Home Blog Page 3713

‘மக்கள் ஒத்துழைக்காவிட்டால் இலங்கையில் ஐரோப்பிய நிலை உருவாகும்’

” பொதுமக்களின் நடத்தை அடிப்படையிலேயே எதிர்காலம் தீர்மானிக்கப்படும். எனவே, சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் கொரோனா வைரஸ் பரவல் எமது கட்டுப்பாட்டைமீறி, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிலைமை இலங்கையிலும் உருவாகக்கூடும்.” – என்று தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வழமையாக டிசம்பரில் இறுதி இரு வாரங்களிலும், ஜனவரி முதல் வாரத்திலுமே நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நீண்டதொரு விடுமுறை வழங்கப்படுவதால் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லுதல், கொள்வனவுகளில் ஈடுபடுதல், சுற்றுலா செல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இக்காலப்பகுதியில் வீடுகளில் இருப்பவர்களைவிடவும் வெளியில் பலர் இருப்பார்கள். ஆனால் இம்முறை அவ்வாறு செயற்படமுடியாது – செயற்படவும் கூடாது. மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டிய காலப்பகுதி இதுவாகும்.

குறிப்பாக மேல் மாகாணத்திலும், கொழும்பு மாநகர எல்லையிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. எனவே, இப்பகுதிகளில் இருந்து வெளியிடங்களுக்கு சென்றால், அவ்வாறு செல்பவர்களில் எவருக்காவது வைரஸ் தொற்று இருந்தால் அவர்கள் செல்லும் பகுதிகளிலும் கொரோனா கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருக்கின்றது.

எனவே, நோய் அறிகுறிகள் தென்பட்டால் வைத்திய ஆலோசனை பெறவும். முடிந்தளவு வீட்டிலேயே இருக்கவும். வயது வந்தவர்கள், நாட்பட்ட நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் வெளியில் வருவதை தவிர்த்தக்கொள்வதே பாதுகாப்பானதாக இருக்கும். அத்துடன் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்படவேண்டும். ஏனெனில் மக்களின் நடத்தையை பொருத்தே எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

அதேவேளை, உலகில பல நாடுகளில் கட்டுப்பாட்டைமீறி நாளாந்தம் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. இலங்கையில் இன்னும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகவில்லை. கட்டுப்படுத்திக்கொள்ளக்கூடிய நிலைமையே காணப்படுகின்றது. இதனால்தான் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள அனைத்து மக்களும், நிறுவனங்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் வைரஸ் பரவலை நிச்சயம் கட்டுப்படுத்தமுடியும். பரவலை குறைந்த மட்டத்தில் வைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அவ்வாறான ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் வைரஸ் பரவல் என்பது எமது கட்டுப்பாட்டைமீறி மேற்குலகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவியதுபோல வேகமாக பரவக்கூடும்” – என்றார்.

ஹட்டனில் மூன்று கடைகளுக்கு பூட்டு! 33பேர் சுயதனிமையில்!!

ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (19) மாலை மூடப்பட்டன.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்களிடம் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து குறித்த நபர் ஹட்டன் நகரில் இரண்டு புடவை கடைகளுக்கும் ஒரு செருப்பு விற்பனை நிலையத்திற்கும் சென்றுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்தே குறித்த கடைகள் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டதுடன் அதில் கடமை புரிந்த 33 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு புடவை கடையில் சுகாதார அறுவுறுத்தல்கள் பின்பற்றாததன் காரணமாக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை கடைகள் மூடப்பட்டாலும் கூட வேறு நபர்களை கொண்ட தமது வர்த்தக நடவடிக்கையில் நாளை முதல் ஈடுபடலாம் என சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெருந்தோட்ட மாணவர்களின் போஷணை குறைபாடு!

அரசாங்கத்தின் புதிய போஷாக்குத் திட்டம் பெருந்தோட்ட மாணவர்களுக்கு எந்தவகையில் பயன்படப்போகிறது என்றதொரு கேள்வி எழுந்திருக்கிறது. இது நியாயமான கேள்வி. தக்கத்தருணத்தில் பேசப்படும் ஒரு சமாச்சாரம்.

ஏனெனில் பொதுவாகவே பெருந்தோட்டச் சிறார்கள் மந்தபோஷணை நிலையிலேயே காணப்படுகின்றார்கள். இது ஒரு நீண்ட வரலாற்றின் ஒதுக்கப்பட்ட பக்கங்கள். போஷாக்கின்மை என்பது நலிவுற்ற எதிர்காலத்தை நோக்கிய நகர்வு.

தேசிய ரீதியில் இதன் பாதிப்புகள் கிராமப்புறங்களில் குறைவு. எனினும் கல்வி அமைச்சு வறிய மாணவர் நலன்கருதி பாடசாலை மட்டத்திலான சத்தூட்டல் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தப் போஷணை நிகழ்ச்சித் திட்டமானது பெருந்தோட்டப் பிரதேசங்களில் எதிர்பார்ப்பினை ஈடேற்றுமா? இலக்கினை எட்டுமா? இது ஐயத்துடன் அணுகப்பட வேண்டிய சங்கதி. பெருந்தோட்டங்களில் இவ்வாறான சுகாதார மேம்பாட்டுடன் தொடர்புடைய திட்டங்கள் கடந்த காலங்களில் எட்டிப்பார்க்கவே இல்லை. ஒன்றிரண்டு தென்பட்டிருந்தாலும் அது முறையாக இடம்பெறவில்லை. முழுமையும் பெறவில்லை. இதற்குக் காரணம் பெருந்தோட்டப் பகுதிக்கான கட்டமைப்பு முறைமையே.

மலையகத்தில் போஷாக்கின்மை என்பது பாரிய பிரச்சினையாக விளங்குகின்றது. ஏனைய சமூகங்களை விட மலையக சமூகம் மந்தபோஷண பாதிப்பினை வெகுவாகவே அநுபவித்து வருகின்றது. அத்தியாவசிய ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவுவதால் முழு சமூகமே இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தை அடைந்து விடுவது சர்வசாதாரணம். இதனால் உள, உடல் அபிவிருத்தி என்பது கேள்விக் குறியாகின்றது. அத்துடன் சுகாதார மேம்பாடு என்பது முற்றிலுமே தொய்வடைந்து போயுள்ளது.

தென்கிழக்காசியவிலேயே சுகாதார மேம்பாட்டு நிலையில் இலங்கை சிறப்பான இடத்தை வகிக்கின்றது. ஆனால் இது பெருந்தோட்டத்துறையை உள்ளடக்காத கணிப்பு மட்டுமே. ஏனெனில் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வில் அடிப்படை சுகாதார வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை. நாட்டில் பிற சமூகங்கள் அனுபவிக்கும் பொது சுகாதார வாய்ப்புகள் தோட்ட மக்களுக்குக் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் தடைகள் இதற்குக் காரணம். மலையக மக்கள் தமது சகல தேவைகளுக்கும் தோட்ட நிர்வாகங்களையே நம்பியிருக்கின்றார்கள். தோட்ட முகாமைத்துவத்தின் கீழிருந்து முற்றாக விடுபட்டு முக்கிய நீரோட்டத்தில் கலக்கும் சந்தர்ப்பம் இன்னும் வந்தபாடில்லை.

பெருந்தோட்டத்துறையை சார்ந்த 50 மருத்துவமனைகள் காணப்படுகின்றன. இவற்றுள் 27 மருத்துவமனைகள் அரசு பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மொத்தமாக 179 பிரசவ விடுதிகள், 266 மருந்தகங்களும் இங்கு உள்ளன. ஆனால் தேவையான அளவு மருத்துவர்கள், தாதிகள் இல்லை, மருந்துகள் இல்லை, அம்பியூலன்ஸ் வசதி இல்லாத நிலையில் தோட்ட லொறிகளையே நம்ப வேண்டிய நிலை. சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படாத நிலையில் இங்கு நிலவும் வறுமை உச்சமடைந்து செல்கின்றது. வாழ்வாதார பற்றாக்குறையால் போஷாக்கு நிறைந்த உணவு பற்றி நினைத்து பார்க்கவே முடியாதுள்ளது.

இன்று மலையகத்திலிருந்து சோகை, மூளைக்காய்ச்சல், கர்ப்பிணி மரணம், சிசு மரணம் அதிகரித்துச் செல்லும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இத்துடன் சிறுவர் மந்தபோஷனம் பெரும் பாதிப்பினை உருவாக்கி வருகின்றது. இது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணப்பட்டாலும் கூட கூடிய பாதிப்பினை அடையும் மாவட்டங்களில் நுவரெலியா மாவட்டமே முதன்மை பெறுகின்றது. இரண்டாம் இடம் மொனராகலை மாவட்டத்துக்கு.

குழந்தையின் வளர்ச்சி மட்டத்தின் கணிப்பின் பேரிலேயே மந்தபோஷண நிலை மதிப்பிடப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையொன்றின்படி நுவரெலியா மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட ஒட்டுமொத்த குழந்தைகளில் 40 வீதமானவை வளர்ச்சியின்மை பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. 25.3 வீத குழந்தைகள் எடை குறைவுடனும் 10.5 வீத குழந்தைகள் உயரத்திற்கேற்ப நிறையின்றியும் காணப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2000 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்ந்த 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 34 சத வீதமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக காணப்பட்டார்கள். நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமின்றி முழு மலையகத்தையுமே போஷண குறைபாடு ஆக்கிரமித்துள்ளதை அறியமுடிகின்றது. ஒரு பக்கம் வறுமை, இன்னொரு பக்கம் அபிவிருத்திக்கான அத்திவாரம் இன்மை. போதிய சுகாதார நடைமுறைகளுக்கான வசதிகள் இல்லாமையால் சுகாதார பழக்கவழக்கங்கள் முற்றாக கடைப்பிடிக்க முடியாத அவல நிலை.

மது பாவனை, புகைத்தல், வெற்றிலைப்பாவனை இங்கு மிகை. சத்தான உணவுக்கான அவசியம் பற்றிய விழிப்புணர்வு கிடையாது. தோட்ட மக்களுக்கான சுகாதார சேவை வழங்கல் நிகழ்ச்சி நிரல் தேசிய சுகாதார நெறிமுறைகளோடு இணைந்ததாக இன்னும் மாற்றம் பெறவில்லை. பாதுகாப்பு, கழிவுநீர் வசதிகள், சுத்தமான குடிநீர், தனித்தனி வீட்டு வசதிகள் இங்கு அவசரத்தேவையாக உள்ளது. தேர்ச்சி பெற்ற மருத்துவர் சேவை வழங்கப்படுவது முக்கியம்.

பெருந்தோட்டத் துறையின் சுகாதார மேம்பாடு மற்றும் மந்தபோஷண நிலையிலிருந்து மீட்சி சம்பந்தமான தனியான செயல் திட்டம் உருவாக்கப்படுவதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமான விளைவுகளை எதிர்பார்க்க இயலும். இதில் வறுமைக்கான வடிகால் தேடும் வழி முறைகளும் உள்ளடக்கப்படுவதே உகந்தது. இத்துடன் கடின உழைப்பின் காரணமாக தடிமன், இருமல், தோற்பட்டை வலி, முதுகெலும்பு பாதிப்பு, இரத்த அழுத்தம், இரும்பு சத்து குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகளுக்கு தாய்மார் ஆளாகின்றனர். இதனால் தாய்ப்பாலூட்டல் இங்கு முழுமையாக நடைபெறுவதில்லை.

கடும் உழைப்பாளர்களாக இம்மக்கள் இருக்கின்றார்கள். எனினும் அதற்கேற்ற வருமானம் இல்லை. இதனால் கர்ப்பக்காலத்திலும் பிரசவத்தின் பின்னரும் இவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. எனவே பிறக்கும் குழந்தைகள் மாதாந்த சராசரி வளர்ச்சி வீத தரவுகளில் பின்தங்கிய நிலையை அடைகின்றது. இன்றும்கூட தோட்ட மக்களில் அதிகமானோர் கழிவறை வசதிகள் இன்றி கஷ்டப்படுகின்றார்கள். வீட்டு முற்றத்திலிருக்கும் வடிகான்கள் உடைந்துபட்டு காணப்படுகின்றன. போதாக்குறைக்கு லயன்களைச் சுற்றி தேயிலை மலைகள் காடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இதனால் சுகாதார மேம்பாட்டுக்கான ஏதுக்கல் குறைவடைந்து போயுள்ளன. சுத்தமான காற்றோ, குடிநீரோ கிடைப்பது அரிது.

பெருந்தோட்ட மக்களின் சுகாதார சேவை தேசிய சுகாதார சேவையோடு இணைக்கப்படாமையே இதற்கு அடிப்படை காரணமென்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மக்களின் சுகாதார நலனைக் கவனிக்க தகுதிவாய்ந்த சுகாதார அதிகாரிகள் இல்லை.

2012இலான ஒரு கணிப்பீட்டின்படி சுமார் 4 மில்லியன் சிறுவர்கள் இலவசக் கல்வித் திட்டத்தினை அனுபவிக்கின்றார்கள். இதில் மலையக மாணவர்களும் அடக்கம். ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையிலும் 25,0000இற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாதிருப்பது ஓர் அதிர்ச்சித் தகவல். இதேவேளை பாடசாலை இடைவிலகல் (2011) 1,26,000ஆகக் காணப்படுகிறது. இதில் பாடசாலைச் செல்லாதோர் தொகையிலும் இடை விலகுவோர் தொகையிலும் 60 சதவீதமானோர் மலையகம் மற்றும் வடக்கு கிழக்கைச் சார்ந்த சிறுவர்கள் ஆவர்.

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பிள்ளைகளில் எட்டு வீதமானோர் வலது குறைந்த சிறுவர்கள் என ஆய்வொன்று கூறுகின்றது. மலையகத்தைப் பொறுத்தவரை வலது குறைந்த சிறுவர்களில் 20வீதமானோர் மட்டுமே கல்வியைப் பெறுகின்றனர். 80 வீதமானோர் அந்த வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். சிறுவர் உரிமை மீறல்களுக்கான அடிப்படைக் காரணங்கள் பொருளாதார அமைப்பு முறையிலிருந்தே தோன்றுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

மலையகத்தைப் பொறுத்தவரை இந்நிலைமை மிகவும் மோசமானதாகவே காணப்படுகின்றது. இதன் பின் புலத்தில் பாடசாலைக்கூடான அரசின் போஷணைத் திட்டங்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் எத்தகையை விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது? அது எவ்வளவு தூரம் பயன்பாடுடையதாக அமையப் போகின்றது?

எழுத்து – பன். பாலா

நன்றி – தினகரன் – வாரமஞ்சரி

‘பெருந்தோட்ட காணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க திட்டம்’

மலையகத்தில் அரச பெருந்தோட்டங்களின் கீழுள்ள காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனால் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு உரித்தான நாகஸ்தன்ன தோட்டத்திலுள்ள காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கான அளவைப்பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. இது பற்றி மக்களுக்கோ அல்லது உரிய தரப்புகளுக்கோ அறிவிக்காமல் மிகவும் சூட்சுமமான முறையிலேயே திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கண்டி மற்றும் கேகாலை ஆகிய இரு மாவட்டங்களுக்கும் உட்பட்டதாக குறித்த தோட்டம் இருந்துவருகின்றது. இவ்வாறான நயவஞ்சக நடவடிக்கைகளால் இப்பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நல்லாட்சியின்போது பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தனி வீடுகள் அமைப்பதற்கான காணிகள் ஒதுக்கப்பட்டு, மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், எஞ்சிய காணிகள் அம்மக்களுக்கே தலா 2 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது. அதனை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்வேளையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

எனினும், இத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஆளுங்கட்சி அமைச்சர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்தனர். அவ்வாறு உறுதியளித்துவிட்டு இன்று காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பது பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லில் ஒன்றையும் செயலில் வேறொன்றையும் செய்யும் நயவஞ்சக ஆட்சியே இது என்பது தற்போது புரிந்துவிட்டது.

எமது மக்களுக்கான காணி உரிமையை தாரைவார்க்க முடியாது. எனவே, வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும வழங்கும் நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் மக்கள்படை திரட்டி போராடிவேண்டிய நிலை உருவாகும் என்பதனையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.” – என்றார்.

‘கொரோனா’ – மேலும் ஆறுபேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 171 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஐவர்  65 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். எனினும், 2ஆவது அலை ஏற்பட்ட பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்

‘இந்திய வீடமைப்பு திட்டமும் விரைவில் ஆரம்பமாகும்’

இலங்கை அரசின் நிதி ஒதுக்கீட்டிலான பெருந்தோட்ட வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க  அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் என்று இ.தொ.காவின் ஊடக இணைப்பாளர் சவரிமுத்து தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் எழுதிய கட்டுரை வருமாறு,
கொரோனா பரவல் பெருந்தோட்ட பிரதேசங்களில் ஊடுருவ நெருக்கமான லயன் வீடுகளில் மேக்கள் குடியிருப்பதே முக்கிய காரணமாக அமைகின்றது. இதேபோல அடிக்கடி தீ விபத்துகளும் ஏற்படுகின்றன. லயன் வீடுகளில் சுகாதார பிரச்சினைகளும் நிலவுகின்றன. இப்படி பல பிரச்சினைகளை பட்டியலிடலாம்.
இதனை கருத்திற்கொண்டு இ.தொ.கா நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே  லயவரிசை வீடுகள் ஒழிக்கப்பட வேண்டுமென்று குரல் எழுப்பியும் ,வலியுறுத்தியும் வந்தது.  அதிகாரம் கிடைக்கும் போதெல்லாம் அதனை நிறைவேற்றவும் செய்தது. குறிப்பாக தனி வீட்டு திட்டம் என முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளை பெருந்தோட்டங்களில் அமைத்த தனித்துவம் இ. தொ. கா விற்கே உள்ளது.
2004 ஆம்  ஆண்டு கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் மாதிரி கிராமம் [modern  village] நவீன வசதிகளைக்கொண்ட நாற்பத்துமூன்று 43 தனிவீடுகள் அமைக்கப்பட்டு அதனுடன் கூடிய சிறுவர்களுக்கான பாலர் பாடசாலை , மைதானம் ஆகியன இந்த மாதிரி கிராமத்தில் உள்வாங்கப்பட்டமை ஆகும்.
முன்னைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சொற்ப வீடுகளில் பல்வேறு குறைப்பாடுகள் நிலவுவதை ஆய்வு செய்தபின் சீர்திருத்த வேண்டிய அவசியம் குறித்து ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்விடங்களை இழந்த பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உடனடியாகவே தனி வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் தற்போது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சுக்கு நிதியினை வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட டிக்கோயா போர்டைய்ஸ்  தோட்ட மக்களுக்கு புதிதாக தனித்தனி வீடுகளை கட்டிக்கொடுக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு
வருகின்றன.
ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலக்கொன்றை வரையறை செய்துக்கொண்டு இந்த தனி விட்டு திட்டத்தை முன்னெடுக்க திட சங்கற்பம்  கொண்டுள்ளார். ராஜாங்க அமைச்சரின் இந்த நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றமை பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கும்  வரப்பிரசாதமாகும். இதே நேரம் தடைப்பட்டு போயிருக்கும் இந்தியா வீடமைப்பு திட்டத்தையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சும் எதிர் நோக்கும் பாரிய சவால்தான் முன்னைய அரசங்க காலத்தில்  கட்டப்பட்ட வீடுகளில் காணப்படும் சீர்கேடுகளை சரி செய்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவைகளை புறக்கணிக்க முடியாது. அவ்வாறான நிலைமையை தமது வீடமைப்பு திட்டத்தின் கீழ் இடம்பெற்று  கூடாதென்பதில் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மிகவும் அவதானமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி ஹட்டன் போர்டைஸ் தோட்டத்தில் பத்தொன்பது வீடுகளும், லிந்துலை பம்பரக்கல மத்திய பிரிவில் இருபத்தைந்து வீடுகளும் , தலவாக்கலை சென் கிளயர் ஸ்டேலின் தோட்டத்தில் ஆறு வீடுகளும், ஹட்டன் இன்ஜஸ்ரி பிலிங்போனி பிரிவில் ஏழு வீடுகளும் , கொட்டகலை கிறிஸ்லஸ் பார்ம் பிரிவில்  பனிரெண்டு வீடுகளும்,ஹட்டன் றொக்கில் பொனக்கோர்ட் பிரிவில் பனிரெண்டு வீடுகளும் லிந்துலை டிலிக்கூல்ற்ரி மவுசேல்ல பிரிவில் பத்து வீடுகளும்  அமைய பெறவிருக்கின்றன ஒட்டுமொத்தமாக ஹட்டன் பிராந்தியத்தில்  தொன்னூற்றோரு வீடுகள் அமையப்பெறவுள்ளன.
நுவரெலியா பிராந்தியத்தில் ஹொலிரூட்  ஈஸ்ட் பிரிவில் இருபத்தி நான்கும்  அக்கறைப்பதனை சந்திரிகமம் தோட்டத்தில் பதினொன்றும்,பெல்மொரால் தோட்டத்தில் பனிரெண்டும்,டயகம ஈஸ்ட்  மூன்றாம் பிரிவில் எட்டும் கிளரண்டன் அவோக்க பிரிவில்  நான்கு வீடுகளும் அமைக்கப்பட உள்ளன.
மலரப்போகும் 2021ஆம் ஆம் ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தர தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் திட சங்கற்பம்  கொண்டுள்ளார் என்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்.

ஆயிரம் ரூபா கிடைக்குமா? 21 ஆம் திகதி பேச்சுவார்த்தை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். எனினும், அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்குமா என்பது பற்றி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இன்னும் எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை.

முகத்துவாரம் பகுதியில் முதியோர் இல்லத்தில் 42 பேருக்கு கொரோனா!

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானோரை, சிகிச்சைகளுக்காக அனுப்பியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

98 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த முதியோர் இல்லத்தில் அண்மையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இதையடுத்து முதியோர் இல்லங்களில் உள்ள மற்றய அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மொனறாகலை – படல்கும்பர பகுதியில் மேலும் ஐவருக்கு கொரோனா!

மொனறாகலை, படல்கும்பர – அலுபொத்த பகுதியில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (19) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட ஐம்பது பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே புதிய தொற்றாளர்கள் 50 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டனர்.

இவர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை படல்கும்பர பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

படல்கும்பர பகுதியில் இதுவரை 43 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இதனிடையே படல்கும்பர நகரத்திற்கு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வருகை தரவேண்டுமெனவும் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடராஜா மலர்வேந்தன்

நாட்டில் மேலும் 495 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 400 ஐ தாண்டியுள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 32 ஆயிரத்து 875  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஓராண்டு கடந்தும் ஆறாத வடு: கெரண்டியெல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி!

0
காலங்கள் உருண்டோடி ஒரு வருடம் கடந்தாலும், அந்த கறுப்பு தினத்தின் வடுக்கள் இன்னும் கெரண்டியெல்ல மக்களின் மனங்களிலிருந்து மறையவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் 11-ஆம் திகதி கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கெரண்டியெல்ல பகுதியில்...

ஈரானின் பதில் குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

0
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் வழங்கிய பதிலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப்...

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் இன்று!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு இன்று 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...