Home Blog Page 5

கைது, தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக, அவசர தலையீட்டைக் கோரி, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவர் தனது சட்டவாளர்கள் மூலம் தாக்கல் செய்துள்ள ஒரு நீதிப்பேராணை (ரிட்) மனுவில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை இடைநிறுத்தம் செய்யும் இடைக்கால நிவாரணத்தையும், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.

இந்த மனுவில், காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு கோட்டை நீதிவான் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

சனல் 4 ஒளிபரப்பிய ஒரு ஆவணப்படத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2024 ஒக்டோபர் 4 ஆம் நாள், அருட்தந்தை ரோகன் டி சில்வா குற்றப் புலனாய்வுத்துறையிடம் செய்த முறைப்பாட்டின்அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆவணப்படத்தில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் சுரேஷ் சாலேவுக்கு தொடர்பு இருப்பதாக அஸாத் மௌலானா குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சுரேஷ் சாலே, குறித்த காலகட்டங்களில் தான் சிறிலங்காவில் இல்லை என்றும், எனவே சஹ்ரான் காசிம் அல்லது தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடன் தொடர்புடைய நபர்களுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் ஆலோசகராகப் பணியாற்றியதாகவும், அதன்பின்னர் புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் 59வது தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறிக்காக 2019 ஜனவரி 7 முதல் நவம்பர் 29ஆம் நாள் வரை இந்தியாவில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தான் இந்தியாவில் இருந்த நேரத்தில் நிகழ்ந்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (07.04.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஐ.பி.எல்: இன்று வெற்றிவாகை சூடப்போகும் அணி எது?

IPL 2026 தொடரில் இன்று (07) நடைபெறும் 13 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

நேற்றைய ஆட்டம் ரத்து

அதேவேளை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி விடாது பெய்த கனமழை காரணமாக இரத்து செய்யப்பட்டது.

கொல்கத்தா அணி 3.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது.

மழை நின்ற பிறகு மைதானத்தைச் சீரமைக்க ஊழியர்கள் கடுமையாகப் போராடினர்.

5 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தை நடத்துவதற்கான கடைசி நேரமான 11:14 மணி வரை காத்திருந்தும், மைதானம் விளையாடத் தகுதியற்ற நிலையில் இருந்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

விலையேற்றங்களை உடன் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குக!

“அதிவேகமாக அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களை உடனடியாகக் குறைத்து, மக்களுக்கு விசேட பொருளாதார நிவாரணப் பொதியொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“திடீர் விலையேற்றங்கள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சாதாரண குடிமக்களின் கஷ்டங்களை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது.

எரிவாயு விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும், தொடர்ச்சியான விலையேற்றமும் மக்களைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

மத்திய கிழக்கு யுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படக்கூடிய அபாயம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படும் என நாம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால், ஆரம்பத்தில் அதனைப் பொருட்படுத்தாத அரசாங்கம், தற்போது அதன் பாதிப்புகளை மக்கள் மீது சுமத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா மற்றும் எகிப்து போன்ற நாடுகள் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகின்றன.

அதேபோன்று, இலங்கையிலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை இலக்காகக் கொண்டு விசேட பொருளாதார நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் திறைசேரியில் மேலதிக நிதி இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியம் நாட்டின் வருமானம் அதிகரித்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இந்த வளங்களைப் பயன்படுத்தி எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். மக்கள் உண்மையாகவே பயனடையக்கூடிய நிவாரணப் பொதியொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், அதற்கு எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும்.

மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பல்ல. அவர்கள் வாழ்வதற்கு வழிவகுப்பதே அரசாங்கத்தின் கடமை. எனவே, கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று சஜித் பிரேமதாஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் சாதனை!

இலங்கை உதைப்பந்தாட்ட வரலாற்றில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கழகம் தேசிய அளவிலான பிரதானத் தொடர் ஒன்றில் சம்பியன் பட்டம் வென்று புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது.

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய ‘சம்பியன்ஸ் கிண்ண’ நொக்-அவுட் உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், பலம் வாய்ந்த சோண்டர்ஸ் கழகத்தை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் சர்வதேச உதைபந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இலங்கையின் பாரம்பரியமிக்க சோண்டர்ஸ் கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் களமிறங்கியது.

ஆட்டம் தொடங்கிய 3ஆவது நிமிடத்திலேயே சென். மேரிஸ் வீரர் டஞ்சுமா கம்பாரி மின்னல் வேகத்தில் ஒரு கோலை அடித்துத் தனது அணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலை தேடித்தந்தார்.

இருப்பினும், அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே சோண்டர்ஸ் வீரர் க்ளோவிஸ் ப்ராங்க் ஒரு பதில் கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.

