Home Blog Page 3568

‘காமராஜர் எனது தந்தை, எம்ஜிஆர் எனது சொத்து’ – கமல் உரை

காமராஜர் எனது தந்தை, எம்ஜிஆர் எனது சொத்து என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து திருச்சியில் நேற்று அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் திருச்சி மேலக்கல்கண்டார்கோட்டை பஞ்சாயத்துபோர்டு அலுவலகம் அருகே வாக்குகள் கேட்டு பேசினார். பின்னர் திருவெறும்பூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அப்போது கமல்ஹாசன் கூறியதாவது,

” நான் வரும் வழியில் ”ஜெயிச்சாசு” ”ஜெயிச்சாசு” என்ற குரல் கேட்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தான் வெற்றி.

நான் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறேன். எந்த ஊருக்கு சென்றாலும், திறந்து கிடக்கிற சாக்கடை, போக்குவரத்து நெரிசல் இருக்கத்தான் செய்கிறது. இங்கு அரியமங்கலம் பகுதியில் உள்ள குப்பைமேட்டால் உங்களுக்கு என்ன பெருமை இருக்க போகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எங்கள் வேட்பாளர்களுக்கு அரசியல் பயிற்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் சேவையில் அனுபவம் இருக்கிறது. தமிழகத்தை ஆளுகிற இரு கட்சிகளுக்கும் ஊழலை தவிர வேறெதுவும் தெரியாது.

எடப்பாடி பழனிசாமியை பார்த்து அவர் ரூ.10 லட்சம் கோடி சுருட்டிவிட்டார் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அவரோ, ஸ்டாலினை பார்த்து, இவர் ரூ.20 லட்சம் கோடி சுருட்டிவிட்டார் என்கிறார். அது இல்லை என்று இருவருமே சொல்லவில்லை. இப்போது நாம் கணக்கு போடுவது என்னவென்றால், நம்முடைய பணம் ரூ.30 லட்சம் கோடியை இவர்கள் இருவரும் அடித்துவிட்டார்கள் என்பது தான். ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி அவர்களே வேட்டு வைத்து கொள்கிறார்கள்.

நான் பிரசாரத்துக்கு சென்ற வாகனத்தை சோதனை செய்தார்கள். என் வாகனத்தில் சோதனை செய்தால் நேர்மையும், வியர்வையும் தான் கிடைக்கும். அதை தவிர வேறெதுவும் கிடைக்காது. எங்கள் ஆட்சியின் கல்வி திட்டத்தின்படி மாணவ-மாணவிகள் படிக்கும்போது, தற்கொலைகள் நிகழாது. இதை செயல்படுத்த அறிவார்ந்த கூட்டத்தை தேடி பிடித்து இருக்கிறேன். வருகிற ஏப்ரல் 6-ந் தேதியை சரித்திரம் திரும்பும் நாளாக மாற்றுங்கள்.

காமராஜர் எனது தந்தை, எம்.ஜி.ஆர்  எனது சொத்து. அரசியல் எங்களுக்கு தொழில் அல்ல” – என்றார்.

தலவாக்கலையில் கோர விபத்து – யுவதி பலி! தாய் படுகாயம்!!

தலவாக்கலை – சென்.கிளயார் – டெவோன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியின் தாய் காயமடைந்துள்ளார்.

மேலும், முச்சக்கரவண்டி சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த 25 வயதான கணேஷன் நித்யாவின் சடலம், கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, லொறியின் சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ளை−பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாகாணசபை முறைமையை ஒழிக்குமாறு அமைச்சரவையிலும் வலியுறுத்துவேன்

மாகாணசபை முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்ற எனது நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. அதற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். அமைச்சரவையிலும் கருத்துகளை முன்வைப்பேன் – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவித்தார்.

மாகாணசபை முறைமைக்கு அமைச்சர் சரத் வீரசேகர கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றார். ஆனாலும் தேர்தல் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மாகாணசபை முறைமையை ஒழிப்பேன் என நான் கூறவில்லை. அம்முறைமைக்கு எதிரானவன் நான். எனவே, குறித்த முறைமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்.

மாகாணசபை முறைமை தொடர்பில் நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடும்போது எனது கருத்துகைள முன்வைப்பேன். மாகாணசபை முறைமை தொடர்பான எனது எதிர்ப்பு ஒருபோதும் மாறாது. “- என்றும் அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.

அதேவேளை, புர்கா தடை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

”  அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளேன். முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலேயே அமைச்சரவைக்கு பத்திரம் வரும். அந்தவகையில்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், ஒரிரு வாரங்களில் அமைச்சரவைக்கு குறித்த பத்திரம் நிச்சயம் அமைச்சரவைக்கு வரும்.” – என்றார்.

பசறை பஸ் விபத்தின் எதிரொலி – தேய்வடைந்த டயர்களுடன் பயணித்தால் 3,500 ரூபா அபராதம்

தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை வரை இடம்பெறவுள்ள இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது, தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு 3,500 ரூபாய் அபராதமும் அத்தகைய வாகனங்களை செலுத்தி காயத்தை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்த விபத்துகளுக்கு வாகன சாரதிகளின் கவனக்குறைபாடு , மதுபோதை மற்றும் வாகனங்களின் குறைபாடுகளும் பிரதான காரணமாக உள்ளன. இதனால் அவற்றை தடுக்கும் வகையில் விசேட சோதனைகளை மேற்கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

நேற்று(22) ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கைகள் நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளன.

