Home Blog Page 3575

கண்டியில் காணிகளை அங்குள்ள மக்களுக்கு வழங்கும் யோசனை ஏகமனதாக நிறைவேற்றம் : பாரத் அருள்சாமி

கண்டியில் உள்ள காணிகளை அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த யோசனையை பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள் சாமி முன்வைத்துள்ளார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே மற்றும் கண்டி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவர் வசந்த யாப்பா பண்டார தலைமையில் கண்டி கச்சேரியில் இடம்பெற்றது.

இதில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினை பிரதிநிதித்துவப்படுத்தியும் கண்டி மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தியும் பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி கலந்து கொண்டார்.

இதன் போது, மெததும்பர, பிரதேச செயலாளர் பிரிவிற்குள் வருவதற்கும் வுட்சைட் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள அரச பெருந்தோட்ட யாக்கத்துக்கு சொந்தமான காணிகளை விலைமனு கோரல் மூலம் வெளியாட்களுக்கு கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அக் காணிகளை அங்குள்ள எமது மக்களுக்கு வழங்குமாறு கோரி பாரத் அருள்சாமியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏற்கனவே கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் நிகாரிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்கு அப் பகுதி பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கண்டி தமிழ் மக்களுக்கும் தோட்ட மற்றும் கிராம பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் இந்த ஒருங்கிணைப்பு குழுவின் ஊடாக சேவைகளை வழங்குவதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் இணைந்து நாங்கள் முன்னின்று செயற்படுவோம் என்று பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கண்டி மாவட்டத்தில் தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்க தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேகுமார் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முயற்சியென வேலுகுமார் காட்டம்! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறுகலா?

 

தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முயற்சியென வேலுகுமார் காட்டம்! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறுகலா?

கண்டி மாவட்டத்தில் தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்க தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் இதற்கெதிராக தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து, அபிவிருத்தி குழு கூட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாரிடம் வினவிய போது, அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

“கண்டி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சின், பிரஜாசக்தி நிகழ்ச்சி திட்டத்தினூடாக, தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்குவதற்கான அனுமதி கோரி, முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

பெருந்தோட்டங்களில் வாழுகின்ற மக்களின், உரிமை மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கும், மேன்படுத்துவதற்கும் உள்ள அமைச்சினாலும், அதன் கீழ் இயங்குகின்ற “பிரஜாசக்தி” நிகழ்ச்சித் திட்டத்தினாலும் இவ்வாறான ஒரு முன்மொழிவு செய்யப்பட்டிருப்பது கண்டி மாவட்ட தோட்ட மக்களுக்கு செய்கின்ற மாபெரும் துரோகம் ஆகும்.

இம்முன்மொழிவில், கண்டி தெல்தெனிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, ரங்களை தோட்டத்தின் கல்தூரியா பிரிவின் 100 ஏக்கர் காணியும், மெததும்பர பிரதேசத்தில் உள்ள வுக்ஸைட் தோட்டத்தின் 200 ஏக்கர் காணியும் விடுவிக்க கோரப்பட்டுள்ளது. அவ்வாறு விடுவிக்கும் காணிகள் அதன் அருகாமையில் காணப்படும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு விவசாய நடவடிக்கைகளை செய்ய குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இத்தோட்டடங்களில் வாழுகின்ற மக்கள் கடந்த பல வருடங்களாக தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இவ்வாறான நிலையில், இம்மக்களை ஓரம்கட்டி, இத்தோட்ட பகுதிகளை வெளியாருக்கு வழங்க நமது பிரதிநிதிகளே முன்னிற்பது வேதனைக்குரியதாகும். இக்கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கலந்துகொண்டு எனது கடுமையான எதிர்ப்பை முன்வைத்தேன். அதே வேலை அபிவிருத்தி தேவைகளுக்கு காணிகளை பயன்படுத்துவதாயின் தோட்ட மக்களின் பிரச்சினையை முதலிலே தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன். அதற்கு சபையில் கடுமையான எதிர்ப்பை சபையில் ஏனைய தரப்பினர் தெரிவித்தனர். “இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான வேலை திட்டம், அதில் நீங்கள் கூறுவது போல் எல்லாம் செய்ய முடியாது” என்ற தொனியில் கருத்துக்களை முன்வைத்தனர். எனினும், தோட்ட மக்களின் நியாயத்தையும் இதில் உள்ள அசாதாரணத்தையும் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டினேன்.

இத்தோட்டங்களில் வாழுகின்ற மக்கள் கடந்த பல வருடங்களாக தமது தொழிலை இழந்துள்ளனர். அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி மற்றும் சேவைக்கால கொடுப்பனவுகள் கூட நிலுவையாக உள்ளது. இச்சூழலில், இருக்கின்ற காணிகளையும் பிரித்து வெளியாருக்கு கொடுக்கப்பார்க்கின்றனர். இந்நிலை முன்சென்றால் அம்மக்கள் லயன் அறைக்கு மட்டுப்படுத்தப்பட்டவர்களாக வாழ வேண்டி ஏற்படும். இதற்கு ஒருபோதும் நாம் சமூகமாக அனுமதிக்க முடியாது. இந்த அரசாங்கத்தில் மலையக மக்களை பிரதிநித்துவம் செய்பவர்கள் எமது மக்களுக்கு நல்லதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெட்டதை செய்யாமல் இருந்தால் போதும், என்ற நிலையே இப்போது ஏற்பட்டிருக்கின்றது.” என்றார்.

எவ்வாறாயினும், கண்டியுள்ள தோட்ட மக்களுக்கே அந்தக் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று தான் முன்வைத்த கோரிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக
பிரஜா சக்திகள் பணிப்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

கண்டியில் காணிகளை அங்குள்ள மக்களுக்கு வழங்கும் யோசனை ஏகமனதாக நிறைவேற்றம் : பாரத் அருள்சாமி

தம் அடிக்கலாம் வாங்க! சிகரட்டை விட முயற்சிப்பவரா நீங்கள் : இதோ வந்தது மாற்று

சிகரட்டை புகைப்பவர்களுக்கு தீங்கு ஏற்படும் என்று தெரிந்திருந்த போதிலும் அந்தப் பழக்கத்தை விட முடியாமல் அல்லது குறைக்க முடியாமல் பலர் திணறி வருகின்றனர்.

புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும் என்ற வாசகம் அனைத்து இடங்களிலும் பார்த்தும், கேட்டும் இருந்தபோதிலும் அந்த பழக்கம் பலரைக் கட்டிப்போட்டுள்ளது.

ஆனால் இனி தாராளமாக புகைக்கலாம் என்ற வகையில் இலங்கையில் புதிய வகை சிகரட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆம் அதுதான் மூலிகை முறையில் தயாரிக்கப்பட்ட கறுவாப்பட்டை சிகரட்.

வாயில் பற்றவைத்தபடி “கறுவாப்பட்டை சிகரட்டை” அமைச்சர் விமல் வீரவங்ச இதனை அறிமுகப்படுத்தினார்.

லயன் ஹார்ட் நாமத்தின் கீழ் 100% கறுவாப்பட்டை பயன்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது.

கறுவாப்பட்டை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் இலங்கை முதன்மையாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இனி உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் புகையிலை சிகரட்டிற்குப் பதிலாக கறுவாப்பட்டை சிகரட்டை புகைக்கலாம். குறைவற்ற செல்வமான நோய் அற்ற வாழ்விற்கு வழி ஏற்படுத்துவோம்.

உலகின் பத்து விசித்திரமான பண்ணைகள் (வீடியோ)

மனித குலத்தின் நாகரீக வளர்ச்சியின் மிக முக்கியமான படிமுறைகளில் ஒன்றாக பண்ணைகளை குறிப்பிட முடியும், விவசாயம், விலங்கு வேலாண்மைக்காக மனிதன் பண்ணைகளை பயன்படுத்திக் கொண்டான்.

அந்த வகையில் இன்று நாம் சற்றே வித்தியாசமான நீங்கள் பெரிதாக கேள்விப்பட்டிராத சில பண்ணைகள் பற்றி பார்க்கின்றோம்.

10. பாம்பு பண்ணை

பாங்கொங்கில் அமைந்துள்ள The Queen Saovabha Memorial Institute பண்ணையில் சற்றே வித்தியாசமான உயிரினங்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த பண்ணையில் கொடிய விசத்தைக் கொண்ட பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.

இந்த பாம்புகளிடமிருந்து விசத்தைப் பெற்றுக் கொண்டு விசத்தை முறிக்கக்கூடிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த பண்ணை பிரபல சுற்றுலா தளமாகவும், வித்தியாசமான பண்ணையாகவும் திகழ்கின்றது. பாம்பு கடிக்கான மருந்து கண்டு பிடிப்பது குறித்த ஆய்வுகள் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன.

9. சிலந்தி ஆட்டு பண்ணை

சிலந்திகளிடமிருந்து சிலந்தி பட்டு பெற்றுக்கொள்வதை விடவும் சிலந்தி பட்டு மரபணுக்களை ஏற்றிய உயிரியல் ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட ஆடுகளை வளர்த்து அதன் மூலம் பட்டு பெற்றுக்கொள்ளவது சுலமானது என விஞ்ஞானிகள், இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறான ஆட்டுப் பண்ணைகள் சாதாரண ஆட்டுப் பண்ணைகளை விடவும் வித்தியாசமானவை.

