Home Blog Page 3558

“ஈஸ்டர் தாக்குதலை அரசியல் விளம்பரமாக பயன்படுத்தும் இனவாதிகள்” -ரிஷாட் கவலை

சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாத சக்திகள், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணியின் கொழும்பு மாவட்ட “இளைஞர் மாநாடு” முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் உயர்பீட அங்கத்தவருமான பாயிஸின் ஏற்பாட்டில் மட்டக்குளியில் நேற்று (28) நடைபெற்ற போது, பிரதம அதிதியாக கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் மேலும் கூறியதாவது,

அரசியல் இருப்பை மீண்டும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இனவாத சக்திகள் எங்களை மையமாக வைத்து, அரசியல் செய்து மீண்டும் ஆட்சியை பெற்றுக்கொண்டனர். சிறுபான்மை சக்திகளை ஒடுக்குவதும், அக்கட்சித் தலைமைகளின் குரல்வளையை நசுக்குவதும் அதன்மூலம் தமது இலக்கை அடைவதுமே இவர்களின் நீண்டகாலத் திட்டம். இனவாதத்தையும், இனக்குரோத சிந்தனையையும் முதலீடாகக் கொண்டே இவர்கள் இன்னும் அரசியலில் நீடிக்கின்றனர். நாட்டையோ மக்களையோ பொருளாதாரத்தையோ இவர்கள் பெரிதாகக் கருதவில்லை. அவைபற்றி எந்தக் கவலைகளும் இருப்பதாகவும் தெரியவில்லை.

அமைச்சர்கள் சிலர் தினந்தோறும் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் புனித வேதமான அல்குர்ஆன் பற்றியும் பொய்யான கருத்துக்களை அப்பாவி மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். தீவிரவாதத்தை இந்த நாட்டில் தூண்டுவதற்கு வித்திட்டவர்கள் இவர்கள்தான். சஹ்றான் என்ற கயவனும், அவனது அடியாட்களும் மிலேச்சத்தனமான செயலை மேற்கொள்வதற்கு, அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவங்களும் காரணமாயிருந்தன என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட இந்த படுபாதக செயலை முஸ்லிம் சமூகம் ஒருபோதுமே அங்கீகரிக்கவில்லை. இன நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் தமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் இந்தச் சமூகம் தீவிரவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் ஒருபோதுமே துணைபோன வரலாறும் இல்லை. பேரினவாதிகளின் எஜண்டுகளே இந்த கொலைகாரர்களை உருவாக்க தூபமிட்டனர் என்ற உண்மையை, இனியாவது நல்லெண்ணத்தை விரும்புவோர் புரிந்துகொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் இந்த விடயங்கள் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

முஸ்லிம் இளைஞர்களை பொறுத்தவரையில், இது மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட வேண்டிய காலம். அவ்வாறான காலத்தின் கட்டாயத்தில் நாம் வாழ்கின்றோம். பெருமானாரின் போதனைகளை பின்பற்றி, மார்க்கப் பற்றுடன் வாழ்வோமேயானால் எமக்கு எந்தக் கஷ்டமும் எவராலும் வராது.

நமது சமூகம் நிறைய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. உலகில் 2 பில்லியனுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக ஏற்றுக்கொண்ட, அதனை நேசிக்கின்ற நமது அல் குர்ஆனை அசிங்கப்படுத்தும் வேலைத்திட்டமும் இங்கு அரங்கேற்றப்படுகின்றது. எனினும், பெருமானார் காட்டித் தந்த வழியை பின்பற்றினால் மத விரோதிகளால் ஒன்றும் நடவாது. ஏனைய இனங்களைப் போன்று, கத்தோலிக்க மக்களுடனும் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்து வரும் நாம், குண்டுத்தாக்குதல் நடந்தபோது மிகவும் வேதனை அடைந்தோம்.

“இந்தச் செயலை முஸ்லிம்கள் மேற்கொள்ளவில்லை. இதற்குப் பின்னால் எதோ ஒரு சக்தி இவர்களை வழிநடத்தியுள்ளது” என அப்போது பேராயர் மல்கம் ரஞ்சித் அறிவித்து, “அப்பாவி முஸ்லிம்களை தண்டித்து விடாதீர்கள்” என்று பகிரங்கமாக வேண்டினார். அவருக்கு சமூகம் சார்பில் என்றுமே நாம் நன்றியுள்ளவர்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பிலான விவாதம் மூன்று நாட்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது, நான் பாராளுமன்றத்தில் அமர்ந்து, அந்த உரைகளை மிகவும் உன்னிப்பாகக் கேட்டேன். இந்த அரசியல்வாதிகளின் மனதில் என்ன இருக்கின்றது? சமுதாயம் பற்றி என்ன நினைக்கின்றார்கள்? எதை எதிர்பார்க்கின்றார்கள்? என்பதையும் கிரகித்துக்கொண்டேன். இது தொடர்பில், பாராளுமன்றத்தில் விரைவில் நானும் உரையாற்றவுள்ளேன்.

இந்தத் கொலைகளினால் கத்தோலிக்க சமூகம் எவ்வாறு வேதனைபட்டதோ, அதற்கு நிகரான வேதனையை முஸ்லிம் சமூகமும் அனுபவித்தது. அந்த வேதனை எமது சமூகத்தவரிடமும் இன்னும் இருக்கின்றது. அதுமாத்திரமின்றி சம்பந்தம் இல்லாத எத்தனை அப்பாவிகள் சிறைகளிலே வாடுகின்றனர். எனவே, உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென நாம் கோருகிறோம்.

இன்றைய இளைஞர் மாநாட்டின் ஏற்பாட்டாளரான சகோதரர் பாயிஸ், கொழும்பு மாவட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுபவர். குறிப்பாக மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு இன மத பேதமின்றி பணியாற்றுபவர். கொழும்பில் முதுபெரும் அரசியல்வாதிகளின் சேவைகளுக்கு நிகராக அவரின் கல்விச் சேவை அமைந்து வருகின்றது. இதற்கு நான் சாட்சியாக இருக்கின்றேன். அவரது பணிக்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்குங்கள். என்றார்.

“பன்மைதன்மையை ஏற்காமல், ஒருபோதும் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது” – மனோ

இலங்கையின் பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் இலங்கை தேசத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்ற அடிப்படைகளில், தம்மை இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நிலைநிறுத்தும் நிலைமையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வாழும், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின், “ஜனநாயகத்துக்கான ஆனந்தியர்கள்” என்ற அமைப்பு நேற்றிரவு நடத்திய இணையரங்கத்தில் கலந்துக்கொண்டு சிங்கள மொழியில் உரை நிகழ்த்திய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

” ஆனந்த கல்லூரி இலங்கையின் புகழ் பெற்ற சிங்கள பெளத்த கல்வி நிறுவனம். இலங்கையின் பிரபல சிங்கள அரசியல் நண்பர்களை உருவாக்கிய கல்லூரி இதுவாகும். ஆகவே இதன் பழைய மாணவர்களாகிய நீங்கள், “இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்” என்ற நிகழ்வை நடத்துவது சாலப்பொருத்தமானது.

இலங்கையில் சிங்கள மொழி பேசுகின்றவர்கள், பெளத்த மதத்தை பேணுகின்றவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மை. அதில் எமக்கு பிரச்சினை இல்லை. அதுபற்றி உண்மையில் நான் மகிழ்கிறேன். ஆனால், இந்த சிங்கள, பெளத்தம் மட்டும் இலங்கை அல்ல. எழுபத்தி ஐந்து என்பது நூறு அல்ல. தொண்ணூற்று ஒன்பது கூட நூறு அல்ல. எழுபத்தி ஐந்துடன் இன்னொரு இருபத்து ஐந்து சேர வேண்டும். அதுதான் நூறு. அதுதான் இலங்கை.

ஆகவே இலங்கை நாட்டின் தேசியத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நம் நாட்டின் பன்மை தன்மையை முதலில் நீங்கள் ஏற்க வேண்டும். இதுதான் ஐக்கிய இலங்கைக்கான முதல் நிபந்தனை.

தமிழர்களுக்கு அதிகாரம் பிரித்து கொடுத்தால், அவர்கள் தனியொரு நாட்டை அமைத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயம் சிங்கள மக்களுக்கு இருக்கிறது. தமிழர் மத்தியில் ஆயுத போராட்டம் மீண்டும் தலையெடுக்கும் என்ற பயமும் இருக்கிறது. மிக நியாயமான பயங்கள் இவை. சிங்களவர் ஏன் இப்படி நினைக்கிறார்களே என சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதுண்டு. நான் அவர்களிடம், இல்லை, அவர்களின் இந்த பயம் நியாயமானது. அதை நாம் நிவர்த்திப்போம் என்று கூறுகிறேன்.

அதேபோல் தமிழர் மத்தியிலும் பயங்கள் உண்டு. இந்த நாட்டை சிங்கள மட்டும், பெளத்தம் மட்டும் என படிப்படியாக மாற்றியமைக்க சிங்கள அரசியல்வாதிகள் முயல்கிறார்கள், என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். தமிழரை, முஸ்லிம்களை இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நடத்த சிங்கள அரசியல் தலைமை முயல்கிறது என்ற அச்சம் தமிழர் மத்தியில் உள்ளது. இதுவும் மிக, மிக நியாயமான பயம். இதை சிங்கள மக்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்.

அப்புறம் இந்த அதிகார பகிர்வு என்ற விடயத்தை பாருங்கள். அதிகார பகிர்வு என்றால், சிங்கள மக்களின் அதிகாரத்தை பிடுங்கி எடுத்து, தமிழ் அரசியல்வாதிகளிடம் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இது அப்பட்டமான பிழை. அதிகார பகிர்வு என்றால் சிங்கள அதிகாரத்தை தமிழ், முஸ்லிம்களிடம் கையளிப்பது என்பதல்ல. அது ஒரு ஜனநாயக சித்தாந்தம். கொழும்பில் குவிந்துள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்கு, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப வேண்டும் என்றால், அவை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல, மஹியங்கனை, மொனராகலை, காலி, மாத்தறை, எம்பிலிபிடிய ஆகிய சிங்கள பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? கொழும்பு தலைநகரில் ஒரு கும்பல் இருக்கிறது. அது ஒரு வகுப்பு. கொழும்பில் எந்த அரசாங்கம் நிலைபெற்றாலும், அந்த கும்பல் அந்த அரசாங்கத்தை பிடித்து கொள்கிறது. வாக்களித்து அரசாங்கங்களை உருவாக்கும் மக்களை விட இந்த கும்பல் அரசாங்கங்களுக்கு உள்ளே செல்வாக்கு மிக்கது.

இது எல்லா அரசாங்கங்களையும் பிடிக்கும். இப்போதைய அரசாங்கத்தையும் இது பிடித்து வைத்துள்ளது. சேனநாயக்க, பண்டாரநாயக்க, விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசுகள் மட்டுமல்ல, நாளை சஜித் ஆட்சி வந்தாலும், அந்த அரசாங்கத்தை இது பிடிக்கும். அந்தளவு செல்வாக்கு இந்த கும்பலுக்கு உள்ளது. இதற்கு இன, மத அடையாளங்கள் இல்லை. ஆகவேதான், அதிகாரங்களை பிரித்து எல்லா மாகாணங்களுக்கும் அனுப்ப வேண்டும் என நான் கூறுகிறேன். ஆகவே அதிகார பகிர்வை இந்த அடிப்படையில் பாருங்கள்.

மேலும் இது என்ன, மன்னராட்சியா? இங்கு அரண்மனை உள்ளதா? கொழும்பில் ராஜா, ராணி, யுவராஜா, யுவராணி இருக்கிறார்களா? ராஜகுடும்பம் உள்ளதா? ஆகவே கொழும்பில் குவிந்துள்ள அதிகாரங்களை பிரித்து எல்லா தமிழ், சிங்கள, முஸ்லிம் பிராந்தியங்களுக்கு அனுப்ப வேண்டும். இவற்றையெல்லாம் புரிந்துக்கொள்ளுங்கள். இலங்கை தேசத்தை கட்டியெழுப்பலாம். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தருகிறேன்.” – என்றார்.

“பதுளை மாவட்ட உறுப்பினர்களை கைவிடமாட்டோம்” – ராதா உறுதிமொழி

“பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி உட்பட ஏனைய அணி அமைப்புகளின் செயற்பாடுகளை வழமைபோல முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவே எங்களுடைய உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்தும் எங்களுடன் பயணிக்க முடியும்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (29.03.2021) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு,

” மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் ஏனைய அணி அமைப்புகளின் செயற்பாடுகளில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வெளியேற்றப்பட்டிருந்தாலும் தொடர்ந்தும் எங்களுடைய செயற்பாடுகள் ஊவாவில் முன்னெடுக்கப்படும்.

மிக விரைவில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பதுளைக்கு விஜயம் செய்து அங்கிருக்கின்ற எங்களுடைய பிரதேச சபை உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் தோட்ட கமிட்டி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.அவர்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் மலையக மக்கள் முன்னணி பதுளை மாவட்டத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பதுளை மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை சேர்ந்த பலரும் எங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தற்பொழுது கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களையும் இணைத்துக் கொள்வது தொடர்பாக முதலில் எங்களுடைய பதுளை மாவட்டத்தில் இருக்கின்ற உறுப்பினர்களுடன் கலந்தரையாடி அவர்களை இணைத்துக் கொண்டு செயற்படுவதுடன் கடந்த காலங்களை போன்று சுமுகமாக செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.

எந்த காரணம் கொண்டும் பதுளை மாவட்டத்தில் உள்ள எங்களுடைய உறுப்பினர்களை கைவிட மாட்டோம். மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பானது தனி நபர்களை சார்ந்த அமைப்பாக என்றுமே செயற்பட்டதில்லை.அது மக்கள் சார்ந்த ஒரு அமைப்பாகவே செயற்பட்டு வந்துள்ளது.எனவே தொடர்ந்தும் அந்த என்னத்துடன் செயற்படுவோம்.இந்த கட்சியானது முழுமையாக ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற ஒரு அமைப்பாகும்.

அனைவருடைய கருத்துக்களையும் உள்வாங்கி மக்களுக்கான சேவையை முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.எனவே தொடர்ந்தும் அனைவருடைய ஒத்துழைப்பையும் மலையக மக்கள் முன்னணிக்கும் அதன் அணி அமைப்புகளுக்கும் வழங்குமாறு நான் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.

மலையக மக்கள் முன்னணி தொடர்ந்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் பயணிக்கும்.அந்த வகையில் எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற பொழுது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ஆகியோருடைய ஒத்துழைப்புடன் ஊவாவில் நாங்கள் செயற்படுவோம்.

எதிர்வருகின்ற தேர்தலில் நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்படுவோம்.கூட்டணிக்கு நல்ல ஒரு பலம் இருக்கின்றது.மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றது.எனவே தொடர்ந்தும் நாங்கள் ஜக்கிய மக்கள் சக்தியுடன் பயணிப்போம் அதில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று இந்த அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை மக்கள் எதிர்வரும் தேர்தலில் வெளிக்காட்டுவார்கள்.அதன் அடிப்படையில் நாங்கள் எதிர்காலத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியது

சூயஸ்  கால்வாயின் கரைகளில் மோதி தரைதட்டிய கப்பலையொட்டி இதுவரை 18 மீட்டர் ஆழத்திற்கு 27,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது. மணல் மற்றும் சகதியில் சிக்கியதால் கப்பலை நகர்த்த முடியவில்லை.

இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 450-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் இடது பக்கத்தில் இருக்கும் மணல் மற்றும் சகதியை நீக்கி, கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பல்வேறு இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு எந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன.

தொடர் முயற்சிகளின் காரணமாக, கப்பல் மிதக்கத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கப்பல் மிதக்கத் தொடங்கினாலும், கால்வாய் எப்போது போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

தரைதட்டிய கப்பலையொட்டி இதுவரை 18 மீட்டர் ஆழத்திற்கு 27,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைக்குள் மணலை அகற்றி கப்பலை மிதக்க வைக்க எகிப்து அரசு அவகாசம் கொடுத்துள்ளது. முடியாவிட்டால், கப்பலில் உள்ள கண்டெய்னர்களை இறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இப்போது கப்பல் மிதக்க தொடங்கியிருப்பதால் கண்டெய்னர்களை இறக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மெதுவாக கப்பலை நகர்த்தி கால்வாயின் மையப்பகுதிக்கு கொண்டு வந்ததும் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பலின் முன்புறம் சேதமடைந்துள்ளது. எனினும், கப்பல் பயணம் செய்யும் அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வேகமாக பரவும் கொரோனா – 7 நாட்களில் 314 பேருக்கு வைரஸ் தொற்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்துள்ள 7 நாட்களில் மாத்திரம் 314 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மார்ச் 22 முதல் 29 வரையான காலப்பகுதியிலேயே தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, யாழ்.நகரிலும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ். கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்குகூட ஒருவாரம் மூடப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் இதுவரை 7,690 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் இதுவரை 7 ஆயிரத்து 690 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 1,168 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 5,342
பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில்  1,180 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 31,554 பேருக்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விமலுக்கு எதிரான வியூகத்தை கைவிட்டது ஐக்கிய மக்கள் சக்தி!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்பட்டுள்ளது.

இனங்களுக்கிடையில் குரோதத்தை விதைக்கும் விதத்தில் இனவாதத்தைக் கக்குதல் உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகளை மையப்படுத்தியே குறித்த பிரேரணை அதிஉயர் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. சஜித் அணியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலரே இதற்கான நகர்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்கூட விமலை விளாசித் தள்ளுவதால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவில் நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும், அவ்வாறு முடியாமல்போனால் அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துக்காவது சவால் விடுக்கலாம் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

ஆனால் தற்போதைய அரசு பல வழிகளிலும் இறுகியுள்ளது. அரசுக்கு ஆலவட்டம் பிடித்த அமைப்புகள்கூட அதன் செயற்பாடுகளை சரமாரியாக விமர்சித்துவருகின்றன. அதுமட்டுமல்ல பௌத்த தேரர்கள்கூட வெளிப்படையாகவே சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர். மறுபுறத்தில் அரச கூட்டுக்குள்ளும், வெளியிலும் பிரச்சினைகள் தலைவிரித்தாட தொடங்கியுள்ளன.

இவ்வாறானதொரு பின்புலத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்தால் பொதுவான பிரச்சினைகள் திசைதிருப்பப்படக்கூடும் எனவும், பிளவுபட்டுள்ள அரச கூட்டணி ஐக்கியமாகக்கூடும் எனவும், அது வருகின்ற தேர்தலில் அரசுக்கும், விமலின் கட்சிக்குள் சாதகமாக அமையக்கூடும் எனவும் பின்வரிசை எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்பட்டுள்ளது. எனினும், அரசுக்கு எதிராக பல வழிகளிலும் போராடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிட்டுப் பூங்காவின் கொட்டகைக்கு தீ வைப்பு – யாழில் விஷமிகள் வெறியாட்டம்

யாழ். நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு விசமிகளால் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி ஏரிந்து நாசமாகியுள்ளது.

“தேசிய மரதன் ஓட்டப் போட்டி” – தமிழர்கள் இருவர் ஒரே தடவையில் தங்கம் வென்று சாதனை

46 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முத்துசாமி சிவராஜனும், பெண்கள் பிரிவில் வேலு கிருஷாந்தினியும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இலங்கையின் 46 வருடகால தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டிகள் வரலாற்றில் தமிழர்கள் இருவர் ஒரே தடவையில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் தடவையாகும்.

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான சைக்கிளோட்டம், மரதன் ஓட்டம் மற்றும் வேகநடை உள்ளிட்ட மூன்று போட்டிகளும் இன்று முதல் கதிர்காமத்தில் ஆரம்பமாகியது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி கதிர்காமம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில்   நடைபெற்றது.

42.195 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக நடைபெற்ற இந்தப் போட்டிக்கு நாடளாவிய ரீதியிலிருந்து 72 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். இதில் ஆண்கள் பிரிவில் 50 பேரும், பெண்கள் பிரிவில் 22 பேரும் பங்குபற்றினர்.

இதன் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் பெற்றுக்கொண்டார்.

போட்டியை அவர் இரண்டு மணித்தியாலங்கள், 29 நிமிடங்கள், 29 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் மரதன் ஓட்டப் போட்டியில் தமிழ் பேசுகின்ற வீரரொருவர் பெற்றுக்கொண்ட முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

கடந்த வருடம் நுவரெலியாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் முதல்தடவையாக வெண்கலப் பதக்கம் வென்ற சிவராஜன், இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

அதன்பிறகு இலங்கை விமானப்படையில் இணைந்துகொண்ட அவர், தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்குபற்றி வெற்றிகளையும் பதிவு செய்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதான முத்துசாமி சிவராஜன், நுவரெலியா மாவட்டம் சாந்திபுர ஒலிபென்ட் தோட்டத்தைச் சேர்ந்தவராவார்.

ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த ரி. குணசேகர (2:32:14) வெள்ளிப் பதக்கத்தையும், வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த எஸ். குமார (2:33:45) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை உடபுசல்லாவையைச் சேர்ந்த வேலு கிருஷாந்தினி பெற்றுக்கொண்டார்.

பல முன்னணி வீராங்களைகள் பங்குகொண்ட இப்போட்டியை, இரண்டு மணித்தியாலங்கள் 55 நிமிடங்கள், 30 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை அவர் சுவீகரித்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவிலும் கிருஷாந்தினி தங்கப் பதக்கம் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வேலு கிருஷாந்தினி வெற்றி கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எம். ஹேரத் (2:57:15) வெள்ளிப் பதக்கத்தையும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த டி. லியனகே (3:00:19) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

குறித்த போட்டியில் பங்குகொண்ட வட மாகாணம், வவுனியாவைச் சேர்ந்த எஸ். ஹேமப்பிரியா (3 மணி. 40:00 செக்.) எட்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போராடி தோற்றது இங்கிலாந்து – தொடரை வென்றது இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் முதல்  ஆட்டத்தில் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 329 ஓட்டங்களை பெற்றது.

பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை பெற்று போராடி தோற்றது.

https://www.espncricinfo.com/series/england-tour-of-india-2020-21-1243364/india-vs-england-3rd-odi-1243395/full-scorecard

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...