இதன்போது தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்று எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டவிதிகளுக்கமைய வெளியிடப்பட்ட வர்த்தமானியில் வாகன சில்லுகள் தரமானதாக காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் 145 ஆவது சரத்துக்கமைய போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு வாகனமும் தரமான சில்லுகளை பயன்படுத்தியிருக்க வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , இவ்வாறு தரமற்ற சில்லுகளை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காணுவதற்காகவே இந்த சோதனைகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது தேய்ந்த சில்லுகளை பயன்படுத்திய வாகனங்களை அடையாளம் கண்டால் , அவற்றுக்கு எதிராக 3, 500 ரூபா அபராதம் அறவிடப்படுவதுடன் , அத்தகைய சில்லுகளை கொண்ட வாகனங்ககளை செலுத்தி விபத்தை ஏற்படுத்தி காயமடையச் செய்தால் வழமையான சட்டவிதிகளுடன், 25 ஆயிரம் ரூபா அபராதமாக அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் – இரு வாரத்திற்குள் தீர்வு!

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கலுக்கு இரண்டு வாரகாலத்தில் தீர்வை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தலை எக்காரணங்களுக்காகவும் பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என தெரிவித்துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க ,எத்தேர்தல் முறைமையின் பிரகாரம் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என உறுதியான தீர்வு கிடைத்தவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பல்வேறு காரணிகளினால் மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.தொடர்ந்து மாகாணசபை தேர்தலை பிற்போட இடமளிக்க முடியாது. பழையதேர்தல் முறைமையில் தேர்தலை நடத்துவதா அல்லது புதிய கலப்பு தேர்தல் முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்துவதா என்பதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. இப்பிரச்சினைக்கு இரண்டு வார காலத்திற்குள் தீர்வை காண எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என ஆளும் தரப்பின் உறுப்பினர்களும், மதத் தலைவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் எதிர்ப்புக்கான காரணத்தை தெளிவுப்படுத்தவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்திய மாகாணசபை முறைமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை அனைத்து மாகாணங்களிலும் மாகாணசபை முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளன.

மாகாண சபை முறைமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆராயப்படும். குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற காரணத்தினால் அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க முடியாது. மாகாண சபைகளில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றிற்கு தீர்வு காணப்படும்.

மாகாணசபை தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. மாகாண சபை தேர்தலை அரசாங்கம் பிற்போடுகிறது என்று விமர்சிக்கும் உரிமை எதிர்க்கட்சியினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியின் காரணமாக மாகாணசபை தேர்தலை திட்டமிட்டு பிற்போட்டது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்படவில்லை. கட்சி ரீதியிலான முரண்பாட்டை அரசியல்வாதிகள் மாகாணசபை முறைமை ஊடாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் பலவீனமடைந்தன. இவ்விரு மாகாண சபைகளின் பலவீனத்தால் முழு மாகாண சபை முறைமையையும் பலவீனம் என கருத முடியாது. ஆகவே மாகாண சபை தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படும் என்றார்.

ஜெனிவா இராஜதந்திரச் சமர் – இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் வெற்றிபெறுமா இலங்கை ?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான புதிய பிரேரணைமீது இன்று 23 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பிரிட்டன், ஜேர்மன், கனடா, மொண்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இணைந்தே புதிய பிரேரணையை முன்வைத்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்திலேயே பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும். அந்தவகையில் சீனா வாக்கெடுப்பை கோரும்.

இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணையை எதிர்ப்பதற்கு சீனா, ரஷ்யா, கியூபா, வெனிசூலா, பாகிஸ்தான், கொரியா, நேபாளம்,இந்தோனேசியா, பங்களாதேஷ், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன.

அதேவேளை, மேற்படி பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு இணை அனுசரணை வழங்கும் ஐந்து நாடுகளுடன் ஆர்ஜென்டினா,ஆஸ்திரியா, பிரேசில், கமரூன், மென்மார்க், மெக்ஸிகோ, செனகல், போலந்து, பிரான்ஸ், காபோன், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கைகோர்த்து, சார்வாக வாக்களிக்கவுள்ளன.

இந்தியா, ஜப்பான் உட்பட மேலும் சில நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகிக்கக்கூடும்.

அதேவேளை, பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மையை இணை அனுசரணை வழங்கும் நாடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன எனவும், இதற்கு பிரிட்டன் தலைமை வகித்துவருகின்றது எனவும் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இம்முறை அங்கம் வகிக்காதபோதிலும், இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்!

நாடாளுமன்றம் இன்று (23) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

சீனி இறக்குமதியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி, காடழிப்பு விவகாரம், ஊடகங்கள் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு ஆகியன தொடர்பில் இவ்வார சபை அமர்வில் எதிரணிகள் கேள்விகளைத் தொடுக்கவுள்ளன.

