கடந்த 81 நாட்களில் நாட்டில் 483 விபத்துகள் – 508 பேர் பலி!
‘இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு 25 நாடுகள் அனுமதி வழங்கவில்லை’ – தினேஷ்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில், 25 நாடுகள் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அனுமதி வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இலங்கை தொடர்பான பிரேரணைக்கு எதிராக 11 நாடுகள் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன்படி 25 நாடுகளின் ஆதரவை மேற்குல நாடுகளால் பெறமுடியாமல்போனது.
பிரேரணைக்கு 22 நாடுகளே ஆதரவு வழங்கின. ஆக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அடிப்படையற்றது. தனக்கான அதிகார எல்லைக்கு அப்பால் சென்று அது செயற்படுகின்றது.” – என்றார்.
பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தவர்களிடம் இழப்பீடு கோர நடவடிக்கை
மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தவர்களிடமிருந்து, இழப்பீட்டை ஈடு செய்வதற்கான கட்டணம் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோ லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றியபோது இடம்பெற்ற ஓர் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அவருக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த அதிகார குற்றமிழைக்கவில்லை எனவும், தூதரக அதிகாரி என்பதால் சர்வதேச சட்டம், வியன்னா சாசனத்தின் பிரகாரம் அவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு உள்ளது எனவும் பிரிட்டன் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக எவ்வித அடிப்படையும் இன்றி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர்களிடமிருந்து, வழக்குக்காக செலவளித்த கட்டணத்தை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தவறான வழக்கு. நீதிமன்றமும் அடிப்படையற்றது என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் வழக்குக்காக செலவளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவேதான் வழக்குக்கா செலவிட்ட தொகையை அறிவிட திட்டமிட்டுள்ளோம்.- ” என்றார்.
கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் வீடுகள்
கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் வீடுகளை கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளரும் பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் வீடுகளை கட்டி கொடுப்பதற்கான கூட்டம் கண்டி கச்சேரியில் இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளரும் பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி, கண்டி மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் ஒருங்கிணைப்புக் குழு செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர்கள் காணிகளுக்கான மேலதிக செயலாளர் தோட்ட அதிகாரிகள், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், முப்படையின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் அனர்த்தங்களினால் பாதிக்கபட்ட தோட்டங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் இன்னும் புனரமைக்கப்படாது மற்றும் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாத நிலையில் அதிலுள்ள சிக்கலை கண்டறிவதற்கு கண்டி மாவட்டத்தில் முதல் முறையாக இவ்வாறான கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுற்றிக்கையை மாற்றியமைக்கவும் தோட்டப்புறங்களிலுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பரிந்துரைகளுக்கு அமைய பாரத் அருள்சாமி இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தார்.
அத்தோடு, கண்டி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடடைமப்பு மற்றும் அமைச்சு வீடமைப்புகளுடன் இந்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக மக்களுக்கான வீடுகளை துரித கதியில் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவ் வீடுகள் துரித கதியில் மக்களை சென்றடையும் விதத்தில் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, இது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமானுடனும் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகள் எட்டப்படவுள்ளதாக பாரத் அருள்சாமி தெரிவித்தார். மேலும், இந்த வீடுகளை அமைப்பதற்கு இராணுவத்தினரின் ஆதரவுகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது – என்றார்.



ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களிப்பு – 11 நாடுகள் எதிர்ப்பு! 14 நாடுகள் நடுநிலை!!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, ஜப்பான் உட்பட 13 நாடுகள் நடுநிலை வகித்தன.
பிரிட்டன், ஜேர்மன், கனடா, மொண்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இணைந்தே இலங்கை விவகாரம் தொடர்பில் புதிய பிரேரணையை முன்வைத்தன.
அதேவேளை, குறித்த பிரேரணையை இலங்கை நிராகரித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களும் களத்தில்
இராகலை, மாகுடுகலை மற்றும் கிளன்டெவன் ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் தொடர்ந்து 17 வது நாளாக மேற்கொண்டு வருகின்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இன்று (23.03.2021) மாகுடுகலை சந்தியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ்மாறன் ஜனார்த்தனன் , ஹரிச்சந்திரன் சண்முகம், கலியுகநாதன், மலையக மக்கள் முன்னணியின் அமைப்பாளர் யோகேஸ்வரன் செல்வராஜ் , உப தலைவர் ஜெயக்குமார் , புதிய ஜனநாயக மாக்சிஸ்ட் லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் மகேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மாகுடுகலை மற்றும் கிளன்டவன் ஆகிய தோட்டங்கள் இப்பொழுது மத்திய வங்கி பிணை முறி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் என்பவரின் முகாமைத்துவத்தின் கீழ் செரண்டிப்பிட்டி இலங்கை பெருந்தோட்டம் என்ற கம்பணி முகாமைத்துவத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.
