Home Blog Page 3576

சந்தா அறவீடு குறித்து கம்பனிகள் விடுத்துள்ள அறிவிப்பு

கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொழிற்சங்கங்களுக்கான சந்தாவை அறவிடுவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது

அத்துடன், சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி நடைமுறையில் உள்ளதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதில் உள்ளவாறு சம்பளம் கிடைக்கும் என குறித்த சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

எனினும், நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானத்தினால் பெருந்தோட்டத் தொழில்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை சுட்டிக்காட்டியே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குறைந்தபட்ச சம்பளத்தை பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.ச

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான ஒரு மாத முன்னறிவித்தலை ஏற்கனவே கையளித்துள்ளதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொழிற்சங்கங்களுக்கான சந்தாவை அறவிடுவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ரொஷான் ராஜதுரை மேலும் சுட்டிக்காட்டினார்

‘அரசியல் பழிவாங்கல்’ அறிக்கை சபையில் இரு நாட்கள் விவாதம்!

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதன்படி ஏப்ரல் 6, 7 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்ததுவற்கான அனுமதியை ஆளுங்கட்சி வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று கூடியது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மூவருக்கு கொரோனா – நோர்வூட் பிரதேச சபை அமர்வு ஒத்திவைப்பு!

நோர்வூட் பிரதேச சபையின் மேலும் மூன்று உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதேச சபையின் செயற்பாடுகள் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நோர்வூட் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு கடந்த 15 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின.

இதில் சமர்ஹில், வனராஜா, சலன்கந்த வட்டார உறுப்பினர்கள் மூவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

இதனால் நாளை நடைபெறவிருந்த நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு பிரதேச சபை நடவடிக்கைகளும் பிற்போடப்பட்டுள்ளன.

கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 537 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஆண்கள் இருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.

21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அஸாத் சாலி கைது – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

21/4 தாக்குதல் சம்பவத்துடன் அஸாத் சாலிக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று தெரிவித்தார்.

‘ஒற்றுமையின் உணர்வை வெளிப்படுத்தினால் மீண்டும் உலகக்கிண்ணம் வெல்லலாம்’

கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொள்ளலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (2021.03.17) முற்பகல் தெரிவித்தார்.

இலங்கை, கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு 25 ஆண்டுகள் பூர்த்தி விழாவை முன்னிட்டு வீரர்களை கௌரவிக்கும் முகமாக அலரி மாளிகையில் இடம்பெற்ற உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு தேசிய நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த போதே கௌரவ பிரதமர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த வெற்றி இன்று நேற்று இடம்பெற்றது போன்று நினைவிலுள்ளது. இன்று எமது கிரிக்கெட் களத்தில் இடம்பெறுவதை நோக்கும் போது எமது இந்த வெற்றியை கிரிக்கெட் இரசிகர்கள் அடிக்கடி நினைவுபடுத்துகின்றனர் என்பதை நான் கூற  வேண்டும்.

நிகழ்காலத்தை சரிசெய்ய கடந்த காலம் முக்கியமானதாகும். அன்று அரங்கில் விளையாடியவர்கள் சாதாரண கிரிக்கெட் வீரர்கள் அல்லர். நாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உணர்வு கொண்ட இளைஞர்களாவர். அன்றைய எமது வெற்றியை ஆசிய நாடுகள் தாம் பெற்ற வெற்றியாகவே கருதின.

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அன்று எமது நாட்டில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் விளையாட முடியாது எனக் கூறின. இலங்கையில் அக்காலப்பகுதியில் காணப்பட்ட பயங்கரவாதம், கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களே இலங்கைக்கு வராதிருப்பதற்கான காரணங்களாக குறிப்பிட்டனர்.

எமது விமான நிலையங்கள் போன்றே எமது துறைமுகமும் உலகின் பாதுகாப்பற்ற இடங்களாக பல முறை பெயரிடப்பட்டது. அவ்வாறானதொரு நிலைமையில் நான் மேலே குறிப்பிட்ட நாடுகள் உலகக் கிண்ணத்தை வழங்கினாலும் இலங்கைக்கு வர முடியாது எனக் குறிப்பிட்டன.