அத்துடன், சீனி விவகாரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

அதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் மூன்று நாட்கள் விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே ஒரு நாள் விவாதம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையிலேயே இவ்வார சபை அமர்வில் இரு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

7 தேசிய திரைப்பட விருதுகளை வென்ற தமிழ்த் திரையுலகம்!

இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 7 விருதுகளை தமிழ்த்திரையுலகம் வென்றுள்ளது.

தேசிய விருதுகள் முழு விவரம் வருமாறு:

சிறந்த தமிழ்ப்படமாக வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தனுஷ் முறையே இந்தி திரைப்படம் ‘போன்ஸ்லே’ மற்றும் தமிழ் திரைப்படமான ‘அசுரன்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் ‘மணிகர்னிகா: ஜான்சி ராணி’ மற்றும் ‘பங்கா’ படங்களுக்காக சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது- டி. இமான்

சிறப்பு திரைப்பட விருது: ஓத்தா செருப்பு அளவு 7 (தமிழ்)

ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிக்கலவை விருது வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு கிடைத்து உள்ளது.

சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருது இந்தி திரைப்படமான ‘கேசரி’ படத்தின் ‘தேரி மிட்டி’ பாடலுக்காக பி பிராக்கிற்கு செல்கிறது.

சிச்சோர் ‘சிறந்த இந்தி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

மலையாளப்படமான மரக்கார் அரபிகடலிண்டே சிம்ஹம் படம் சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட், சிறந்த ஆடை வடைவமைப்பு(சுஜித் மற்றும் சாய்) ஆகிய 3 விருதுகளை பெற்றுள்ளது.

தெலுங்குபடமான மகரிஷி சிறந்த பொழுதுபோக்கு , சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. மேலும் இந்த படத்திற்காக சிறந்த நடன அமைப்பு விருதை ராஜு சுந்தரம் பெற்று உள்ளார்.

சிறந்த அறிமுக படத்திற்கான இந்திரா காந்தி விருது மாதுக்குட்டி சேவியர் இயக்கிய ‘ஹெலன்’ (மலையாளம்) படத்திற்கு செல்கிறது

சிறந்த சண்டைபயிற்சி : அவனே ஸ்ரீமன்னாராயணா (கன்னடம்) படத்திற்காக விக்ரம் மோர்

சிறந்த பாடல்: பிரபா வர்மா கோலாம்பி (மலையாளம்)

சிறந்த பின்னணி இசை: பிரபுதா பானர்ஜி ஜெயேஷ்தோபுட்ரோவுக்கு (பெங்காலி)

சிறந்த ஒப்பனை கலைஞர்: ரஞ்சித் ( ஹெலன் – மலையாளம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஆனந்தி கோபால் (மராத்தி)

சிறந்த படத்தொகுப்பு : ஜெர்சி (தெலுங்கு)

சிறந்த ஆடியோகிராபி: ஐவ்டு (காசி)

சிறந்த திரைக்கதை (அசல்): ஜெயேஷ்தோபுட்ரோ (பெங்காலி)

சிறந்த திரைக்கதை (தழுவல்): கும்னாமி (பெங்காலி)

சிறந்த திரைக்கதை (வசனம்): தாஷ்கண்ட் பைல்ஸ் (இந்தி)

சிறந்த ஒளிப்பதிவு: கிரிஷ் கங்காதரன் ஜல்லிக்கட்டு படம் (மலையாளம்)

சிறந்த பெண் பின்னணி பாடகர்: சவணி ரவீந்திரா பார்டோ (மராத்தி) படத்திற்கு

சிறந்த இயக்கம்: பஹத்தார் ஹூரைன் (இந்தி) படத்திற்காக சஞ்சய் புரான் சிங் சவுகான்

சிறந்த குழந்தைகள் படம்: கஸ்தூரி (இந்தி)

சுற்றுச்சூழல் குறித்த சிறந்த படம்: நீர் அடக்கம் (மோன்பா)

சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படம்: ஆனந்தி கோபால் (மராத்தி)

‘பதிலடி’ – விசேட அறிவிப்பை வெளியிடுவதற்கு தயாராகிறார் அரவிந்தகுமார்!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் விரைவில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.

இதன்போது மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு சம்பந்தமாகவும், மேலும் சில விடயங்கள் குறித்தும் அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி பதிலடி கொடுப்பார் எனவும், முக்கிய சில தகவல்களை பகிரங்கப்படுத்துவார் எனவும் அறியமுடிகின்றது.

பதுளை மாவட்டத்தில் வசூலிக்கப்பட்ட சந்தா தலைமையகத்துக்கு வரவில்லை எனவும், பதுளையில் கட்சி சார்ந்த கூட்டங்கள் நடத்தப்படவில்லை எனவும் ம.ம.முவின் தலைவர் இராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். இதனால் சீற்றமடைந்துள்ள அரவிந்தகுமார் எம்.பி., பதிலடி கொடுக்க தயாராகிவருகிறார் என பதுளை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 551 ஆக உயர்வு

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஐந்து ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...