இந்த மரபணு மாற்றப்பட்ட ஆடுகளிடமிருந்து கிடைக்கும் பாலின் ஊடாக பயோ ஸ்டீல் எனப்படும் பொருள் கிடைக்கப்பெறுவதாகவும் இது மிகவும் வலிமையானது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

8. கடமான் பண்ணை

மான் வகையைச் சேர்ந்த கடமானின் பால் மிகவும் வித்தியாசமானது. மாட்டுப் பாலில் இருப்பதை விடவும் மிக அதிகளவான அமினோ அமிலங்கள் கடமான் பாலில் உண்டு.

ரஸ்யாவில் இந்த மானின் பாலைக் கொண்டு பல நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது.

கடமான் வகையானது காட்டில் வளரும் மிருகங்கள் என்பதனால் இந்த பண்ணை ஏனைய பண்ணைகளிலிருந்து மாறுபட்டதாக காணப்படுகின்றது.

குறித்த மான் வகை, குட்டி ஈனும் காலத்தில் மட்டும் ரஸ்யாவின் இந்தப் பண்ணையில் பராமரிக்கப்பட்டு பால் எடுக்கப்படுகின்றது.

7. பாப்பாண்டவரின் பண்ணை

16ம் நூற்றாண்டில் கோடை காலத்தில பாப்பாண்டவர் தங்குவதற்காகவே இந்த கான்டோல்போ கோட்டை கொள்வனவு செய்யப்பட்டது.

62 ஏக்கர் நிலப்பரப்பிலான இந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களும் வத்திக்கானின் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.

பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த பண்ணையை விருந்தினர்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.

இந்தப் பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள், நற்கருணையின் போது வழங்கப்படும் அப்பம் தயாரிக்கப்பட்டு எஞ்சும் பொருட்களை மட்டுமே உட்கொள்கின்றன என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.

6. உடல் பண்ணை

இந்த பண்ணை பற்றிய தகவல்கள் உங்களை அச்சத்தில் ஆழ்த்தக்கூடியது. இந்த வகை பண்ணைகளில் மனித உடல்கள் காணப்படும். இங்கு மனித உடல்களைக் கொண்டு ஆய்வுகள் நடாத்தப்படுகின்றன.

மனிதனின் உடல் எவ்வாறு சிதைவடைகின்றது, சடலத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் எவை என்பன குறித்து இந்த வகை பண்ணைகளில் ஆய்வு நடாத்தப்படுகின்றது.

விஞ்ஞான ஆய்வுகளுக்காக கொடையாக வழங்கப்படும் நபர்களின் உடல்கள் இந்த பண்ணைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக சடலமொன்றை மீட்கும் பொலிஸார் சடலம் இவ்வளவு காலம் பழமையானது என ஊகிப்பதற்கு இந்த ஆய்வுகள் உதவுகின்றன.

5. கஞ்சா பண்ணை

கஞ்சா பல்வேறு மருந்து தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படுகின்ற போதிலும் அநேக சந்தர்ப்பங்களில் கஞ்சா செடிகள் சட்டவிரோதமாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது.

அநேகமான கஞ்சா பண்ணைகள் மிகவும் சூட்சுமமாக நூதனமான முறைகளில் உருவாக்கப்படுகின்றன.

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் பழைய அணு பதுங்குகுழியொன்றை நிலக்கீழ் கஞ்சா செய்கைக்காக பயன்படுத்தியுள்ளார்.

செயற்கை ஒளி நீர் கட்டமைப்பு என்பனவற்றை அமைத்து இந்த செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.

சில வீடுகளிலேயே கஞ்சா செய்கையில் ஈடுபடும் செய்திகளையும் நாம் படித்திருக்கிறோம்.

பனிபடர்ந்த பகுதிகளில் வீடுகளில் கஞ்சா இரகசியமாக உற்பத்தி செய்யப்படும் போது செயற்கை ஒளி பயன்படுத்தப்படுவதனால் அந்தக் கூரைகளில் மட்டும் பனி படர்வதில்லை.

4. அட்டை பண்ணை

பல நூறு ஆண்டுகளாக சில வகை அட்டைகள் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நீர் செறிந்த பகுதிகளில் அட்டைகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன என்றால் நம்ப முடிகின்றதா? எனினும் உண்மையில் இவ்வாறு அட்டைகள் வளர்க்கப்படுகின்றன.

