‘மினுவாங்கொட கொத்தணி பரவல்’ – 101 பேருக்கு கொரோனா!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இனங்காணப்படாமை மிகவும் பாரதூரமானதாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கேட்போர் கூடத்தில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையில் இதுவரையில் இனங்காணப்பட்ட நோயாளர்களில் அவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இந்த பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இதுவரையில் இனங்காணப்படவில்லை.
எனவே அவருக்கு சமூகத்திலிருந்து தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்று எம்மால் கற்பனை செய்ய முடியும். இது பாரதூரமானதாகும்.
அவர் தொழில் புரிந்த ஆடை தொழிற்சாலையில் சுமார் 1700 பேர் தொழில் புரிகின்றனர். 1700 தொழிலாளர்களைக் கொண்ட இந்த தொழிற்சாலையில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ஒவ்வொரு பிரிவுகளிலும் தொழில் புரிபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படாததால் 1700 பேருக்கும் அச்சுறுத்தல் நிலைமையே உள்ளது.
குறித்த பெண் தொழில் புரிந்த ஒரு பகுதியில் மாத்திரம் அதாவது அவருடன் நேரடியாக தொடர்புகளைப் பேணியவர்கள் 783 பேர் ஆவர். இது கந்தக்காடு பிரதேசத்தில் ஏற்பட்ட நிலைமை விட பாரதூரமானதாகும்.
கணிப்பீடுகளிகளின் அடிப்படையில் பார்க்கும் போது 99 இல் 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றால் இது மிகவும் மோசமான நிலைமையாகும். எஞ்சியுள்ள 1600 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படும் ? இவர்கள் அனைவரும் நாடளாவிய ரீதியில் பரவலடைந்துள்ளனர்.
மினுவாங்கொடை பகுதியிலுள்ளவர்கள் மாத்திரம் இங்கு தொழில் புரியவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பெண்ணுடைய சொந்த இடம் மினுவாங்கொடை அல்ல. ஹபராதுவை அவரது சொந்த இடமாகும். எனவே மினுவாங்கொடை என வரையறுக்காமல் அனைத்து பிரதேசங்களிலுமுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும் என்றும் கூறினார்.
‘நாளை முதல் ஊரடங்கு சட்டம்’ என்ற வதந்தியை நம்பவேண்டாம்!

மஹதோவ தோட்டத்திற்கான வீதிப் புனரமைப்பை உடன் ஆரம்பிக்குமாறு செந்தில் பணிப்புரை
மஹதோவ தோட்டத்திலிருந்து லுணுகல வரையிலான 7.2 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.
குறித்த வீதியின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனை உடனடியாக திருத்தத் தருமாறும் பொதுமக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வீதியின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு குறித்த திட்ட பணிப்பாளரிடமும், பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளரிடமும் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த வீதியைப் புனரமைப்பதற்கான பணிகள் 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பொதுவாக தோட்டப் புற வீதியொன்றை நிர்மாணிக்கும் பணிகள் பெருந்திட்டங்களில் உள்ளடக்கப்படுவதில்லை.
எனினும், மாகாண அமைச்சராக இருந்த போது செந்தில் தொண்டமானின் முயற்சியால், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டத்தில் இந்த வீதியை புனரமைக்கம் திட்டமும் உள்ளடக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 2020ஆம் ஆண்டில் நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 2019ஆம் ஆண்டு மாகாண சபை ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர் இந்த செயல்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வீதி புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளை இடைநிறுத்தாமல், உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
வீதி அபிவிருத்தி குறித்த திட்ட பணிப்பாளரிடமும், பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளரிடமும் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிப்பு
உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு இன்று ( 05) முதல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நோபல் பரிசுக்கு ஹார்வே ஜே ஆல்டர், மைக்கேல் ஹாங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நோவல் வைரஸ் மற்றும் ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்காக 3 பேருக்கும் இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை (6 ) இயற்பியல் துறைக்கும், 7 ஆம் திகதி வேதியியல் துறைக்கும், 8ஆம் திகதி இலக்கியத்திற்கும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் திகதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.
முன்னதாக,1901ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் 1969ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசும் சேர்க்கப்பட்டது.
அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு என 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மினுவங்கொட தொழிற்சாலை – மேலும் 3 பெண்களுக்கு கொரோனா!
மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் மூன்று பெண்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி தொழிற்சாலையில் வேலைசெய்யும் இரு பெண்கள் குருநாகலில் உள்ள தங்களது வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின்போதே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அதேவேளை, 41 வயதுடைய மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதியாகியுள்ளது.