அதேநேரத்தில் மத்துரட்ட பெருந்தோட்ட கம்பணியின் கீழ் இத்தோட்டங்கள் இயங்குவதாக தொழிலாளர்களுக்கு கூறிவிட்டும், சம்பளம் மற்றும் பெயர்காடுகளை மத்துரட்ட பெருந்தோட்ட கம்பணியின் பெயர் பதித்து வழங்கிவிட்டும்இ தோட்டத்தை வேறொரு கம்பணி நிர்வாகம் செய்வதாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் தமிழ்மாறன் ஜனார்த்தன்
மாகுடுகலை பெருந்தோட்ட நிர்வாகம் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை வேலைக்கு அமர்த்தியிருப்பது தொடர்பாக பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நுவரெலியா உதவி தொழில் ஆணையாளர் தோட்ட நிர்வாகத்திற்கு ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கிருந்து அகற்றுவதற்கு தான் யோசனை முன்வைப்பதாக கடிதம் மூலம் அறிவித்திருந்த போதிலும் அதனை இதுவரையில் தோட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்த தவறிவிட்டது.
இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தும் 17 வது நாட்களாக இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நாங்கள் இந்த கோட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதேச சபை உறுப்பினர்கள் என்ற வகையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்.
அதே நேரம் இன்று (23.03.2021) தோட்ட நிர்வாகத்துடன் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.நாங்களும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்.
இன்று தேயிலை தோட்டங்கள் எல்லாம் காடாகியிருக்கின்றது.அதனை திருத்துவதற்கு தோட்ட நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுப்பதாக தெரியவில்லை.இவ்வாறு நடந்து கொண்டால் தோட்டங்கள் எப்படி இலாபத்தில் இயங்கும்.
தோட்ட நிர்வாகத்தில் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவதை எந்த காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.இது எங்களுடைய மக்களை அச்சுறுத்துகின்ற செயலாகவே நாங்கள் பாரக்கின்றோம்.
கொரோனாவால் பதுளை மாவட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்படி கொரோனாவால் பதுளை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது..
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த நுகந்தலாவை என்ற பகுதியில் வசித்த 78 வயது நிரம்பிய ஆணொருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பயனளிக்காமல் அவர் மரணமானார். இத் தகவலை பதுளைப் பணியக கோவிட் 19 தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
எம். செல்வராஜா, பதுளை
அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் இராஜினாமா!
அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக களுவேவா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணத்தாலேயே அவர் இராஜினாமா செய்துள்ளார் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமெரிக்காவில் பயங்கரம்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி!
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாஜ் பார்லர்களில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்தார். அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து மர்ம நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி சூட்டில் போலீஸ் அதிகாரி எரீக்டேலி என்பவர் உயிரிழந்தார்.
பின்னர் மர்ம நபரை மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அப்போது அந்த நபர் ரத்த காயத்துடன் காணப்பட்டார். சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தலைமை அதிகாரி மாரிஸ் ஹெரால்டு கூறும்போது, ‘‘சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் எங்களது போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மர்ம நபரை காயத்துடன் பிடித்துள்ளோம்’’ என்றார்.
மர்ம நபர் துப்பாக்கி சூட்டை ஏன் நடத்தினார்? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் நடந்த கொலரோடா மாகாண கவர்னர் ஜாரெட் பொலிஸ் கூறும்போது, ‘‘இந்த நிகழ்வை பார்க்கும்போது என் இதயம் உடைந்து போகிறது. இது புத்தியில்லாத சோகம்’’ என்றார்.
‘மலையகத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி திருவிழாக்களை நடத்தவும்’
நுவரெலியா மாவட்டத்தில் நகர மற்றும் பெருந்தோட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பெருமளவு பக்தர்கள் கூட்டமாக ஒன்று கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி 50 இற்கும் குறைவான பக்தர்களே திரு விழாக்களில் அதுவும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பங்கேற்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றாது, நிகழ்வுகளை நடத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்த்தனர்.





