Home Blog Page 3570

நாம் தமிழர் வேட்பாளர்களின் வெற்றி தமிழ் இனத்தின் வெற்றி – சீமான் உரை

தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழ்மொழி சிதைந்து அழிவது குறித்தோ, தமிழர்களின் வரலாறு மறைக்கப்படுவது குறித்தோ, தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் சிதைந்து அழிவது குறித்தோ, நிலவளம் சுரண்டப்படுவது குறித்தோ கவலை கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டினார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், ஆகிய இடங்களில் நேற்று பிரசாரம் செய்தார். போடி வள்ளுவர் சிலை முன்பு திரண்டிருந்த மக்கள் மத்தியில் சீமான் பேசியதாவது:-

மக்களுக்கு எது அடிப்படையான தேவை, எதை கொடுத்தால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற சிந்தனையே இல்லாதவர்களிடத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளது.

இந்த ஆட்சியாளர்களுக்கு தமிழ்மொழி சிதைந்து அழிவது குறித்தோ, தமிழர்களின் வரலாறு மறைக்கப்படுவது குறித்தோ, தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் சிதைந்து அழிவது குறித்தோ, நிலவளம் சுரண்டப்படுவது குறித்தோ, மலை வளம் களவு போவது குறித்தோ கவலை கிடையாது.

அவர்களுக்கு இருக்கும் ஒரே நோக்கம் பணம். அரசியலுக்கு வருவது, பதவிக்கு வருவது, பணம் சம்பாதிப்பது, பணத்தை பதுக்கி வைத்து தேர்தல் வரும்போது வாக்குக்கு காசு கொடுத்து வாக்கை விலைக்கு வாங்குவது என்பதாக உள்ளது. அதைக் கொண்டு மறுபடியும் ஆட்சிக்கு வருவது, கொள்ளையடிப்பது என 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதற்கு துணையாக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளன.

நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ அ.தி.மு.க., தி.மு.க.விடம் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்த இரு கட்சிகளும் தற்போது தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளன.

50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சியில் இருந்தபோதும் செய்யாததையா இப்போது செய்யப்போகிறார்கள்? தேர்தல் நேரம் என்பதால் இனிப்பான வார்த்தைகளை கூறி ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

வாக்குக்கு காசு கொடுப்பவர்கள் பெரிய ஜமீன்கள், திவான்கள் இல்லை. மக்களிடம் திருடிய பணத்தை வாக்குக்கு கொடுக்கிறார்கள். எங்களிடம் பணம் இல்லை. ஆனால் தூய உள்ளத்தோடு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த மனம் இருக்கிறது. அவர்கள் கோடிகளை கொடுக்கிறார்கள்.

நாங்கள் உயர்ந்த கொள்கைகளை கொடுக்கிறோம். எது வேண்டுமென்று முடிவு செய்யுங்கள். பணமா? தமிழர் என்ற இனமா?. நாம் தமிழர் வேட்பாளர்களின் வெற்றி எங்கள் கட்சியின் வெற்றியல்ல. நம் இனத்தின் வெற்றி. எங்கள் வேட்பாளர்கள் வெல்வது என்பது நம் இன வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்

குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக  காலமானார். அவருக்கு2 குழந்தைகள் உள்ளனர்.

ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, உஸ்தாத் ஹோட்டல், நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.

ஆனால், அடுத்தடுத்த திரை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர் பாதிக்கப்பட்டார். பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில், தீப்பெட்டி கணேசன் பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.

கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக்கூட காசு இல்லை என்றுகூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கவிஞர் சினேகன் இவருக்கு உதவிக்கரம் நீட்டினார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார்.

‘ஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் அல்ல’ – அநுர பதிலடி

” ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு அதிகாரமும் ஜனாதிபதிக்கு கிடையாது.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர்மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமைதோறும் கிராமங்களுக்கு சென்று மக்கள் குறை கேட்கிறார் என்ற போர்வையில் ஊடக பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றார். அரசுக்கு எதிராக அந்தவாரம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வளமாக அதனை பயன்படுத்தி வருகின்றார். ஆக மக்கள் பிரச்சினைகளுக்கு செவிமடுக்காது, தான் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்டுவருகின்றார்.

குறிப்பாக நேற்று (நேற்று முன்தினம்) சனிக்கிழமை நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின்போது, சில ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் இலக்கு வைத்து ஜனாதிபதி உரையாற்றினார்.

” எனக்கு பாடம் கற்பிக்க தெரியும். படிப்பிக்க வேண்டிய விதமும் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நாட்டை ஆண்டாலும் எந்தவொரு ஊடகங்களுக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.” என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன்மூலம் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய அதிகாரம் தனக்கு இருந்தும் அதனை பயன்படுத்தவில்லை என்பதையே ஜனாதிபதி கூறவிளைகின்றார்.

அத்துடன், ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளாராம். ஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதி பத்திரமோ அல்லது வரப்பிரதாசமோ கிடையாது. அது ஊடகங்களுக்கான உரிமையாகும்.

