Home Blog Page 3560

இலங்கை ஆளுமைகள் அணியுடன் விளையாடிய யூசுப் பதானுக்கும் கொரோனா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதானுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்து விட்டது.

இதற்கிடையே மராட்டிய மாநிலம் மும்பையில் வசிக்கும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அவரே நேற்று தெரிவித்தார்.

சமீபத்தில் மும்பை மற்றும் ராய்ப்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் பங்கேற்று விளையாடினார். அவரது தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி, தில்ஷன் தலைமையிலான இலங்கை ஜாம்பவான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில் தெண்டுல்கருடன் இணைந்து உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதானும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் சமீபத்திய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். யுவராஜ்சிங், ஷேவாக், இர்பான் பதான், முகமது கைப் உள்ளிட்ட இந்திய முன்னாள் வீரர்களும் இந்த போட்டியில் ஆடியது குறிப்பிடத்தக்கது.

மலையகப் பெண்களுக்கு சமவுரிமை பெற்றுக்கொடுத்தது இ.தொ.காவே!

ஆண்களை போன்று பெண்களுக்கும் உலகில் முதல்முறையாக சம சம்பளத்தை வாங்கிக்கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான்தான். சௌமியமூர்த்தி தொண்டமான்தான், ஆறுமுகன் தொண்டமான் வழியில் தொடர்ந்து பெண்களுக்காக இ.தொ.கா குரல் கொடுக்குமென பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர்தின விழா நேற்று பதுளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட பதுளையில் உள்ள இ.தொ.காவின் முக்கியஸ்தர்களும் மகளிர் அமைப்பினரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய செந்தில் தொண்டமான் மேலும் கூறியதாவது,

நாட்டில் இருக்கும் பெண்களில் அதிகமாக மலையகப் பெண்கள்தான வேலைக்குச் செல்கின்றனர். இவர்கள் தங்களது குடும்பத்திற்கு மாத்திரமல்ல நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முதுகெலும்பாகவுள்ளனர்.

ஒரு தோட்டத்தில் 10 பெண்கள் இருந்தால் அவர்களில் 7 பேர் வேலை செய்பவர்களாக உள்ளனர். ஏனைய சமூகங்களில் அவ்வாறு இல்லை. மலையக பெண்கள்தான் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

பெண் சமுதாயத்திற்கு மதிப்பளிக்கும் முகமாகவும் அவர்களுக்கு சம அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும் முகமாகவும் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானும் ஆறுமுகன் தொண்டமானும் இறக்கும்வரை தொடர்ந்து பாடுபட்டுவந்தனர்.

ஆண்களை போன்று பெண்களுக்கும் சம சம்பளத்தை வாங்கிக்கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான்தான். உலகில் முதல்முறையாக ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம் பெற்றுக்கொடுத்த தலைவரே சௌமியமூர்த்தி தொண்டமான். “ஆண்களும் பெண்களும் ஒரே அளவான வேலையை செய்யும் போது ஆண்களுக்கு மாத்திரம் அதிகமாக சம்பளத்தை வழங்குவது ஆணாதிக்கத்திற்கும் பெண்களின் சம அந்தஸ்திற்கும் பாதிப்பாக அமையும்” என்ற கருத்தியலின் பிரகாரம் பெண்களுக்கு இவ்வாறு சம சம்பளத்தை வாங்கொடுத்திருந்தார்.

அதேபோன்று அமரர் ஆறுமுகன் தொண்டமானும் பெண்களின் உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் குரல்கொடுத்திருந்தார் என்றார்.

இதேவேளை, கடந்த வருடம் முதல் கொவிட் தொற்று காரணமாக வழமை போன்று இரத்ததானம் செய்ய முடியாதிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிகாக பாடும் மலையக யுவதிகள் முதல்கட்டமாக 100 பேர் இரத்ததானம் வழங்க உள்ளனர். இதற்கான பதிவு இன்று பண்டாரவளையில் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைமுதல் இரத்ததானத்தை வழங்கவும் உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி – பூப்பந்து போட்டி தொழில்நுட்ப அலுவலராக மலையக பெண் தெரிவு!