ஆட்டத்தின் எஞ்சிய பகுதியில் இரு அணிகளும் வெற்றி கோலை அடிக்க கடுமையாகப் போராடிய போதிலும், இரு தரப்பு கோல்காப்பாளர்களும் மிகத் திறமையாகச் செயற்பட்டு கோல் முயற்சிகளை முறியடித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் ஆட்டம் 1 – 1 எனச் சமநிலையில் முடிந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனல்டி அவுட் முறை அமுல்படுத்தப்பட்டது.

இதன்போது சென். மேரிஸ் கழகத்தின் கோல்காப்பாளர் எஸ். ஆர்னிகன் ஒரு கதாநாயகனாகத் திகழ்ந்தார்.

சோண்டர்ஸ் கழகம் உதைத்த மூன்று பெனல்டிகளைத் தனது அசாத்திய திறமையால் தடுத்து நிறுத்திய அவர், தாமே ஒரு பெனல்டியை கோலாக மாற்றி 3-1 என்ற கணக்கில் தனது அணிக்கு வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் பிரதான கழகங்களுக்கு இடையிலான தொடர் ஒன்றில் சம்பியனான முதலாவது வடக்கு – கிழக்கு அணி என்ற வரலாற்றுச் சாதனையை நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் படைத்துள்ளது.

அத்துடன், பலம் வாய்ந்த சோண்டர்ஸ் கழகத்துடன் மோதிய லீக் மற்றும் நொக்-அவுட் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடையாத முதல் வடக்கு மாகாண அணி என்ற பெருமையையும் இக்கழகம் பெற்றுக்கொண்டது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலக்கரட்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

சம்பியன் பட்டம் வென்ற சென். மேரிஸ் கழகத்திற்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடம் பிடித்த சோண்டர்ஸ் கழகத்திற்கு 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டன.

மேலும், சோண்டர்ஸ் வீரர் ரொஜர் பிலிப்பே அதிக கோல்களை அடித்து ‘தங்கப் பாதனி’ விருதையும், விஜயகுமார் அபிஷான் வளர்ந்து வரும் வீரருக்கான ‘தங்கப் பந்து’ விருதையும், மொஹமத் லுத்பி சிறந்த கோல்காப்பாளருக்கான ‘தங்கக் கையுறை’ விருதையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த வெற்றியானது இலங்கை கால்பந்தாட்டத் துறையில் வடக்கு மாகாண வீரர்களின் அபாரத் திறமையை சர்வதேச தரத்திற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை இதன்போது ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

அத்துடன், இந்த முறைமையை மக்களுக்கு மிகவும் எளிதான மற்றும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக மாற்றுவதற்கு நாட்டின் வங்கி முறைமையிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் போது ஏற்படும் தடைகளை நீக்கி, சமூகத்தில் இதனை விரைவாகப் பிரபலப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ATM இயந்திரங்கள் மூலம் பணப் பரிமாற்றச் சேவைகளை வழங்கும் போது வங்கி முறைமைக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும், புதிய முறைமையின் ஊடாகப் பணப்பரிமாற்றங்கள் மாற்றமடையும் போது அந்தச் செலவைக் குறைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தப் புதிய முறைமை பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான, நம்பகமான மற்றும் பாதுகாப்பானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வங்கித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கியின் (BOC) பதில் பொது முகாமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி வை.ஏ. ஜயதிலக்க, ஒன்லைன் முறைமையூடாகப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்தப் புதிய வேலைத்திட்டத்திற்கு வங்கி முறைமையின் முழுமையான ஆதரவை வழங்கி, நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பயணத்திற்குத் தமது பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ, இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா, கொமர்ஷல் வங்கியின் தலைவர் சார்ஹன் மூஷின், சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்சய குணவர்தன, ஹற்றன் நேஷனல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி தமித் பல்லேவத்த உள்ளிட்ட அரச மற்றும் தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய துணை ஜனாதிபதி , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார்.

மேலும், தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள இந்திய உதவித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகர் மைத்ரே குல்கர்னி (Maitrey Kulkarni), அரசியல் ஆலோசகர் மற்றும் சான்சரி பிரிவுத் தலைவர் கலாநிதி ராம்பாபு சி. ( Rambabu C.) மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

புதன்கிழமை விடுமுறை இரத்து!

 

“எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது” என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் புதன்கிழமை (ஏப்ரல் 8) முதல் அனைத்து அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவைத் துறைகள் வழமை போன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக, அரச சேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் வாராந்தம் புதன்கிழமைகளில் இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது நிலைமைகள் ஓரளவிற்குச் சீரடைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, அரச நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுக்கும் வகையிலேயே இந்த விடுமுறையை இரத்துச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச மற்றும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களும், மாணவர்களும் வழமை போன்று கடமைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து சடலம் மீட்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக இன்று (06) திங்கட்கிழமை காலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை நகரை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் முஷாமின் எனவும் இவர் நீண்ட காலமாக நுவரெலியா நகரில் ஹோட்டல்களில் தொழில் புரிந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த நபரை காணவில்லை என சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களோடு தகவல் பரிமாறப்பட்டது

குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரை எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் நுவரெலியா பொலிஸார் மற்றும் தடையவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் கம்பளை உள்ள உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வி.தீபன்ராஜ்

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

– இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம்.

