Home Blog Page 3566

கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை கடும் சிரமத்துக்கு மத்தியில் மீட்பு!

நுவரெலியா – அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ வனப் பகுதியில் கம்பிகளில் சிக்குண்டு, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தையை, சிகிச்சைகளுக்காக தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போபத்தலாவ வனப் பகுதியில் பகுதியில் இன்று (24.03.2021) காலை கம்பி வலையில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை, கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வேட்டையாடுவோரினால் இந்த கம்பி கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கம்பி வலையில் சிக்கியதால் காயம் ஏற்பட்டிருந்த குறித்த சிறுத்தையை கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசி செலுத்தி அதிகாரிகள் மீட்டனர்.

குறித்த சிறுத்தை கம்பிகளுடன், போபத்தலாவ அரச விளை நிலத்தின் கிழக்கு பகுதியிலுள்ள உத்தியோகப்பூர்வ வீடுகளுக்கு மேல் வீழ்ந்திருந்த நிலையில், மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுமார் 6 அடி நீளமான 9 முதல் 10 வயது மதிக்கத்தக்க மலையக பகுதிக்கு உரித்தான சிறுத்தையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுத்தையின் உடலில் பாரிய காயங்கள் காணப்படுவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வனவிலங்கு திணைக்களத்தின் மிருக வைத்திய அதிகாரிகள், அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, சிறுத்தையை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை, சிகிச்சைகளுக்காக நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

போபத்தலாவ அரசாங்கத்திற்கு சொந்தமான வனப் பகுதியில் மான் மற்றும் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வேட்டையாளர்களினால் இந்த கம்பி கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த கம்பியிலேயே சிறுத்தை சிக்குண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

‘மனித உரிமைகள் பேரவையில் பொருளாதார தடை விதிக்க முடியாது’

மனித உரிமைகள் பேரவையில் நேற்று (23) நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக்கூடிய நிலைமை இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக செயற்படும் ருவன் சத்குமாரம் கலந்துகொண்டார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? என கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படாது. மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் தனிப்பட்ட ரீதியில் பேரவையினால் சில நாடுகளுக்கு இதனை வலியுறுத்த முடியும்.

ஆனால் இவ்வாறான தடை விதிக்கப்பட வேண்டுமாயின், ஜக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிலேயே இதுதொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு சபையில் வீடோ அதிகாரத்தை கொண்ட பால நாடுகள் உண்டு. அவை எமக்கு ஆதரவு வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை.

யுத்தம் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தொடர்பாக இலங்கை பிரிட்டிஷ் தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு அதன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைத்த தகவல்கள் முரண்பாட்டை கொண்டதாக பிரபு நேஸ்பி தெளிவுபடுத்தியுள்ளார்.

6 மாத கால தகவல்களை இவர் ஆய்வு செய்து அதில் முரண்பாடு இருப்பதை வெளிப்படுத்தி இருந்தார். அமெரிக்க பிரதிநிதி ஒருவரும் இந்த அறிக்கை பக்கசார்பானது என்று அப்பொழுது குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்று அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி கேனல் ஸ்மீத்தும் இந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக அக்கால பகுதியில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய அமெரிக்காவும் அதிலிருந்து விலகிக் கொண்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்து சரியானவற்றை இலங்கை முன்வைப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‘மூன்றிலிரண்டு பலத்தை கொண்டுள்ள அரசுக்கு தோட்டக் கம்பனிகளைக்கூட கட்டுப்படுத்த முடிவில்லை’

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை தன் வசம் வைத்துக்கொண்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு, பெருந்தோட்டக் கம்பனிகளைக்கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சம்பள நிர்ணய சபை எடுத்துள்ள முடிவைக்கூட கம்பனிகள் சவாலுக்குட்படுத்தியுள்ளன .