2021  நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடரில் பூப்பந்து போட்டி தொழில்நுட்ப அலுவலராக இலங்கை தமிழ் பெண்ணான அகல்யா என்பவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

பசறை தமிழ் தேசிய பாடசாலை விளையாட்டுதுறை ஆசிரியையாக கடமைபுரியும் செல்வி. அகல்யா  இதற்கு தெரிவான செய்தி பரவியதை தொடர்ந்து அவருக்கு பசறை மக்கள் உடப்பட உலக வாழ் தமிழர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவர் இலங்கை ஆசிரியர் சேவையில் இருந்து பூப்பந்து (பெட்மின்டன்) போட்டிக்கு அலுவலராக செல்லும் முதலாவது நபராகவும் பெண்மணியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு உலகளவில் தமிழர் சார்பில் முதல் பெண் நபராகவும் இவர் மாத்திரமே இவ்வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்க அம்சமாகும்.

ஊவா மாகாண பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கும், மலையகத்திற்கும் விளையாட்டுத்துறையில் பெருமை சேர்த்துள்ள ஆசிரியை செல்வி அகல்யாவிற்கு எமது வாழ்த்துகள்.

நடராஜா மலர்வேந்தன்

மியன்மாரில் வன்முறை உக்கிரம் – இன்று 64 இற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொலை!

மியன்மாரில் இன்று 60 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை, மியன்மாரில் போராட்டம் தொடங்கியதில் இருந்து பதிவான ஆக அதிக எண்ணிக்கை.

ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோர், தலையிலோ முதுகிலோ சுடப்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக ஏற்கெனவே ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த எச்சரிக்கையையும் மீறி யங்கூன், மேண்டலே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேண்டலேயில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டதாகவும், யங்கூனில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்று, மியன்மாரில் ஆயுதப் படை தின அணிவகுப்பு காலை நடந்தது.

அப்போது நாட்டில் ஜனநாயகத்துக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று ராணுவம் தெரிவித்திருந்தது.

மியன்மாரில், சென்ற மாதம் முதல் திகதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு நாள்தோறும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

அரசாங்க ஆலோசகரான திருவாட்டி சூச்சி (Aung San Suu Kyi) அந்நாட்டு ராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

மியன்மார் நிலவரம் குறித்து உலக நாடுகளும் ஐக்கிய நாட்டு நிறுவனமும் தொடர்ந்து அக்கறை தெரிவித்து வருகின்றன.

A-9 வீதியில் விபத்து – இரு பெண்கள் பலி! 15 பேர் காயம்!!

யாழ் – கண்டி A9 வீதியின் அனுராதபுரம், திறப்பனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

பக்கமூன பகுதியிலிருந்து அநுராதபுரத்திற்கு யாத்திரை சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

“ஜெனிவா தீர்மானத்தால் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாமல் போகலாம்” – சம்பிக்க எச்சரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பயங்கரமானதொன்றாகும். இதன்படி  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும். அத்துடன், படையினருக்கு எதிரான பயணத்தடையும் நீடிக்கப்படும் அபாயம் இருக்கின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்   நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறுவதை தடுப்பதற்கான இராஜதந்திர நகர்வுகளை தற்போதைய அரசு உரிய வகையில் முன்னெடுக்கவில்லை. இதனால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கும்தான் தாக்கம் ஏற்படப்போகின்றது.  எனவேதான் இதனை பாரதூரமானதொரு பிரச்சினையாக கருதுகின்றோம்.

நல்லாட்சி அரசால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்றதொரு விம்பத்தை உருவாக்குவதற்கு தற்போதைய அரசு முயற்சிக்கின்றது.  ஆனால் உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேசம் தலையிடுவதற்கான களத்தை மஹிந்த ராஜபக்சவே அமைத்துக்கொடுத்தார். போர் முடிவடைந்த பின்னர் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான் –கீ –மூனுடன் இணைந்து கூட்டறிக்கை விடுத்தார். அதில் பொறுப்புக்கூறலுக்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது. இந்த பொறுப்புக்கூறல் தொடர்பில்தான் இன்று சர்வதேசம் கேள்வி எழுப்புகின்றது.

