சிறைக்குள் ‘செல்பி’ – உருவானது புதிய சர்ச்சை!
கோட்டாவுக்கு கட்சி தலைமைப்பதவியை வழங்கவும் – வாசுவும் வலியுறுத்து
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசியல் கூட்டணியின் தலைமைப்பதவி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டும் – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, அப்பதவி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டிருந்த கருத்து தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் விமலுக்கும், மொட்டு கட்சிக்காரர்களுக்குமிடையில் கடும் மோதலும் ஏற்பட்டது.
இவ்வாறானதொரு நிலையிலேயே ‘தலைமைத்துவம்’ குறித்து அமைச்சர் வாசுவும் தற்போது கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது.
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் சார்ந்த பொறுப்பொன்றையும் வகிக்க வேண்டும் என்பதே எமது கருத்து. அவரை நிர்வாக அதிகாரியாக மட்டும் ஒதுக்கிவைத்துவிடமுடியாது. அவ்வாறு நடந்தால் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான அரசியல் சக்தி அவருக்கு கிடைக்காமல்போகக்கூடும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவே எமது தேசிய தலைவர். அவரைவிடவும் எமக்கு தலைவரொருவர் கிடையாது. எனினும், கட்சி தலைமைப்பதவியை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கலாம். எமது கூட்டணியின் தலைமைப்பதவியையாவது அவருக்கு வழங்க முடியும்.
‘பெருந்தோட்டங்களை பொறுப்பேற்க அரசு தயார்’ – கம்பனிகளுக்கு விடுக்கப்பட்டது இறுதி எச்சரிக்கை!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்க மறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளை அரசாங்கம் மீள பொறுப்பேற்கும் – என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று (9) அறிவித்தார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபை ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு தொழில் அமைச்சர் என்ற வகையில் நான் அனுமதி வழங்கியுள்ளேன். வர்த்தமானி ஒரிரு நாட்களில் வெளிவரும்.
கூட்டு ஒப்பந்தம் ஊடாக சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவில் இருந்து அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனால் இழுத்தடிப்பு தொடர்ந்தது. இதனையடுத்தே இப்பிரச்சினையை சம்பள நிர்ணய சபைக்கு கொண்டுவரப்பட்டது.
ஒரு சில நிறுவனங்களே ஆயிரம் ரூபாவை வழங்க மறுக்கின்றன. அவ்வாறான நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும்.இது தொடர்பில் கம்பனிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது” -என்றும் தொழில் அமைச்சர் கூறினார்.
‘போர் விதிமுறை குறித்து எமக்கு பாடம் கற்பிக்க வேண்டியதில்லை’
இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கும் போர் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் விதமாக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாகவும், மனிதாபிமானமாக நாம் முன்னெடுத்த இந்த யுத்தம் குறித்து எவரும் எமக்கு கற்பித்துத்தர வேண்டிய அவசியம் இல்லை எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் நகர்வுகளை கையாள்வதில் அரசாங்கம் செய்ய வேண்டிய மிகச்சரியான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.
இராணுவத்தை பாதுகாக்கும் விதமாக அல்லது, இராணுவத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அரசாங்கம் கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. இது எமக்கும் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு காரணியாக நாம் கருதுகின்றோம்.
பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பொய்யான சாட்சியங்களை உருவாக்கி இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
புலம்பெயர் அமைப்புகளின் பணம் காரணமாக இங்குள்ள ஒரு சிலரும் இராணுவத்தை குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.எவ்வாறு இருப்பினும் ஒரு சில நாடுகளுக்கு இந்த நாட்டின் அமைதியை சீர்குலைந்து நாட்டில் இன முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்என்ற தேவை உள்ளது.
அதற்கான வெளிப்பாடுகள் இன்று மனித உரிமைகள் பேரவையிலும் வெளிப்பட்டு வருகின்றது. இராணுவம் மீது போர் குற்றங்களை சுமத்தி அதன் மூலமாக இராணுவத்தை பலி தீர்க்க முடியும் என்ற நோக்கம் அவர்களிடம் உள்ளது. ஆனால் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது எமக்கு மட்டுமே தெரியும். மனிதாபிமானமாக நாம் முன்னெடுத்த இந்த யுத்த விதிமுறைகள் குறித்து எவரும் எமக்கு கற்பிக்க வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றம் இன்று கூடுகிறது – நாளை முக்கிய விவாதம்!
நாடாளுமன்றம் இன்று (09) பிற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதன்படி முற்பகல் 10 மணிமுதல் 11 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று இடம்பெறும்.
அதனை அடுத்து, கடந்த அமர்வில் ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதியும் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள் தொடர்பான விவாதம் நடைபெறும். 3.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் இடம்பெறும்.
10 ஆம் திகதி புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான அவகாசம் இம்முறை இல்லை. எனினும், முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து, ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளது.
11, 12 ஆம் திகதிகளில் சபை அமர்வுகள் இடம்பெறாது. அடுத்த சபை தொடரிலும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைமீது விவாதம் இடம்பெறும். இவ்விவகாரம் தொடர்பில் 3 நாட்கள் விவாதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு!பலி எண்ணிக்கை 507 ஆக உயர்வு!!
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு பெண்களும், ஆணொருவருமே உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.

85,852 பேருக்கு கொரோனா – 82,513 பேர் குணமடைவு!
நாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 82 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 700 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 502 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அஜித் – குவியும் பாராட்டுகள்!
மொட்டு கட்சியிடம் அடிபணிந்து மன்னிப்புகோர விமல் மறுப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து பகிரங்கமாக மன்னிப்பு கோருவதற்கு விமல்வீரவன்ச தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றார். இதனால் மொடடுக்கட்சி காரர்கள் கடும் சீற்றத்தில் உள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, அவ்விடத்துக்கு கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என விமல்வீரவன்ஸ வெளியிட்டிருந்த கருத்தானது அரச கூட்டணிக்குள் பெரும் மோதலை உருவாக்கியது.
” விமல்வீரவன்சவின் கருத்து தவறு , அதனை அவர் மீளப்பெற வேண்டும் என்பதுடன், அதற்காக மன்னிப்பும்கோர வேண்டும்.” – என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதனால் விமலுக்கும், பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்குமிடையில் கடும் சொற்போரும் மூண்டது. பங்காளிக்கட்சி தலைவர்களுள் சிலர் விமல் பக்கம் நின்றனர். விமல் மன்னிப்பு கோர வேண்டும் என்பதில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் உறுதியாக நின்றனர்.
விமல் அறிவிப்பு விடுத்து ஒரு மாதம் கடக்கவுள்ள நிலையிலும் அவர் இன்னும் மன்னிப்பு கோரவில்லை.
அத்துடன், தமது கட்சியின் தலைமைத்துவம் குறித்து பிற நபர்கள் கருத்து வெளியிடமுடியாது எனவும் மீண்டும் சுட்டிக்காட்டினர்.
‘அடாவடியை கைவிடுங்கள்’ – துரைமாருக்கு அரவிந்தகுமார் எச்சரிக்கை
பெருந்தோட்ட நிர்வாகிகள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடருமேயானால் தோட்ட நிர்வாகிகள் அடிக்கடி ஹட்டன் மல்லிகைப் பூ சந்தியில் தொடர் போராட்டங்களை நடாத்த வேண்டி ஏற்படும். அவர்களினால் இதனை எவ்வகையிலும் தவிர்க்க முடியாதுபோகும் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.
மலையக மக்கள் முன்னணியின் பதுளைப் பிராந்திய பணியகத்தில் (இன்று) 08.03.2021 நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்வொன்றில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
இவ் ஒன்று கூடல் நிகழ்வில், பதுளை மாவட்ட பெருந்தோட்ட மட்டத்திலான தலைவர்கள், மகளிர் மற்றும் இளைஞர் பிரிவு முக்கியஸ்தர்கள், சமூக நலன் விரும்பிகள் என்ற வகையில் பெருமளவிலானோர், சுகாதார வழிமுறைக்களுக்கமைவாக கலந்து கொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தொடர்ந்து பேசுகையில்,
‘ஹட்டன் மல்லிகைப் பூ சந்தி’ என்பது தொழிலாளர்களுக்கான வரலாற்றுப்பதிவு பிரதேசமாகும். தொழிலாளர்களுக்கான நியாயப்பூர்வமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அத் தொழிலாளர்களினால் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடமாகும். அத்தகைய இடத்தில் தோட்ட நிருவாகிகள் இணைந்து போராட்டமொன்றை நடாத்தியிருக்கின்றனனர். தொழிலாளர்களுக்கெதிராகவே இப் போராட்டம் அமைந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கெதிராக, தோட்ட நிர்வாகங்களினால் கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து செல்லுமேயானால், அதன் பிரதிபலனை தோட்ட நிருவாகிகள் விரும்பியோ, விரும்பாமலோ எதிர்கொள்ள வேண்டியே ஏற்படும். தோட்ட நிருவாகிகள் தொடர்ந்தும் தம்மை திருத்திக்கொள்ளாவிட்டால்,’சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதற்கமைய தொழிலாளர்களின் எதிர்ப்பினை ஏற்றுக்கொண்டேயாக வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடும்.
பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள், தோட்ட நிருவாகிகள் மத்தியில் பிணக்குகள் ஏற்படுவது சகஜமாகும். இப் பிணக்குகளை தோட்ட மட்டத்தில் நிவர்த்தி செய்ய, தோட்டமட்டத்தலைவர்கள் சுமூக பேச்சுவார்த்தைகள் மூலம் முயற்சிப்பர். அம் முயற்சி பயனளிக்காதபட்சத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடுகள் இடம்பெறும். இத் தலையீடுகளிலும் பயன் கிடைக்காதுவிட்டால்,உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகம், தொழில் மன்று ஊடாகவே பிரச்சினைகள், பிணக்குகள் தீர்த்து வைக்கப்படும். இவ்வாறான முறைகளின் அடிப்படையிலேயே முன்னெடுப்புக்கள் இடம்பெறும்.
இப்படி முறைகளை, தோட்ட நிருவாகங்கள் மீறி செயல்படுவதாலேயே, பெருந்தோட்டங்களில் அமைதியின்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக தோட்ட நிருவாகங்கள், தோட்டங்களில் ஏற்படுகின்ற சிற் சில பிரச்சினைகள் மற்றும் சிறு பிணக்குகள் ஆகியவற்றுக்கும், பொலிஸ் நிலையங்களை நாடும் புதிய கலாசாரமொன்றினை மேற்கொண்டு வருகின்றன. இப் பொலிஸ் நிலையங்கள் ஊடாக, தோட்ட நிருவாகங்களே பயனடைகின்றன.
பொலிசாரின் அமோக ஆதரவும், தோட்ட நிருவாகங்களுக்கு கிடைத்து வருவதோடு, தொழிலாளர்களுக்கெதிரான கடும் நடவடிக்கைகளும் பொலிசாரினால் முன்வைக்கப்படுகின்றன. இதனால் அப்பாவித் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு வகைகளிலும் பெரும் பாதிப்புக்களையும்இ அசௌகரியங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளனர்.
இது போன்ற இன்னோரன்ன செயல்பாடுகளினால், தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிருவாகங்கள் மீது, கடும் அதிர்ப்தியினையும், எதிர்ப்பினையும் கொண்டுள்ளனர். தோட்ட நிருவாகங்களின் இப்புதிய தொழிற் பிணக்குகளுக்கு காவல் துறையை நாடும் கலாசாரங்களினால் பெருந்தோட்டப் பகுதிகளில் பெரும் அமைதியின்மைகளும், பிரச்சினைகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தற்போதைய நிலையில் பெருந்தோட்டப்பகுதிகளில் அனுபவமுள்ள நிருவாகிகள் இல்லாத நிலை மேலோங்க, அனுபவமற்ற தோட்ட நிருவாகிகளே கடமைகளில் இருந்து வருகின்றனர். இதுவும், பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவி வரும் அமைதியின்மைக்கும், காரணங்களாக அமைந்துள்ளன. அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் அனுபவமுள்ள நிருவாகிகளின் வெற்றிடங்கள் பெருமளவில் இருக்கவே செய்கின்றன.
அட்டன் சாமிமலை ஒல்டன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தோட்ட நிருவாகிகள் இருவர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டு, பத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அத் தோட்டப்பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி கடந்த பெப்ரவரி மாதம் 5ந் திகதி மேற்கொண்ட பணிப்பகிஸ்கரிப்பின் போது, தோட்ட நிருவாகங்கள் மேற்கொண்ட எதேச்சதிகார செயல்பாடுகளையடுத்தே, பிரச்சினை ஏற்பட வழி கோலியது. தோட்டத் தொழிலாளர்களது நியாயப்பூர்வமான போராட்டத்தை, தோட்ட நிருவாகங்கள் கொச்சைப்படுத்தி, உதாசீனம் செய்தமையே, ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமாகும்.
ஹட்டன் – மல்லிகைப் பூ சந்தியென்பது, தோட்டத் தொழிலாளர்களுக்கான வரலாற்றுப் பதிவு பிரதேசமாகும். அம் மல்லிகைப் பூ சந்தியில் தோட்ட நிருவாகிகள் இணைந்து போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தோட்ட நிருவாகிகளின் இச் செயல்பாடானது, மேலுமொரு வரலாற்றுப் பதிவாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.
தோட்ட நிருவாகிகள் ‘மல்லிகைப் பூ சந்தியில்’ இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த போதாவது, தோட்ட தொழிலாளர்கள் எந்த அளவிற்கு மன உளைச்சல், விரக்தி, வேதனை, துன்பம் போன்ற அவலங்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது புரிந்திருக்கும்.
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மனிதாபமானத்துடன் அணுகப்படல் வேண்டும். அவர்களது தொழில்சார் உரிமைகள் மீறப்படாத வகையில், செயல்பாடுகள் அமைவது முக்கியமானதாகும்.
இவைகள் தோட்ட நிருவாகங்கள் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அதற்கமைவாக தோட்ட நிருவாகங்கள் செயல்படுவார்களேயானால், தோட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்களே இல்லை. ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதற்கமைய தற்போது தோட்ட நிருவாகங்கள் செயல்படுகின்றன.
தோட்ட நிருவாகங்கள் தொடர்ந்தும் அடாவடித்தனங்கள் மற்றும் எதேச்சதிகாரம், அடிப்படை மனித உரிமை மீறல், தொழில்சார் உரிமைகள் மீறப்படல், ஆண்டான் அடிமை செயல்பாடுகள் போன்றவற்றை, தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்படுமேயானால், தொழிலாளர்களின் மௌனம் நீடிக்காது. அதன் பிரதிபலன்களை தோட்ட நிருவாகங்கள் எதிர்கொள்ள வேண்டியே ஏற்படும். அது போன்ற எதிர்விளைவுகளுக்கு தோட்ட நிருவாகங்கள் மல்லிகைப்பூ சந்தியில் தொடர் போராட்டங்களை நடாத்த வேண்டிவரும்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட நிருவாகங்கள் வெட்கப்படப் வேண்டுமேமொழிய எவ்விதத்திலும் பெருமை கொள்ள முடியாது.
ஆகவே, தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆரோக்கியமான முறையில் அணுகி, முறையான படி முறைகளை மேற்கொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணக்கப்பாடுகளையும், தோட்ட நிருவாகங்கள் வெளிப்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.