கிரிக்கெட் சுற்றுலா அணிகள் இலங்கைக்கு வருவதாக இருப்பின் அவர்கள் வந்து தங்கும் அறைக்கு முன்னால் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் நான் உறங்குகிறேன். நீங்கள் வருகைதந்து கிரிக்கெட் தொடரில் பங்குபெறுங்கள் என அப்போதைய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டமை எனக்கு நினைவிருக்கிறது. ஊடகங்களில் பகிரங்கமாக அவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறுவதற்கு அந்நாடுகள் விரும்பவில்லை.

இலங்கையை வெற்றி பெறச் செய்வதில் காணப்பட்ட விருப்பமின்மையே இங்கு வருகை தராமைக்கு காரணம் என அச்சந்தர்ப்பத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் உணர்ந்தன. அதன்போது இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் எமது நாட்டிற்கு சகோதரத்துவத்தின் கரங்களை நீட்டின. அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு எமக்கு ஊக்கமளித்தனர்.

நாம் உலகக் கிண்ணத்தை வென்ற போட்டி பாகிஸ்தானிலேயே இடம்பெற்றது. அச்சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் எமக்கு வழங்கிய உற்சாகத்திற்கமைய, அதனை அவர்கள் ஆசியாவின் வெற்றியாகவே நோக்கியுள்ளனர் என்பது எமக்கு புலப்படுகிறது. இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு, பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஆரவாரம் செய்த நாள் அதுவாகும்.

அதுமாத்திரமன்றி முரளிதரன் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை களத்திலிருந்து வெளியேற்ற பெரும் முயற்சி மேற்கொள்ளப்படையும் எனக்கு நினைவிருக்கிறது. இந்த வீரருக்கு எதிராக மிகவும் நியாயமற்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டன. எனினும், முரளிதரனை பாதுகாப்பதற்கு அப்போதைய தலைமைத்துவம் பெரும் சேவையாற்றியது. இவற்றின் காரணமாக, நமது கிரிக்கெட் வீரர்களின் ஒரு அணி என்ற உணர்வு வெகுவாக அதிகரித்தது. அந்த சம்பவம் முரளியை இன்று உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது என்று நான் நம்புகிறேன்.

இந்த உலகக் கிண்ணம் தொடர்பில் நான் கேள்விப்பட்ட ஒரு கதை எனக்கு நினைவிருக்கிறது. 1996 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி இந்தியாவில் ஒரு அரங்கத்திலேயே நடைபெற்றது. போட்டியின் இறுதி நெருங்கும்போது இந்திய அணியின் இரசிகர்கள் கிளர்ந்தெழுந்து தொடர்ந்து கற்களையும் போத்தல்களையும் அரங்கிற்குள் வீச ஆரம்பித்தனர். அந்த காட்சியை முழு உலகமுமே பார்த்தது.

அந்நேரத்தில் அணியின் துணைத்தலைவர் அரவிந்த டி சில்வா, மைதானத்தின் எல்லைக்கு அருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தார். அதன்போது மேலதிக வீரராக இருந்த உபுல் சந்தன, அரவிந்த டி சில்வாவிடம் சென்று நீங்கள் உள்ளே களத்தடுப்பில் ஈடுபடுங்கள், நான் எல்லையில் களத்தடுப்பில் ஈடுபடுகிறேன், கற்கள், போத்தல்களால் நீங்கள் தாக்கப்பட்டால் இறுதி போட்டியில் உங்களுக்கு விளையாட முடியாது போகும். அவ்வாறு இடம்பெறின் நாம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என கூறினாராம். தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கக் கூடிய அளவிற்கு நாட்டின் மீது மிகுந்த பற்றுகொண்ட அணியொன்று அப்போது காணப்பட்டது என்பதை நான் கூற வேண்டும். எனவே இது மனிதகுலத்தின் கதையாகும்.

உலகக் கிண்ணத்தை வென்று இந்த அணி இலங்கைக்கு விஜயம் செய்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அன்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதியாக செயற்ப்பட்ட எமது ஆட்சியே காணப்பட்டது. அர்ஜுன ரணதுங்கவின் தந்தை அரசாங்கத்தின் அமைச்சரொருவராக இருந்தார். எனினும் உலகக் கிண்ணத்தை தமிழீழ விடுதலை புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த காமினி திசாநாயக்க அவர்களின் இல்லத்திற்கே அர்ஜுன ரணதுங்க எடுத்துச் சென்றார்.

உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு காமினி திசாநாயக்க அவர்களின் காலப்பகுதியில் அடித்தளம் இடப்பட்டமையை கௌரவிக்கும் முகமாகவே அவ்வாறு செய்யப்பட்டது. எனவே இன்று நாம் கொண்டாடுவது ஒரு மனிதகுலத்தின் கதையாகும். அன்று கிரிக்கெட் விளையாடிய மிகச்சிறந்த வீரர்களின் கிரிக்கெட் போட்டிகள் இந்நாட்களில் இடம்பெறுகின்றன. அவர்கள் அடுத்தடுத்து வெற்றி பெறுவதும் விளங்குகிறது. அந்த வெற்றியில் இரகசியம் கிரிக்கெட் விளையாட்டில் உள்ள வசதிகளோ அல்லது பணமோ அல்ல. கடந்த காலத்தில் ஒழுக்கமாக விளையாடியதன் மூலம் பெற்ற பயிற்சியே ஆகும். கடந்த காலத்தில் வீரர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை உணர்வு. அதுவே உலகக் கிண்ணத்தை வெல்ல எங்களுக்கு உதவியது.

எமக்கு நிகழ்காலத்தை சிறப்பாக கட்டியெழுப்பவே கடந்த காலம் உள்ளது. இன்று எமக்கு கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்ததொரு பாடமாக கடந்த காலமே உள்ளது. அந்த கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தால் இன்று நாமுள்ள துயர நிலையிலிருந்து விடுபட முடியும் என நான் நம்புகின்றேன். கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமை, மனிதநேயம் என்பவற்றை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தால் மீண்டும் அதேபோன்றதொரு வெற்றியை பெற முடியும் என நான் நம்புகின்றேன் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நிகழ்வில் உரையாற்றினார்.

1996 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. நாம் பாடசாலை மாணவர்களாக இவ்வெற்றியை கொண்டாடினோம்.

இந்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் வெல்லும் திறனும் சந்தர்ப்பமும் இருப்பதாக நாங்கள் அக்காலத்தில் நம்பினோம்.
1996 உலகக் கிண்ண வெற்றியை நம் நாட்டு விளையாட்டுத்துறையின் திருப்புமுனை என்று கூறுவது சரியானதாக அமையும்.

1996ஆம் ஆண்டு முதல், நாங்கள் இரு தடவைகள் 50 ஓவர்களை கொண்ட போட்டிகளில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தோம்.

அதேபோன்று இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியிலும் நாங்கள் இறுதிப் போட்டியை எட்டியுள்ளோம். 2014 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை எங்களால் வெல்ல முடிந்தது. இவை அனைத்திற்கும் 1996 உலகக் கிண்ண வெற்றியே அடித்தளமாக அமைந்தது.

இன்று குமார் தர்மசேன, ரொஷான் மஹனாம ஆகியோர் ஐ.சி.சி நடுவர்களாக, உலகில் உலக கிரிக்கெட்டை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். மேலும், இந்த 1996 அணியில் இன்று தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல பயிற்சியாளர்கள் உள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் பயிற்சியாளர் டேவ் வோட்மோர் அவர்களை நினைவுகூர வேண்டும். அப்போதைய பயிற்சியாளர் மற்றும் அப்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முகாமையாளர், கௌரவ தலைவர் உட்பட அனைத்து முகாமையாளர்கள் உள்ளிட்ட இந்த வெற்றிக்கு பங்களித்த மற்றும் அர்ப்பணித்த அனைவரையும் 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்  இத்தருணத்தில் நினைவுகூருகின்றோம்.

நம் நாட்டில் விளையாட்டுகளைப் பற்றி பேசும்போது, நமது கிரிக்கெட் மிக முக்கியமான விளையாட்டு என்பதை நாம் அறிவோம். எமது கிரிக்கெட்டில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கு துணை நிற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் உறுப்பினர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் வீழ்ச்சியடையும் போது கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.

புதிய வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், எதிர்காலத்தில் மீண்டும் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியை உருவாக்குவதற்கும் இவர்களது பங்களிப்பு கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

தோல்வியும் வெற்றியும் விளையாட்டின் ஒரு பகுதியாகும், ஆனால் நாட்டிற்காக விளையாடுகின்றோம் என்ற அணி உணர்வையே  நாம் அனைவரும் எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறானதொரு உணர்வுடன் விளையாடினால் உலகக் கிண்ணத்தை வெல்லக கூடியதொரு அணியை எமது நாட்டில் உருவாக்க முடியும்.

