Home Blog Page 3569

இரத்தினபுரியில் தோட்டப்பகுதிகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை!

தமிழ், சிங்களப் புத்தாண்டு வரவுள்ள நிலையில், இரத்தினபுரி நகரம் மற்றும் இப்பகுதியின் தோட்டப் பகுதிகளில் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து நெருக்கடிகளால் தோட்டப் பகுதி மக்கள் அதே இடங்களிலே பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலர்,பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பதாக,மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இப்பகுதியில் இவ்வாறு விற்கப்படும் பொருட்களில் அதிகமானவை தரங் குறைந்தவைகளாகவும் உள்ளன. மேலும் பழுதடைந்த பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இன்னும் சிலர், நிறை குறைந்த பொருட்களை விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகை காலத்தில் பொது சுகாதார விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் செயற்பாடுகளை தீவிரப்படுத்துவதன் மூலம் இந்நிலைமைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரம் ரூபாவுக்கு எதிரான மனுமீது 26 ஆம் திகதி விசாரணை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்து செய்யுமாறுகோரி பெருந்தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பெருந்தோட்டத்  தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.

மனுவிலுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 26 ஆம் திகதி மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நெருக்கடி நிலையில் நடத்திச் செல்லப்படுகின்ற பெருந்தோட்ட நிறுவனங்களை அரசாங்கத்தின் வர்த்தமானி காரணமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவில் தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘தொலைபேசியில் உரையாடியபடியே சாரதி பஸ்ஸை செலுத்தியுள்ளார்’ – பசறை விபத்து குறித்து சாட்சியம்

” பஸ் சாரதி தொலைபேசியில் உரையாடிக்கொண்டே பஸ்ஸை செலுத்தினார். இதனை நான் கண்ணுற்றேன்.”  – என்று பசறை பஸ் விபத்தில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய நடைபாதை வர்த்தகரான இம்ரான் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

” குறித்த சாரதி தொலைபேசியில் உரையாடியபடி வேகமாக பஸ்ஸை செலுத்திவந்தார். அதில் பயணிப்பதற்காக பஸ்ஸை நிறுத்துவதற்கு முயன்றேன். ஆனால் நிறுத்தாமல் சென்று பள்ளத்தில் வீழ்ந்தது.” எனவும் அவர் கூறியுள்ளார்.

பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தானது இதுவரை 15 பேரின் உயிர்களை பலியெடுத்துள்ளது. இவ்விபத்தானது மலையகத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்ல விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்தாடல்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக வாகனத்தை செலுத்தும்போது சாரதிகள் தொலைபேசியில் உரையாடுவதை தடை செய்வதற்கான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும். பிரதான வீதிகளை உரிய வகையில் புனரமைக்க வேண்டும்.

மலையக மக்கள் முன்னணிக்கும் அரசுக்கும் ‘டீல்’ கிடையாது – அறிவிப்பு விடுத்தார் ராதா

” மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது. அரவிந்தகுமார் எம்.பியை நீக்கியதன் மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் ஏற்பட்டிருந்த சிறு விரிசலும் முடிவுக்கு வந்துள்ளது. எனவே, கூட்டணியாக பயணிப்போம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை கட்சியை விட்டு நீக்குவதற்கும், அவர் வகிக்கும் பதவிகளை பறிப்பதற்கும் மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மத்திய செயற்குழு மற்றும் தேசிய சபை ஆகியன ஒப்புதல் வழங்கிய பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் இராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழு மற்றும் தேசிய சபையின் கூட்டம் கூடியது. இதன்பிறகே இந்த கருத்தை இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதன்போது அவர் கூறியவை வருமாறு,

” தெரிந்து துரோகம் செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே, அவர்கள் செய்த தவறுக்கு ஆயிரம் பதில்களை சொல்வார்கள் என ஹிட்லர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி அரவிந்தகுமார் எம்.பியும் தெரிந்தே தவறு செய்துள்ளார். அந்த தவறை திருத்திக்கொள்வதற்காக எம்மால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அவர் ஏற்கவில்லை. அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கோருமாறு கேட்டோம். அவர் அதனை செய்யவில்லை.

இந்நிலையில் அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை நாம் படிப்படியாக முன்னெடுத்தோம். இதனால் சிறு தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியிலுள்ள இதர பங்காளிக்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதிருப்தியையும வெளியிட்டன. தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மேற்படி தரப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிகளும் குறித்த தீர்மானத்தை வரவேற்றுள்ளன.

அதேபோல அரவிந்தகுமார் எம்.பியை நான்தான் வழிநடத்துகின்றேன், அவருக்கு பின்னால் செயற்படுகின்றேன். அரசுடன் டீல் இருப்பதால்தான் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எடுக்கவும்படாது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் எனக்கும் களங்கம் ஏற்பட்டது. தற்போது அந்த களங்கமும் நீங்கியுள்ளது .

எனக்கு அரசுடன் ‘டீல்’ இல்லை .எமது கட்சி அரசுடன் இணையாது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்கும். தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். அரவிந்தகுமார் எம்.பியால் சிறு விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் இருந்து சந்தா வசூலிக்கப்படாலும் கடந்தகாலங்களில் அது கட்சிக்கு வந்துசேரவில்லை. பதுளையில் கட்சி கூட்டங்களும் இடம்பெறவில்லை. எனவே, வருமானம் முக்கியமல்ல. எமது கட்சியை அங்கு பலப்படுத்தவேண்டும். அதற்காக கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும்.” – என்றார்.

பாராளுமன்றம் அனுமதி வழங்கினால் இரு மாதங்களுக்குள் மாகாண தேர்தல்!

” நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் 2 மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜீ.
புஞ்சிஹேவா  தெரிவித்தார்.

மாகாணசபைகளுக்கான தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்தி முடிக்க முடியுமா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய சட்டத்தின் பிரகாரமா அல்லது புதிய சட்டத்தின் பிரகாரமா நடத்துவது என்பது தொடர்பில் முடிவெடுத்து அதற்கு தேவையான சட்டத்திருத்தத்தை அரசு நாடாளுமன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு மேற்கொண்ட பின்னர் சுகாதார வழிகாட்டல்களையும் கருத்திற்கொண்டு இரண்டு அல்லது இரண்டரை மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும். ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் என்பன சுகாதார வழிகாட்டல்களுக்கு மத்தியிலேயே நடைபெற்றுள்ளது. எனவே, தேர்தலை நடத்துவது சவாலாக அமையாது.

மாகாணசபை பொறிமுறை இயங்கினாலும் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டும். அதற்காகவே விரைவில் சட்டத்திருத்தத்தை செய்து தேர்தலை நடத்த வேண்டும் என்ற யோசனையை தேர்தல் ஆணைக்குழுவும் முன்வைத்துள்ளது.” – என்றார்.

‘ஹிட்லர் கதை’ கூறி அரவிந்தகுமாருக்கு பாடம் புகட்டிய ராதா!

” தெரிந்து துரோகம் செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே, அவர்கள் செய்த தவறுக்கு ஆயிரம் பதில்களை சொல்வார்கள் என ஹிட்லர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி அரவிந்தகுமார் எம்.பியும் தெரிந்தே தவறு செய்துள்ளார். அந்த தவறை திருத்திக்கொள்வதற்காக எம்மால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அவர் ஏற்கவில்லை. அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கோருமாறு கேட்டோம். அவர் அதனை செய்யவில்லை.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை கட்சியை விட்டு நீக்குவதற்கும், அவர் வகிக்கும் பதவிகளை பறிப்பதற்கும் மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மத்திய செயற்குழு மற்றும் தேசிய சபை ஆகியன ஒப்புதல் வழங்கிய பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் இராதாகிருஷ்ணன்  ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” பதுளை மாவட்டத்தில் இருந்து சந்தா வசூலிக்கப்படாலும் கடந்தகாலங்களில் அது கட்சிக்கு வந்துசேரவில்லை. பதுளையில் கட்சி கூட்டங்களும் இடம்பெறவில்லை.” எனவும் அரவிந்தகுமார் எம்.பியின் செயற்பாடுகளை இராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.

லொறி – ஆட்டோ விபத்து, வயோதிபப் பெண் பலி! இருவர் படுகாயம்!!

மொனராகலை வீதி மூன்றாம் கட்டை தொலம்பவத்த பகுதியில் இன்று முற்பகல் லொறியொன்றும் ஆட்டோவொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணித்த வயோதிப பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

ஆட்டோ சாரதி உட்பட மேலும் இருவர் காயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியின் சாரதி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசறை பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

பூண்டுலோயாவில் திடீர் சுற்றிவளைப்பு – 4,195 கிலோ கழிவு தேயிலை மீட்பு!

பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை யொன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுத் தேயிலையை குறித்த நிலையத்துக்கு கொண்டுவந்து, தூய தேயிலை என்ற போர்வையில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பட்டுள்ளன என விசேட அதிரடிப்படையினர் தகவல் வெளியிட்டர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் பூண்டுலோயா பொலிஸாரிடம், விசேட அதிரடிப்படையினர் கையளித்தனர்.

க.கிசாந்தன்

‘நீர் வளத்தை பாதுகாக்காவிட்டால் பேரழிவு ஏற்படும்’ – உலக நீர் தினம் இன்று

நீர். பஞ்ச பூதங்களில் தனக்கென தனித் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த பூமியை மூன்றில் இரண்டு பங்கு நீர் கொண்டிருந்தாலும். குடிநீரை சரியாக கையாளவில்லையெனில், அது பெரும் நெருக்கடியாக மாறிவிடும் என்று தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இதனை உணர்த்தும் வகையிலேயே உலக தண்ணீர் தினமாக மார்ச் 22ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் குடி நீர் அவசியமாகிறது.
உயிர்களின் இயல்பே நீரை கண்டால் அதில் நீராடி அள்ளி அருந்துவதாகும். ஆனால் மனிதன் மட்டுமே மாசுப்படுத்தி, சமநிலையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறான்.
பல்வேறு வசதிகளுக்காக கிராமத்தினர் நகரத்தை நோக்கி படையெடுப்பதால் அங்கு குடிநீர் தேவை அதிகளவில் உள்ளது. இதனால் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட நீரிலிருந்து நகரத்திற்கு குடிநீர் வழங்க வேண்டி இருக்கிறது. மக்களுக்கு தேவையான நுகர்வு பொருட்களை உற்பத்தி செய்யவும், சமுகத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவும் தொழிற்சாலைகள் அதிகமாகி வருகின்றன. இது தவிர்க்க முடியாதது.
வளர்ச்சிக்கேற்ப தண்ணீர் சிக்கனமும், பாதுகாப்பு முறை குறித்த விழிப்புணர்வும் மக்கள் இடையே அதிகளவில் தேவைப்படுகிறது. இந்தாண்டு தண்ணீர் தினம் முதல் குடிநீரை பாதுகாக்கவும், வீணாக்காமல், மாசுபடாமல் பாதுகாக்கவும் உறுதி ஏற்பது அவசியமாகிறது.
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது உலகு”
இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்க காதல் கவிஞன் டபிள்யூ எச்.ஆடன் தனது கவிதை வரிகளில் குறிப்பிடுகிறார். “ஆயிரம் பேர் இவ்வுலகில் காதல் இல்லாமல் வாழ்ந்துவிடலாம். ஆனால், ஒருவர்கூட நீர் இல்லாமல் வாழ முடியாது.” அவருடைய வரிகள் வாசகர்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வுலகில் தண்ணீர் என்பது இன்றியமையாத ஒன்று. ஆனால், உலகில் உள்ள எந்த நாடும் தண்ணீரின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவில்லை.
தண்ணீரை வைத்து பொருட்களை சுத்தம் செய்த காலம் போய் அனைத்து நாட்டினரும் இன்று தண்ணீரையே சுத்தம் செய்கின்ற நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். தண்ணீர் பயன்படாத, பயன்படுத்தப்படாத இடமே இவ்வுலகில் இல்லை. தண்ணீர் இவ்வுலகில் குறைய குறைய உலகம் அழிவை நோக்கி சென்றுகொண்டே இருக்கும். இயற்கை அழிவை நோக்கிச் சென்றபின் ஒவ்வொரு உயிரினங்களாக அழிந்தபின்பு, கடைசியில் மனிதனும் அழிந்து இவ்வுலகமே இல்லாமல் போய்விடும். தண்ணீரின் ஆதாரமாக இருக்கக்கூடிய ஏரி, குளம், ஆறுகளில் மழையின் அளவு குறையத் தொடங்கியதால் பாலைவனம் போல் ஆக நாட்கள் வெகுதூரம் இல்லை. தண்ணீருக்கான பிரச்னைகள் நாடுகளுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு இடையிலும், ஊர்களுக்கு இடையிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மூன்றாம் உலகப்போர் ஏற்படுமேயானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்பதை அழுத்தமாக கூறிக்கொள்கிறேன். புவி நீர்ப்பரப்பானது 71% நீரினால் சூழப்பட்டுள்ளது. அதில் 97% கடல் நீர். அதாவது, நல்ல நீர் வெறும் 3% தான். இந்த 3% நீரைத்தான் மனிதன் தனது தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்டு விவசாயம், தொழிற்சாலை, மின் உற்பத்தி, சுரங்க வேலை, கார் தயாரித்தல், குளிர் பாணம் தயாரித்தல் உள்ளிட்ட எல்லா விதமான வேலைகளுக்கும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வுலகில் பாதி பிரச்னைகளுக்கு நீர்தான் காரணம். குறிப்பாக மனிதனுக்கு போதுமான அளவு தண்ணீர் ஆரம்ப காலத்தில் கிடைத்தாலும் இப்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மனிதன் ஒரு நாளைக்கு 500 முதல் 1000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறான். நல்ல தண்ணீர் கிடைக்காமல் தூய்மையற்ற நீரை அருந்துவதால் காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உலகில் 4.5% பேர் இறந்துபோகிறார்கள். உலக அளவில் நீர் பற்றாக்குறையானது பரவலாக 40 நாடுகளில் காணப்படுகிறது. அவற்றுள் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், வெனிசுலா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நீர் பற்றாக்குறையானது அதிக அளவில் காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் 1993ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் நாம் பார்க்க இருப்பது ஆரல் கடல் (The Aral Sea). சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரல் கடல் என்று ஒன்று இருந்தது. இப்போது அந்த ஆரல் கடலானது இல்லை என்றே சொல்லலாம். ஆரல் கடல் என்று அழைக்கப்பட்டாலும் அது உண்மையில் மிகப்பெரிய ஏரி. ஆரல் ஏரி கிட்டத்தட்ட 67,300 சதுர கி.மீ பரப்பில் கடல் போல் பரந்து விரிந்து கடல் போல அமைந்திருந்தது. அதன் பரப்பு கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் பாதி அளவுக்கு மேல் இருக்கும். விண்வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும் உலகின் நான்காவது பெரிய ஏரியை இதனால்தான் ஆரல் கடல் என்று அழைத்தார்கள்.
ஆரல் கடலானது எங்கு அமைந்துள்ளது என்றால், உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் நாடுகளுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த கடல் வெறும் 40 ஆண்டுகளில் மனிதனால் காணாமல் ஆக்கப்பட்டது. இந்த கடலில் கரையோரம் நிறைய கிராமங்கள் இருந்தது. அவர்கள் இந்த கடலை நம்பிதான் இருந்தார்கள். ஏனென்றால், ஒரு ஆண்டுக்கு 10 ஆயிரம் டன்களுக்கு மேல் மீன்கள் பிடிக்கப்பட்டது. பல லட்சம் மக்கள் இந்த கடலை நம்பிதான் வாழ்க்கையை நடத்திக்கொண்டுவந்தார்கள். இப்போது இந்த கடலானது சிறு குளம்போல ஆகி விட்டது. இந்த ஆரல் கடலில் நீர் வற்றிப் போனதால் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட கப்பல்கள் ஆங்காங்கே துருப்பிடித்து பாலைவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது போல காட்சியளிக்கிறது.
இன்று சுற்றுலாவாசிகள் புகைப்படம் எடுக்க ஆரல் கடலுக்கு சென்று பார்க்கிறார்கள். அவர்கள் யாராலும் அந்த இடத்தில் கடல் இருந்தது என்று நம்பவே முடியவில்லை. ஏனென்றால், கடல் இருந்ததற்கான தடயமே தெரியவில்லை. பாலைவனம்போல்தான் இருக்கிறது. இந்த ஆரல் கடல் பாலைவனமாக மாறியதற்கு முக்கிய காரணம் மனிதன்தான். மனிதனின் பேராசைதான் காரணம்.
ஆரல் ஏரிக்கு நீரானது கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பாமிர் என்கிற மிகப்பெரிய மலைத்தொடரில் இருந்து அமுதாரியா மற்றும் சிறுதாரியா என்ற இரண்டு ஆறுகளின் மூலம் ஆரல் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு ஆறுமே நமது இமய மலையில் இருந்து வருகின்ற கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற மிகப்பெரிய ஆறுகள் ஆகும். ஆண்டு முழுவதும் இந்த இரண்டு ஆறுகள் மூலம் ஆரல் கடலுக்கு தண்ணீர் வந்துகொண்டு இருந்ததால் ஆரல் கடலின் நீர்மட்டம் குறையாமலே இருந்தது. மீன்களும் ஏராளமாக கிடைத்துக்கொண்டிருந்தது.