இம்மூவரும் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
‘முகக்கவசம் அணியாமல் மஸ்கெலியா நகருக்கு வரவேண்டாம்’
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொது மக்களிடம், மஸ்கெலியா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மஸ்கெலியா நகருக்கு வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்பதுடன், வாகனங்களில் பயனிப்பவர்களும் இந்தநடைமுறை பொருந்தும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘தோட்ட வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனை’ – அனுசா வலியுறுத்து
மலையக பெருந்தோட்டத்துறை சார்ந்த அனைத்து வைத்தியசாலைகளிலும் பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டும் என்று சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
” தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரானா அச்சுருத்தல் சமூக தொற்றாக மாறி இரண்டாம் கட்ட அலையாக தீவிரமடையுமாயின் நாம் உயிரிழப்புக்களை மட்டுமல்லாது பொருளாதார நெருக்கடிக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
குறிப்பாக அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் இன்றி நெருக்கமான வசிப்பிடங்களில் செறிந்து வாழும் மலையக மக்கள் பாரிய அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். நோய்தொற்று காணப்பட்டால் அவ்வாறானவர்களை சுய தனிமைப்படுத்துவது எமது சமூக கட்டமைப்பில் சிரமமானது.
தொழிலுக்கு கூட்டமாக செல்வது தமது வாழ்வாதார தேவைகளுக்காக நகரங்களுக்கு அதிகளவில் ஒரே நேரத்தில் செல்வது போன்ற தவிர்க்க முடியாத செயற்பாடுகளினால் இந்நோய் பரவுவது தீவிரமாகலாம்.
ஆகவே சுகாதார துறையினர் இவ்விடயத்தில் விஷேட கவனம் கொடுத்து பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களுக்கான சகாதார முறைகளை தெளிவாக அறிவுருத்த வேண்டும்.
சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் கொரானாவிற்கான ஆரம்ப அறிகுறிகளாக அறியப்படுகின்றன. ஆனால் குளிரிலும் மழையிலும் போசாக்கின்மையாலும் நலிவுற்றுள்ள எமது மக்களின் அநேகமானவர்கள் தினமும் இவ்வாறான வருத்தங்களுடனேயே தொழில் புரிந்து வருகின்றனர்.
இத்தகைய அன்றாட நோய்களுக்கு கூட ஒழுங்கான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலுள்ள எம்மவர்களால் கொரானா தொற்றுக்கான அறிகுறிகளை இலகுவில் கண்டறிந்துக் கொள்வது கடினம்.இது ஆரம்பத்திலேயே கண்டறியப்படாது விட்டால் முழு சமூகத்துக்கமான சவாலாக மாறி விடலாம்.
அத்தோடு மருத்துவ சிகிச்சைகளுக்காகவோ அல்லது விபத்துக்களால் பாதிக்கப்பட்டோ அல்லது குளவிக்கொட்டு காட்டு மிருகங்களினால் தாக்கப்பட்டோ வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அனைவரும் முழுமையாக குணமடைந்த பின்னரே வீடு திரும்புவதையும் வைத்தியசாலைகள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக சிகிச்சைகளில் அவர்களுக்கு உதவவேண்டும்.
ஏதாவது காரணங்களால் முழுமையாக சிகிச்சை முடியாத நிலையில் வீடு திரும்புபவர்கள் மேலதிக சிகிச்சை பெற முடியாமலும் பெற்றுக்கொள்ள தெரியாமலும் நிரந்தர நோயாளியாகி விடுகிறார்கள். இதுவும் ஒரு சமூக சவாலாக மாறிவிடுகிறது.
இவ்விடயங்களில் சுகாதாரதுறை மாத்திரமன்றி இங்கு இயங்கும் அரச சார்பற்ற தொண்டு நிறவனங்களும் இம் மக்களை நம்பி வாழும் தொழிற்சங்கங்களும் முழுமையாக விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
லுனுகலயில் குளவிக்கொட்டு – நால்வர் பாதிப்பு
பதுளை, லுனுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலன்ஸ் தோட்டத்தில் நான்கு தொழிலாளர்கள் இன்று (5) குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் லுனுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று விடுத்துள்ள அறிவிப்பு…
உயர்தரப்பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறுமா அல்லது பிற்போடப்படுமா என்பது தொடர்பில் இன்று அல்லது நாளைக்குள் உரிய அறிவிப்பு விடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன் மாணவர்களின் சுகாதார நலனைக்கருத்திற்கொண்டே அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.





