இலங்கையில் வைத்தியரின் உயிரை பறித்த கொரோனா!
மங்களவின் நகர்வுகள்மீது ஆளுந்தரப்பு கழுகுப்பார்வை
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் நகர்வுகள் தொடர்பில் அரசாங்கமும், அரச சார்பு அமைப்புகளும் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு அரசியலில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய புள்ளிகளில் ஒருவராக மங்கள சமரவீர திகழ்ந்தார். சர்வதேச மட்டத்தில் அவருக்கு பாரியதொரு வலைப்பின்னல் இருக்கின்றது.
பௌத்த தேரர்கள் சிலரின் செயற்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்ததாலும், அவர் பௌத்த மதத்துக்கு எதிரானவர் என்ற தொனியில் மொட்டு கட்சியினர் பரப்புரைகளை முன்னெடுத்தாலும் பௌத்தர்கள் மத்தியில் மங்களவுக்கான செல்வாக்கு சரிந்துள்ளது. நாடாளுமன்ற அரசியலுக்கு மங்கள விடைகொடுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஆனாலும் சர்வதேச மட்டத்தில் மங்களவுக்கான செல்வாக்கு குறையவே இல்லை. அவரை ஜனநாயக போராளியாகவே மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பார்க்கின்றனர்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். முக்கிய பதவிகளுக்கு இராஜதந்திரதுறையில் தேர்ச்சி பெற்றவர்களை நியமித்துவருகின்றார். சமந்தா பவர் உட்பட இலங்கைக்கு நெருக்கடி கொடுத்த பலர் முக்கிய பதவிகளுக்கு தெரிவாகியுள்ளனர்.
அமெரிக்காவின் ஜனநாயகக்கட்சி ஆட்சியானது, கொழும்புக்கு தலையிடியையும், நெருக்கடியையும் கொடுக்கும் ஆட்சியாகும். ஜெனிவாவில் பிரேரணைகள் நிறைவேறுவதற்குகூட ஜனநாயக கட்சியின் ஆட்சியே காரணமாக அமைந்தது. மங்களவுக்கு நெருக்கமான பலர் ஜனநாயக கட்சியில் இருக்கின்றனர்.
மறுபுறத்தில் மங்கள பலமானதொரு சிவில் அமைப்பை உருவாக்கி வருகின்றார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மங்களவின் நகர்வுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது மாநாடு இலங்கையில்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு வங்கியின் நிர்வாகசபை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி 2022 மே 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கிழக்கு முனையம் இலங்கையிடம் : மேற்கு முனையம் குறித்து விசேட கவனம்
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்துக்கொள்ள அமைச்சரவைத் தீர்மானித்துள்ளது.
இதேவெளை, மேற்கு முனையத்தை தேவை ஏற்படின் இலங்கையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வேறு தரப்பினருக்கு வழங்குவது குறித்து ஆராய்ந்து பார்க்க முடியும் என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பு தெற்கு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் அபிவிருத்தி செய்வதற்கான இலங்கை, இந்திய, ஜப்பான் நாடுகளுக்கிடையிலான பங்களிப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த உடன்டிக்கையின் ஏற்பாடுகளுக்கமைய இந்தியாவின் முதலீட்டாளரால் சமர்ப்பிக்கப்பட்ட முதலீட்டு முன்மொழிவை பகுப்பாய்வு செய்வதற்காக பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைகள் :

மியன்மாரில் இராணுவ ஆட்சி – நடந்தது என்ன? உலக நாடுகள் சீற்றம்
மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். மியான்மர் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆங் சான் சூகி மீதான அதிருப்தி மற்றும் கொரோனா அச்சம் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைவான வாக்குகளே பதிவாகின. தேர்தல் முடிவுகள் முறையாக வெளியாகும் முன்பே ஆளும் தேசிய ஜனநாயக கட்சி 83 சதவீத இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது.
பின்னர் தேர்தல் ஆணையமும் இதனை உறுதி செய்தது. ஆனால் மியான்மர் இராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முடிவுகளை ஏற்க மறுத்தது. அதேசமயம் இராணுவத்தின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும், அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்த நிலையில் பொதுத்தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக நேற்று பாராளுமன்றம் கூட இருந்தது. இந்த கூட்டத்தொடரில் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத்தால் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் மியான்மரில் நேற்று ராணுவப்புரட்சி வெடித்தது. பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பே நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் அதிரடியாக கைது செய்தது.
அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் பிரிவு 417-ன் கீழ் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக ராணுவத்துக்கு சொந்தமான மியாவாடி தொலைக்காட்சியில் அறிவிப்பு வெளியானது. மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க ஒரு வருட காலத்துக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது.
ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹியாங் நாட்டின் தலைவராக இருப்பார் என்றும், துணை அதிபர் மைன்ட் ஸ்வே அதிபராக (பொறுப்பு) உயர்த்தப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. அதேபோல் ஒரு வருடத்துக்குள் மியான்மரில் தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி பெறும் நபரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் உறுதியளித்துள்ளது.
திடீர் ராணுவ புரட்சி காரணமாக மியான்மர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நாட்டின் தலைநகர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மியான்மர் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
‘கொரோனா’ பரவலை கட்டுப்படுத்த முடியும் – உலக சுகாதார அமைப்பு
சர்வதேச அளவில் புதிய கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது, அந்நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் இது தொடர்பாக கூறியதாவது:
தொடர்ந்து மூன்றாவது வாரமாக புதிய கொரோனா பாதிப்புகள் சர்வதேச அளவில் குறைவாக பதிவாகி வருகிறது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும் உலகளாவிய அளவில் பார்க்கும் போது ஊக்கபடுத்தும் வகையிலான செய்திகளை காண முடிகிறது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது. உருமாறிய கொரோனா பரவினாலும் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என நமக்கு கடந்த 3 வார எண்ணிக்கை பரிந்துரைக்கிறது”என்றார்.
அதேவேளையில், கட்டுப்பாடுகளை துரித கதியில் தளர்த்துவது கொரோனா வைரஸ் மீண்டும் முழு பலத்துடன் திரும்புவதற்கு வழிவகுத்து விடும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார் – அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைகள் சிறப்பானதாக அமையும் பட்சத்தில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்- என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் விவரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியிலேயே அங்கம் வகிக்கின்றேன். அக்கட்சி எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா, வெளியேறுவதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும். நான் மக்களுடன், மக்களுக்காகவே அரசியல் நடத்துகின்றேன்.
நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளே எமக்கு தேவைப்படுகின்றனர். இதன்காரணமாகவே எப்போதும் நல்ல அரசியல்வாதிகளுடன் பயணத்தை தொடர்ந்தேன்.
கோட்டாபய ராஜபக்ச எனது சகோதரர் போன்றவர். ராஜபக்சக்களுடன் எமக்கு நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்சவே இந்நாட்டிலுள்ள புகழ்மிக்க அரசியல்வாதியாவார். எனது பிறந்தநாளன்று அவரே என்னை முதலில் வாழ்த்துவார். நாமும் அவருக்கு உரிய வகையில் கௌரவம் செலுத்துவோம். ஆனால் அரசியில் கொள்கை ரீதியில் சிற்சில முரண்பாடுகள் உள்ளன.
அதேவேளை, ரணதுங்க குடும்பத்தினரை இரண்டாக்கியவதற்கும் ராஜபக்ச குடும்பம் பொறுப்புகூறவேண்டும். எனது குடும்பத்தில் அரசியல் ரீதியில் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் உறவு என்பது முழுமையாக நீங்கவில்லை என்பதனையும் கூறியாகவேண்டும். நாம் வளர்ச்சியடையவேண்டும். அதேபோல எம்மை எவரும் சந்தர்ப்பத்துக்காக பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். என்னை எவரும் சந்தர்ப்பத்துக்காக பயன்படுத்த முடியாது. இது அரசியல் தலைவர்களுக்கும் தெரியும்.
நான் நல்லவர்களுடன் பயணிப்பேன். எனவே, கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை சிறந்ததெனில் நாளை அவருக்கும் ஒத்துழைப்பு வழங்குவேன். பதவிகளை எதிர்ப்பார்த்து அரசியல் நடத்துபவன் நான் அல்லன்.” – என்றார்.
‘ஆயிரம் ரூபா குறித்து 6 ஆம் திகதியின் பின்னர் நல்ல முடிவு வரும்’
தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் மலையக மக்கள் எதிர்வரும் 5ம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலை தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில்நேற்று நடைபெற்றது. இங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளப்பிரச்சினை தொடர்ச்சியாக சென்றுகொண்டிருப்பதால் இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அரசாங்கத்திற்கு அன்று அவர் முதலாவது கோரிக்கையாக இந்த ஆயிரம் ரூபா சம்பளப்பிரச்சினையை முன்வைத்தார். இதனை தீர்த்து வைக்கும் வகையிலேயே அரசாங்கத்திற்கு அதரவு வழங்கினார்.
அதற்கமைய இந்த அரசாங்கம் இந்த சம்பளப்பிரச்சினை குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச , தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நான் உட்பட பல முக்கியஸ்தர்களுடன் தோட்டக்கம்பனிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தினர். அவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. காரணம் கம்பனிகள் தோட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் இருக்கின்றது என நினைக்கின்றனர். அவர்களுடன் இணைந்து இந்த சம்பள உயர்வை வழங்காமல் வந்துள்ளனர்.
இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கங்களை விட அதிக முயற்சிகள் செய்தன.
அதனால் தான் இன்று இந்த சம்பளப்பிரச்சினையை சம்பள நிர்ணய சபை மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்தடவையாக இந்த சம்பளப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட முடியாத நிலையில், இந்தப்பிரச்சினையை சம்பள நிர்ணய சபை மூலமாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பள நிர்ணய சபையில் சட்டத்தரணி க.மாரிமுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதியாக இருக்கின்றார்.
இந்த நிலையில் 900 ரூபா அடிப்படையாகவும் 100 ரூபா வரவு செலவுத்திட்ட அலவன்ஸாக வழங்க அவர்கள் உத்தரவாதம் அளிக்கிறார்கள். எதிர்வரும் 6ம் திகதி கூடவுள்ள நிர்ணய சபை கூட்டத்தில் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆயிரம் ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான தீர்மானத்திற்கு வரமுடியுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.
‘கொரோனா’வால் கடந்த 2 நாட்களில் 10 பேர் உயிரிழப்பு!
2021 இல் கடந்துள்ள 32 நாட்களில் மாத்திரம் 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், கொரோனாவால் கடந்த மாதத்தில் மாத்திரம் 117 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்துள்ள இரு நாட்களில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
கொரோனாவால் நேற்று உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,


நுவரெலியா மாநகர சபை முதல்வரும் உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமம்?
நுவரெலியா மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும், மாநகர சபை முதல்வரும் நுவரெலியாவுக்கு வருகைதந்திருந்த ஜக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை இரண்டு குழுக்களாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நுவரெலியாவுக்கு வருகை தந்திருந்த திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் புதிய அங்கத்தினர்களை கட்சிக்கு உள்வாங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தியிருந்தார்.
அத்துடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நுவரெலியாவில் அமைந்துள்ள பௌத்த விகாரைகளுக்கும் சென்று ஆசீர்வாதமும் பெற்றுக் கொண்டார்.
இதன்போது நுவரெலியா மாநகர சபையை தற்போது ஆட்சி செய்துவருகின்ற ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையிலான ஒரு குழுவினரும் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விவேகானந்தன் தலைமையிலான ஒரு குழுவினரும் இரண்டு குழுக்களாக வெவ்வேறு இடங்களில் ஜக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நுவரெலியா மாநகர சபையில் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய ஜக்கிய தேசிய கட்சியின் மாநகர சபை முதல்வருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஆனாலும் நுவரெலியா மாநகர சபை முதல்வரும் ஒரு சில உறுப்பினர்களும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருடனும் நெருங்கிய உறவுகளை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த சந்திப்பு பல கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்டு பெயர் குறிப்பிட விரும்பாத நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தற்போது நுவரெலியா மாநகர சபையில் ஜக்கிய தேசிய கட்சியின் முதல்வர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்ததுடன் இது தொடர்பாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பல சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் அதன் ஒரு கட்டமாகவே தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்கவுடனான சந்திப்பு இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு





