Home Blog Page 3805

நேற்று மாத்திரம் 10,740 PCR பரிசோதனைகள்! 7,530 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில்!!

நாட்டில் நேற்று மாத்திரம் 10 ஆயிரத்து 740 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பரிசோதனை எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன், இதுவரையில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 258 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 75 தனிமைப்படுத்தல் மையங்களில் 7 ஆயிரத்து 530 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 58 ஆயிரத்து 396 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.

அதேவேளை, மினுவங்கொட கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது.

பாராளுமன்றம் வருவாரா பஸில் ராஜபக்ச?

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பஸில் ராஜபக்ச எப்போது நாடாளுமன்றம் வருவார் என எழுப்பட்ட கேள்விக்கு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல மழுப்பல் போக்கில் பதிலளித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (27) முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கான தடை நீக்கும். எனவே, பஸில் ராஜபக்ச எப்போது நாடாளுமன்றம் வருவார் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய, அது தொடர்பில் அவரிடமும் (பஸில் ராஜபக்ச), ஜனாதிபதியிடமும்தான் கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஐதராபாத் அணியிடம் மண்டியிட்டது டில்லி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி, டெல்லியை பந்தாடியது. வார்னர், சஹா அரைசதம் விளாசினர்.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 47-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மல்லுகட்டியது.

ஐதராபாத் அணியில் மூன்று மாற்றமாக ஜானி பேர்ஸ்டோ, பிரியம் கார்க், கலீல் அகமது நீக்கப்பட்டு வில்லியம்சன், விருத்திமான் சஹா, ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தலைவர் டேவிட் வார்னரும், விருத்திமான் சஹாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் வார்னர் முதல் ஓவரில் இருந்தே மட்டையை தடாலடியாக சுழட்டினார். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்க விட்டார். ரபடாவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டியடித்து அமர்க்களப்படுத்தினார். 25 பந்துகளில் தனது 47-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை திரட்டியது. இதில் வார்னரின் பங்களிப்பு மட்டும் 54 ரன். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பவர்-பிளேக்குள் அரைசதத்தை எட்டிய முதல் வீரர் வார்னர் தான். அவருக்கு நேற்று 34-வது பிறந்த நாள் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

சஹா கலக்கல்

வார்னரின் அதிரடியால் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக எகிறியது. அணியின் ஸ்கோர் 107 ரன்களை (9.4 ஓவர்) எட்டிய போது வார்னர் (66 ரன், 34 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) அஸ்வின் பந்துவீச்சில் தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து மனிஷ் பாண்டே வந்தார்.

வார்னருக்கு பிறகு ரன்விகிதத்தை உயர்த்தும் பொறுப்பை கையில் எடுத்து கொண்ட விருத்திமான் சஹாவும், டெல்லி பவுலர்களை வாட்டி வதைத்தார். அக்‌ஷர் பட்டேல், ரபடாவின் ஓவர்களில் சர்வசாதாரணமாக சிக்சர் பறந்தன. சதத்தை நோக்கி முன்னேறிய விருத்திமான் சஹா 87 ரன்களில் (45 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். கடைசி கட்டத்தில் மனிஷ் பாண்டே ஸ்கோரை ஓரளவு நகர்த்தினார்.

20 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மனிஷ் பாண்டே 44 ரன்களுடனும் (31 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), வில்லியம்சன் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ரபடா பரிதாபம்

டெல்லி தரப்பில் நோர்டியா, அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார். விக்கெட் இல்லை. ஐ.பி.எல்.-ல் 25 ஆட்டங்களுக்கு பிறகு அதாவது 2017-ம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு முதல்முறையாக விக்கெட் கிடைக்கவில்லை.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் (0) முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் (5 ரன்) வெளியேறினார். இந்த சரிவில் இருந்து டெல்லி அணியால் இறுதிவரை நிமிரவே முடியவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (7 ரன்), ஹெட்மயரும் (16 ரன்) சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 36 ரன்களும், ரஹானே 26 ரன்களும் எடுத்தனர்.

டெல்லி தோல்வி

முடிவில் டெல்லி அணி 19 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 7 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

12-வது ஆட்டத்தில் ஆடி 5-வது வெற்றியை ருசித்த ஐதராபாத் அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தனது கடைசி 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் ஐதபாராத்துக்கு பிளே-ஆப் கதவு திறக்கும்.

அதே சமயம் 12-வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது 5-வது தோல்வியாகும். தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் சறுக்கலை சந்தித்து இருப்பதால் இப்போது டெல்லி நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. எஞ்சிய 2 ஆட்டங்களில் (மும்பை, பெங்களூருக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது!

இலங்கையில் நேற்று மாத்திரம் 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கும், தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி இலங்கையில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 4 ஆயிரத்து 43 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 808 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதை எப்போது புனரமைக்கப்படும்?

ஹட்டன் – கொழும்பு பிரதான பாதையில் குயில்வத்த பகுதியில், சில மாதங்களுக்கு முன்னர் அடை மழைபெய்தபோது பாதையின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து ஒரு வழி பயணமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் வீதியை புனரமைப்பதற்கு இது வரைக்கும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கபடவில்லை.

இதனால் போக்குவரத்தில் ஈடுப்படும் வாகனங்களின் சாரதிகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

இரவுவேளையில் வாகனங்களை செலுத்தும் போது சேதமடைந்த பாதை தொடர்பில் தெரிந்துக் கொள்ள எந்தவிதமான அறிவுறுத்தல்களும் இல்லை எனவும் சாரதிகள் கூறுகின்றனர். பாதிப்டைந்த இடத்தில் பாதசாரிகளின் கடவையும் காணப்படுகின்றது. தற்போது பாதசாரிகளினால் அதனை பாவிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த பாதையை உடனடியாக திருத்த வேண்டிய பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பாகும். இதனை உடனடியாக புனரமைத்து தருமாறு சாரதிகள் கோருகின்றனர்.

மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்

மேலும் மூன்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்

ஹோமாகம மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

பதுளை ஸ்பிரிங்வெளி – மேமலை தோட்டத்தில் மூன்று வீடுகள் மட்டும் முடக்கம்

பதுளை ஸ்பிரிங்வெளி – மேமலை தோட்டம் முடக்கம் என்ற செய்தியில் உண்மையில்லை : மூன்று வீடுகள் மட்டுமே தனிமைப்பட்டுள்ளதாக தகவல்

பதுளை ஸ்பிரிங்வெளி – மேமலைத் தோட்டம் முடக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்தியொன்று பதியப்பட்டிருந்தது. எனினும், குறித்த தோட்டம் முடக்கப்படவில்லை என்றும் அங்கிருக்கும் மூன்று வீடுகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேமலை தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உறுதிப்படுத்தினார்.

கொரோனா தொற்றாளரென்று ஊர்ஜிதமாகிய ஒருவர், பதுளைப் பகுதியின் ஸ்பிரிங்வெளி – மேமலை பெருந்தோட்டத்தின் மரண வீடொன்றிற்கு வந்து சென்றதையடுத்து, அம் மரண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேமலை பெருந்தோட்டத்தில் கணேசன் முத்தம்மாள் என்ற 69 வயது நிரம்பிய பெண் 25-10-2020 அன்று மரணமாகியதையடுத்து, அவரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள ஹட்டனிலிருந்து எஸ். சிவராஜா என்ற நபர் வந்துள்ளார். இவர், பேலியகொடை மீன் சந்தையில் தொழில் செய்து வந்தவராவார்.

மேற்குறிப்பிட்ட இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட எஸ். சிவராஜா என்ற நபர், மீளவும் ஹட்டன் சென்றதும், இவர் மீது சந்தேகம் கொண்ட ஹட்டன் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் அந்நபரை பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்தினர். அப் பரிசோதனையில் அந் நபர் “கொரோனா தொற்றாளர்” என்பது ஊர்ஜிமாகியுள்ளது.

அதன் பின்னர், அந் நபருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரையும் சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்கும்படி பொலிசார் கேட்டுள்ளனர். இத்தகவல் பதுளைப் பொலிசாருக்கு கிடைக்கவே, பொலிசாரும், பதுளை சுகாதாரப் பிரிவினரும் நேற்று குறுித்த தோட்டத்திற்கு விரைந்துள்ளனர்.

அத் தோட்டத்திற்கு விரைந்த பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் குறிப்பிட்ட மரண வீட்டில் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இத்தோட்டத்திற்குள் வெளியார் எவரையும் பிரவேசிக்கவோ, இத்தோட்டத்திலுள்ளவர்கள் வெளி வெளியில் செல்லாதிருப்பதற்கும் பூரண தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமது பதுளை செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த தோட்டம் முடக்கப்படவில்லை என்றும் அங்கிருக்கும் மூன்று வீடுகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குருவிக்குத் தெரிவித்தார்..

