Home Blog Page 3838

ஒரு லட்சம் பேர் பலி! இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 875 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 48 லட்சத்து 36 ஆயிரத்து 28பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 79 லட்சத்து 4 ஆயிரத்து 702பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 325பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 58 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 213,524
பிரேசில் – 145,431
இந்தியா – 100,875
மெக்சிகோ – 78,492
இங்கிலாந்து – 42,268
இத்தாலி – 35,941
பெரு – 32,609
பிரான்ஸ் – 32,155
ஸ்பெயின் – 32,086
ஈரான் – 26,567
கொலம்பியா – 26,397

ரிஷாட் வேண்டாம் – நுவரெலியாவில் பிரசன்ன தெரிவிப்பு

” 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறிய பின்னர் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.” – என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காகவே எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்கினர். எனவே, அதனை நிச்சயம் செய்வோம். அதற்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாக 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
ஏனெனில் 19ஆவது திருத்தச்சட்டத்தால் இந்த நாடு அழிவை நோக்கி பயணித்தது. ஜனாதிபத மற்றும் பிரதமரால் இணைந்து செயற்படமுடியாத நிலை ஏற்பட்டது.  சுயாதீனம் என்ற போர்வையில் பழிவாங்கல்களுக்காக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆக தங்கையைக் காண்பித்து அக்காவை மணம்முடித்துவைப்பதுபோல 19 ஊடாக நடவடிக்கைகள் இடம்பெற்றன. இவை 20 ஊடாக நீக்கப்படும்.
ஜனாதிபதிக்கு தனது பதவிகாலம் முடிவடைவதற்கு இன்னும் 4 வருடங்களே இருக்கின்றன. இக்காலப்பகுதியில் நாட்டுக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை, ஆளுங்கட்சிவசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே, எவரிடமும் சென்று ஆதரவு தேடவேண்டிய அவசியம் இல்லை.  ” – என்றார்.

பஸிலின் ஆட்டம் ஆரம்பம் – எதிரணி உறுப்பினர்கள் ஐவர் தாவல்!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவர் அரசாங்கத்துடன் சங்கமிக்கவுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் அவர்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளனர்.

இவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நேரில் களமிறங்கியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

’20’ இற்கு எதிராக வாக்களிக்க முற்போக்கு கூட்டணி முடிவு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடம் இவ்வாரம்கூடி இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் எனவும் தெரியவருகின்றது.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமான அம்சங்கள் இருப்பதாலேயே அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கும், 20 இற்கு எதிராக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதற்கும் கூட்டணி தீர்மானித்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது எனவும், வாக்கெடுப்பின்போது சிலர் நிடுநிலை வகிக்கவுள்ளனர் எனவும் வெளியாகியுள்ள தகவல்களை கூட்டணியின் உறுப்பினர் ஒருவர்  நிராகரித்தார்.

ரணில் -சஜித் அணிகள் விரைவில் நேரில் பேச்சுவார்த்தை

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலருக்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அறியமுடிகின்றது.

ஐ.தே.கவின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ருவான் விஜேவர்தனவுக்கு தொலைபேசி ஊடாக சஜித் வாழ்த்து தெரிவித்தபோது, நேரடி சந்திப்புக்கான அழைப்பை ருவான் விடுத்திருந்தார் எனவும், இதன்பிரகாரமே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சஜித் தலைமையில் உதயமாகவுள்ள ‘ஐக்கிய கூட்டமைப்பில்’ இணைந்து செயற்படுவது சம்பந்தமாகவும், மாகாண தேர்தலை கூட்டமாக எதிர்கொள்வது பற்றியும் இதன்போது அவதானம் செலுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

5 நாட்கள் கோப்குழு கூட்டம் – 6 ஆம் திகதி முதல் பணி ஆரம்பம்!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இதற்கமைய ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை 05 நாட்கள் கோப் குழு கூடவுள்ளது.