அதி நவீன முறைகளைப் பயன்படுத்தி அட்டைகள் வளர்க்கப்பட்டு அவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

3. பன்றி கழிப்பறை

‘பன்றி எல்லாத்தையும் திண்ணும்’’ என பேச்சு வழக்கில் எமது பெரியோர் கூறுவதனை கேட்டிருப்போம், அது உண்;மை இருக்கிறது.

பன்றி பண்ணை வளர்ப்பாளர்கள், பண்டிகளுக்கு மனித மலத்தை உணவாக வழங்குகின்றனர். சீனா போன்ற நாடுகளில் கடந்த காலங்களில் இந்த முறைமை காணப்பட்டது.

பன்றி வளர்ப்போர் மனித கழிப்பறைகளிலிருந்து செல்லும் கழிவினை பன்றிகளுக்கு உணவாக்கும் முறையை உருவாக்கியிருந்தனர்.

பன்றிகளுக்கு மனித மலத்தை உணவாக வழங்கி பின்னர் அதே பன்றியை நாம் உணவாக உட்கொள்வது சிறந்த விடயமாக இருக்காது.

சில வகை ஒட்டுண்ணிகள் மனிதனிலும் பன்றியிலும் இருக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இது மனிதனின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவி;க்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.

2. விண்வெளி பண்ணை

மனிதன் விண்வெளியை தனது கலாணியாக மாற்ற வேண்டுமாயின் பூமியிலிருந்து உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யாது விண்வெளியிலும் உணவு உற்பத்தி செய்யும் முறையை உருவாக்க வேண்டும்.

அந்த வகையில் ஏற்கனவே விண்வெளியில் சிறு சிறு அளவில் விவசாய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு விளைவிக்கப்படும் பயிர்கள் ஆய்வுகளுக்காக பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

2015ம் ஆண்டில் விண்வெளியில் உற்பத்தி செய்யப்பட்ட உணவை விண்வெளிவீரர்கள் உட்கொண்டனர். கோவா, கடுகு, பரட்டைக்கீரை போன்ற சில வகை பயிர்கள் விண்வெளியில் பயிரிடப்பட்டுள்ளன.

1.பறவைக் கூட்டு பண்ணை

அரிதான பொருட்கள் மீது மனிதர்களுக்கு நாட்டம் அதிகம் என்றால் அது பிழையாகாது.

அந்த வகையில் எத்தனையோ உணவு வகைகள் இருந்தாலும் பறவைக் கூடு போன்ற வித்தியாசமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் உணவு வகைகளுக்கு அதிக கிராக்கி நிலவி வருகின்றது.

குறிப்பாக பறவைக் கூட்டைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் மிகவும் பிரபல்யமானது.

இந்தோனேசியாவில் மனிதனால் பறவைக் கூடுகள் தயாரிக்கப்பட்டு பறவைகள் குஞ்சு பொரிக்கும் வரையில் காத்திருந்து அந்த பறைவைக் கூடுகளை தனது நுகர்வுக்கா பயன்படுத்தும் முறை காணப்படுகின்றது.

இந்த பறவைக் கூட்டுப் பண்ணைகள் முற்றிலும் மாறுபட்ட பண்ணைகள் என்றால் அது மிகைப்படாது.

உலகின் விசித்திரமான பண்ணைகள் (வீடியோ)

‘போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட உள்ளக விசாரணை அவசியம்’

மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ சிப்பாய் சுனில் ரத்னாயக்கவின் செயல்கூட போர்க்குற்றம்தான். எனவே, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவேண்டுமெனில் சுயாதீன உள்ளக விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வதேச விசாரணையை எமது அரசு ஏற்கவில்லை. குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்கு உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழியே வழங்கப்பட்டிருந்தது. இதன்படி தேசிய பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.

போரை முன்னெடுக்கையில் சர்வதேச சட்டத்திட்டங்களை நாம் முழுமையாக பின்பற்றினோம். போர்க்களத்தில் குற்றங்கள் இழைக்கப்படவில்லை. சிறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால்கூட அதற்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தினேன். இறுதிப்போரின்போது மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. மெசின் கன் பயன்படுத்தவில்லை. இதனால் இறுதி நான்கு மாதங்களில் அதிகளவில் இராணுவத்தினர் உயிரிழந்தனர்.

ஆனால் போர்களத்துக்கு வெளியில் சுனில் ரத்னாயக்க என்பவர் செய்த செயல் (மிருசுவில் படுகொலை) தவறு. அப்போது நான் யாழ். கட்டளைத் தளபதியாக இருந்தேன். சீருடை அணிந்தவர் என்பதற்காக அவ்வாறு செய்யமுடியாது. அதுகூட போர்க்குற்றம்தான்.

இறுதிப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை ஏற்கமுடியாது. அதனை நிராகரிக்கின்றோம். சர்வதேசத்தில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவர்களுக்கு சிலரால் வழங்கப்படும் தகவல்களை நம்புகின்றனர். எனவே, என்ன குற்றச்சாட்டு, எத்தனை பேர் கொல்லப்பட்டனர், சம்பவம் எங்கு நடைபெற்றது என்பன தொடர்பான தகவல்களை முன்வைக்குமாறு அரசு கோர வேண்டும். அவ்வாறு முன்வைக்கப்பட்டால் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும். நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும். கலப்பு நீதிமன்றம் தேவையில்லை. குற்றச்சாட்டுகளை வெறுமனே முன்வைக்கமுடியாது. ஆதாரங்கள் தேவை.” – என்றார்.

‘தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்காது தீர்வை முன்வைக்கவும்’

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அறவழிப்போராட்டங்களை ஒடுக்காது, அம்மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

நுவரெலியாவில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி இராதாகிருஷ்ணன் எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொத்துவில் முதல் பொலிகண்டிவரை நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்குவதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. போராட்டம் முடிவடைந்த பின்னரும் விசாரணைகள் தொடர்கின்றன. வடக்கு, கிழக்கில் தற்போதும் அறவழியில் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

இவற்றுக்கு இடையூறுகளை விளைவிக்காமல், மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு முன்வரவேண்டும்.” என்றார்.

எரிவாயு தட்டுப்பாடு இல்லை – விலையும் அதிகரிக்கப்படமாட்டாது!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் இல்லை எனவும் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தைவாய்ப்பு தொடர்பில் இடம்பெற்ற மறுஆய்வு கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அரிசி, தேங்காய், பால்மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு மற்றும் தானிய வகை, பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம், கிழங்கு, மரக்கறி மற்றும் பழங்கள் போன்றே எரிவாயு நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் விநியோகச் வலையமைப்பு சீர்குலைதல், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் விலையை அதிகரிக்க எரிவாயு நிறுவனங்கள் கோரியுள்ளமை என்பன தொடர்பிலும் வர்த்தக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன அவர்கள் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தினார்.

இதன்போது மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் அறிக்கையை முன்வைத்து, கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய உள்ளூர் விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் உள்ளூர் வணிகங்களை வலுப்படுத்துதல் பொருட்களின் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதன் மூலம் அந்நிய செலாவணியை சம்பாதிக்க வேண்டியது அவசியம் என மத்திய வங்கி பிரதிநிதிகள் விளக்கினர்.

இலங்கை சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட சுமார் 3,000 மெட்ரிக் டொன் அரிசியை சதொச ஊடாக பொதுமக்களுக்கு விநியோகிக்க ஒரு திட்டத்தை வகுக்க முடியுமா என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் வினவினார்.

நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள் அதற்கு ஒப்புதலளித்ததுடன், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜி.வி.ரவிப்ரியவுக்கு  அறிவுறுத்தினார்.

மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான அரிசி பங்குகளை சந்தைக்கு விடுவித்தல் மற்றும் மேலும் 25,000 மெட்ரிக் டொன் அரிசியை உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை என தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ , உள்ளூர் நுகர்வுக்கு போதுமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், புத்தாண்டு காலத்தில் காய்கறி விலை குறையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பயணிகள் பெரும் அசௌகரியம்

ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படவிருந்த மூன்று ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று மாலை 5.50 மணிக்கு செல்லவிருந்த தபால் ரயில் சேவையும், இன்று காலை 5.45 மணிக்கு செல்லவிருந்த பொடி மெனிக்கே மற்றும் காலை 8.30 மணிக்கு செல்லவிருந்த உடரட மெனிக்கே போன்ற ரயில்களும் சேவையில் ஈடுப்படவில்லை.

இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதில் சில பயணிகள் வீடு திரும்பியதோடு, சிலர் பஸ்களின் மூலம் பயணங்களை மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்திருந்தது.

க.கிசாந்தன்

‘பெருந்தோட்ட பகுதி மக்களையும் ஜனாதிபதி சந்திக்க வேண்டும்’

ஜனாதிபதியின் ‘கம சமக பிலிசந்தர’ என்ற கிராமத்துடனான கலந்துரையாடல் வேலைத்திட்டத்தினை பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் ‘ வத்து சமக பிலிசந்தர’ என்ற வகையில் கொண்டு செல்லப்படல் வேண்டுமென்ற, எனது கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருப்பதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் வழங்கிய நேர்காணலொன்றின் போது தெரிவித்தார்.

இந் நேர்காணல் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் பதுளைப் பணியகத்தில் 18.03.2021ல் இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, நாட்டின் பின் தங்கிய கிராமங்களுக்கு சென்று, அக்கிராம மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார். மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து, ஜனாதிபதி அம்மக்கள் ஊடாகவே அறிந்து கொள்கின்றார். அத்துடன், அதிமுக்கிய பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தும் வருகின்றார். இச் செயல்திட்டத்தினை, கிராம மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதனால் பெரும் நன்மைகள் கிராமங்களுக்கு கிடைக்கின்றன.

ஆனால், இது போன்றதோர் செயல்திட்டம் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு கிடைப்பதில்லை. நாட்டின் பின்தங்கிய கிராமங்களை விட, பெருந்தோட்டப்பகுதிகள் அனைத்து துறைகளிலும், பெரும் பின்னடைவுகளை எதிர்நோக்கியிருக்கின்றன. மேலும், பெருந்தோட்டத்துறை மக்கள் நாளாந்தம் பெரும் அவலங்களையும், பாதிப்புக்களையும் எதிர்கொண்ட நிலையிலேயே, இருந்து வருகின்றனர்.

அந்நிலையில், ஜனாதிபதி பெருந்தோட்டப்பகுதிகளுக்கு சென்று அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, அம்மக்கள் ஊடாகவே அறிந்து, அதற்குரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும். அத்துடன், பெருந்தோட்ட மக்களின் உண்மை நிலையினையும், ஜனாதிபதியினால் நேரடியாக கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்புக்களும் கிட்டும்.

ஆகவே ‘ வத்து சமக பிலிசந்தர’ என்ற வகையில் தோட்டங்களுடான கலந்துரையாடல் வேலைத்திட்டத்தினை பெருந்தோட்ட பகுதிகளிலும் கிராம புறங்களைப் போன்று முன்னெடுக்கப்படல் வேண்டும். ஜனாதிபதி நேரடியாக எம்மக்களைச் சந்தித்து எம் மக்களின் குறைகளை தேவைகளை விருப்புக்களை அறிய வேண்டும்.

இது போன்ற நிலை ஏற்படும் பட்சத்தில், பெருந்தோட்ட நிறுவனத்தினரும், அரச அதிகாரிகளும் தோட்ட மக்கள் குறித்தும் கூடிய கவனம் செழுத்தி, அம்மக்களின் தேவைகள், குறைபாடுகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய முன்வருவர். நாட்டின் தலைவர் தம்மை நாடி வந்து தேவைகள், குறைபாடுகளை கேட்டறியும் போது, அம்மக்களுக்கும் பெருமிதமும் ஜனாதிபதி மீது பற்றும் ஏற்படும்.

எனது இக்கோரிக்கையை ஜனாதிபதி ஏற்று, அதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மூடப்பட்டிருக்கும் தோட்டத் தொழிற்சாலைகள் பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டப்பகுதிகளில் சுமார் 25 தேயிலைத் தொழிற்சாலைகள் கைவிடப்பட்டு மூடப்பட்டுள்ளன. இத் தொழிற்சாலைகளை கைத்தொழில் பேட்டைகளாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். இத் தொழில் பேட்டைகளில், அப் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளை வேலைக்கமர்த்தினால் அதி சிறந்த பயன்களைப் பெறக் கூடியதாக இருக்கும்.

இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதுடன், நாட்டின் வறுமானமும் அதிகரிக்கவே செய்யும். தோட்டப்பகுதிகளில் தொழில் வாய்ப்பில்லாதலால், அங்குள்ள இளைஞர், யுவதிகள் கொழும்பு போன்ற நகரங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படாது. தோட்டங்களிலுள்ள தொழில் பேட்டைகளிலேயே அவர்களால் கௌரவமான முறையில் தொழில் செய்யக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.

இது விடயத்தை ஜனாதிபதியிடம் தெரிவித்ததும், அதற்கான வரைபுகளை தன்னிடம் சமர்ப்பிக்கும்படியும், அது குறித்து கூடிய கவனம் செழுத்துவதாகவும் கூறினார்.
மூடப்பட்டு, கைவிடப்பட்டிருக்கும் தோட்ட உத்தியோகத்தர்களின் வாசஸ்தலங்கள்
தற்போதைய நிலையில், தோட்டங்களில் தோட்ட உத்தியோகத்தர்களது குறைப்பினால், அவர்களுடைய வாசஸ்தலங்கள், கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இவ்வாசஸ்தலங்கள் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதால், காலப்போக்கில் இவ் வாசஸ்தலங்களின் கதவுகள், யன்னல்கள், கூரைகள் போன்றவைகள் காணாமல் போய்விடுகின்றன.

தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குடியிறுப்புக்கள் இல்லாது, பல குடும்பங்கள் ஒரே குடியிருப்பில் வாழக்கூடிய அவலங்கள் நீடிக்கின்ற இந்நிலையில், மேற்குறிப்பிட்ட வாசஸ்தலங்கள் கவனிப்பாரற்ற வகையில் காணப்படுகின்றன. இவற்றினை தொழிலாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றும் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஜனாதிபதி இவ்விடயம் குறித்து கவனம் எடுக்குமாறு, தமது அதிகாரிகளைப் பணித்தார்.

பெருந்தோட்ட லயக் குடியிறுப்புக்கள் சீர்திருத்தப்படலும் புதிய வீடமைப்புத்திட்டங்களை ஏற்படுத்தலும்

பெருந்தோட்டங்களில் 150 – 200 வருடங்கள் பழமை வாய்ந்த லயக் குடியிறுப்புக்களும் இருந்து வருகின்றன. இக்குடியிறுப்புக்களை சீரமைப்பு செய்தல் வேண்டும். புதிய வீடமைப்புத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கூறினேன். அதற்கு ஜனாதிபதி, பெருந்தோட்டப்பகுதிகளுக்கு இந்திய வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

அதற்கு நான், இந்திய அரசினால் முதல்கட்டமாக நாலாயிரம் வீடுகளும், 2ம் கட்டமாக பத்தாயிரம் வீடுகளுமாக 14 ஆயிரம் வீடுகளே உள்ளன. ஆனால், பெருந்தோட்டப்பகுதிகளுக்கு இரண்டரை இலட்சம் பேருக்கு தனி வீடுகள் தேவைப்படுகின்ற நிலையில், 14 ஆயிரம் வீடுகளே, இந்திய அரசு வழங்குகின்றன. இவ்வீடமைப்புத்திட்டத்தின் மூலம், எமது மக்களின் வீட்டுத் தேவைகள் நிறைவடையாது. ஆகையினால், எமது அரசு மூலம் வீடமைப்புத்திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும். இதனை ஜனாதிபதி செவிமடுத்ததுடன், இது குறித்தும் கவனம் செழுத்துவதாகக் கூறினார்.

தோட்டங்களிலுள்ள மரங்கள் வெட்டப்படல்

பெருந்தோட்டங்களிலுள்ள மரங்கள் தோட்ட முகாமைத்துவங்களினால், வெட்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன் மூலம் கிடைக்கும் பலகோடி ரூபா கொண்ட பெரும் வறுமானம் குறித்து, வெளியிடப்படுவதில்லை. அவ் வறுமானம் தோட்ட முகாமைத்துவங்களினால் சுரண்டப்படுகின்றன. அது போன்று, தோட்ட சொத்துக்களும் சூறையாடப்படுகின்றன.

பல கோடி ரூபா பெறுமதியான இம் மரங்களை தற்போதைய கம்பனிக்காரர்களோ, முகாமைத்துவத்தினரோ நாட்டியதில்லை. இவர்களுக்கு இம் மரங்களுக்கு உரிமைக்கோரவோ அம்மரங்களை வெட்டி விற்பனை செய்யவோ எவ்வகையிலும் அருகதையில்லை.

பல தசாப்தங்களுக்கு முன் இம் மரங்கள் நாட்டப்பட்டனவாகும். இம் மரங்களுக்கு உரிமை கோருவதற்கு தொழிலாளர்களுக்கு மட்டுமே முடியும். ஆனாலும் பெருந்தோட்ட காணிகள் அதிலுள்ள வளங்கள் அரசுக்கே சொந்தமாகும். தற்போதைய கம்பனிகாரர்கள் தோட்டங்களை பராமரிக்கின்ற குத்தகைகாரர்கள் மட்டுமேயாகும். தோட்டங்களில் எந்தவொரு சொத்தையும் தோட்ட நிருவாகத்தினாலும் சூறையாட முடியாது.

அத்துடன் அக் குத்தகை உரிமையை வைத்து தோட்ட முகாமைத்துவத்தினர் தோட்ட மரங்களை வெட்டி விற்பனை செய்து பெரும் வறுமானம் பெறுகின்றன.
இவ்வகையில், கிடைக்கும் வறுமானத்தில் குறைந்த பட்சம் 50மூ வீத வறுமானமாவது, தோட்டத் தொழிலாளர்களின் சேம நலன்களுக்கு பயன்படுத்தும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படல் வேண்டும். இது குறித்தும், ஜனாதிபதி கூடிய கவனம செழுத்துவதாகக் கூறினார்.

பெருந்தோட்டங்களில் 7500 மலசலகூடங்கள் தேவையென்று கணிப்பீடு

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 7500 மலசலகூடங்கள் தேவையென்று ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த அரசின் காலத்தில் 500 மலசல கூடங்கள் நிருமாணிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தாங்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செழுத்தி, தேசிய வேலைத்திட்டமொன்றின் கீழ் தேவைப்படும். மலசலகூடங்களை நிருமாணிக்கும் செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படல் வேண்டும். இது விடயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

பெருந்தோட்டங்களில் ஏற்பட்டு வரும் பிணக்குகள், முரண்பாடுகள் குறித்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்படும் போது, அதன் விசாரணைகளில் பாரபட்சம், பாகுபாடுகள் காட்டப்படல்.

பெருந்தோட்டங்களில் தோட்ட முகாமைத்துவங்களுக்கும், தொழிலாளர்களுக்குமிடையே ஏற்பட்டு வரும் பிணக்குகள், முரண்பாடுகள் குறித்து பொலிஸ் நிலையங்களில் செய்யப்படும் முறைப்பாடுகள் விசாரணைகள் செய்யப்படும் போது, தொழிலாளர்களுக்கு திருப்தியின்மை ஏற்படுகின்ற நிலையினைக் காணமுடிகின்றது.

அத்துடன், தொழிலாளர்கள் தோட்ட நிருவாகங்களுக்கெதிராக கொண்டு செல்லப்படும் முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தோட்ட நிருவாகங்கள், தொழிலாளர்களுக்கெதிராக செய்யப்படும் முறைப்பாடுகள் உடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழிலாளர்கள் பாதிப்பு அடையும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அப்படியே இரு தரப்பு விசாரணைகள் ஏற்படும் பட்சத்திலும், தொழிலாளர்கள் பாதிப்படையும் வகையிலேயே, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் என்றதும் பாகுபாடுகள், பாரபட்சங்கள் காட்டப்பட்டு வருவதும் வழமையாகியுள்ளது. இதனை ஜனாதிபதி செவிமடுத்ததுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாதைகள் அமைப்பு

பெருந்தோட்டப் பாதைகள் அமைப்பு தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பதிலாக ‘மகநெகும’ அமைப்பினை சக்திமயப்படுத்தினால், பாதை அபிவிருத்திகள் துரிதமாக மேற்கொள்ளப்படுமென்பது பலரது கருத்தாகும். ஆகவே, ‘மகநெகும’ அமைப்பின் ஊடாகவே, பாதை அபிவிருத்திகள் இடம்பெறுவது உசிதம் என்று கருத வேண்டியுள்ளது. இதனையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன், ஜனாதிபதியின் மாளிகையில் 17.03.2021 இச்சந்திப்பு இடம்பெற்றது. இவ்வேளையிலேயே, மேற்கண்ட எனது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தேன். தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்ட இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.

எனது கோரிக்கைகளை ஜனாதிபதி உன்னிப்பாக செவிமடுத்ததுடன், அவற்றினை நிறைவேற்ற அவரது உரிய செயலாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார். அவ்வேளையில் ஜனாதிபதியுடன், அவரது செயலாளர் பி.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகிஸ்வர பண்டார, ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளர் இசுறு ஹேரத் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நேர்காணல் – எம். செல்வராஜா, பதுளை

நாளை பங்களாதேஷ் செல்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச

பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச 2021 மார்ச் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் விஜயம் செய்யவுள்ளார்.

பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரதமரின் இவ்விஜயம் அமையவுள்ளது.

கொவிட் -19 தொற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இணங்க, கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கைகளை தொடர்ந்து பங்களாதேஷுக்கான இராஜதந்திர விஜயத்திற்கு இலங்கை சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு கௌரவ பிரதமர் வெள்ளிக்கிழமை (மார்ச் 19) பிற்பகல் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபகசவின் இவ்விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி அதிமேதகு முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் விவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கௌரவ பிரதமர் ஈடுபடவுள்ளார்.

பங்களாதேஷ் குடியரசின் இவ்விசேட அழைப்பு மற்றும் இவ்விஜயத்தின் போது நடத்தப்படவுள்ள உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு இடையிலான நீண்டகால வலுவான உறவை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம், தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு போன்ற பல்வேறு துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

பங்களாதேஷ் சுதந்திரப் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேசிய தியாகிகள் நினைவுச்சின்னத்தை பார்வையிடவுள்ளார்.

அத்துடன் கௌரவ பிரதமர் பங்கபந்து நினைவு அருங்காட்சியகத்தையும் பார்வையிடவுள்ளார். 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஒரு தனி மாநிலமாக மாறியதுடன், அதனை அடுத்த ஆண்டு முதல் இலங்கையுடன் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியதால், 2022ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...