Home Blog Page 3852

இன்று மாலை அவசர அமைச்சரவைக்கூட்டம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று (21) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் மாலை 4 மணிக்கு இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக வாரந்தோறும் புதன்கிழமையே அமைச்சரவைக்கூடும். எனினும், இம்முறை திங்கட்கிழமையே கூட்டப்பட்டுள்ளது.

‘இ.தொ.காவின் போராட்ட நாயகன் அருள்சாமியின் 61 ஆவது ஜனன தினம் இன்று’

மலையக தொழிற்சங்க வரலாற்றில் புகழோடும் பெருமையோடும் தோன்றிய ஒரு வரலாற்று சாதனையாளர் அமரர் அருள்சாமியின் 61ஆவது ஜனன தினம் (21.09.2020) இன்றாகும்.

1959ம் ஆண்டு தலவாக்கலையில் பிறந்த அவர் ஆரம்ப கல்வியையும் – உயர் கல்வியையும் தலவாக்கலை புனித பெற்றிக் கல்லூரியில்; பயின்று தனது கல்வியை நிறைவு செய்து கொண்டார்.

நீண்டகாலம் தொழிற்சங்க அனுபவமும் நிர்வாகத்திறனும் வாய்ந்தவர் அமரர் எஸ். அருள்சாமி. மலையக தொழிற்சங்க வரலாறு பற்றி பேசும் போது அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தோழோடு தோல்நின்று செயற்பட்டவர்களில் அமரர் அருள்சாமி முக்கியமானவர்.

அவர் இ.தொ.காவில் உதவி மாவட்ட பிரதிநிதியாக, மாவட்ட பிரதிநிதியாக, தொழிலுறவு அதிகாரியாக, பிராந்திய இயக்குனராக, உபதலைவராக பல வருடங்கள் பணியாற்றியவர். அக்காலங்களில் தொழிற்சங்க பிணக்குகளையும் பிரச்சினைகளையும் அவர் கையாண்ட விதம் இ.தொ.காவுக்கு பெருமை சேர்த்ததாகவே விளங்கியது.

தனது 16ஆவது வயதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து கொண்ட அவர் இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் தொழிற்சங்க பிதாமகன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் தலைமையில் தொழிற்சங்க பயணத்தை ஆரம்பித்தார். அரசியல், தொழிற்சங்கம் ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்த அமரர் அருள்சாமி 80களில் சர்வதேச மகாநாடுகளிலும் கலந்து கொண்டு பல்வேறு விடயங்களை சாதித்து காட்டினார்.

மிகவும் நிதானமிக்கவர் அவர். அமைதியான தோற்றமும் ஆழமான சிந்தனை உணர்வும் கொண்டவர். தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கருத்துணர்ந்து எதனையுமே ஆக்கப்பூர்வமாக கையாள்வதில் சமர்த்தராக காணப்பட்டார். தொழிலாளர்களுக்கும் பெருந்தோட்ட சேவையாளர்களுக்கும் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் நம்பிக்கைக்குரியவராக இயங்கியவர் அருள்சாமி. தேசிய அரசியலில் பிரகாசித்த தலைவராக இருந்த அவர் பேச்சாளர், செயல்வீரர் என போற்றப்பட்டவர்.

மத்திய மாகாணசபை உறுப்பினராகவும், அதன் பின்னர் தமிழ் கல்வி அமைச்சராகவும் இருந்ததுடன் பல்வேறு சமூக அமைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

தமிழ் கல்வி அமைச்சராக மத்திய மாகாணத்தில் இருந்த பொழுது மலையக கல்வித்துறையில் பல்வேறுபட்ட அணுகுமுறைகளை கையாண்டு மலையகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தினார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானோடு இணைந்து 3179 ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுப்பதற்கும், மலையக இலக்கிய வாதிகளை கௌரவிக்கும் முகமாக இரு தடவைகள் மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழாக்களை நடாத்தி கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம்; களம் அமைத்துக் கொடுத்த பெருந்தகை அருள்சாமி. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர்சபை பணிப்பாளராகவும் தலைவராகவும் பணியாற்றிய அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் கூட்டிணைப்பு பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

மலையகத்தில் கலை கலாச்சார ரீதியாகவும், விளையாட்டுத் துறைகளை மேம்படுத்தவும் பல்வேறு ஆக்கபூர்மான வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இ.தொ.கா. நடாத்திய தொழிற்சங்க போராட்டங்களில் அவரது பங்களிப்பு பாரிய அளவில் பரிணமித்தது. அவரே பல போராட்டங்களை நெறிப்படுத்தியிருந்தார். அவரது பேச்சு தொழிலாளர்களை உற்சாகப்படுத்துவதோடு ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்தது.

