Home Blog Page 3571

கண்ணீர் குளமானது பசறை – 7 பேரின் சடலங்கள் நல்லடக்கம்! 9 பேருக்கு நாளை இறுதிக்கிரியை!!

பசறை பஸ் விபத்தில் பலியான 15 பேரில் ஏழு பேரின் சடலங்கள் 21-03-2021 பிற்பகல் 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஏனைய 09பேரின் சடலங்களும் நாளை நல்லடக்கம்செய்யப்பவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பி.சி ஆர். பரிசோனைகளை மேற்கொண்டால், அறிக்கைகள் கிடைக்க தாமதமாவதினால் 15பேரின் சடலங்களும் “ரிபட் என்டிஜன்” பரிசோனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இப்பரிசோதனைகள் 20-03-2021ல் இரவில் மேற்கொண்டு, அதிகாலை 2.00 மணியளவில் அனைத்து சடலங்களும் உறவினர்களிடம், பதுளை மருத்துவனை பிரேத அறையிலிருந்து ஒப்படைக்கப்பட்டன.

இதற்கமைய லுணுகலையைச்சேர்ந்த அந்தனி நோவா மற்றும் அவரது மனைவி பெனடிக் மொரோனா , ஹாலி – எலை, அந்துடுவா வெலையைச் சேர்ந்த டேனியல் ஹரிகரன் , அடாவத்தையைச் சேர்ந்த பெருமான் முரளிதரன் , லுணுகலையைச் சேர்ந்த ஆர். எம். சந்தமாலி ஆகியோரது சடலங்கள் ,மே ற்குறிப்பிட்ட இடங்களின் மயானங்களிலும் , லுணுகயைச்சேர்ந்த ஜயதுன் பிபி , ஹலிமா உம்மா ஆகியோரது ஜனாசாக்கள் லுணுகலை மையவாடியிலும் நல்லடக்கம்செய்யப்பட்டுள்ளன.

ஏனைய சடலங்கள் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளன. இவ் எழுவரது இறுதிச்சடங்கில்பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர் .

எம். செல்வராஜா

‘பசறை விபத்து’ – தவறிழைத்த அனைவருக்கும் தண்டனை! ஆளுநர் உத்தரவு!!

பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13 ஆம் கட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்றையதினம் ஊவாமாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் சரிந்து வீழ்ந்துள்ள கல்லை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறும், மாகாணத்தினுள்ளே மேலும் இது போன்ற அபாயகரமான இடங்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறும் சம்பந்தப்பட்டதரப்பினருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் இந்த கோரச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் எதிராகச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் உத்தரவிட்டார்.

அதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாகாணபோக்குவரத்து ஆணையகம், காப்புறு திநிறுவனங்கள் மற்றும் ஆளுநரின் நிதியத்திலிருந்து இழப்பீடுகளை வழங்கவும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தகலந்துரையாடலில் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மேஜர்சுதர்ஷன டெனிபிடிய, சாமர சம்பத் தசநாயக, பசறை மற்றும் லுணுகலை பிரதேச சபைகளின் தலைவர்கள், ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்தன, உள்ளாட்சி ஆணையர் மங்கல விஜயநாயக,

பதுளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிடல் ஆலோசகர், மாகாண போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

எம். செல்வராஜா, பதுளை

‘தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் புறக்கணிப்பு’

” தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களிலேயே கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தேவையாக உள்ளது. எனினும் புதிய முன்மொழிவுகளில் அவை உள்வாங்கப்படாது புறக்கணிக்கப்பட்டே உள்ளது” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தற்பொழுது நாடு முழுவதும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் மீள் நிர்ணயம் தொடர்பான முன்மொழிவுகள் பெறப்பட்டு வருகின்றது. அவை பிரதேச செயலக மட்டத்திலே தயார் செய்யப்பட்டு, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதியுடன், மீள் நிர்ணய ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்படுகின்றது.

கண்டி மாவட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள், உரிய தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. குறிப்பாக, தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களிலேயே கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தேவையாக உள்ளது. எனினும் புதிய முன்மொழிவுகளில் அவை உள்வாங்கப்படாது, புறக்கணிக்கப்பட்டே உள்ளது.

கண்டி மாவட்டத்தின் மிக அதிகமான சனத்தொகையையும், பரப்பளவையும் கொண்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிகமாக இருப்பது தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் ஆகும். விசேடமாக, முஸ்லீம் மக்கள் வாழுகின்ற பகுதிகளும், அதே போன்று, பெருந்தோட்ட பகுதிகளும் இத்தகைய நிலையில் உள்ளது. அப்பகுதிகளில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அதிகரிக்கவே கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். எனினும் பிரதேச செயலக மட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் அத்தேவையை பூர்த்தி செய்யாது உள்ளது.

குறிப்பாக, கம்பளை உடபலாத்த, தொழுவ பிரதேச செயலக பிரிவுகள், நாவலபிட்டிய, பஸ்பாகே கோரல, குண்டசாலை மற்றும் அக்குறணை பிரதேச செயலக பிரிவுகளில் பொருத்தமான முன்மொழிவுகள் செய்யப்படவில்லை. சனத்தொகை நான்காயிரம், ஐயாயிரத்திற்கு அதிகமான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கூட, இரண்டாக பிரிப்பதற்கு சிபாரிசு செய்யப்படவில்லை.

நிர்வாக அதிகார பகிர்வின் முக்கியமான ஒரு அம்சமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு காணப்படுகின்றது. அதே போன்று அரசியல் அதிகார பகிர்விற்கான முக்கியத்துவத்தையும் இது அதிகரிக்கின்றது. பல ஆண்டுகளுக்கு ஒரு தடவையே இந்த மீள் நிர்ணயம் நடைபெறுகின்றது. எனவே இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது. இது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் கடப்பாடாகும். அதிலும் அரசாங்க தரப்பில் உள்ள எங்கள் பிரதிநிதிகள் இவை தொடர்பாக தேடி பார்த்து அவசியமான அழுத்தங்களை அரசசுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது இருப்பது ஏன் என்பதே கேள்வியாக உள்ளது.”

அமைச்சர் சரத் வீரசேகரவை வறுத்தெடுத்த அநுரகுமார திஸாநாயக்க

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையிலான சொற்போர் உக்கிரமடைந்துள்ளது.

21/4 தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளான மொஹமட் இல்ஹாம், மொஹமட் இன்ஷாப் ஆகிய இளம் வர்த்தகர்களின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் என்ற கோடீஸ்வர வர்த்தகர் ஜே.வி.பியின் தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக பெயர் குறிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்காலத்தில் வாக்குமூலம் பெறப்படும் என சரத் வீரசேகர அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, சரத் வீரசேகரனின் அறிவிப்புளானவை புஷ்வாணமாகும் என சுட்டிக்காட்டி அதற்கான காரணத்தையும் வெளியிட்டார்.

” மாகாணசபை முறைமை நீக்கப்படும் என சரத் வீரசேகர அறிவித்தார். ஆனால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகின்றது. எனவே, சரத் வீரசேகரவின் அறிவிப்பு புஷ்வாணமாகிவிட்டது.

ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுமாறு பாதாள குழுவினருக்கு சரத் வீரசேகர அழைப்பு விடுத்தார். ஆனால் பாதாளக்குழு அவ்வாறு சரணடையவில்லை. அத்துடன், இளைஞர்களுக்கு 2 வருடங்கள் இராணுவப் பயிற்சி வழங்கப்படும் என கூறினார். இதனை அரசு நிராகரித்தது.  இதனால்தான் புஷ்வாண அறிவிப்புகள் என குறிப்பிட்டேன்.” – என்று அநுர பட்டியலிட்டுக்காட்டி உரையாற்றினார்.