இலங்கை தொடர்பில் முதலாவது பிரேரணை முன்வைக்கப்பட்டபோது அதில் இலங்கை வெற்றிபெற்றது. 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதால் ஆதரவு கிடைத்தது. இதன்பிரகாரம்தான் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு ஆகியன அமைக்கப்பட்டன.
ஆனால் உரிய வகையில் நடவடிக்கை இடம்பெறாததால்தான் பாரதூரமான பிரேரணைகள் நிறைவேறின. இந்நிலையில் நல்லாட்சி வந்த பிறகு சர்வதேச நெருக்கடி குறைந்தது.  மின்சாரக்கதிரை உள்ளிட்ட சர்ச்சைகள் இருக்கவில்லை.

வெளிநாடுகளில் வாழும் புலிகள் பலவீனமடைந்தனர். பொருளாதார இழப்புகள் ஏற்படவில்லை. ஆனாலும் எவருடனும் கலந்துரையாடாமல் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை தவறான செயலாகும்.   எது எப்படி இருந்தாலும் ஒற்றையாட்சி, இறையாண்மை , ஜனநாயகம் , மனித உரிமைகள் மற்றும் படையினரை நாம் பாதுகாப்போம். இதில் பின்நிற்கப்போவதில்லை.

ஜெனிவாப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த அரசு முயற்சிக்கவில்லை. அதனை வைத்து உள்நாட்டில் பிரச்சாரம் செய்தது. வெளிநாடுகளுக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அவற்றை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேற்குலகத்துக்கு அடிபணியமாட்டோம் என சூளுரைக்கின்றனர். ஆனால் அமெரிக்காவின் கருணையால்தான் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானார் என்பதை மறந்துவிடமுடியாது.

இந்தியா, ஜப்பான், தென்கொரியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெறமுடியாமல்போனமை தொடர்பில் இந்த அரசு பொறுப்புக்கூறவேண்டும்.

அதேவேளை, போருக்கு பின்னர் மனித உரிமைகள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மாற்று கருத்துகளை உடைய அரசியல்வாதிகள் வேட்டையாடப்பட்டனர். தற்போதுகூட எமது பிரஜா உரிமையை பறிப்பதற்கு முயற்சிக்கின்றனர். 20 ஆவது திருத்தச்சட்டம்மூலம் நீதிமன்றம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் சுயாதீனம் இல்லாமல் ஆக்கப்பட்டது.

இவ்வாறு உள்நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளதையே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இங்கு ஜனநாயகக் கட்டமைப்பு உரிய வகையில் செயற்பட்டால் விமர்சனங்களை முன்வைக்கவேண்டிய தேவை சர்வதேசத்துக்கு எழாது.
அதேபோல தகுதியற்ற ஒருவரே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ஒருவர் இருந்தாலும் அமைச்சின் செயலாளரே அமைச்சை வழிநடத்துகின்றார்.  இந்தியாவுக்கு இன்னும் தூதுவர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. முன்னர் தகுதியான, அனுபவம் வாய்ந்தவர்களே ஜெனிவா அனுப்படுவர், தற்போது என்ன நடக்கின்றது?

குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பயங்கரமானதொன்றாகும்.  வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இது வேறுவடிவில்கூட வரலாம். சர்வதேச விசாரணைக்கு வழிசமைக்கலாம். பொருளாதாரத்துக்கு மரண அடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான சந்தை வாய்ப்பை மூடலாம். ஜி.எல்.பி. பிளஸ் போன்ற சலுகைகள் போகலாம். படை பிரதானிகளுக்கான பயணத்தடை நீடிக்கப்படலாம்.” – என்றார்.

பசறையில் சீரற்ற காலநிலையால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்க பணிப்பு

பசறை பிரதேச சபைக்குட்பட்ட எல்டப் தன்னமலை பகுதியில் சீரற்ற காலநிலையால் சேதமடைந்த மூன்று வீடுகளையும் உடனடியாக சீரமைக்குமாறு தோட்ட முகாமையாளருக்கு, பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த அனர்த்தம் தொடர்பில் பசறை அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்தே 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.

அத்துடன், பசறை பிரதேச செயலாளரின் நிர்வாக உத்தியோகஸ்தருடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறு செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இ.தொ.காவின் மகளிர் தின நிகழ்வு கொட்டகலையில்…. (படங்கள் இணைப்பு)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை CLF வளாக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் கடந்த 8ம் திகதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மகளிர் தினம் இன்றைய தினம் பெண்களின் பல்வேறு பாரம்பரிய கலை,கலாச்சார நிகழ்வுகளுடன் மற்றும் விவாத போட்டிகளும் இடம்பெற்றது.

இதன்போது வருகை தந்திருந்த இ.தொ. கா வின் மூத்த தோட்ட தலைவிகளுக்கு அமைச்சரினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், காங்கிரஸின் வளர்ச்சிக்கு மூத்த தலைவர் மற்றும் தலைவிகளின் பங்கு எப்போதும் அவசியம் அத்தோடு இனிவரும் காலங்களில் காங்கிரஸின் மாவட்ட காரியாலயங்களில் மூத்த தலைவர்களுக்கு காரியாலயத்தில் சென்று ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கிறோம்.

இந்நிகழ்வில் இ.தொ.கா வின் பிரதித்தலைவர் அனுஷா சிவராஜா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மருதுபாண்டி ராமேஸ்வரன், உபதலைவர்கள், நகர பிரதேச சபை தலைவர்கள், மூத்த தலைவிகள், இ.தொ.கா வின் காரியாலய இணைப்பதிகாரிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

21/4 தாக்குதலால் பலிகடாவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி வேண்டும்!

21/4 தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு நீதி நிவாரணத்துக்காக ஏங்குத் தவிக்கும் கத்தோலிக்க சமூகத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதேபோல குறித்த தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர வழிகளில் வேட்டையாடப்பட்ட – பலிக்கடாக்களாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் இன்று (27.03.2021) நடைபெற்ற “சமூக நீதி” தொடர்பான கலந்துரையாடலின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது முழுமையற்றதொன்றாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்ல அவ்வறிக்கையின் இணைப்புகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனவே, ஒரு பகுதியை வைத்துக்கொண்டுதான் தற்போது விவாதம்கூட நடைபெறுகின்றது.

குறித்த தாக்குதலின் பின்புலம் என்ன , பிரதான சூத்திரதாரிகள் யார் , திட்டமிட்டது யார் என்பன உட்பட தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதுதான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அனைவரினதும் கோரிக்கையாக இருந்தது.  இந்நிலையில் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தவறியவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தியிருந்தாலும், அடி, முடி தொடர்பில் உரிய வகையில் ஆராயவில்லை என்பதுதான் பொதுக்கருத்தாக இருக்கின்றது.

எனவே, 21/4 தாக்குதல் தொடர்பில் அனைத்து வழிகளிலும் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பிலும், தாக்குதலின் உண்மையான நோக்கமும் உரிய வகையில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும். இதன் பின்னணியில் செயற்பட்டுள்ள வெளி சக்திகள் உள்ளிட்ட விடயங்களும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். அவ்வாறு செய்தவதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்ககூடியதாக இருக்கும்.

ஆனால் நாட்டில் எதாவது நடைபெற்றால் அதனை தனக்கு சாதகமான வகையில் அரசியல் மயப்படுத்தி , அரசியல் பிழைப்பு நடத்தும் தற்போதைய அரசு, நீதி நிவாரணத்தை வழங்குமா என்பது சந்தேகமே. எது எப்படி இருந்தாலும் பேராயர் கூறியதுபோல சர்வதேசம் சென்றாவது அம்மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.
அதேபோல 21/4 தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம்மீதும் பேரினவாதிகள் பயங்கரவாத முத்திரை குத்தினர். இஸ்லாம் மதத்தையும் அவதூறு படுத்தினர். அப்பாவி முஸ்லிம் மக்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டனர். அவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

முஸ்லிம் வியாபாரிகளின் வர்த்தகமும் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டது. எனவே, 21/4 தாக்குதலையடுத்து பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி வேண்டும். அவர்கள் தொடர்பான களங்கம் நீக்கப்படவேண்டும். தமக்கான கலை, கலாசார, பண்பாட்டு, மத உரிமைகளை பின்பற்றி சுதந்திரமாக வாழும் நிலை உருவாக வேண்டும். ஒரு சிலரின் செயலுக்காக ஒரு சமூகத்தை குறிவைப்பது குரோதத்தின் உச்சமாகும்.  ” -என்றார்.

மத்திய மாகாணத்தில் இதுவரை 7,597 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் இதுவரை 7 ஆயிரத்து 597 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 1,163 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 5,275 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில்  1,159 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 31,188 பேருக்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...