வரையறுக்கப்பட்ட ‘லங்கா கோல் கம்பனி பிரைவட் லிமிடெட்’ கோப் குழுவின் முன்னிலையில் முதலில் அழைக்கப்படவுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை நுரைச்சோலை மின்நிலையத்துக்காக லங்கா கோல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்முதல் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதன் அதிகாரிகள் ஒக்டோபர் 06ஆம் திகதி பிற்பகல் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், லக்விஜய மின்நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற சூழல் பாதிப்புக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்து ஒக்டோபர் 08ஆம் திகதி கோப் குழுவில் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இதற்கிடையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் சாத்தியக்கூற்று ஆய்வு மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையை பரிசீலிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் முகாமைத்துவப் பிரிவு ஆகியன எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், களனி கங்கையில் நீர் மாசடைந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சூழல் கணக்காய்வு அறிக்கை குறித்துக் கலந்துரையாடுவதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை முதலீட்டுச் சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட உள்ள+ராட்சி மன்றங்கள் ஆகியனவும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக ஒக்டோபர் 23ஆம் திகதி தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது. தென்னை பயிர்ச்செய்கை அதிகாரசபை, தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிலையம் ஆகியன அன்றையதினம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

3ஆவது போட்டியிலும் மண்டியிட்டது சென்னை அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3ஆவது ஆட்டத்தில் தோல்வி அடைந்தது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் நடந்த 14ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மல்லுக்கட்டின.

சென்னை அணியில் மூன்று மாற்றமாக முரளிவிஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஹேசில்வுட் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்த அம்பத்தி ராயுடு, வெய்ன் பிராவோ மற்றும் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதன்படி டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக நுழைந்தனர். தீபக் சாஹரின் முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோ (0) ஆட்டம் இழந்தார்.

இன்ஸ்விங்காக சீறிய அந்த பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த மனிஷ் பாண்டே அதிரடியாக ஆடினாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 29 ரன்களில் (21 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் வார்னர் (28 ரன், 29 பந்து) பியுஷ் சாவ்லாவின் சுழலில் சில அடி இறங்கி வந்து பந்தை தூக்கினார். அதை எல்லைக்கோடு அருகே பிளிஸ்சிஸ் பிரமாதமாக கேட்ச் செய்தார். அடுத்த பந்தில் வில்லியம்சன் (9 ரன்) பாதி தூரம் ஓடிவிட்டு திரும்பிய போது ரன்-அவுட் ஆக, ஐதராபாத் அணி நெருக்கடிக்குள்ளானது. அப்போது அந்த அணி 4 விக்கெட்டுக்கு 69 ரன்களுடன் (11 ஓவர்) தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்த சூழலில் இளம் வீரர்களான பிரியம் கார்க்கும், அபிஷேக் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து தங்கள் அணியை சிக்கலில் இருந்து மீட்டெடுத்தனர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் சென்னை பவுலர்களை மிரள வைத்தனர். சாம் கர்ரனின் ஒரே ஓவரில் பிரியம் கார்க் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். இதனால் ஐதராபாத்தின் ரன்ரேட் மளமளவென உயர்ந்து 8-ஐ கடந்தது. கடைசி கட்டத்தில் சென்னை அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. அபிஷேக் ஷர்மாவுக்கு 26 ரன்னில் ஜடேஜாவும், 30 ரன்னில் ஷர்துல் தாகூரும் எளிதான கேட்ச்சை நழுவ விட்டனர்.

அணியின் ஸ்கோர் 146 ரன்களாக உயர்ந்த போது அபிஷேக் ஷர்மா 31 ரன்களில் (24 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) டோனியிடம் கேட்ச் ஆனார். இன்னொரு பக்கம் அணியை தூக்கி நிறுத்திய 19 வயதான பிரியம் கார்க் ஐ.பி.எல்.-ல் தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவர் இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. பிரியம் கார்க் 51 ரன்களுடனும் (26 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), அப்துல் சமத் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 165 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு வழக்கம் போல் தொடக்கம் தள்ளாடியது. ஷேன் வாட்சன் (1 ரன்) புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பிளிஸ்சிஸ் (22 ரன்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு வந்த அம்பத்தி ராயுடு 8 ரன்னிலும், கேதர் ஜாதவ் 3 ரன்னிலும் நடையை கட்ட சென்னை அணி பரிதவித்தது. முதல் 10 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 44 ரன் மட்டுமே எடுத்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் 10 ஓவர்களில் ஒரு அணியின் மந்தமான ஸ்கோர் இது தான்.

5-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனியும், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை மீட்க போராடினர். ஆனால் ரஷித்கானின் சுழலில் திணறியதால் ரன்ரேட் நிமிரவில்லை. 15-வது ஓவருக்கு பிறகு டோனியும், ஜடேஜாவும் கொஞ்சம் தீவிரம் காட்டினர். குறிப்பாக ஜடேஜா, புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் ஹாட்ரிக் பவுண்டரி, நடராஜனின் பந்து வீச்சில் சிக்சர் என்று தனது முதலாவது ஐ.பி.எல். அரைசதத்தை எட்டினார்.

ஜடேஜா 50 ரன்களில் (35 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இதன் பிறகு 19-வது ஓவரில் ஒரு பவுண்டரியும், சிக்சரும் டோனி அடித்தாலும் நெருக்கடி தணியவில்லை.

வெற்றிக்கு, கடைசி ஓவரில் 28 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் அப்துல் சமத் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 7 ரன் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. டோனி 47 ரன்களுடனும் (36 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), சாம் கர்ரன் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

சென்னை அணி தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்பது 2014-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

டரம்புக்கு கொரோனா – கவலையில் வடகொரிய ஜனாதிபதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டிரம்ப் விரைவில் குணம் அடைய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த பாதிப்புக்கு மத்தியில் அங்கு நவம்பர் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலும் நடக்கிறது. எனவே தொற்றையும் கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க திரளான தொண்டர்கள் கூடும் பிரசார கூட்டங்களில் பங்கேற்பதன் மூலம், டிரம்புக்கும் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அவர் இந்த கூட்டங்களில் பங்கேற்று தனக்கு ஆதரவு திரட்டி வந்தார்.

இந்த சூழலில், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவின் உதவியாளர்களில் முக்கியமானவரான ஹோம் ஹிக்சுக்கு (வயது 31) நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை டிரம்பும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கும் உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எதிர்பாராத வகையில் அவர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று பாதித்த டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் விரைந்து குணமடைய உள்நாட்டு மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், டிரம்ப் விரைவில் உடல் நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

’அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது வருத்தமளிப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

மேலும், டிரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டன், டயகம வீதியை விஸ்தரிக்க உடனடி நடவடிக்கை

அட்டன் – டயகம வீதியில் இன்று காலை பேருந்து விபத்தொன்று நிகழ்ந்ததில் 52 பேர் காயமடைந்தனர். குறித்த வீதி விஸ்தரிக்கப்படாமையினால் இந்த வீதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

எனினும், இந்த வீதியை விஸ்தரிப்பதற்கான திட்டங்கள் இருந்த போதிலும், ஐந்து நிறுவனங்கள் இந்த வீதி புனரமைப்பிற்காக ஒத்துழைக்க வேண்டியிருந்ததால் இந்தப் பணிகளில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது.

அக்கரபத்தை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, பெருந்தோட்டத்துறை கம்பனி நிறுவனம் ஆகிய ஐந்து நிறுவனங்களில் இதில் தொடர்புபட்டிருந்ததால் இந்த வீதியின் விஸ்தரிப்புப் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

எனினும், இன்று விபத்து நிகழ்ந்தை அடுத்து ஆளுநரின் தலையீட்டில் இதற்கான விஸ்தரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநருடன், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று காலை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர், ஆளுநர் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

 

மண்சரிவு அபாயம் – 5 நாட்களுக்கு வீதி மூடல்!

தலவாக்கலையிலிருந்து  ராவணாகொட ஊடாக நாவலப்பிட்டிய மற்றும் கொத்மலை செல்லும் வீதியில் கலப்பிட்டிய பகுதியில் இன்று (2.10.2020) மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.

இப்பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதால் 5 நாட்களுக்கு வீதி மூடப்பட்டிருக்கும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வீதியினை பயன்படுத்தும் பயணிகள் மாற்று வீதியினை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இராவணகொட வீதி மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பத்தனை, போகாவத்தை ஆகிய பகுதிகளிலிருந்து இராவணகொட கலப்பிட்டிய வழியாக நாவலப்பிட்டி மற்றும் மல்தெனிய, மகாவெலிகம, பெல்டன், ரொஜஸ்டன்கம, ஹரங்கல ஆகிய பிரதேசத்திற்கு செல்லும் பிரதான வீதியில் கலப்பிட்டிய எனும் இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு வீதி சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் வாகன சாரதிகளும், பொது மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், மழைகாலங்களில் இவ்வீதியினூடாக வாகனங்களை செலுத்த முடியாதென வாகன சாரதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

க.கிசாந்தன்

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

மருத்துவத்துறைக்குத் தடம் பதிக்கும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!

0
​தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) சித்தியடைந்து, மருத்துவ பீடத்துக்கு (Medical Faculty) நுழையத் தகுதி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும்...

பல பகுதிகளில் இன்றும் மழை!

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல், காலி...

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...