இதனால் சீற்றமடைந்த அமைச்சர் சரத் வீரசேகர, புஷ்வாணமா, தோட்டாக்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்றும் சரத் வீரசேகரவை விளாசும் வகையில் அநுர குமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டார்.

” என்னை விசாரணைக்குழுவுக்கு அழைக்க வேண்டும் என அரசோ அல்லது சரத் வீரசேகரவோ ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கவில்லை. இந்நிலையில் திடீரென சரத் வீரசேகரவுக்கு என்னை ஞாபகம் வருவது ஏன்? நாட்டில் பிரச்சினையொன்று உருவாகும்போது அதனை திசைதிருப்புவதற்காக சரத் வீரசேகர போன்றவர்கள் செய்திகளை உருவாக்குகின்றனர்.

அதுமட்டுமல்ல புஷ்வாணமா, தோட்டாக்களா என என்னை மிரட்டுகின்றார். எங்களின் காதோரம்கூட தோட்டாக்கள் பறந்துள்ளன. எனவே, எம்மை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது.” – என்றார்.

‘பஸ்ஸை தவறவிட்டும் ஆட்டோவில் சென்று பலியான தம்பதி – பசறையில் சோகம்’

பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் பலியான பெருந்துயர் சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பசறை பகுதி கண்ணீர் குளமாகியுள்ளதுடன், வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றன. பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

15 பேரின் வாழ்வு விழிமூடி விழி திறப்பதற்குள் முடிவுக்கு வந்ததை நினைக்கையில் விழிநீர் பெருக்கெடுக்கின்றது. நெஞ்சம் துடிக்க மறுக்கின்றது என பலரும் வேதனை வெளியிடுகின்றனர்.

குறித்த பேருந்து விபத்தில் லுனுகலை அடாவத்தை பகுதியைச் சேர்ந்த பெனடிக் மெடோனா (31), அந்தோனி நோவா (32) ஆகியோரும் உயிரிழந்தனர். இத்தம்பதி குறித்த பேருந்தை தவறவிட்டுள்ளது.

ஆனால் உரிய நேரத்தில் பதுளை வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் என்பதற்காக ஆட்டோவில் வந்த, பேருந்தை துரத்திபிடித்து ஏறியுள்ளனர்.

சிலவேளை பேருந்து சென்றுவிட்டது, பிரிதொரு பஸ்ஸில் செல்வோம் என அவர்கள் நினைத்திருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். விதி யாரைதான் விட்டுவைத்தது என்று மட்டுமே தற்போது கவலையடையமுடியும் எனவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டனர்.

அதிலும் குறிப்பாக அந்தோனி நோவா என்பவர் பிறந்த நாளிலேயே உயிரிழந்தும் உள்ளார்.

க.கிசாந்தன், மலர்வேந்தன்

சோகத்தில் மூழ்கியது பசறை – உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்றும், நாளையும் நல்லடக்கம்

பதுளை- செங்கலடி வீதி 13ஆவது மைல்கல் பகுதியில் நேற்று   இடம்பெற்ற கோர பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பீ.சி.ஆர் சோதனையின் பின்னர் பதுளை மாகாண வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்து இன்று (21) அதிகாலை 3.00 மணியளவில் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து அவர்களது உடல்களை இன்றும் (21), நாளையும் (22) நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவர்களது குடும்ப உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

லுனுகலை 24ஆம் கட்டை பகுதியில் உயிரிழந்த இரு இஸ்லாமிய சகோதரிகளின் உடல்கள் இன்று (21) காலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. புகைப்படக் கலைஞர் டெனில் ஹரிஹரனின் உடல் ஹாலிஎல, குயின்ஸ்டவுனிலும், அடாவத்தை எல்ராடோவில் உயிரிழந்த கணவனும்,மனைவியுமான நோவா,மெடோனா தம்பதிகளின் உடல்கள் அடாவத்தை புனித அந்தோணியார் ஆலயத்தின் மையவாடியிலும் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்வுள்ளது.