ஆரல் கடலானது செழிப்பாக இருந்த வேலையில் அதன் அழிவானது 1960ம் ஆண்டுகளில் ஆரம்பம் ஆனது. அன்றைய காலகட்டங்களில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் மிகப்பெரிய பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலம். 1991ம் ஆண்டு வரை மத்திய ஆசிய நாடுகள் அனைத்துமே சோவியத் யூனியன் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அக்காலகட்டங்களில் எகிப்து பருத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்துகொண்டிருந்தது. சோவியத் யூனியனுக்கு பருத்தியை ஏற்றுமதி செய்துகொண்டிருந்த எகிப்து ஏற்றுமதியை நிறுத்திவிட்டு திடீர் என்று அமெரிக்காவின் பக்கம் சென்று விட்டார்கள். இது சோவியத் யூனியனுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஏனென்றால், அக்காலகட்டங்களிலில் பருத்தி மிகப்பெரிய சந்தைப் பொருள். அதாவது, லாபம் அதிகம் ஈட்டக்கூடிய பொருள். நீண்ட நெடிய நாட்களாக என்ன செய்யலாம் என்று யோசித்த சோவியத் யூனியன் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பக்கத்தில் உள்ள ஃபெர்கானா வேலி என்ற இடத்தில் பருத்தியை பயிர் செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட சோவியத் யூனியன் அதற்கான வேலையையும் தொடங்கியது.
பருத்தி உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் நீர் அதிக அளவில் தேவைப்படும். ஆதலால், 1960-ல் அமுதாரியா மற்றும் சிறுதாரியா ஆகிய இரண்டு ஆறுகளையும் ஃபெர்கானா வேலி பக்கம் ஆயிரக் கணக்கான கால்வாய்கள் மூலம் திருப்பிவிட்டது. சோவியத் யூனியன் எதிர்பார்த்ததுபோல, பருத்தி உற்பத்தி அமோகமாக இருந்தது. எகிப்து நாட்டுடன் போட்டி போடும் அளவிற்கு உஸ்பெகிஸ்தான் நாட்டு பருத்தியும் இருந்தது.
ஆனால், அதன் பின்விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும் என்பதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆரல் கடலுக்கு சென்று சேர்கின்ற நீர் முற்றிலுமாக தடைப்பட்டது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக ஆரல் கடல் நீரானது வற்றத் தொடங்கி உப்புத் தன்மையும் அதிகரித்தது. இதனால், ஆரல் கடலில் இருந்த மீன்களும் அறியவகை உயிரினங்களும் இறந்துபோக தொடங்கியது. ஒரு பக்கம் பருத்தி உற்பத்தி அமோகமாக இருந்தாலும் மீன் உற்பத்தி முற்றிலுமாக நின்றுபோனது. இதனால், கடல் போல இருந்த ஆரல் ஏரி சின்ன சின்ன குளங்கள் போல் காட்சியளிக்க அரம்பித்தது.
ஆரல் கடலின் கரையோரம் மீன்பிடி தொழிலை நம்பி இருந்த பல்லாயிரக் கணக்கான் மக்கள் வாழ வழியின்றி வேறு நாடுகளுக்கு சென்று அதில் பல பேர் இறந்தும் போனார்கள். இது எல்லாம் வெறும் 30 – 40 ஆண்டுகளில் நடந்து முடிந்தது. 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த பிறகு, ஆரல் கடலுக்கு தண்ணீர் கொண்டுவந்த அமுதாரியா மற்றும் சிறுதாரியா ஆறுகள் கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நான்கு நாடுகளின் வழியாக வர ஆரம்பித்தது. இந்த இரண்டு ஆறுகளுமே கிர்கிஸ்தான் நாட்டில்தான் ஆரம்பம் ஆகின்றது. இதனால், இந்த ஆறுகள் எங்களுக்குதான் சொந்தம் என்று சொன்ன கிர்கிஸ்தான் இந்த ஆறுகளின் நடுவில் கம்பரட்டா என்ற அணையைக் கட்டியது. இதனால், உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானுக்கு தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை. இதனால், உஸ்பெகிஸ்தான் நாட்டில் பருத்தி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆகையால், உஸ்பெகிஸ்தானுக்கும் கிர்கிஸ்தானுக்கும் போர் மூளும் சூழல் உருவானது. கர்நாடகா எப்படி காவிரியை சொந்தம் கொண்டாடி தண்ணீரை விட மறுக்கிறார்களோ அதே போல, கிர்கிஸ்தானும் தண்ணீர் விட மறுக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் வந்துகொண்டிருந்த தண்ணீரும் இந்த சண்டையின் காரணமாக ஆரல் ஏரிக்கு முற்றிலுமாக தண்ணீர் வரத்து நின்றுவிட்டது.
ஆரல் கடல் அழிந்துபோனதை மிகப்பெரிய இயற்கை பேரழிவாக கருதுகிறார்கள். இந்த ஆரல் கடலை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது ஏரியின் ஒரு சில இடங்களில் நீர்மட்டம் உயர ஆரம்பித்துள்ளது. சில இடங்களில் மீன்களும் திரும்பவர ஆரம்பித்துள்ளது. ஆனால், என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆரல் கடலை மீண்டும் கொண்டுவர முடியாது என்பதுதான் உண்மை.
இயற்கையை செயற்கையால் வெல்ல முடியும். ஆனால், செயற்கையால் இயற்கையை மீண்டும் கொண்டுவர முடியாது. என்பதுதான் உண்மை. ஒரு ஆற்றின் வழியை மாற்றி வேறு வழியில் ஓட வைத்தால். அதனால், ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை இந்த ஆரல் கடல் மூலம் நாம் அறிந்துள்ளோம். ஒரு ஆறானது கண்டிப்பாக கடலில் சென்று சேர வேண்டும் இல்லை என்றால் கடல் நீரானது உள்ளே புகுந்து அதன் அருகில் இருக்கின்ற நல்ல நீரையும் உப்பு நீராக மாற்றிவிடும். அதற்கு மிக முக்கிய உதாரணம், காவிரி டெல்டா பகுதியில் ஆற்றின் வழியாக கடலில் சேர வேண்டிய நீரானது கடலில் சென்று சேராமல் டெல்டா பகுதியில் உள்ள நிலங்களில் உப்பு தன்மை அதிகரித்து நல்ல நீர் அனைத்தும் உப்பு நீராக மாறியுள்ளது.
அதே போல், 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மொத்த சென்னையே தண்ணீரில் மிதந்தது. அதற்கு காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் அதற்கு முக்கிய காரணம் நீர்நிலைகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டது; நீர் நிலைகள் தரிசான நிலையில் பாதுகாக்கப்படாமல் ஏரிகள் அனைத்தும் சரியான முறையில் தூர்வாரப்படாமல் இருந்ததால் சென்னை தண்ணீரில் மிதந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டே, அதாவது 2016 மற்றும் 2017ம் ஆண்டு சென்னை மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தது. இன்றும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாளையும் சந்திக்கும். ஏனென்றால் ஏரிகள், குளங்கள் சரியான முறையில் பராமரிக்காத வரை தண்ணீர் பஞ்சமானது குறையவே வய்ப்பில்லை.
இதே நிலை தொடர்ந்தால், தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரம் (உலகின் முதல் தண்ணீர் இல்லா நகரம்) பூஜ்ய நாள் (Zero day) அறிவித்தது போல நம் நாட்டிலும் அறிவிக்கின்ற நாள் வெகுதொலைவில் இல்லை. நீர்நிலைகள் மற்றும் நீர் ஆதாரங்களைக் காப்பாற்ற வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் போன்றவைகளை தூர்வாரி அதை பாதுகாத்தாலே போதும் தண்ணீர் பற்றாக்குறையானது முற்றிலும் குறையும்.
மீண்டும் ஒரு ஆரல் பேரழிவை இவ்வுலகம் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த மார்ச் 22ல் உலக தண்ணீர் தினத்தில் நீர் வளத்தைக் காப்போம் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். இயற்கையின் பாதையை மனிதன் மாற்ற நினைத்தால், இயற்கைக்கு பேரழிவு இல்லை. மனிதனுக்குதான் மிகப் பெரிய பேரழிவு. இந்த பேரழிவில் இருந்து காத்துக்கொள்ள குவலயமே விழித்துக்கொள்.
– நன்றி வழக்கறிஞர் தா.பிலால் ஹுசைன்

கடந்த 21 நாட்களில் நுவரெலியாவில் 138 பேருக்கும், பதுளையில் 157 பேருக்கும் கொரோனா

2021 மார்ச் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை நுவரெலியா மாவட்டத்தில் 138 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், இக்காலப்பகுதியில் பதுளை மாவட்டத்தில் 157 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 264 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 643 பேருக்கும்  கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...