அதேபோல கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எப்படி பாடம் கற்பிக்கப்பட்டது என்பது எமக்கு தெரியும். ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார். எக்னெலிகொட காணாமல்ஆக்கப்பட்டார். இப்படி பல அச்சுறுத்தலான பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஜனாதிபதி கற்பிக்கவுள்ள பாடம் என்பது நவீன ஊடகம் தொடர்பானதாக இருக்காது. அது அச்சுறுத்தலாகவும், அழுத்தமாகவுமே அமையும். ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்ககூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்காது. தனது நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் ஊடகங்களை அரவணைப்பதும், மக்கள் பக்கம் நின்று விமர்சிக்கும் ஊடகங்களை அச்சுறுத்துவம் என இரட்டை நிலைப்பாட்டை ஜனாதிபதி கிடைபிடிக்ககூடாது.”

மூச்சுத்திணறல் – நடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். அவருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடையாறு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கார்த்திக்குக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது.

நடிகர் கார்த்திக் தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். தற்போது படங்களில் அவர் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரிலான அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தனது கட்சி அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதாகவும், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்து இருந்தார்.

பசறை விபத்து – பெற்றோரை இழந்து தவிக்கும் 3 பிள்ளைகள்! ஐவரின் நிலைமை கவலைக்கிடம்!!

பசறை பஸ்விபத்தில் 15 பேரை காவு கொண்ட சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு சோகங்கள் புதைந்துகிடக்கின்றன.

லுணுகலையைச் சேர்ந்த அந்தோனி நோவா 2021-03-2021ல் கண்சிகிச்சைக்காக பதுளை அரசினர் மருத்துவமனைக்கு அவரது மனைவி பெனடிக்மெரோனாவுடன் புறப்பட்டார்.

இவர்கள் இருவரும் பஸ்நிறுத்துமிடத்திற்குவந்தபோது, குறிப்பிட்ட பஸ் சென்றுள்ளதாக அறிந்தனர். அப்பஸ்ஸில் போனால் மட்டுமே, கண் சிகிச்சைக்காக முதலில் இருக்கலாம். உரிய நேரத்தில் போகலாம் என்ற நிலையில், சென்ற அவ் பஸ்சில் செல்வதற்கு, அவ்விடத்திலிருந்து ஆட்டோவொன்றில் ஏறினர். குறிப்பிட்ட ஆட்டோவும் வேகமாகச்சென்று, ஏற்கனவே சென்றிருந்த அப்பஸ்சை தடுத்து நிறுத்தி இருவரும் பஸ்சில் ஏறினர்.

அவ்வகையில் குறிப்பிட்ட பஸ்சை துரத்திச்சென்று, ஏறிய தம்பதிகளின் பயணம், பசறை – 13ம் மைல்கல்லுடன் முடிவடைந்தது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் இவ்விருவருக்கு இரு பெண்பிள்ளைகளும், ஒரு ஆண்குழந்தையுமாக மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அந்தோனி நோவா’வேல்டிங்’ இரும்பு பொருத்துனர் வேலையிலேயே ஈடுபட்டுவருவபராவார். மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
இத்தம்பதிகள் பதுளை மருத்துவ மனைக்கு செல்லவிருந்த பஸ் கடந்து சென்றபோதிலும், மீண்டும் அப்பஸ்சைப்பிடித்துஏ றிச்சென்று, இவர்கள் காலனை அரவணைத்துக்கொண்ட இச்சோகச் சம்பவங்கள் போன்று, வேறு பலசோகங்களும் இருந்துவருகின்றன.

பசறை பஸ் விபத்தில் காயமுற்ற 33 பேர்களில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ் ஐவரது நிலையும் மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக பதுளை அரசினர் மருத்தும வனைவட்டாரங்கள் தெரிவித்தன.

சிகிச்சைபெற்றுவருபவர்களில் 20 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்கியுள்ளதுடன், இவர்களில் மூன்று சிறுவர்களும் இரு சிறுமிகளும் அடங்குவர்.

அத்துடன் காயமுற்ற நிலையில் சிகிச்சைபெற்றுவரும் பலர் தொடர்ந்தும் ஊனமுற்றவர்களாகவே இருக்கவேண்டிய அவலமும் இருந்துவருவதாக மருத்துவ மனைடாக்டர்கள் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

ஜெனிவாவில் இலங்கைக்கு இன்று பலப்பரீட்சை! கை கொடுக்குமா இந்தியா?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான புதிய பிரேரணைமீது இன்று  22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பிரிட்டன், ஜேர்மன், கனடா, மொண்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இணைந்தே புதிய பிரேரணையை முன்வைத்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்திலேயே பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும். அந்தவகையில் வாக்கெடுப்பை கோருவதற்கு இலங்கையும் தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணையை எதிர்ப்பதற்கு சீனா, ரஷ்யா, கியூபா, வெனிசூலா, பாகிஸ்தான், கொரியா, நேபாளம்,இந்தோனேசியா, பங்களாதேஷ், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன.

அதேவேளை, மேற்படி பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு இணை அனுசரணை வழங்கும் ஐந்து நாடுகளுடன் ஆர்ஜென்டினா,ஆஸ்திரியா, பிரேசில், கமரூன், மென்மார்க், மெக்ஸிகோ, செனகல், போலந்து, பிரான்ஸ், காபோன், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கைகோர்த்து, சார்வாக வாக்களிக்கவுள்ளன.

இந்தியா, ஜப்பான் உட்பட மேலும் சில நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகிக்கக்கூடும்.

அதேவேளை, பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மையை இணை அனுசரணை வழங்கும் நாடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன எனவும், இதற்கு பிரிட்டன் தலைமை வகித்துவருகின்றது எனவும் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இம்முறை அங்கம் வகிக்காதபோதிலும், இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கை பௌத்தமயமாக்கவே ‘தொல்லியல் ஆயுதம்’

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கை பௌத்தமயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளம் இருப்பதாக கூறி தொல்லியல் திணைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ளவுள்ள நிலையில், இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரும் தமிழ் அரசியல் தரப்புகளும் கலந்துரையாடலை மேற்கொண்ட வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் ஆலயத்தின் தொன்மைகள் தொடர்பாகவும் வரலாறுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

“நாங்கள் அனைத்து விடயங்களிலும் போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.

அரசின் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினர், பௌத்த பிக்குகள் சிலர் இங்கு வந்து சென்றுள்ளதுடன், வருகின்ற 23 ஆம் திகதி அகழ்வுகளில் ஈடுபடவுள்ளதாக அறிய முடிகின்றது.

எங்களுடைய நிலங்கள், பாரம்பரியங்கள் இருக்கின்ற தெய்வ சந்நிதிகளிலே தங்களது பௌத்த சமயத்தை நிலைநாட்டுவதற்காக தொல்லியல் திணைக்களம் எனும் குழுவை அரசு உருவாக்கியுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்களது பௌத்த அடையாளங்கள் இருக்கின்றன எனக் கூறி பௌத்த விகாரைகளை நிலைநாட்ட அரசு முயற்சிக்கின்றது.

பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் இந்த ஆலயத்தை ஆராய்ச்சி செய்து பார்க்க இவர்கள் எத்தனித்துள்ளார்கள். இந்த இடத்தை இராணுவத்தினர் பல வருடங்களாக ஆளுகைக்குள் வைத்திருந்தனர். அவர்களே இந்த ஆய்வைச் செய்ய பௌத்த மதகுருமாருடன் ஆர்வமாக உள்ளனர்.

இவற்றைத் தடுப்பதற்கு நாங்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எம்மிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து தடை உத்தரவைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

எங்களுடைய பிரதேசங்கள் மற்றும் எங்களுடைய தெய்வங்கள் இருக்கின்ற இடங்களை பௌத்த விகாரைகளாக – அடையாளங்களாக உருவாக்கி அதனை நிரூபித்து இந்தப் பிரதேசம் தங்களுடையது என்றும் இந்தப் பூமி தமிழர்களுடையது அல்ல, சிங்களவர்களுடையது என்றும் வரலாற்று ஆவணங்களைத் தயாரிப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

இதற்கு நாங்கள் இடம் கொடுக்காது எமது மண்ணை நாங்கள் காப்பாற்ற சட்ட நடவடிக்கை மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

போராடி தோற்றது இலங்கை ஆளுமைகள் அணி – கிண்ணம் வென்றது இந்தியா

வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கியது இந்திய ஆளுமைகள் அணி.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக தொடர் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஆளுமைகள் அணி, டில்வான் தலைமையிலான இலங்கை ஆளுமைகள் அணியை சந்தித்தது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் குவித்தது. யுவராஜ்சிங் 60 ஓட்டங்களும்  (41 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), யூசுப்பதான் 62 ஓட்டங்களையும் (36 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர்.அணித் தலைவர்  டெண்டுல்கர் தனது பங்குக்கு 30 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து களம் கண்ட இலங்கை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது.

இறுதிவரை போராடியே இலங்கை அணி தோற்றது. சனத் ஜயசூரிய 43 ஓட்டங்களையும், ஜயசிங்க 40 ஓட்டங்களையும், வீரரத்ன 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்க வேண்டும் – ப.சிதம்பரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களித்து தமிழர் பக்கம் இந்தியா நிற்க வேண்டும் என காங்கிரஸ் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்: ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் உள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து இலங்கைத் தமிழர்களின் பக்கம் நிற்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்குமாறு வலியுறுத்தும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை திங்கள்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – பலி எண்ணிக்கை 546 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் 177 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 2ஆவது அலைமூலம் 85 ஆயிரத்து 465 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

வைரஸ் தொற்றியவர்களில் இதுவரை 86 ஆயிரத்து 759 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...