ஆசிரியர் முரளிதரனின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதுடன்,ஏனையோரின் உடல்களும் நாளை நல்லடக்கம் செய்யப்பட்டவுள்ளன. மீதும்பிட்டிய தொடக்கம் லுனுகலை வரையான பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. வீதிகள் எங்கும் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.எங்கும் சோகமயமாக காட்சியளிக்கின்றன.

இலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று (2021.03.20) டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் போது பொருளாதாரம், முதலீடு,சந்தை, தொழிநுட்பம், விவசாயம், கடற்றொழில் கைத்தொழில் மற்றும் அரசியல் உறவு ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பங்களாதேஷ் நாட்டு பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனா பாராட்டினை தெரிவித்தார்.

நாட்டை முடக்காமல் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கும் போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பது உணரப்பட்டுள்ளது . பங்களாதேஷ் நாட்டு மக்களை பாதுகாக்க விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பங்களாதேஷ் பிரதமர் தெரிவித்தார்.

வைத்திய சேவை வழங்கல் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பங்களாதேஷ் நாட்டு மக்களுக்கு நிவாரண கொடுப்பனவுகளை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சார்க் அமைப்பு கொவிட்-19 அவசர நிதியத்தின் ஊடாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வைத்திய உபகரணங்களை வெகுவிரைவில் இலங்கைக்கு வழங்கும் என பங்களாதேஷ் பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனா உறுதியளித்தார்.

வலய பொருளாதார ஒத்துழைப்பினை மேம்படுத்தும் வகையில் வலயத்துக்கு பொருத்தமான பொருளாதாரத்தை மேம்படுத்தும் யோசனைகளை பங்களாதேஷ் பிரதமர் தூதுகுழுவினரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அந்த யோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தினார்.

இலங்கை மாணவர்கள் பங்களாதேஷ் நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை பயிலும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனா உயர் கல்வியை பெற்றுக் கொள்ள இலங்கை மாணவர்கள் பங்களாதேஷிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவையை விரிவுப்படுத்தி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளை முன்னேற்றுவது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டன.

விரும்பும் காலம் வரை இங்கு இருங்கள். உங்களை சிறந்த முறையில் கவனித்துக் கொள்வோம். எம்மிரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று சிறப்பு மிக்க உறவு அந்தளவிற்கு பலமானது என பங்களாதேஷ் பிரதமர் குறிப்பிட்டார்.

வியாபார துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேம்படுத்துவது குறித்து இலங்கை தூதுகுழுவினர் யோசனைகளை முன்வைத்தார்கள்.இந்த யோசனைகளுக்கு இணக்கம் தெரிவித்த பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனா பங்களாதேஷ் என்றும் இலங்கையுடன் ஒன்றினைந்து செயற்படும் என்றார்.

அடுத்த வருடம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வமான விஜயத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்களாதேஷ் பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனாவிற்கு அழைப்பு விடுத்தார். இவ்வழைப்பினை பங்களாதேஷ் பிரதமர் ஏற்றுக் கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும், அவரது குடும்பத்தாரையும் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு மீண்டும் பங்களாதேஷிற்கு வருகை தருமாறு பங்களாதேஷ் பிரதமர்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்தார்.

கடந்த காலங்களில் பங்களாதேஷிற்கும், இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை சிறந்த முறையில் செயற்படுத்த ஒன்றினைந்த ஆலோசனை ஆணைக்குழுவை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் காலநிலைக்கு பொருந்தும் வகையிலான நெற் பயிரை இலங்கைக்கு வழங்கவும்,அந்நாட்டில் நன்னீர் மீன்பிடி கைத்தொழிலை மேம்படுத்த இலங்கை ஒத்துழைப்பு வழங்கவும் இரு தரப்பின் பேச்சுவார்த்தையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் மத்திய வங்கியின் சேவை, தொழிநுட்பத்துறை கட்டமைப்பை பரிமாற்றிக் கொள்ளல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 50ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் விரிவுப்படுத்தப்பட்ட அரசியல் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலான யோசனைகள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.

தீவிரவாதம் மற்றும் மனித கடத்தல் வியாபாரம் ஆகியவற்றை முழுமையாக இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தன.

இருதரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதன் பின்னர் இரு நாட்டு பிரதமர்களின் முன்னிலையில் இலங்கை- பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இச்சந்திப்பின் போது இளைஞர் விவகாரத்தை அபிவிருத்தி செய்யல், விவசாயத்துறை,திறன் அபிவிருத்தி பறிமாற்றல்,சுகாதார தாதிகள் சேவை பறிமாற்றம்,அனைத்துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021-2025 வரையிலான அனைத்து கலாசார பறிமாற்றம் செயற்திட்டம் ஆகிய விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த தகவலை பிரதமரின் சிறப்பு உதவியாளர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் அண்மையில் தான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டது நினைவு கூரத்தக்கது.

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், மிதமான கட்டுப்பாடுகள் பாகிஸ்தானில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பசறை விபத்து – 9 ஆண்களும், 6 பெண்களும் பலி! இருவரின் நிலைமை கவலைக்கிடம்!!

பதுளை- செங்கலடி வீதி 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் பதுளை மாகாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பசறை பொது சுகாதார வை த்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்திய அதிகாரி கே.எம். சமரபந்து தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர். பதுளை மாகாண வைத்தியசாலையில் 16 ஆண்களும், 14 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்திய குழுக்களும், சுகாதார குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக 8அம்பியூலன்ஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சீசி டிவி காட்சிகளின் படி எதிர்திசையில் வந்த டிப்பர் ரக வாகனத்தை தாண்டி செல்ல முற்பட்ட வேளையிலே பஸ் வண்டி வீதியை விட்டு விலகி 200அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் பஸ்ஸின் சாரதியும் உயிரிழந்துள்ளார். பசறை பொலிஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பசறை நிருபர்

மலையக மக்கள் முன்னணியின் நிலைமை கவலைக்கிடம் – அனுசா கவலை!

மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பின் தூண்களாகிய மக்கள், சந்திரசேகரன் மக்கள் முன்னணியினுடனேயே இருக்கிறார்கள்.  எனவே, இனிவரும் காலங்களில் மக்களை பற்றி சிந்திக்கும் , மக்களுக்காக சேவை செய்யும் அமைப்பாக சந்திரசேகரன் மக்கள் முன்னணியே இயங்கும் என சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

மேலும் ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தப்பட்ட எம் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு அரசியல் சமூக மாற்றங்களை எதிர்ப்பார்த்து 1990ம் ஆண்டுகளில் அமரர் சந்திரசேகரனுடன் இணைந்து மலையக மக்கள் முன்னணியை உருவாக்கியது இன்றைய தலைமையில் இருக்கும் வியாபாரிகளின் வங்கிக்கணக்குகளையும் சொத்துக்களையும் அதிகரித்துக்கொள்வதற்கு அல்ல. மக்களின் நலனை முன்னிருத்தியே அன்றைய முன்னணி செயற்பட்டது.

ஆனால் மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உள்ளார்ந்த பழிவாங்கல்கள் பதவி பேராசைகள் இப்படியே போனால் கடைசியில் கட்சியில் எவருமே எஞ்சமாட்டார்கள் போலும்.

ஆகவே எம் மலையகத்துக்கு சேவை செய்ய எண்ணும் அனைத்து இளைஞர் ,யுவதிகள், புத்திஜீவிகள், ஆரம்பகால உறுப்பினர்கள் என அனைவருக்கும் இணைந்து செயற்பட சந்திரசேகரன் மக்கள் முன்னணி வாய்ப்பளிக்கும் .” எனவும்  அனுசா தெரிவித்தார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...