– புதிய முறைமையின் ஊடாக எந்த நிமிடமும் எந்த இடத்தில் இருந்தும் P to P நபர்களுக்கு இடையிலான பணப் பரிமாற்றத்தை எளிதாக மேற்கொள்ள வசதி

டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டம் எனவும் அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட, வினைத்திறனான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான ஒரு முறைமை உருவாகும் அதேவேளை, நாட்டின் முறைசாரா பொருளாதாரத்தின் பங்களிப்பை படிப்படியாக முறையான பொருளாதாரத்திற்குள் உள்வாங்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (Merchant Discount Rate – MDR) முழுமையாக நீக்கப்படுவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, Gov Tech நிறுவனம், LankaPay நிறுவனம் மற்றும் நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பரிமாற்றங்களின் போது நிலவும் தடைகளை நீக்குதல், பரிசுகள் மற்றும் சலுகைகள் மூலம் மக்களை ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் ஆகிய நான்கு முக்கிய காரணிகளின் அடிப்படையில் இது செயற்படுத்தப்படுகிறது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில், பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம்.

எனவே, மக்களுக்கு மிகவும் எளிதான மற்றும் வினைத்திறனான ஒரு முறையாக இந்தப் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது:

எமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் நாம் ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறோம். அதாவது எமது பரிமாற்றங்கள், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூகத் தரவுகளை முறையான வெளிப்படைத்தன்மையுடன் திரட்டத் தவறியுள்ளோம். எமது அரசாங்கக் கொள்கையின்படி, மானியங்கள் இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால் அந்த இலக்குடைய மக்களை எவ்வாறு தெரிவு செய்வது என்ற சவாலை நாம் எதிர்கொள்கிறோம்.

உதாரணமாக, மத்திய கிழக்கு நெருக்கடியால் எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்தது. இதனை நாம் இரண்டு கோணங்களில் பார்த்தோம். எரிபொருள் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்பினருக்கு ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை ஒப்பிட வேண்டும். விலையை அதிகமாக உயர்த்தினால் பொருளாதாரம் சுருங்கும். மறுபுறம் விலையைச் சரியாகச் சீரமைக்காவிட்டால் நிறுவனக் கட்டமைப்பைத் தொடர முடியாத நெருக்கடி ஏற்படும். எனவே, இதனைச் சமநிலைப்படுத்த வேண்டும். அதற்கு மிகவும் பொருத்தமானது தகுதியான மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதாகும். ஆனால் அதற்கான தரவுகளைத் திரட்டுவது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களைக் கவனித்து, டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தால் அதிக பலன் பெறுவது யார்? கிராமத்தில் ஒருவர் 05 லீட்டர் டீசல் பெற்றால் அவருக்கு 500 ரூபாய் மானியம் கிடைக்கும். ஆனால் ஒரு பெரிய வாகனத்திற்கு 100 லிட்டர் அடித்தால் அவருக்கு 10,000 ரூபாய் மானியம் கிடைக்கும். இந்தச் சிக்கலைத் தீர்க்க தரவுகளைத் திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு பணப்பரிமாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தப் பரிமாற்றங்கள் ஒருவரின் பொருளாதார நிலையை வெளிப்படுத்தும். அதன் அடிப்படையில் மானியம் வழங்குவதற்கான ஒரு அளவுகோலை உருவாக்கலாம். எனவே, இத்தகைய சிக்கலான பிரச்சினைகளுக்கு டிஜிட்டல் முறைமை மூலமான பரிமாற்றங்களுக்குள் நாம் நுழைய வேண்டும். அப்போதுதான் மானியங்களைச் சரியான இலக்குகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே, ஒவ்வொரு துறையிலான பரிவர்த்தனைகளும் இந்த டிஜிட்டல் முறைமையில் சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் முறைசாரா பொருளாதாரத்தை முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியும்.அதனால் டிஜிட்டல் மயமாக்கல் வேலை திட்டம் எமது பிரதான திட்டமாகும். டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் 15 பில்லியன் டொலர் இலக்கை நாம் கொண்டுள்ளோம். இது வெறும் டிஜிட்டல் துறையை மட்டும் உருவாக்குவதல்ல. விவசாயம், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்குள் டிஜிட்டல் மயமாக்கலைக் கொண்டு வருவதன் மூலம் ஏற்படும் வினைத்திறன் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும்.