பதுளைப் பொலிசாரும், பதுளை சுகாதாரப் பிரிவினரும் இதுகுறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன், பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் இந்தத் தோட்டத்தில் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

‘கொரோனா’விலும் அரசியல் நடத்தும் அரசு – ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

” அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது .அதனை தொடர்ந்து 20 ஆவது திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அரசாங்கம் இன்று தன்னுடைய அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்து கொண்ட பின்பு கொரோனாவை கைவிட்டு செயற்படுகின்றது.

அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்த முடியாமல் தடுமாறுகின்றது.” என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் (27.10.2020) இன்று மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் இன்று கொரோனா கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.குறிப்பாக மலையக பகுதிகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் பாரிய அளவில் தொற்று அதிகரித்து வருகின்றது.ஒரு சில நகரங்களை மாத்திரம் மூடுவதனால் மாத்திரம் இதனை கட்டுப்படுத்த முடியாது.

ஏற்கனவே இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அதாவது மார்ச் மாதம் அளவில் மிக குறைவான கொரோனா தொற்றாளர்களே இலங்கையில் இருந்தனர்.இதன்போது முழு நாட்டையும் முடக்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று பல மடங்காக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டை முடக்காமல் ஒரு சில நகரங்களையும் ஒரு சில பகுதிகளை மாத்திரம் முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது எந்தளவு பொறுத்தமான செயற்பாடு என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

முழு நாட்டையும் முடக்கினால் மீண்டும் 5000 ரூபா வழங்க வேண்டும்.அதனை வழங்குவதால் அரசாங்கத்திற்கு எந்தவிதமான இலாபமும் இல்லை.கடந்த முறை வழங்கிய பொழுது அது தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.இதன் காரணமாகவே கட்சி ரீதியாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் இன்றைய நிலையில் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடு திருப்தி அடைய முடியாத நிலையிலேயே இருக்கின்றது.

அரசாங்கத்தின் நோக்கமெல்லாமல் 20ஆவது திருத்த சட்டத்தை வெற்றி கொள்வதிலேயே இருந்ததே தவிர வேறு விடயங்களில் அக்கறை செலுத்தவில்லை. நாட்டு மக்களின் நலன் தொடர்பான சிந்தனையோ பொருளாதார பின்னடைவு தொடர்பான சிந்தனையோ எதுவும் இல்லை.

எனவே அரசாங்கம் ஏனைய விடயங்களை ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் மலையக பகுதிகளில் பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களையும் ஏனைய விடயங்களையும் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

க.கிசாந்தன்

ஊரடங்கு உள்ள ஊர்களில் கடைகளில் இரண்டு தினங்கள் திறக்க அனுமதி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள கொழும்பு, குருணாகல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் மருந்தகங்களை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள கடைகள் மற்றும் மருந்தகங்களை வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 08 மணி – இரவு 10 மணி வரை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

#Covid19 | #CoronaVirus | #LKA

‘அலட்சியம் வேண்டாம், விழிப்புடன் இருப்போம் – சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்’

” கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அலட்சியத்துடன் செயற்படக்கூடாது. சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி அவதானத்துடன் செயற்படவேண்டும்.” – என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவரும், இ.தொ.காவின் உபசெயலாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் கொரோனா பரவியுள்ளது. ஹட்டன், மஸ்கெலியா, கொத்மலை, நுவரெலியா, கினிகத்தேன மற்றும் அக்ககரப்பத்தனை போன்ற பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். எனவே சுய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசணையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும் இராணுவமும் இணைந்து விசேட செயலணி ஊடாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தாலும் ஒருசிலர் பரிசோதனைக்காகு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனவே உங்களின் சுயபாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம் அதுமட்டுமல்லாது முதலாவது அலையை அலட்ச்சியப்படுத்தியதாலேயே இன்று பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

தற்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சின் ஊடாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனவே கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பாக செயற்படுவோம்.” – என்றார் பாரத்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையைப் புனரமைக்கக் கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!

0
நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையின் மிக மோசமான நிலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகப் புனரமைக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று நமுனுகுல நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். பல ஆண்டுகளாகப் பராமரிப்பு...

சொந்த தொகுதியில் ஸ்டாலின் தோல்வி!

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி...

மாலைதீவு ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி...