Home Blog Page 3578

தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் அரசுக்கு துணை நிற்கிறது இ.தொ.கா.!

பெருந்தோட்டத் தொழிலாளர்களை ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. இதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் துணை நிற்கின்றன என்று அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

பண்டாரவளையில் இன்று (17.03.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என 2015 ஆம் ஆண்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். எனினும், இதற்கு தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இறுதியில் சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளத்தை நிர்ணயிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கும் கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டன. ஆனாலும் ஆயிரம் ரூபா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு வருவதற்கு தடைவிதிக்குமாறு கோரி கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. சர்வ அதிகாரங்களும் கொண்ட பலம்பொருந்திய அரசால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கம்பனிகள் சவாலுக்குட்படுத்தியுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்பது அரசின் உறுதிமொழி. அது எப்படியாவது நிறைவேற்றப்படவேண்டும். எனவே, நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் தனது நிலைப்பாடு என்னவென்பதனை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதேபோல் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களை ‘டம்மி’ மலையகத் தலைவர்களை வைத்து ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றிவருகின்றது. இ.தொகாவினரும், வடிவேல் சுரேசும் கூட ஏமாற்றுகின்றனர். ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம்கூட நாடகம் என்பது எமக்கு தெரியும். இருந்தாலும் தொழிலாளர்களின் நலன் கருதி அமைதி காத்தோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

சீனிக்கொள்ளை குறித்து சுயாதீன விசாரணை கோருகிறார் ராதாகிருஷ்ணன்!

மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் சீனிக்கொள்ளை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

நுவரெலியாவில் இன்று (17.03.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. இந்நிலையில் சீனி இறக்குமதி மூலம் வரிமோசடி செய்து அரசாங்கத்துக்கு கோடி கணக்கில் வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி கொள்ளையைக்காட்டியும் சீனிக்கொள்ளை பெரிய மோசடியாகக் கருதப்படுகின்றது. மத்திய வங்கி கொள்ளைமூலம் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கம்பனிகளின் வங்கி இருப்புகள் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. எனவே, சீனி கொள்ளை தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, உரியவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இதன் பின்னணியில் அரச விசுவாசிகள் இருக்கக்கூடும்.

அதேவேளை, இந்நாட்டில் இடம்பெறும் வன அழிப்பு, சுற்றாடல் அழிவு தொடர்பில் கடந்தகாலங்களில் பிக்குகள் உரத்துக்குரல் எழுப்பினர்.அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், சிங்கராஜ பகுதியில் நடைபெறும் வன அழிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட யுவதியொருவரை மிரட்டும் பணி ஆரம்பமாகியுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதுடன், வனத்துறை அதிகாரிகளும் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இது குறித்த யுவதியை அச்சுறுத்தும் செயற்பாடாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை. இந்நிலையில் சம்பள உயர்வை தடுக்கும் வகையில் கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. எனவே, சம்பளம் கைக்கு கிடைத்த பின்னரே அதனை வெற்றியாக கருதமுடியும்.

இதற்கிடையில் வடக்கு, கிழக்கில் அறவழியில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கின்றனர். இவ்வாறு செய்வதைவிட அம்மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” – என்றார்.

க.கிசாந்தன்

அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்படுவாரா விமல் வீரவன்ஸ?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.  நாளாந்தம் உக்கிரமடைந்தே வருகின்றது. இதனால் விரைவில் விரிசலொன்றுக்கான சாத்தியம் பிரகாசமாக தென்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் ஆரம்பமான சர்ச்சை, மொட்டுக்கூட்டணியை வாட்டி வதைத்துவரும் நிலையில், மொட்டு கட்சியின் தலைமைத்துவம் குறித்து விமல் வெளியிட்ட கருத்தும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியில் இருந்து  மஹிந்தவை நீக்கிவிட்டு, அவ்விடத்துக்கு கோட்டாபய நியமிக்கப்பட வேண்டும் என கருத்து வெளியிடுவதற்கு விமலுக்கு என்ன அருகதை உள்ளது என மொட்டு கட்சி உறுப்பினர்கள் வினா தொடுத்து, விமலை சரமாரியாக விளாசித்தள்ளிவருகின்றனர்.

பஸில் ராஜபக்சவே இதன் பின்னணியில் செயற்படுகின்றார். விமல்வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் பஸிலுக்கு எதிராக செயற்படும் நிலையிலேயே இருவரின் தலைகளும் குறிவைக்கப்பட்டுள்ளன.  பஸிலின் சகாக்களின் சொற்கணை தொடுப்பால் விமலும், கம்மன்பிலவும் கதிகலங்கி நிற்கின்றனர். ஆனால் ஊடகங்களின் முன்னால் மட்டும் கம்பீரமாக காட்சியளிக்கின்றனர்.

அவர்கள் பம்பினால்கூட மொட்டு அணியினர் ஓயவில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து விமலுக்கு எதிராக முறையிட்டுள்ளனர். சுமார் 43 எம்.பிக்கள் இணைந்தே விமல், கம்மன்பில ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைத்துள்ளனர்.

“ மொட்டுடன் இணைந்து தேர்தலில் வென்றுவிட்டு இவ்விருவரும் மக்கள் மத்தியில் நாயகர்களாகுவதற்கு அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கின்றனர். கூட்டு பொறுப்பை மீறுகின்றனர். இதற்கு இடமளிக்ககூடாது. இவ்விருவரையும் அமைச்சரவையில் இருந்து தற்காலிகமாகவேனும் வெளியேற்றுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் விமர்சனங்களை நிறுத்த சொல்லுங்கள். இல்லையேல் பொதுவெளியில் விமர்சிக்கவேண்டிய நிலை எமக்கும் ஏற்படும்.” என மேற்படி எம்.பிக்கள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி மீட்பு – பல கோணங்களில் விசாரணை!

கைது செய்யப்பட்டுள்ள மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாட்டின் சட்டத்திற்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டு, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

சட்டமா அதிபரின் ஆலோசணைக்கமைய அவர் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்திய அணியை பந்தாடி இங்கிலாந்து அணி வெற்றிநடை

இந்தியாவுக்கு எதிரான இன்றைய ரி-20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-கே.எல்.ராகுல் களமிறங்கினர். ஆனால் இந்திய அணிக்கு இன்று தொடக்கம் சரியாக அமையவில்லை. இங்கிலந்து பவுலர் மார்க் வுட் வீசிய 3வது ஓவரில், கே.எல்.ராகுல்(0) பவுல்ட் ஆனார். மீண்டும் மார்க் வுட் பந்துவீச்சில் 5வது ஓவரில், ரோகித் சர்மா(15 ரன்கள்) கேட்ச் ஆனார்.

அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 4 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து கேப்டன் விராட் கோலியுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் சிறிது ரன் ரேட் உயர்ந்தது. இந்த நிலையில், சாம் கர்ரன் வீசிய 12வது ஓவரில், 3வது ரன்னுக்காக ஓடிய போது ரிஷப் பண்ட்(25 ரன்கள்) ரன் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 9 ரன்களில், மார்க் வுட் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 20வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா(17 ரன்கள்) கேட்ச் ஆனார். இறுதி வரை நிலைத்து நின்று அதிரடி காட்டிய விராட் கோலி, 46 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி 77 ரன்கள் அடித்தார்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 77 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 4வது ஓவரில் சாஹல் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர், நிதானமாக ஆடி, சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டார். அடுத்து வந்த டேவிட் மலான் 18 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜானி பேர்ஸ்டோவ் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி இறுதி வரை நிலைத்து நின்று ஆடி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தது. இங்கிலாந்து அணி 18.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற்றது. இறுதி வரை ஜானி பேர்ஸ்டோ(40 ரன்கள்), ஜாஸ் பட்லர்(83 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிவரை 30 கி.மீ. நீந்தவுள்ள 48 வயது பெண்!

இலங்கை தலைமன்னார்- தமிழகம் தனுஷ்கோடி இடையே பல பேர் நீந்தி வந்து சாதனை புரிந்துள்ளனர். இருந்தாலும் ஒரு பெண் இந்த சாதனைக்கு முயற்சிப்பது இதுதான் முதல் முறை என்று பெருமிதத்துடன் சியாமளா கூறினார்.

இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்துவதற்காக ஐதராபாத்தை சேர்ந்த சியாமளாஹோலி(வயது 48) என்ற பெண் ராமேசுவரம் வந்துள்ளார்.

இவர் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் ராமேசுவரத்திலிருந்து ஒரு விசைப்படகில் இலங்கை தலைமன்னார் புறப்பட்டு செல்ல உள்ளார். இரவு முழுவதும் படகிலேயே தங்கியிருக்கும் அவர் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து தனது நீச்சல் பயணத்தை தொடங்க உள்ளார். மாலை 4 மணிக்குள் அவர் தனுஷ்கோடி கரையை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுபற்றி சியாமளா கூறியதாவது:-

எனது நீச்சல் பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரி ராஜீவ்திரிவேதிதான். கிருஷ்ணா நதியில் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும், கங்கை நதியில் 13 கிலோ மீட்டர் தூரமும், கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதியில் 14 கிலோ மீட்டர் தூரமும் நீந்தி உள்ளேன். 2019-ல் போர்பந்தரில் 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கமும் பெற்றுள்ளேன். ராம சேது கடலில் நீந்துவது எனது கனவு மற்றும் லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர், “இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கு இந்திய-இலங்கை அரசிடம் முறையான அனுமதி பெற்றுள்ளேன். இதுவரை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே பல பேர் நீந்தி வந்து சாதனை புரிந்துள்ளனர். இருந்தாலும் ஒரு பெண் இந்த சாதனைக்கு முயற்சிப்பது இதுதான் முதல் முறை” என்று பெருமிதத்துடன் கூறினார்.

இலங்கை அணி உலகக்கிண்ணம் வென்று இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தி

இலங்கை கிரிக்கெட் அணி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் (17) 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி நடைபெற்றது.

அர்ஜூன ரணதுங்கவின் தலைமையிலான இலங்கை குழாத்தில் அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொமெஷ் களுவித்தாரன, அசங்க குருசிங்க, ரொஷான் மஹானாம, ஹஷான் திலகரத்ன, குமார் தர்மசேன, சமிந்த வாஸ் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வெற்றிகொண்ட இலங்கை அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தானின் லாஹூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, 25 வருடங்களுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில், பலம் பொருந்திய அவுஸ்திரேலிய அணியை 07 விக்கெட்களால் வெற்றி கொண்டு உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.

இறுதிப்போட்டி 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணி சார்பில் டெய்லர் 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் அரவிந்தடி சில்வா 3 விக்கெட்டுக்களை கைப்பறினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 23 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த குருசிங்க மற்றும் அரவிந்தடி சில்வா மூன்றாவது விக்கெட்டுக்காக 125 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். குருசிங்க ஆட்டமிழக்க களமிறங்கிய அர்ஜூன ரணதுங்க மிகச்சிறப்பாக விளையாடி அணியை கிண்ணத்தை நோக்கி கொண்டு சென்றார்.

அரவிந்தடி சில்வா மற்றும் அர்ஜூன ரணதுங்க இறுதி வரை ஆட்டமிழக்காது முறையே 107 மற்றும் 47 ஓட்டங்களைக் குவித்தனர். இவர்கள் தமக்கிடையே வீழ்த்தப்படாத 94 ஓட்டங்களை பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் 46.2 ஆவது ஓவரில் ரணதுங்க 4 ஓட்டங்களைப் பெறவே இலங்கை அணியின் வெற்றி உறுதியானது. 6 ஆவது உலகக்கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. போட்டியின் நாயகனாக சதமடித்த அரவிந்தடி சில்வாவும் தொடரின் நாயகனாக சனத் ஜயசுரியாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுத்தமான குடிநீருக்காக 15 வருடங்களாக ஏங்கும் குடாஓயா கொலனி மக்கள்

மலையகம் நீர்வளம் மிக்க பிரதேசமாக காணப்படுகின்ற போதிலும் இன்னும் எத்தனையோ பல பகுதிகளில் மக்கள் சுத்தமான குடிநீர் வசதியின்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

குடாஓயா கொலனியில் சுமார் 125 அதிமான மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொள்வதற்கு நிலங்களை வாங்கிய போதிலும் பலர் குடிநீர் வசதியின்மையால் வீடுகளை அரைவாசி கட்டிய நிலையில் கைவிட்டுள்ளனர்.
நீர் வசதியின்மையால் இங்கு வாழும் மக்கள் மற்றும் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குடிப்பதற்காக சுமார் இரு மீற்றர் தொலைவிலிருந்து கரடு முரடான பாதையில் இங்குள்ள மக்கள் குடிநீரினை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் குடிநீர் பெற்றுக்கொள்வதற்காக நாள் ஒன்றுக்கு ஐந்நூறு ரூபா செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் மழை நீரினை சேமித்து தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.குளிப்பதற்கு நீர் இல்லாமையால் இரண்டு கிலோமீற்றர் நடந்து சென்று வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வீடு கட்டிய பலர் குடிநீர் வசதியின்மையால் வீடுகள் இருந்தும் வாடகை வீடுகளில் வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.மற்றும் சிலர் பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் காணிகளை காசு கொடுத்து வாங்கிய போதிலும் அவர்கள் அனைவருக்கும்; வீடுகளை கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தனியார் தோட்டத்தில் குத்தகை செலுத்தி சிரமதான முறையில் குடிநீர் கிணற்றினை நிர்மாணித்த போதிலும் ஒரு சிலர் மாத்திரம் பயனடைவதாகவும் மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசியல் தலைவர்களுக்கும் தெரிவித்த போதிலும் இவர்கள் தொடர்பாக உரிய அக்கறை செலுத்துவதில்லை என்று இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த கொலனியில் வாழும் வயோதிபர்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தொடர்ந்து குடிநீர் வசதியின்றி துன்பப்படும் மக்களின் அவல நிலையினை கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

21/4 தாக்குதல் – குற்றவாளிகளை அரசு பாதுகாக்காது! உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!!

21/4 தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் அரசு பாதுகாக்காது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர்  சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் என்று அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, அவ்வறிக்கையிலுள்ள முக்கிய விடயங்கள் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

21/4 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை உட்பட அனைத்து இணைப்புகளும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எம்மிடம் ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை. எனினும், தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்கள் வெளிப்படுத்தப்படமாட்டாது.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் சிறந்த பெறுபேறு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம்.  அதன்மூலம் நம்பிக்கை ஏற்படும்.  தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க மாட்டோம். எவருக்கும் வெள்ளையடிப்பு செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லை. உண்மை கண்டறியப்படும். உரிய சட்ட நடவடிக்கை இடம்பெறும்.

அதேவேளை, ஷரியா சட்டத்தை தவறான அறிவிப்பு மட்டுமல்ல பயங்கரமானது. இந்நாட்டில் தனியார் சட்டங்கள் இருந்தாலும் அவை நாட்டின் பொதுசட்டத்துக்கு கட்டுப்பட்டவை. எனவே, நாட்டின் சட்டத்தை ஏற்கமுடியாது எனக்கூறுவது சட்டவிரோதமாகும். அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். புர்காவை தடைசெய்வது சட்டவிரோதம் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு அல்ல. பிரான்ஸில்கூட பொதுவெளியில் புர்கா அணியமுடியாது.புர்காவை தடைசெய்வதற்கு புதிய சட்டம் இயற்றுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் உள்ளது.” – என்றார்.

கண்டி யாக்க தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு : பாரத் அருள்சாமி

– க.கிஷாந்தன்

நீண்டநாளாக தீர்க்கப்படாதிருந்த பெருந்தோட்ட மக்கள் யாக்க (JEDB) தொழிலாளர் பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காணப்பட்டது.

கண்டி மாவட்டத்திற்குட்பட்ட ஹந்தான, கலஹா, தெல்தோட்டை மற்றும் நூல்கந்துர ஆகிய தோட்டங்களில் பல வருடங்களாக தீர்வு காணப்படாமலிருந்த பல பிரச்சினைகளுக்கு இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளர் பாரத் அருள்சாமி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய கண்டி மக்கள் பெருந்தோட்ட யாக்கத்துக்குச் சொந்தமான பல தோட்டங்களில் நிலவிவந்த பல பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காணப்பட்டது.

குறிப்பாக, தொழிலாளர்களுக்கு வழக்கப்படாதிருந்த ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் அவர்களுக்கான சேவை கால கொடுப்பணவு போன்றவை பல நாள் கிடாப்பில் கிடந்தது.

அத்தோடு, கோவில்களுக்கு வழக்கப்படாதிருந்த பணம், இறந்தவர்களுக்கு வழங்கப்படும் பணம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளும் வழங்கப்படாதிருந்த நிலையில் இன்று பெருந்தோட்ட மக்கள் யாக்க தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வு காணப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மக்கள் யாக்கத்தின் தலைவர் விங் காமெண்டர் அபே சூரிய மற்றும் அதன் கணக்காய்வாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும், ஹந்தான, கலஹா, தெல்தோட்டை, லுல்கந்துர உள்ளிட்ட மக்கள் யாக்கத்திற்கு சொந்தமான அனைத்து பகுதிகளிலும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்குமாறு அங்குள்ள முகாமைத்துவத்திற்கு பணிக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளர் பாரத் அருள்சாமி, தொழிலாளர் காங்கிரஸின் மாநில, பிரந்திய இயக்குனர்கள், தோட்ட தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கண்டி மாவட்டத்தில் அபிவிருத்தி மற்றும் தொழில் பிணக்குகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் நாம் நிறைவேற்றித் தர முன்னிற்போம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...