Home Blog Page 3741

நுவரெலியா மாவட்டத்தில் 208 பேருக்கு கொரோனா! 311 பேர் சுய தனிமையில்!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் இன்று (06.12.2020) காலைவரை 208 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை 4 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், சுமார் 311 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும்  நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், வெளிஓயா தோட்டத்தில் தண்டுகள பிரிவு, போகவன பகுதியில் லிப்டன் தோட்டம், பொகவந்தலாவயில் பிளக்ஹோட்டர் தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை இப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையின்போது நுவரெலியா மாவட்டத்துக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஓரிரு தொற்றாளர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். அதுவும் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக தோட்டப்பகுதிகளில் வைரஸ் பரவவில்லை.

எனினும், 2ஆது அலையான உருவான பேலியகொட கொத்தணிமூலம், மீன்வாங்கசென்ற பலருக்கு வைரஸ் தொற்றியது. இதன்மூலம் தோட்டப்பகுதிகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன்பின்னர் தீபாவளி பண்டிகைக்காக வெளிமாவட்டங்களில் இருந்துவந்தவர்கள்மூலம் தற்போது வைரஸ் பரவிவருகின்றது.

அதேவேளை, முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளி, கைகளைக் கழுவுதல் உட்பட சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

க.கிசாந்தன்

‘தமிழ் மக்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு’ – ராதாகிருஷ்ணன்

தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், மஹர சிறைச்சாலை சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் எதிரொலிக்கும் என்பதால் அரசாங்கம் அதற்கு பொறுப்புகூறியாகவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தலவாக்கலையில் இன்று (06.12.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவதுஇ

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படியே பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். மக்கள் சார்பில் பாராளுமன்றத்தில் கருத்துகளை கூறுவதற்கும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பு தொடர்பில் அல்லாமல் ஏனைய விடயங்களை பேசுவதற்கான அனுமதி அவர்களுக்கு இருக்கின்றது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் துவேசம் கக்கும் உறுப்பினர்களே அதிகம் இருக்கின்றனர். அவ்வாறு துவேசம் பேசும் ஒரு அமைச்சர்தான் கூட்டமைப்பினரை தடைசெய்யவேண்டும் என சொல்கின்றார். அவருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது. மக்கள் நினைத்தால் மட்டுமே அதனை செய்யமுடியும். அவரின் கருத்தை நாம் கண்டிக்கின்றோம்.

சரத் பொன்சேகாவும் தமிழ் மக்களின் மனம் புண்படும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதனையும் கண்டிக்கின்றோம்.

பிள்ளையானை விடுதலைசெய்தது எமக்கு பிரச்சினை இல்லை. அவ்வாறு தமிழ் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அப்போதுதான் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது நடைமுறை சாத்தியமாகும். மஹர சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும். இச்சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமை மாநாட்டிலும் எதிரொலிக்கும்இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையே தொடர்ந்தது. தற்போது அது அதிகரித்துள்ளது.” -என்றார்.

ஆசிரியைக்கு கொரோனா! மூடப்பட்டது நோர்வூட் பாடசாலை!!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தினை நாளை (07)   முதல் காலவரையறையின்றி பூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டி. சந்திரராஜன் தெரிவித்தார்.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவருக்கும் அவரது குழந்தைகள் இருவருக்கும் கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் செயற்படும் பொகவந்தலாவை ஆரியபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கும், அவரது குழந்தைகள் இருவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியை கடந்த 28ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 1500 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 76 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

இதனால் அப்பாடசாலையின் அதிபர் உட்பட 76 ஆசிரியர்களையும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 100 மாணவர்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த ஆசிரியை நெருங்கி பழகிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நாளை மறுதினம் (07) ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்தை தொற்று நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு உட்பிரவேசிக்க கூடாது என அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.

க.கிசாந்தன், பெ. பெருமாள்

கொழும்பில் மேலும் 3 பகுதிகள் நாளை முதல் முடக்கம்!

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட மூன்று இடங்கள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

கொம்பனித்தெருவில் உள்ள ஹுனுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்டத்தில் 60ஆம் தோட்டம், வெள்ளவத்தையில் கோகிலா வீதி என்பன இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை காலை 05.00 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் புளுமென்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள களனி பொலிஸ் பிரிவு நாளை காலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு, எவரிவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன நாளை காலை 05 மணி முதல தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பேலியகொடை கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நாளை காலை 05.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை காலை 05.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்காக ஹட்டனில் போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் அரசாங்கம் இம்முறையும் ஏமாற்றக்கூடாது என வலியுறுத்தி ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இன்று ஹட்டன் நகரில்கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இந்த போது, ஏமாற்ற வேண்டாம், வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் ஆயிரம் சம்பளத்தை உள்வாங்கு , அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்ற பல்வேறு வசனங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்தி இந்த போராட்டமானது அட்டன் நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது.

அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, நுவரெலியா மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் மஞ்சுள சுரவீர முன்னெடுத்தார்.

கொரோனா வைரஸ் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடைவெளிகளை ஏற்படுத்தி 15 உறுப்பினர்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

21/4 தாக்குதல் – பொலிஸ் விசாரணைகள் நிறைவு! நாளை சட்டமா அதிபரை சந்திக்கிறார் சரத் வீரசேகர!!

” ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட 8 சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைள் நிறைவடைந்துவிட்டன. 257 பேர் விளக்கமறியலில் உள்ளனர். ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனி சட்டமா அதிபர்தான் வழக்கு தொடுக்கவேண்டும். அதனை துரிதப்படுத்துமாறு அவரை எதிர்வரும் திங்கட்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளேன்.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் சி.ஐ.டி., ரி.ஐ.டியின்கீழ் 171 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 257 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

8 சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. ஆணவங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மனித படுகொலை, சூழ்ச்சித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரே வழக்கு தொடுக்கவேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையும் வெளிவரவுள்ளது.

சட்டமா அதிபரை திங்கட்கிழமை நேரில் சந்திக்கவுள்ளேன். அதன்போது இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பேன். எஞ்சிய ஓர் ஆவணவமும் ஒப்படைக்கப்படும்.

அவ்வாறு வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் பணம் வழங்கியவர்கள் யார், சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பான அனைத்து தகவல்களும் தெரியவரும். வழக்கு விசாரணைகள் நடைபெறுகையில் இந்த நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள்கூட கைதாகலாம். சில இரகசிய தகவல்களை வெளியிடமுடியாது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் நேரில் சந்தித்து நிலைமையை தெளிவுபடுத்தவுள்ளேன்.

அதேவேளை, கடந்த அரசாங்கம் புலனாய்வுதுறையை பலவீனப்படுத்தியதாலேயே இவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றது.” – என்றார்.

முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க காலமானார்!

முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க இன்று காலமானார். உயிரிழக்கும்போது அவருக்கு வயது 67.
கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு இவர் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். கலாசார மற்றும் கலைத்துறை அமைச்சராக இவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2019 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தொற்றாளருடன் தொடர்பில் இருந்த சுகாதார அதிகாரி தனிமைப்படுத்தப்படாதது ஏன்?

நுவரெலியா மாவட்டத்தில் சுகாதார அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றாளர் ஒருவருடன் நேரடி தொடர்பில் இருந்தபோதும் அவர் தனிமைப்படுத்தப்படாமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் வெவ்வேறான சட்டமா? என்ற கேள்வியும் எழுகின்றது.
இது தொடர்பாக தெரியவருவதாவது
கடந்த நொவம்பர் மாதம் 25 ஆம் திகதி கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பி.சி.ஆர் பரிசோதனை மூலமாக தெரியவந்ததை தொடர்ந்து அவர் கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரம் அவருடன் நேரடி தொடர்பில் இருந்த பொலிசாரும் பொதுமக்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு சுகாதார பிரிவினரால் உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆனால் குறித்த நபருடன் நேரடி தொடர்பில் இருந்த நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் தனிடைப்படுத்தப்படாமை தொடர்பாக பல்வேறு மட்டத்திலும் கேள்விகள் ஏற்பட்ட போதிலும் இதனை வெளியில் கூறுவதற்கு யாரும் தயாராக இருக்கவில்லை. இது தொடர்பாக சுகாதார பிரிவினர் தெரிந்திருந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறித்த விடயம் தொடர்பாக எமக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பை ஏற்படுத்தி விடயத்தை அறிந்து கொண்ட பொழுது அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கருத்து தெரிவிக்கையில்
கடந்த மாதம் 22 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்னிடம் சுமார் 25 நிமிடங்கள் அளவில் உரையாடிக் கொண்டிருந்தார்.இதன்போது நான் அவருக்கு தேநீர் கோப்பை ஒன்றையும் வழங்கினேன்.பின்பு எனக்கு 23 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கப்பட்டது.இதன்படி முடிவு 25 ஆம் திகதி கிடைத்த பொழுது அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் நான் கொரோனா மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளேன்.என தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் கடமையாற்றும் சுகாதார அதிகாரி ஒருவரிடம் கேட்ட பொழுது குறித்த சுகாதார அதிகாரி சுகாதார முறைப்படியே கொரோனா தொற்றாளருடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் அது பெரிய பிரச்சினை இல்லை எனவும் பதில் வழங்கியுள்ளார்.
ஆனால் இங்கு சந்தேகத்தை ஏற்படுத்துவது குறித்த அதிகார் சுகாதார முறையுடன் இருந்திருந்தாலும் அவர் தேநீர் அருந்துகின்ற பொழுது வாயை மூடிக் கொண்டு அருந்தினாரா?என்ற கேள்வியும் ஏற்படுகின்றது.எனவே பொது மக்களுக்கு ஒரு சட்டமும் அதிகாரிகளுக்கு ஒரு சட்டமுமா? என்ற கேள்வியே பொது மக்களிடம் எழுகின்றது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

கொரோனா மேலும் எழுவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 137 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு பெண்களும், மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஐவர் 60 வயதடைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மனு கையளிப்பு!

நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் நிதி அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.இது தொடர்பில் மகஜர் ஒன்றும் இன்று கையளிக்கப்பட்டது.

குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோர் குறித்த மனுவை நிதி அமைச்சரிடம் கையளித்தனர்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தால், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினரையும் அழைத்து இதுபற்றிக் கலந்துரையாட முடியும் என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...