எனக்கு இந்த நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ள முடியாவிடினும், கிரிக்கெட் விளையாட்டை நேசித்த ஒரு தலைவராக மற்றும் விளையாட்டை நேசித்த ஒரு தலைவராக கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு விழாவிற்கு தலைமை வகித்தமைக்கு  கௌரவ பிரதமருக்கு நன்றி செலுத்துவதாக கௌரவ  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க அவர்கள்,

சர்வதேசத்தின் மத்தியில் நாம் பிரபலமடையாத காலத்திலும் கௌரவ பிரதமர் அவர்கள் எமது கிரிக்கெட் அணி சார்பாக செயற்பட்டமை எமக்கு நினைவிருக்கிறது. நாம் ஒரு அணி என்ற ரீதியில் உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 25 ஆண்டுகள் கடந்தும் இந்நாடு எம்மை மறக்கவில்லை.

எங்களுக்குள் நிர்வாக சிக்கல்கள் காணப்பட்ட போதிலும் சிரேஷ்ட வீரர்களாகிய நாங்கள் இளம் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.கடந்த காலத்தில் கிரிக்கெட்டுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கு, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலைமையில் முறையான நிர்வாகத்துடன் இந்நாட்டில் கிரிக்கெட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, 1996 உலகக் கிண்ணத்தை வெற்றிபெறும் போது அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பீ.திசாநாயக்க, அப்போதைய விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன், இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கிரிக்கெட் தலைவi; (1996) ஆனா புஞ்சிஹேவா, இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள், உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட கிரிக்கெட் அணியின் அங்கத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எட்டு பேருக்கு விளக்கமறியல்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எட்டு பேர், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் பிணை முறி வழக்கு விசாரணைகள் இன்று நடைபெற்ற போது உயர் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதியரசர் குழு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கலில் நட்டம் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் தீ ! 20 லயன் குடியிருப்புகள் தீக்கிரை!!

மஸ்கெலியா  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரவுண்ஸ்வீக் தோட்டம் குயின்ஸ்லேன்ட் பிரிவில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (17.03.2021) மதியம் 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின.

இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் மூன்றாம் இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கும், இராணுவ பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.  இதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த லக்ஷபான இராணுவத்தினரும், பொலிஸாரும், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.

இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட பாடசாலை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மஸ்கெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார், அட்டன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

க.கிசாந்தன்

பும்ராவை போல்ட் ஆக்கிய தமிழ் பொண்ணு!

இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக திகழ்பவர் ஜஸ்பிரிட் பும்ரா. துல்லியமான தனது பந்துவீச்சால் எதிரணி துடுப்பாட்டவீரர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்பவர் பும்ரா.

அவர் கிரிக்கட் வாழ்வில் கைப்பற்றிய அனேக விக்கட்கள் அவரது யோக்கர் பந்துமூலமாகவே வீழ்ந்தன. இதில் விக்கட்டில் நேரில் பட்டு போல்ட் முறையில் ஆட்டமிழந்தவர்கள் பலர் . 27வயதுடைய பும்ராவிற்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் பும்ரா ரசிகராக இருந்ததோ சஞ்சனா கணேசன் என்ற தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கு என்றால் வியப்பாகவுள்ளதா?

ஸ்டார் டீவியின் பிரபல அறிவிப்பாளரான சஞ்சனா கணேசன் முன்னர் பல தொலைக்காட்சிகளில் முக்கியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கியுள்ளார்.

1991ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி பிறந்த சஞ்சனா கணேசன் மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை கணேசன் ராமசாமி எழுத்தாளராகவும் முகாமைத்துவ குருவாகவும் திகழ்வதுடன் தாயார் சுஷ்மா கணேசன் சட்டத்தரணியாகவும் உடற்திடநிலை பயிற்றுவிப்பாளராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது டுவிட்டர் தளத்தில் தான் ஒரு தமிழ் பொண்ணு என்பதை அவர் பெருமையாக பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ,ஸ்டார் டிவியின் அறிவிப்பாளர் சஞ்சனா கணேசன் திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது.

இலங்கையில் 796,792 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது!

இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் நேற்றுவரை (16) 7 லட்சத்து 96  ஆயிரத்து 792 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு,

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...