Home Blog Page 3727

விரைவில் ‘மெகா’ கூட்டணி – ஐ.தே.கவும் இணையலாம்!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பாரிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படும். அதில் வேண்டுமானால் ஐக்கிய தேசியக்கட்சி இணையலாம் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி (ஐமச), கூட்டணியாக முதலில் உருவாக்கப்பட்டது.  தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி, சஜித் வசமாகும் என்ற எதிர்பார்ப்பை, ரணில் மீண்டும் தவிடுபொடி ஆக்கியதால், ஐதேகவை மீண்டும் மறுசீரமைக்கும் எண்ணம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி , தனிக்கட்சியாக வளர்தெடுக்கப்படும்.

அதையடுத்து ஐக்கிய மக்கள் கூட்டணி உருவாக்கப்படும். அதில் ஐமக உடன், தமுகூ உட்பட பங்காளி கட்சிகள் இணைந்து பாரிய எதிரணி கூட்டணியாக அது உருவாக்கப்படும்.  இதில் ஒரு பங்காளியாக ஐதேக விரும்பினால் இணையலாம்.

இந்த பொது நோக்கில் இன்று சம்பிக்க, ராஜித, வெல்கம போன்றோர் ஐமசயில் நேரடியாக இணைந்து, எமது கூட்டணியின் பிரதான கட்சியான அதை பலப்படுத்துகிறார்கள்.  பாரிய எதிரணி கூட்டணியை உருவாக்கும் இந்த நடவடிக்கைகளை நாம் ஆதரிப்போம்.” – என்றுள்ளது.

கண்டியில் 1,033 பேருக்கும், நுவரெலியாவில் 224 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 06 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் நேற்றுவரை 224 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 1,033 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 63 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

கொரோனாவால் 60 வயதைக்கடந்த 92 பேர் இதுவரை பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 92 பேர் 60 வயதைக்கடந்தவர்களென சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 – 30 வயதுக்கிடைப்பட்ட மூவரும், 31- 40 வயதுக்கிடைப்பட்ட நால்வரும், 41-50 வயதுக்கிடைப்பட்ட 13 பேரும், 51 -60 வயதுக்கிடைப்பட்ட 22 பேரும், 61-70 வயதுக்கிடைப்பட்ட 28 பேரும், 74 வயதுக்கு மேற்பட்ட 64 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (12) 27ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 27 ஆயிரத்து 743பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று மாத்திரம் 755 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 755 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 28 ஆயிரத்து 379  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் மேலும் 632 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலம் 551 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 81 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 07 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 28 ஆயிரத்து 379 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ஹெல உறுமயவிலிருந்து விடைபெற்றார் சம்பிக்க!

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று விலகியுள்ளார்.

இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற ஜாதிக ஹெல உருமயவின் விசேட பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.

புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக கட்சியிலிருந்து நீங்குவதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜாதிக ஹெல உருமயவின் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

கருணாரத்ன பரணவிதான, நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க, அநுருத்த பிரதீப், மற்றும் நிரோஷா அத்துகோரள ஆகியோர் கட்சியின் செயற்குழுவிலிருந்து விலகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்களின் அனுமதியுடன், ஜாதிக ஹெல உருமயவிற்கு புதிய உறுப்பினர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உருமயவின் தலைவராக ஹெடிகல்லே விமலசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பந்துல சந்திரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

உப தலைவராக தயா பெரேராவும் பிரதி செயலாளர் நாயகமாக சட்டத்தரணி டியூடர் பெரேராவும் பொருளாளராக அனில் ஜயவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜாதிக ஹெல உருமயவின் தேசிய அமைப்பாளராக மஹேந்திர ஜயசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளார் எனவும், அவருக்கு உயர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 23,304 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 473 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 304   ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 924 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 147 பேர் உயிரிழந்துள்ளனர்.

“நான் சோழ பரம்பரை வீரன், அட்டைக்கத்தி வீரனல்ல” – அரசியல் எதிரிகளுக்கு மனோ சாட்டையடி!

” என் பாதையில் என்னை போக விடுங்கள்.” –  என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தன்னை விமரிப்போருக்கு, அவரது முகநூல் தளத்தில் கடுமையாக பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு,

” சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச போன்றோருடன், அவர்களது முகத்துக்கு நேரேயே, பகிரங்கமாக “உண்மையை”, அவர்களது தாய்மொழியிலேயே எடுத்து கூறி, “உங்களை திருத்தி கொள்ளுங்கள்” என துணிச்சலாக அடித்து கூறும் எனக்கு, சில உள்நாட்டு, வெளிநாட்டு அறிவாளிகள் இப்போது அறிவுரை கூற வருகிறார்கள்.

அதென்ன அறிவுரை?

“மனோவும், சரத்தும் ஒரே கூட்டணிகாரர்கள்தானே? தேர்தலுக்கு முன் சரத் பற்றி மனோவுக்கு தெரியாதா? 2010 ஜனாதிபதி தேர்தலில் சரத்துக்கு ‘ஓட்டு’ வாங்கி கொடுத்தவர்தானே” என எங்களை சிலர் விமர்சிக்கிறார்கள்.

ஒரே கூட்டணியில் இருந்து விட்டு, பின்னர் எனது முகநூலில், டுவீடரில் பொன்சேகா உட்பட பலரை நான் விமர்சிக்கிறேன் எனவும் என்னை இவர்கள் விமர்சிக்கிறார்கள்.

இந்த, சில “அறிவாளி”களுக்கு சில விஷயங்கள் எப்போதும் புரிவதில்லை. இவர்கள் தூங்குவதாக நடிக்கிறார்களா? அல்லது உண்மையிலேயே தூங்குகிறார்களா? என தெரியவில்லை.

இந்த நாடு ஒரு பேரினவாத நாடு. ஆளும் கட்சி, எதிர் கட்சி எல்லாவற்றிலும் இனவாதம் நீக்கமற நிறைந்துள்ளது. இதுதான் யதார்த்தம்.

இதை நான் எப்போதும் சொல்லி வருகிறேன். இந்நாட்டில் இவர்கள் எவரும் நெல்சன் மண்டேலா கிடையாது. இருப்பவர்களை வைத்து, அவ்வப்போது, சொல்ல வேண்டியதை முகத்துக்கு நேரே சொல்லி, அடித்து, திருத்தி, எமது பாதையில் நான் போகிறேன்.

இதைவிட வேறு என்ன செய்ய முடியும்? எதிரணியில் இருந்து விலகி ஆளும் அணியில் சேர சொல்கிறார்களா?

ஆளும் அணி நியாயமானதாக இருந்தால் அதை நான் செய்வேன். நல்ல ஒரு அமைச்சு பதவியை வரப்பிரசாதங்களுடன் கேட்டு வாங்கி கொள்ளலாம்.

ஆனால் இன்று ஆளும் அணி இதைவிட, “பேரினவாதமாக” அல்லவா இருக்கிறது? அங்கே சென்று நான் எப்படி ஆடை அணிந்து வாழ்வது?

2010ம் வருட தேர்தலில், பொன்சேகாவை நிறுத்தி நாம் வெல்லவில்லை. ஆனால் இதனால் இனவாத வாக்கு வங்கி சரிபாதியாக உடைந்தது.

இந்த “அறிவாளி”களுக்கு எமது இந்த சாணக்கியம் புரிவதில்லை.

இந்நாட்டில் நானோ, எந்தவொரு தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாகி, அரசாங்கம் அமைக்க முடியாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டு ஆளும் அணி, எதிரணி என்று பிரித்து பார்க்காமல், இனவாதம் பேசுகின்றவர்களை நேரடியாக கண்டிக்கும் என்னை இந்த “அறிவாளிகள்” பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. முட்டாள்தனமாக குறை கூறாமலாவது இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான விமர்சனத்தை எதிர்கொள்ள, அவசியமானால் என்னை திருத்திக்கொள்ள, நான் எப்போதும் தயார். ஆகவே யார் வேண்டுமானாலும் வந்து கேள்வி கேளுங்கள்.

அதேபோல் மாற்று வழி என்ன…? ஆயுதம் தூக்குவதா? சரணடைவதா? குறட்டைவிட்டு தூங்குவதா? விலைபோய் பணம் சம்பாதிப்பதா? என்று ஆலோசனை கூறுங்கள்.

நான் ஒரு அட்டைக்கத்தி வீரனல்ல. நான், சோழன் பரம்பரையில் வந்த தமிழ் இலங்கையன். நேரடியாக பாராளுமன்றத்திலும், பிரபல சிங்கள ஊடகங்களிலும், இனிய சிங்கள மொழியில் பேசிவிட்டுதான், நான் அவற்றை எனது சொந்த முகநூல் தளத்தில் பதிவிடுகிறேன்.

எனது அதிகாரபூர்வ முகநூல், டுவீடர் பொதுவெளி தளங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என நான் நன்கு கற்று அறிந்துள்ளேன். இப்போது என்னை பார்த்துதான் பல பொது மனிதர்கள் இதை கற்று வருகிறார்கள்.

இதைவிட நெருக்கடியான 2005-2010 காலத்திலேயே இன்றைய ஜனாதிபதி, பலமிக்க “பாதுகாப்பு செயலாளராக” இருந்தவேளையிலேயே தெருவில் இறங்கி போராடியவன், நான்..!

ஆகவே “அறிவாளிகள்” என தம்மை தாமே நினைத்துக் கொண்டு பொதுவெளியில் உளறிக்கொட்ட வேண்டாம். என்னை என் வழியில் போக விடுங்கள்..!” – என்றார்.

 

தனிமைப்படுத்தப்பட்ட பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிளக்வோட்டர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகள் ‘லொக்டவுன்’ செய்யப்பட்டன.

அதன்பின்னர் அத்தோட்டத்திலுள்ள 475 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் 12 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடர்கின்றன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 10வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி – உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்று ஒழிப்பிற்கான தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு ஒரு பில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் , சுகாதார ஸ்தாபனத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த செயற்றிட்டத்திற்கு தயாராகுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு எப்போது அவை விநியோகிக்கப்படும் என எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கொரோனா ஒழிப்பிற்கான தடுப்பூசி கிடைக்கப்பெற்றவுடன் அதனை பயன்படுத்துவதாயின் அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் காணப்படல் வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, 10 வீதமானவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி கிடைக்கப்பெற்றால் எவ்வாறான முன்னுரிமையின் அடிப்படையில் இவற்றை பெற்றுக்கொடுப்பது என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறினார்.

எந்த ரக தடுப்பூசி கிடைக்கப்பெறும் என இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை எனவும், எவ்வாறாயினும் COVID-19 தடுப்பூசியை களஞ்சியப்படுத்த (-)80 பாகை செல்சியஸ் குளிரூட்டி அவசியம் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

COVAX செயற்றிட்டத்தின் கீழ் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்காக ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை அதிகாரி Tedros Adhanom Ghebreyesus நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த செயற்றிட்டத்தில் 189 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...