Home Blog Page 4

ஆஸ்திரேலிய சிறார்களுக்கு டிசம்பர் முதல் யுடியூப்பும் தடை!

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையில் யுடியூப்பையும் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இத்தடை அமுலுக்கு வரும்.

உலகம் முழுதும் இளம் தலைமுறையினர் இடையே சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ளது. பாடசாலை மாணவர்களும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதால் அவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுகின்றது என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மன ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன், பல குற்றச் செயல்களுக்கும் வழிவகுக்கிறது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. இதற்கமைய 16 வயதுக்குட்பட்டோர் ‘டிக்டாக், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது.

இந்நிலையிலேயே மேற்படி வரிசையில் தற்போது யுடியூப்பையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடையின் கீழ், யுடியூப் வீடியோக்களை பார்க்க முடியும். ஆனால் பதிவேற்றம் செய்யவோ, யுடியூப் கணக்கை வைத்திருக்கவோ அனுமதி கிடையாது.

டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸி தெரிவித்தார்.

சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது. பத்தில் ஒன்பது ஆஸ்திரேலியர்கள் இந்த முடிவை ஆதரிக்கின்றனர். எதிர்காலத்தில் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கினிகத்தேனயில் விபத்து: பெண் பலி!

கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹாமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று, லொறியொன்றை முந்தி செல்ல முற்பட்டவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண், லொறியின் பின் சக்கரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்தவர் காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கினிகத்தேன பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கௌசல்யா

மரக்கறி விலைப்பட்டியல் (31.07.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஜே.வி.பிக்கு ஆளத்தெரியவில்லை: நாமல் குற்றச்சாட்டு!

” போராட்டங்கள் மற்றும் அறகலய ஊடாக ஜே.வி.பியினர்தான் நாட்டை நாசமாக்கினர். 76 வருடங்களாக அரசுகளை ஆளவிடவில்லை. இன்று ஆட்சிக்கு வந்ததும் ஆளத்தெரியவில்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாப்பதற்காக அன்று ஜே.வி.பியுடன் இணைந்துதான் போராடினோம். அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டனர். நாம் நீதிமன்றத்தக்கு வந்துகொண்டிருக்கின்றோம். குறைந்தபட்சம் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

அரச வளங்களை நாம் துஷ்பிரயோகம் செய்யவில்லை. அவற்றை பாதுகாத்துள்ளோம். எமக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில், குற்றமற்றவர்கள் என்பதை நீதிமன்றம் ஊடாக நிரூபிப்போம். ஏனெனில் இந்நாட்டின் நீதித்துறைமீதும், அதன் சுயாதீனத்தன்மை தொடர்பிலும் எமக்கு முழு நம்பிக்கை உள்ளது.

76 வருடங்களாக அறகலய மற்றும் தீ வைப்புமூலம் ஜே.வி.பியே நாட்டை நாசமாக்கியது. தற்போது அவர்களுக்கு ஆளத்தெரியவில்லை. எனவே, அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும்.” – என்றார்.

செம்மணியில் ஸ்கேன் பரிசோதனை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மே மாத நடுப்பகுதியில் ஆரம்பமான அகழ்வாராய்ச்சிகளுக்கு அமைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக இது மாறியுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வாய்வில் சிறுவர்கள் உட்பட 102 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதோடு, கண்டறியப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.

தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 1 இல், ஒரு பெரிய எலும்புக்கூடுக்கு அருகில், இன்று ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

”நேற்றைய அகழ்வின்போது ஒரு பெரிய எலும்புக்கூட்டோடு குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று அரவணைக்கப்பட்ட விதத்தில் காணப்பட்டது. அது முழுமையாக இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது.”

மனித எலும்புகளுடன், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் குழந்தை பால் போத்தல், குழந்தைகள் விளையாடும் பொம்மை, காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை அடங்கும்.

தற்போது தோண்டப்படும் பகுதிக்கு அப்பால் மனித எலும்புகள் இன்னும் உள்ளனவா என்பதைக் கண்டறிய, அந்த இடத்தை ஸ்கேன் பரிசோதனை செய்ய ஜூலை 25 அன்று பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிய அனுமதி தேவையில்லை எனவும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிதாக அனுமதி பெற தேவைப்படாத ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி ஆய்வுகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, நேற்றைய தினம் (ஜூலை 29) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி சித்துப்பாத்தி மயான பூமியில் அகழ்வாராய்ச்சிகள், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 ஆரம்பமானது.

செம்மணியில் இன்று 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்!

 

யாழ்ப்பாணம், செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 3 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வுப் பணிகளின் இரண்டாம் கட்டத்தின் 25 ஆவது நாள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 3 எலும்புக் கூட்டுத் தொகுதிகளுமாக 102 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் 115 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, ஒரு பெரிய எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய பொருட்கள்மீது 25 சதவீத வரி!

எதிர்வரும் ஆகஸ்ட் 1-ம் திகதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவில்,

“இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும், பல ஆண்டுகளாக அவர்களின் வரிகள் மிகவும் அதிகமாகவே இருக்கின்றன. அவை உலகிலேயே மிகவும் அதிகம். மேலும், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான, அருவருப்பான பணமற்ற வர்த்தகத் தடைகளை அவர்கள் கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவத்துக்கான தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்தே அதிக அளவில் வாங்கி வந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்தும் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவருமே விரும்பும் நேரத்தில், அவர்கள் (இந்தியா) சீனாவுடன் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்குகிறார்கள். இவை எதுவும் நல்லதல்ல.

எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

சம்பூரில் மனித என்பு எச்சங்கள்: அகழ்வு செய்வதா? இல்லையா?

திருகோணமலை, சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்று மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் தொல்பொருள் திணைக்களம், தடயவியல் பிரிவினர், சட்ட வைத்திய அதிகாரி, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம், குற்றவியல் பிரிவினர், தேசிய நிலக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர், பொலிஸ் திணைக்களம் என்பனவற்றின் அலுவலர்கள் நீதிவான் திருமதி.தஸ்னீம் பெளசான் தலைமையில் ஒன்றுகூடி ஆராய்வது என்றும், அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இன்று தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய தரப்புகளுக்கான அழைப்பை சம்பூர் பொலிஸார் அனுப்ப வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி மூதூர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய இன்று சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிக்கையை முன்வைத்தார். அதன்படி கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்பு எச்சங்கள் மிகவும் பழைமையானது என்று குறிப்பிட்டிருந்தார்.அதேவேளை தொல்பொருள் திணைக்களத்தினர் முன்வைத்த அறிக்கையின்படி இவ்விடத்தில் முன்னர் மயானம் ஏதாவது இருந்துள்ளதா என்பதைத்  துல்லியமாகக் கூற முடியாதுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தீர்மானம் ஒன்றுக்கு ருவதாயின் இந்த அகழ்வுடன தொடர்புடைய சகல தரப்புகளுடனும் இணைந்து கலந்துரையாட வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுப்பது என்று நீதிமன்றம் தீர்மானித்தது.

கடந்த 19 ஆம்  திகதி சம்பூர் பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் பிரிவினர் அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன வெளிவந்தன. இதனையடுத்து அகழ்வு வேலைகள் மூதூர் நீதிமன்ற உத்தரவின்படி இடைநிறுத்தப்பட்டன. அதனையடுத்து 25 ஆம் திகதி இடத்தைப் பார்வையிட்ட நீதிவான் நேற்று வரை அகழ்வை இடைநிறத்த உத்தரவிட்டிருந்தார். அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் பிரிவினர் அகழ்வைத்  தொடர்வதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றத்துக்கு  அறிக்கை தர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

உலகையே உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மேலும் சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

 

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.8-ஆக பதிவானது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர்.

வீடுகளில் இருந்த பொருட்கள், சரிந்து விழுந்தன. ஜன்னல் கண்ணாடி உடைந்தன. மேலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

நிலநடுக்கத்துக்கு பிறகு கம்சட்கா கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கின. அங்கு சுமார் 13 அடி உயரம்வரை அலைகள் எழுந்தன.

ரஷியாவின் குரில் தீவுகளின் பரமுஷிர் தீவில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் கடலோரப் பகுதியைத் சுனாமி கடுமையாக தாக்கியது.

கம்சட்கா தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான், அமெரிக்காவின் ஹவாய் தீவு, அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகள் மற்றும் பசிபிக் பெருங்கடலின் பிற பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.ஹவாய் தீவையும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

மேலும் கனடா, ஆஸ்திரேலியா, சிலி, கோஸ்டாரிகா, பெரு, ஈக்வடார், மெக்சிகோ, நியூசிலாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தென்கொரியா, வட கொரியா உட்பட பல்வேறு நாடுகள் மற்றும் பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ரஷியாவின் நிலநடுக்கத்தால் உண்டான சுனாமி ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ பகுதியை தாக்கியது. அங்கு சுமார் 2 அடி உயரத்தில் அலைகள் ஏற்பட்டன.

அதேபோல் இஷினோமாகி பகுதியையும் சுனாமி அலைகள் தாக்கின. அங்கு சுமார் 1.6 அடி உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு இந்தோ னேசியாவின் சுமத்ராவில் 8.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன்பிறகு அதே அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் உலகில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் முதல் 10 இடத்துக்குள் தற்போது கம்சட்சா தீபகற் பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமும் இடம் பெற்றுள்ளது.

ஹவாய் தீவிலும் சுனாமி!

 

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியுள்ளது.

ஹவாயில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

ஹவாயின் மவுயி நகரில் உள்ள கஹுலுய் என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4 அடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்க ஆரம்பித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வணிக துறைமுகங்களையும் மூடுவதாக ஹவாய் அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்தது.

இந்தச் சூழலில், ஹவாயின் ஹனாலி பகுதியில் முதற்கட்டமாக 3 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்பத் தொடங்கியுள்ளன. சுனாமி அலைகள் தாக்கம் பல மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுனாமி முன்னெச்சரிக்கையாக அமெரிக்க கடலோர காவல்படை அனைத்து வணிகக் கப்பல்களையும், ஹவாயின் துறைமுகங்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது. சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும் வரை எந்த கப்பல்களும் உள்ளே நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மிட்வே அட்டோலில் 6 அடி உயர சுனாமி அலைகள் எழுந்ததாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் ஹவாயில், ஹொனலுலு மேயர் ரிக் பிளாங்கியார்டி குடியிருப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக உயரமான தரை அல்லது கட்டிடங்களின் மேல் தளங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பேசிய அவர், “சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கடற்கரையோரத்தில் தங்கவோ அல்லது சுனாமி எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க தங்கள் உயிரைப் பணயம் வைக்கவோ கூடாது. இது ஒரு வழக்கமான அலை அல்ல. நீங்கள் சுனாமியால் தாக்கப்பட்டால் அது உண்மையில் உங்களைக் கொன்றுவிடும்.” என்றார்.

இதற்கிடையே சீனாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவிர பெரு, ஈகுவேடார் நாடுகளும் சுனாமி எச்சரிக்கை விடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் தமிழரசுக் கட்சி ஒப்பமிடாது!

0
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் ஆவணத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஒப்பமிடாது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி...

வடக்கில் 70 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படலாம்!

0
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...

சமஷ்டியை வலியுறுத்தி போராட்டம்

0
இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை - வெருகல், பூநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை...