Home Blog Page 3559

114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொலை – மியன்மார் இராணுவ ஆட்சிக்கு உலக நாடுகள் கண்டனம்

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மியான்மர் இராணுவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கவிழ்த்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இராணுவம் முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரையும் வீட்டு சிறையில் வைத்துள்ளது.

இதனிடையே இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கொடூரமான அடக்கு முறைகளைக் கையாண்டு வருகிறது.

இந்த சூழலில் மியான்மர் ராணுவம் நேற்றுமுன்தினம் ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. இதையொட்டி அரசு டிவியில் உரையாற்றிய ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் தலையில் சுட படுவார்கள் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்தார். அதனை மீறியும் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழக்கம் போல் வீதிகளில் இறங்கிப் போராடினர்.‌

அந்த நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உட்பட 40 இடங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.‌ அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்களில் திடீரென வன்முறை வெடித்தது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

இதையடுத்து போராட்டத்தை நசுக்குவதற்கு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.‌ இதுவரை இல்லாத வகையில் மிகவும் ஆக்ரோஷமாகவும் கண்மூடித் தனமாகவும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர். இதனால் ஆட்சி கவிழ்ப்பு நடந்த நாளிலிருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவர். கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள் சிலரும் அடங்குவர்.

இதனிடையே மியான்மர் ராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மியான்மர் ராணுவத்தை கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதேபோல் ஐரோப்பிய கூட்டமைப்பும், ஐநா பொதுச்சபையும் மியான்மார் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டை வன்மையாகக் கண்டித்துள்ளன.

12 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் ‘‘சர்வதேச தரங்களை பின்பற்றி அமைதியை உறுதி செய்வதும் மக்களை பாதுகாப்பதும் எந்தவொரு ராணுவத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும். மாறாக சொந்த மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. எனவே வன்முறையை உடனடியாக நிறுத்தவும் மக்களிடம் அதன் மரியாதை மற்றும் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க உறுதியாக செயல்படவும் மியான்மர் ராணுவத்தை கேட்டுக்கொள்கிறோம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மியான்மருக்கான ஐரோப்பிய யூனியன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மியான்மரில் கொண்டாடப்பட்ட 76-ஆவது முப்படைகள் தினம், அந்த நாட்டுப் படைகளின் வன்முறை நிறைந்த அவமான தினமாக என்றென்றும் நிலைத்திருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில்

‘‘கடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராகவும், ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் சனிக்கிழமை மிக அதிகமான தினசரி இறப்பு எண்ணிக்கையை விளைவிக்கும் தொடர்ச்சியான ராணுவ ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான சர்வதேச பதிலை அளிக்க வேண்டும். மேலும் இந்த நெருக்கடிக்கு அவசரகால தீர்வைக் காண்பது மிகவும் அவசியமானது,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் உள்ள ஐ.நா. அலுவலகம், ‘‘சனிக்கிழமை நிகழ்ந்துள்ள ஒடுக்குமுறைக்கு தேவையற்ற உயிரிழப்பால் திகிலடைந்துள்ளது, வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’’ கூறியுள்ளது.

ஏப்ரலிலும் விசேட விவாதம்! ஐந்து நாட்கள் கூடுகிறது பாராளுமன்றம்!!

ஏப்ரல் மாதம்  5 ஆம் திகதி முதல்  9 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு அமைய ஏப்ரல்  5ஆம் திகதி திங்கட்கிழமை விசேட தினமாக நாடாளுமன்றம் கூடவுள்ளது. அன்று முற்பகல் 10 மணி முதல் மாலை  4 மணி வரை முழுநாளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றம் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

அன்றையதினம் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுமை அமைப்பதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அத்துடன், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை ஐந்தாவது நாளாக ஏப்ரல்  7ஆம் திகதி நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அரசியல் பழிவாங்கள் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்  6ஆம் திகதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளைகள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான தீர்மானம் உள்ளிட்ட  8 விடயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் மாலை  4.30 மணிவரை இவை குறித்த விவாதம் நடைபெறவிருப்பதுடன், மாலை  4.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை- முதல் நாடாக சட்டம் இயற்றியது நியூசிலாந்து

ஒருவேளை துரதிருஷ்டவசமாக பெண் ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்கள் பெரும் துன்பத்தை கருத்தில் கொண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசு அலுவலங்களில் வேலை செய்து வருகிறார்கள். திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெறுவதற்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் இது நடைமுறையில் இருந்து வருகிறது.

பெண்கள் குழந்தைகளை பெறுவதைத் தவிர மற்றும் சில விஷயங்களிலும் வேலைக்கு வரும்போது கஷ்டப்படும் நிலை உள்ளது. கருவுற்ற சில வாரங்களில் துரதிருஷ்டவசமாக கருச்சிதைவு ஏற்பட்டால், அது பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய வேதனையைக் கொடுக்கும். இந்த வேதனையுடன் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும். அல்லது விடுமுறை எடுக்க வேண்டும். இதனால் கூடுதல் வேதனையுடன் மன அழுத்தமும் ஏற்படும்.

இதை கருத்தில் கொண்டு நியூசிலாந்து அரசு ஒருவேளை பெண் ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்களுக்கு மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்க முடிவு செய்தது. இதுகுறித்த மசோதா கடந்த புதன்கிழமை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக சட்டம் நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் கருச்சிதைவு ஏற்பட்டால், பெண்கள் மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்பது நடைமுறைக்கு வருகிறது.

இச்சட்டத்தை இயற்றி, செயல்முறைக்கு கொண்டு வரும் முதல் நாடு நியூசிலாந்தாகிறது.

இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்த தொழிலாளர் எம்.பி. (Labour MP) ஜின்னி ஆண்டர்சன், ‘‘நாம் உலகில் முதலாவது நபராக இருக்கும்போது, கடைசி நபராக இருக்கமாட்டோம் என்பதை என்னால் உறுதியாக நம்ப முடியும். நம்நாட்டை பார்த்து மற்ற நாடுகளும் அதன் வேதனையை அறிந்து சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அங்கீகரிக்கும் சட்டத்தை தொடங்குவார்கள்’’ என்றார்.

கொரோனா தாண்டவம் – யாழில் ஒரு வாரத்துக்கு பாடசாலைகளுக்கு பூட்டு!

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில் யாழ். கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாட சாலைகளும் நாளையிலிருந்து ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட கொரோனாத் தடுப்புச் செயலணியின் தலைவருமான க.மகேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ். மாவட்ட அரச அதிபர் ஆகியோர் ஆராய்ந்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போதுள்ள இடர் காலத்தைக் கருத்தில்கொண்டு நாளை முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை யாழ். கல்வி வலயப் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படு கின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் மேலும் கூறியுள்ளார்

தலவாக்கலை ரயில் நிலையத்தில் தீ – ஆயுதக் களஞ்சியசாலை தீக்கிரை!

தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ளது ஆயுத களஞ்சியசாலையில் இன்று நண் பகல் 12 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக அக்களஞ்சியசாலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த தீ விபத்தால் எவருக்கும் உயிர் ஆபததோ காயங்களோ ஏற்படாத போதிலும் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை தவிர அனைத்தும் எரிந்து நாசமாகிஉள்ளன.

குறித்த தீயினை ஊழியர்கள் கட்டுப் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தலவாக்கலை பிரதேசத்திற்கு கடும்மழை பெய்வருவதன் காரணமாக தீ கட்டுப்படுதுவது இலகுவாக அமைந்தன.

குறித்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இத் தீவிபத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்களையும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

மே தினத்துக்காக செலவிடப்படும் நிதி இனி கல்விக்காக பயன்படுத்தப்படும் – ஜீவன்

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் மேதின நிகழ்வுகளை மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளது. இந்நிகழ்வுகளில் பங்கேற்க பல இடங்களிலிருந்து இளைஞர்கள் முதல் பெரியவர்களை பெரும் எண்ணிக்கையானோர் தூர இடங்களிலிருந்து வருகை தருவார்கள். அதற்காக நாம் பாரிய அளவில் நிதியினை செலவிட்டுள்ளோம். எனவே, இனிவரும் காலங்களில் மேதினத்திற்காக செலவிடும் பணத்தினை தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக செலவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்று சமூக உட்கட்டமைப்புகள் வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் நேற்று (27)  கொட்டகலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜீவன் இவ்வாறு கூறினார்.  இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த காலங்களில் எத்தனையோ மேதினங்களை நான் பார்த்திருக்கிறேன். அதற்காக பாரிய அளவில் நிதி செலவிடப்படுகின்றது. அவ்வாறான சூழ் நிலையில் இன்று எத்தனையோ தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்து பிள்ளைகள் கல்வியினை தொடர முடியாது உள்ளனர்.

பலர் பல்கலைக்கழகம் சென்று படிப்தற்கு வாய்ப்பிருந்தும் அதனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம் அந்த குடும்பத்தில் பொருளாதார கஸ்டங்கள் இருக்கும் போது நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஆகவே அவற்றிக்கு தீர்வு காண வேண்டும்.

ஆகவே கடந்த காலங்களைப்போல் அல்லாது உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எனக்கு நீண்ட பயணம் ஒன்று செல்ல வேண்டியுள்ளது. அதற்காகத்தான் நீங்கள் எனக்கு அங்கிகாரம் கொடுத்துள்ளீர்கள். நிச்சயம் அதனை நான் செய்து முடிபேன். ” – என்றார்.

முதலை தாக்கி சிறுவன் பலி – திருமலையில் சோகம்!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) என்ற சிறுவனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

இரு சிறார்களுடன் மேற்படி குளத்துக்கு குளிக்கச்சென்று,  குளித்துக்கொண்டிருக்கையிலேயே சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ளது.

இதனையடுத்து அச்சிறுவன் உடன் சென்ற சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று கூறியதையடுத்து அங்கு ஓடிச் சென்ற சிறுவனின் தந்தை தன்னுடைய மகனை முதலில் இழுத்துச் செல்வதை அவதானிக்கவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று முதல் காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் இன்று காலை கிராம மக்களின் உதவியுடன் முதலை கடித்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

(அப்துல்சலாம் யாசீம்)

மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்றார் பதுளை மறைமாவட்ட ஆயர்!

பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோர பேருந்து விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும், அவர்களின் குடும்பத்தாரின் விருப்பத்தின்பேரில் பதுளை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வின்சன் பெர்ணாண்டோ அடிகளார் பொறுப்பேற்றுள்ளார்.

ஈயூனியா (09 வயது), ஆரோன் (08 வயது) , இவாஞ்சலினா (04) ஆகிய மூன்று பிள்ளைகளுமே ஆயரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வைத்தியர் ஒருவர் இம்மூன்று பிள்ளைகளையும் தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் நேற்று (27) பதுளை மாவட்ட கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரினால் பிள்ளைகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது தாத்தா ( செபஸ்டியன் பெனடிக் (70 வயது ), பாட்டி ஐயாசாமி செல்வநாயகி (63) ஆகியோரின் அரவணைப்பில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர்.

இக்குடும்பத்திற்கான அத்தியாவசிய தேவைகள் பதுளை மறைமாவட்ட மேதகு ஆயரின் ஆதரவில் லுணுகல புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தையூடாக முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி இப்பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் முழுகவனமும் ஆயரினால் கண்காணிக்கப்படவுள்ளது.

பிள்ளைகளில் ஈயூனியா நான்காம் தரத்திலும், இவாஞ்சலினா மூன்றாம் தரத்திலும் லுணுகல இராமகிருஸ்ணா இந்து கல்லூரியில் கல்வி கற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. இப்பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கும் குடும்ப வாழ்வாதார தேவைகளுக்கும் உதவுவதற்கு முன்வருவோர் ஆயரினால் மேற்கொள்ளப்படவிருக்கும் அறக்கட்டளை நிதியத்தினூடாக உதவ முடியும்.

கடந்த சனிக்கிழமை ( 20/03) பசறையில் நிகழ்ந்த விபத்தில் அந்தனி நோவா – பெனடிக் மெடோனா தம்பதியினர் உள்ளடங்ளாக 14 பேர் பரிதாபமாக பலியாகிய சோகசம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

பசறை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 95 ஆயிரம் ரூபா மட்டுமே இழப்பீடு!

பசறை 13ஆம் மையில் கல்லருகே, கடந்த 20ஆம் திகதி இடம் பெற்ற தனியார் பஸ் விபத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கு தலா 95 ஆயிரம் ரூபா வீதமும், காயமடைந்த 32 பேருக்கு தலா 15 ஆயிரம் ரூபா வீதமும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஊவா மாகாண ஆளுனர் அலுவலகத்தினால் 30 ஆயிரம் ரூபாவும், போக்குவரத்து ஆணைக்குழுவினால் 25 ஆயிரம் ரூபாவும், காப்புறுதி நிறுவனத்தினால் 25 ஆயிரம் ரூபாவும், ஊவா மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் 15 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட உள்ளன.

அதே போன்று விபத்தில் காயமடைந்த 32 பேருக்கும் தலா 15 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் வழங்க போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்ககை எடுத்துள்ளது.

ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முசாமில் தலைமையில் ஆளுனர் பணியகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போதே, மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

எம். செல்வராஜா. பதுளை நிருபர்

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை இறுதி முடிவு!

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, முன்னர் போன்று பழைய விருப்பு வாக்கு முறைமைக்கமைய தேர்தலை நடத்துவதா? அல்லது புதிய தொகுதி முறைமைக்கமைய தேர்தலை நடத்துவதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனினால் இதற்கான 02 மாற்று யோசனைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர்கள் சிலர் அறிவித்திருந்தனர்.

எனவே, அமைச்சரவை பத்திரத்தை கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை ஒரு வாரம் பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், அந்த அமைச்சரவை பத்திரம் நாளை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, தேர்தலை பழைய முறையில் நடத்துவதானால், பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான புதிய சட்டத்தை நீக்கி பழைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

விகிதாசார முறைமை மற்றும் கலப்பு தொகுதி முறையில் தேர்தலை நடத்துவதானால், தொகுதிவாரியாக 70 சதவீதமும், விகிதாசார முறைமையின் கீழ் 30 சதவீதமும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கும் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இரண்டாவது யோசனையை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சிக்கு மாகாண ரீதியாக வழங்கப்படும் 02 மேலதிக ஆசனங்களுக்காக, மாவட்ட ரீதியாக இரண்டு மேலதிக உறுப்பினர்களை நியமிப்பதற்கும் அமைச்சரவை பத்திரத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இரண்டு மாவட்டங்களை கொண்ட மாகாணங்களுக்கு, நான்கு ஆசனங்களும், மூன்று மாவட்டங்களை கொண்ட மாகாணங்களுக்கு 06 ஆசனங்களும் கிடைக்கும் வகையில் தேர்தல் சட்டம் திருத்தத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...