இருப்பினும், இதனை முறையான வகையில் குறிப்பிடத்தக்க அளவில் பிரபலப்படுத்துவதற்கு நாம் இன்னும் தவறியுள்ளோம். கொடுக்கல் வாங்கல்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் நம்மிடம் உள்ளது. கொடுக்கல் வாங்கல்கள், வைப்புச் செய்தல் என வங்கி முறைமையுடன் மிகவும் முன்னேற்றமடைந்த ஒரு கலாசாரமும் பிணைப்பும் எமது மக்களிடையே காணப்படுகிறது.

ஆயினும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய முறைமைக்கு மாற்றுவதற்கு நாம் இன்னும் தவறியுள்ளோம். அதேபோல், அதனை நமக்குத் தேவையான அளவில் கட்டியெழுப்பவும் இன்னும் முடியவில்லை. எனவே, இவ்வாறான கலாசாரத்தைக் கொண்டுள்ள மக்களிடையே இந்தப் புதிய கொடுப்பனவு முறைமைகளை எப்படிக் கொண்டு செல்வது என்பதே எமது முக்கிய எதிர்பார்ப்பாகும். அதற்கு பிரதானமாக ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வுக்கான பரந்த அளவிலான திட்டங்கள் அவசியமாகும். அது குறித்து டிஜிட்டல் அமைச்சு தற்போது கவனம் செலுத்தியுள்ளது.

எமது கலாசாரத்தில் பணப்பரிமாற்றங்கள் ஒரு அங்கமாக உள்ளன. பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் போது பணம் கொடுக்கிறோம். புத்தாண்டுக்கு பணம் வழங்குகிறோம். இந்த QR முறைமை ஒரு கலாசாரமாக மாற வேண்டுமானால், சமூகப் பிணைப்புகளுடன் தொடர்புடைய அனைத்துப் பரிமாற்றங்களையும் இது பிரதிபலிக்க வேண்டும். இல்லையெனில் சமூகம் இதனை முழுமையாக ஏற்காது.

மக்களின் கலாசாரப் பரிமாற்றங்களை இதற்குள் கொண்டு வர புதிய கருவிகள் மற்றும் மாதிரிகள் தேவை. அனைத்து பரிமாற்றங்களிலும் கேந்திர நிலையமொன்று உள்ளது. அந்த கேந்திர நிலையமான மத்திய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு ஆதரவு வழங்கினால் இதனை வெற்றியடையச் செய்யலாம். இந்தப் புத்தாண்டு காலத்தில் நடைபெறும் பணப்பரிமாற்றங்களை QR முறைமைக்கு மாற்றும் வகையில் ஒரு பிரச்சாரத் திட்டத்தை உருவாக்கினால் அது ஒரு சிறந்த திருப்புமுனையாக அமையும். எமது சமயம் புதிய விடயங்களை ஏற்கத் தயார், ஆனால் அவை ஈர்க்கக்கூடியதாகவும் எளிதாகவும் இருக்க வேண்டும்.

எமது சமூகம் புதிய விடயங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ளது. ஆனால், அந்தப் புதிய விடயங்கள் ஈர்க்கக்கூடியதாகவும் எளிதாகவும் இல்லையென்றால் மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இந்தச் செயல்முறையை உயிர்ப்பிப்பதற்குத் தேவையான வசதிகளை நாம் வழங்க வேண்டும். ஏனெனில், சமூகம் வினைத்திறனான விடயங்களையே உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

அதனால் அரசாங்கம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கொடுத்தால், மிக விரைவாக சமூகத்திற்குள் இந்த வேலைத்திட்டம் பிரபலமடையத் தொடங்கும். எனவே, அதற்கான தேவையான ஆதரவையும் தலையீட்டையும் உங்கள் அனைவரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன்” என்றும் ஜனாதிபதி தெரவித்தார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி விழா !

0
2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது. அவண பல்லேகம ஹேமரதன நாயக்க...

இன்வெரி தமிழ் பாடசாலை அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி பதவியேற்பு!

0
ஹட்டன், டிக்கோயா இன்வெரி தமிழ் வித்தியாலயத்தின் அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி இன்று பதவியேற்றார். இவர் பன்மூர் ஹட்டன் தமிழ் மாகா வித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் என்பதோடு அகில இலங்கை சமாதான நீதிவானும் ஆவர். ஹட்டன்...

இஸ்ரேல் ஊழித்தாண்டவம்: லெபனானில் துக்க தினம் அனுஷ்டிப்பு!

0
லெபனானில் இன்று (09) தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய கோரத் தாக்குதலில் 254 பேர் பலியாகியுள்ளனர். 1,600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையிலேயே அங்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும்...