Home Blog Page 3565

தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா! இலங்கைக்கு பாதிப்பா?

இந்தியாவில் தடுப்பூசி ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் தாமதமின்றி இலங்கையை வந்து சேரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதால், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் இறுதி வரை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இலங்கைக்கு தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படும் என இந்தியா உறுதி அளித்துள்ளதாக சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையினால் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகள் தாமதமின்றி இலங்கையை வந்து சேரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘இன, மத பெயர்களைக்கொண்ட கட்சிகள் பதிவு செய்யப்படமாட்டாது’

மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகளை பதிவு செய்வதில்லையென்ற தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படும்போது அதன் உத்தியோகபூர்வ பெயர் எந்தவொரு மதம் அல்லது இனத்தின் பெயரைக் கொண்டிருந்தால் அவ்வாறான கட்சிகளை பதிவு செய்வதில்லை என்ற தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கிணங்க அரசியல் கட்சி ஒன்று தேசிய கட்சி என்ற ரீதியிலேயே பதிவு செய்யப்படும். நேற்று இடம்பெற்றுள்ள மேற்படி ஆணைக்குழுவின் அமர்வில் அந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக
ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்கள் அவ்வாறு மத அல்லது இன ரீதியில் அமைந்திருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிக்கு அறிவித்து நியாயமான கால அவகாசம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கம்பளை பகுதியில் விபத்து – பெண்ணொருவர் பலி!

கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுந்துவத்த – மலங்கமுவ பிரதான வீதியில் பட்டஎல எனும் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு பெண்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 40 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று வேனொன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலிருந்து வந்த மற்றுமொரு வேன், வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த வேனுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பின்னர் வேகமாக இழுத்துச்செல்லப்பட்ட வேன், ஊழியர்மீது மோதியுள்ளது. இருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். வேன் சாரதி படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றது.

குறுந்துவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கம்பளை நிருபர் – லாவண்யா

ஆகஸ்ட் மாதம் மாகாணத் தேர்தல்! விரைவில் அமைச்சரவை பத்திரம்!!

மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தம் அடங்கிய பிரேரணை இன்னும் இரு வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது என அரச உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கும் உரிய வகையில் நிறைவேறிய பின்னர் ஆகஸ்ட் மாதமளவில் தேர்தலை நடத்துவதே அரசின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.

சுமார் 3 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டுவரும் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏற்கனவே பணிப்புரைகளை விடுத்துள்ளனர்.

இதன்படி விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் பூர்வாங்க பணிகளை முன்னெடுத்துள்ளார்.கட்சி தலைவர்களுடனும் இது சம்பந்தமாக அவர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளார்.

வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘ஜெனிவா சமரில் ‘அடுத்து என்ன? வெளிவிவகார அமைச்சர் இன்று விசேட உரை!

ஜெனிவா விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (25) நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். இந்த தகவலை அவர் நேற்று உறுதிப்படுத்தினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பு, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் எதிர்காலத்தில் இலங்கையால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மேற்படி உரையின்போது வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் பிரிட்டன் தலைமையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு 22 நாடுகள் ஆதரவு வழங்கின. 11 நாடுகள் எதிராக வாக்களித்தன. 14 நாடுகள் நிடுநிலை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ள நிலையில், அதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன என்பது தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் விளக்கமளிப்பார் என தெரியவருகின்றது.

ஜெனிவாவில் இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் துரோகமாகும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (23/03/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு,

“இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம்.

ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கையின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன்? தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், வெளிநடப்பு செய்து நடித்துள்ளார்கள். இல்லாவிட்டால், இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள்.

வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருக்கிறது. ஈழத் தமிழர்க்கு மோடி இழைத்திருக்கும் துரோகத்துக்குக் கிடைத்த பாராட்டு நன்றிப் பட்டயம்தான் இது” இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அசுரனுக்கான விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிக்கின்றேன்’

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம், சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.

தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். இது சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. இதில் நடித்த தனுஷுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இயக்குனர் வெற்றி மாறனுக்கு ஆளுயர மாலை அணிவித்து தயாரிப்பாளர் தாணு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் தேசிய விருது கிடைத்தது பற்றி வெற்றிமாறன் கூறியதாவது: அசுரனுக்கு தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக இருக்கிறது. என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு இதுபோன்ற விருதுகள் எப்போதுமே ஊக்கத்தைக் கொடுக்கும். எப்போதுமே விருதுகளுக்காக படம் இயக்குவதில்லை.

அந்தக் கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைத்து இயக்குவேன். நான் எந்த விருது வாங்கினாலும் பாலுமகேந்திராவுக்குத்தான் சமர்ப்பிப்பேன். இந்த விருதையும் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.

அசுரன் சமூக நீதிக்கான கதை, அது மக்களிடையே போய் சேர வேண்டும் என்பது தான் என்னுடைய முதல் எண்ணமாக இருந்தது. விருதுகள், தேசிய அளவிலான அங்கீகாரம், வணிகரீதியான வெற்றி உள்ளிட்டவை இந்த மாதிரியான படத்துக்கு மிகவும் முக்கியமானது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை தனுஷ் வென்றிருப்பது மகிழ்ச்சி. 35 வயது நடிகர், 50 வயது கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது தனுஷ் மாதிரியான நடிகரால் மட்டுமே முடியும். அதை அவர் மிகவும் இலகுவாக நடித்தது, ரொம்பவே ஸ்பெஷலான விஷயம். அப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.

தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பேற்றார் ராகவா லாரன்ஸ்

உடல்நலக்குறைவு காரணமாக தீப்பெட்டி கணேசன் மரணமடைந்த நிலையில், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.

கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து திரையுலகைச் சேர்ந்த சிலர் இவருக்கு உதவிக்கரம் நீட்டினர். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தீப்பெட்டி கணேசன், கடந்த திங்களன்று (மார்ச் 22) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “நடிகர் ‘தீப்பெட்டி’ கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன், இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற வறையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”. இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

‘உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை’ என்ற உண்மையை அரசு மறைக்க முடியாது

” சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது. சிங்கள மக்களுக்கு இதை எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கையை கண்காணித்து, இலங்கை பற்றிய வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர்/அக்டோபரிலும், எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி/மார்ச்சிலும் சமர்பிக்கும்படியும், அதையடுத்து, இலங்கை திருந்தாவிட்டால் பொறுப்பு கூறல் தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர்/அக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும், ஐநா மனித உரிமை ஆணைக்குழு (UNHRC) தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை (OHCHR) கோரியுள்ளது என்பதை இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கவனத்தில் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

அரசாங்கம் இன்று கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டுகிறது. தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐநா தீர்மானம் தோற்றுவிட்டது என கூறுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெற்ற வாக்குகள் சுமார் 69 இலட்சம். அவருக்கு எதிராக வாக்களித்த, வாக்களிக்காத, ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை சுமார் 90 இலட்சம். ஆகவே, “வாக்களிக்காதவர்களும் நம்மவரே” என்ற அரசாங்கத்தின் கணக்கின்படி, கோட்டாபய ராஜபக்ச உண்மையில் தோல்விதான் அடைந்துள்ளார். ஆகவே அவர் அரசியலை விட்டு வீட்டுக்கு போக வேண்டுமோ? என்ற கேள்வியை வெளிவிவகார அமைச்சர், எனது கொழும்பு மாவட்ட நண்பர் தினேஷ் குணவர்தனவிடம் கேட்க விரும்புகிறேன்.

இலங்கை அரசாங்கம் கனவு கண்டுக்கொண்டு, ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் வேளையில், ஐநா செயற்பட போகிறது. அதற்கான பலமும், அதிகாரமும் இந்த தீர்மானம் மூலம் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR) கிடைக்கிறது. ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் (UNHRC) அங்கம் வகிக்கும், வகிக்காத சுமார் 40 இணை அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்ட இலங்கை பற்றிய இந்த தீர்மானம், இலங்கையை கண்காணிக்கும் பொறுப்பை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR) வழங்குகிறது.

முதற்கட்டமாக பன்னிரெண்டு (12) விசேட ஊழியர்கள், இலங்கை கண்காணிப்பு தொடர்பில், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க சுமார் 29 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அலுவலகம் ஐநா பொதுசபையை கோரியுள்ளது.

இதன்மூலம், சாட்சியம், தகவல் ஆகியவற்றை சேகரிக்கும், கண்காணிக்கும் நடவடிக்கைகளை, அலுவலகம் ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்டோருக்கான உதவியுடன் பொறுப்பு கூறல், நீதி விசாரணை, மனித உரிமை மீறல், சர்வதேச மனித உரிமங்கள் மீறப்படல் ஆகியவை தொடர்பில் கண்காணிப்பு முன்னெடுக்கப்படும்.

எனவே பொறுப்பு கூறல், நீதி விசாரணை, தண்டனை, நஷ்டஈடு, காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாக செயற்படல், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல், பன்மைத்துவம் ஏற்பு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அரசாங்கம் இனியும் சர்வதேசத்துடன் பேட்டை ரவுடியை போன்று முரண்பட முடியாது. அத்தகைய பிற்போக்கு அரசியல் விளையாட்டுக்கு இனி கால அவகாசமும் இல்லை. அதற்கு இது உள்நாட்டு மைதானமும் இல்லை.

கொட்டகலை பகுதியில் 6 மாணவர்கள் உட்பட ஏழு பேருக்கு கொரோனா!

கொட்டக்கலை பிரதேசசபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டக்கலை சுகாதார அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு கடந்த 22 ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் இன்று வெளியாகியபோது இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதில் தலவாக்கலை பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் 6 மாணவர்களும் அடங்குவர். இவர்கள் கொட்டக்கலை பிரதேச பாடசாலையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இரவு நேர வகுப்புக்கு  சென்றுள்ளனர். இந்த ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இவர்கள் கொரோனா நோயாளியுடன் நெருங்கி பழகியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் 24.3.2021 புதன்கிழமை பிற்பகல் வெளியாகியபோது இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்களின் குடும்பங்கள் சுயதனிமைக்கு உட்படுத்தபட்டுள்ளன. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலவாக்கலை பி.கேதீஸ்

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...