாளிகள். அந்த பொருளாதாரக் கொலையாளிகளால்தான் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டி ஏற்பட்டது.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது...

காணி உரிமையை உறுதி செய்ய பெருந்தோட்ட குத்தகை நிலங்களை மீளப்பெற வேண்டும்!

0
மலையக மக்களின் நீண்டகால காணி உரிமைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கும் வகையில், பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிலங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் மற்றும் வீடமைப்புக்கு உகந்த நிலப்பரப்புகளை இனங்கண்டு...