பெருந்தோட்டங்களின் நில உரிமை அரசு வசமே இருக்கின்றது. இப்படி இருக்கையில் கம்பனிகளை ஏன் கட்டுப்படுத்த முடியாது. சிலவேளை, கம்பனிகளின் பின்னால் அரசு உள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

ஊடகவியலாளர் மாநாடு (காணொளி வடிவம்)

https://www.facebook.com/sjbsrilanka/videos/854581438276252

பசறை பஸ் விபத்து – சாரதி தொலைபேசி பயன்படுத்தினாரா? விசாரணை ஆரம்பம்

பசறை 13 வது மைல் கல்லருகே இடம்பெற்ற பஸ் விபத்தின்போது, அப்பஸ்சின் சாரதி கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்ததாக பயணிகளும், அப்பஸ்சில் பயணிக்க முயன்றவர்களும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயத்தில் உண்மையுள்ளதாவென்று, தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, பசறைப் பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பின் மத்தியில் பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், பஸ்சாரதி தமது வாக்குமூலத்தில் விபத்து வேளையில்தான் கையடக்கத் தொலைபேசியை பாவிக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இச்சாரதி பொறுப்பற்ற வகையில் கடும் வேகத்தில் பஸ்சை செலுத்திவந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. கடும் வேகத்தைக் குறைக்குமாறு பஸ் பெண் பயணி ஒருவர் கூறிய போதிலும், அக்கூற்று சாரதியினால் செவிமடுக்கப்படவில்லையென்றும் தெரியவந்துள்ளது.

பதுளை அரசினர் மருத்துவமனையில் தற்போதைய நிலையில் 28பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் ஐவரின்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்தன.

பசறை வைத்திய அதிகாரி கே. எம். சமரபந்துவின் கருத்து, பசறையில் இடம்பெற்ற கோர பஸ் விபத்தில் படுகாயமுற்ற பலரது உயிரைக்காப்பாற்ற எம்மால் முடிந்தள்ளது. பசறையின் எமது மருத்துவமனையில் செயற்படும் இடர் முகாமைத்துவ செயற்திட்டம் சிறப்புற அமைந்திருந்தாலேயே, எம்மால் பலரைக்காப்பாற்றமுடிந்துள்ளதென்று, பசறை அரசினர் மருத்துவ மனை பிரதமவைத்திய அதிகாரிகே.எம். சமரபந்து குறிப்பிட்டார்.

பசறை விபத்தில்காயமுற்றவர்கள் குறித்து, பிரதம வைத்திய அதிகாரியிடம் வினவியபோதே, அவர்மேற்கண்டவாறுகூறினார்.

எம். செல்வராஜா, பதுளை

7 மில்லியன் ‘ஸ்புட்னிக் V’ – தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ´ஸ்புட்னிக் V´ கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் வருமாறு,

இனி ஜுலை 31 ஆம் திகதியே தேசிய விளையாட்டு தினம் – அமைச்சரவை அனுமதி

ஜுலை மாதம் 31 ஆம் திகதியை தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் ஆண்டுதோறும் ஏப்ரல் 6 ஆம் திகதியே தேசிய விளையாட்டு தினமாக இருந்து வந்தது. எனினும், புதுவருட நிகழ்வுகள் காரணமாக , அது தொடர்பில் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியாதுள்ளது.

இந்நிலையிலேயே தேசிய விளையாட்டு தினம் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் வருமாறு,

மண் அகற்றும் இயந்திரம் விபத்து – 22 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி!

கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அருகாமையில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிய ரக பெக்கோ இயந்திரமொன்று குடை சாய்ந்து, விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவ்விபத்து இன்று (24.03.2021) காலை சுமார் ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நிர்மானிக்கப்பட்டு வரும் அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பு பணிக்காக சென்று கொண்டிருக்கும் போது குறித்த மண் அகற்றும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடுப்பு கட்டை செயலிழந்துள்ளது.

அதனால் குறித்த இயந்திரம் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போது சாரதி பாய்ந்துள்ளதாகவும் அவர் பாய்ந்த பக்கத்திலேயே இயந்திரம் குடை சாய்ந்ததில் அதில் அகப்பட்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பதுளை ஹாலிஎல உடுவர பகுதியை சேர்ந்த யாப்பா முதியன்ஸலாகே சந்தருவான் மதுசங்க யாப்பா (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் கித்துல்கல தெலிகம வைத்தியசாலையில் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

ஜெனிவா தீர்மானத்துக்கு அஞ்சமாட்டோம் – எஸ்.பி. சூளுரை!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அஞ்சமாட்டோம். அதனை நிராகரிக்கின்றோம்.மேற்படி தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கு எதிராக எதுவும் செய்யமுடியாது – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கைக்கு எதிராக பிரிட்டன், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளே பிரேரணை கொண்டுவந்தன. அதில் ஒரு நாட்டைத்தவிர ஏனையவை நேட்டோ நாடுகளாகும். இந்நாடுகளே அரபு வசந்தம் என்ற போர்வையில் ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான், யேமன் ஆகிய நாடுகளில் அழிவை ஏற்படுத்தின, ஏற்படுத்தியும் வருகின்றன. யேமனில் இன்று நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பிரிட்டன் மற்றும் ஜேர்மன் நாட்டுக்குரியவையாகும்.

இவ்வாறு உலகில் இடம்பெறும் பாரிய போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய நாடுகளே இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைத்தன. அப்பிரேரணை சட்டவிரோதமாகும்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் இரு நாடுகளுக்கிடையிலான போர் கிடையாது. எனவே, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மட்டுமே இதனுடன் தொடர்புபடும். அந்தவகையில் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது. எமது நாட்டின் அரசமைப்பையும் விமர்சிக்க முடியாது. ஆக மனித உரிமைகள் என்ற போர்வையில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தவறு – சட்டவிரோதமாகும். எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானவை. வடக்கில் போராட்டம் நடத்துபவர்களுக்கும் இது தெரியும்.

இறுதிப்போரின்போது மக்கள்மீது புலிகளே தாக்குதல் நடத்தினர். படையினரிடம் சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு சரணடைய வந்த ஒருவரே பிரபாகரனின் இருப்பிடத்தை காண்பித்தார். எனவே, எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானவையாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேறினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. அதற்கு அஞ்சமாட்டோம். நிராகரிப்போம்.” – என்றார்.

‘சீனி இறக்குமதி மோசடி’ – இரு நாட்கள் விவாதம் கோருகிறது எதிர்க்கட்சி!

சீனி இறக்குமதியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் அவசியம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல், வாய்மூல கிடைக்கான கேள்விச்சுற்று உட்பட பிரதான சபை நடவடிக்கைகளை முடிவடைந்த பின்னர் அமைச்சு தொடர்பான அறிவிப்பை விடுப்பதற்கு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சீனி இறக்குமதிக்கான வரி திட்டமிட்ட அடிப்படையில் குறைக்கப்பட்டதால், சீனி இறக்குமதியின்போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இராஜாங்க அமைச்சர் விரிவான பதில்களையும், விளக்கத்தையும் முன்வைத்தார்.

எதிரணிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், பொய்யுரைப்பதே எதிரணிக்கு எஞ்சியுள்ள ஆயுதம் என விமர்சித்து, வரிக் கொள்கைகள் பற்றியும் விபரித்தார்.

இராஜாங்க அமைச்சரின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

” சீனி விவகாரம் குறித்து இராஜாங்க அமைச்சர் நீண்டதொரு உரை நிகழ்த்தினார். அது தொடர்பில் ஆழமாக கலந்துரையாடுவதற்கு இரு நாட்கள் விவாதம் அவசியம். ” – என்றார்.

மாகாணத் தேர்தலில் விமல் – மைத்திரி இணைந்து போட்டி?

” மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியுடனும் தமது கட்சி இன்னும் பேச்சு நடத்தவில்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசியல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆகியன பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில் வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தனித்து களமிறங்கும் என வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு கூறினார்.

” மாகாண சபைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்னும் பேச்சு நடைபெறவில்லை. அது தொடர்பில் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.” – எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

அதேவேளை ,தற்போதைய அரசை பலவீனப்படுத்துவதற்கு சுதந்திரக்கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும், ஐக்கிய தேசியக்கட்சி தரப்புடன் இணைந்து பயணிக்கும் திட்டம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...