சுமார் 50 ஆண்டு காலம் அமரர் தொண்டமானோடு பயணித்த அவர் இ.தொ.காவில் இருந்தவரை நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் பாத்திரமாகவும் செயற்பட்டார். சாதுரியமாகவும் சாந்தமாகவும் எப்பொழுதும் காணப்பட்ட அவர் 59வது வயது வரை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தவராக இருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களின் சமூக அரசியல் துறைகளில் மாற்றம் ஏற்பட்டு வரும் இக்காலகட்டத்தில் அவரது இழப்பு மலையக சமூகத்திற்கு மட்டுமின்றி, கிராமப்புற மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இன்நாளில் இவரது ஆத்ம சாந்திக்காக நாமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தேவதாஸ் சவரிமுத்து

இ.தொ.கா. ஊடக இணைப்பாளர்

மலையகத்தில் தொடர் மழை! இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!!

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நுவரெலியா, கந்தப்பொல, தலவாக்கலை, நானுஓயா, கொட்டக்கலை, அட்டன், மஸ்கெலியா, டிக்கோயா, அக்கரப்பத்தனை, டயகம, போடைஸ், வட்டவளை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையினால் மேல்கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கொத்மலை ஓயா பெருக்கெடுத்துள்ளதுடன் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு சனிக்கிழமை காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளன. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினால் மேலும் ஒரு வான் கதவு திறக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரேந்தும் பகுதிகளை அண்மித்து காணப்படும் குடியிருப்பாளர்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் வாகன சாரதிகள் முன்விளக்குகளை ஒளிரவிட்டு அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா நகரை அண்மித்த பகுதி, நானுஓயா பங்களாவத்தை பகுதி மற்றும் பல இடங்களில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நாவலப்பிட்டியிலிருந்து கெட்டபுலா சந்தியின் ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் 20.9.2020 அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது. இதனால் கொத்மலை, பூண்டுலோயா, திஸ்பனை ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கைகளில் அப்பிரதேச மக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்துடன் மின் இணைப்புகள் மீதும் குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. இம்மழை காரணமாக தலவாக்கலை நகர் புறங்களில் மக்கள் நடமாட்டம் பெரிதும் குறைவடைந்துள்ளதையும் காணமுடிகிறது. தலவாக்கலை மேல்கொத்மலை திட்டத்தை அண்டிய பகுதிகளில் கடுங்குளிர் காலநிலை காணப்படுவதால் இப்பிரதேச மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர். இம்மழையுடன் மாலை பனி மூட்டமும் காணப்படுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் அவதானமாக செலுத்த வேண்டும்.
குறிப்பாக அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதி மற்றும் பங்களாவத்தை பகுதியில் கடுமையான பனி மூட்டம் காணப்படுவதால் அப்பாதை வழியாக பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மண்சரிவு மற்றும் பாறைகள் சரிவு, மரம் முறிந்து விழுதல் போன்ற அபாயமும் ஆங்காங்கே நிலவுவதால் மக்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

நாளை கூடுகிறது பாராளுமன்றம் – ’20’வும் சமர்ப்பிப்பு!

பாராளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென பாராளுமன்றத்தில் நீதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதனை சட்டரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கு ஒருவாரகாலம் வழங்கப்படும்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2 கோடியே 23 லட்சம் பேர் தப்பினர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 57  ஆயிரத்தை லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 57 ஆயிரத்து 400 ஐ கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே  ஏழு லட்சத்து 55 ஆயிரம்  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 23 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

மாகாணசபை முறைமை அவசியம் – சஜித் அணி வலியுறுத்து

” இனப்பிரச்சினைக்கான தீர்வாகமுன்வைக்கப்பட்ட மாகாணசபைமுறைமை நீடிக்கப்படவேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும். ஆனால் 13 தொடர்பில் ஆளுங்கட்சி இரட்டைவேடம் போடுகின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மாகாணசபை முறைமை நீக்கப்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரால் வெளியிடப்பட்டுவரும் கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை எமது கட்சி, அணி  ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. எனினும், 13ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அன்று எதிர்ப்பு தெரிவித்து முதலாவது மாகாணசபைத் தேர்தலை புறக்கணித்து  போராட்டம் நடத்திய சுதந்திரக்கட்சி பின்னர் மாகாணசபை  முறைமையை ஏற்றுக்கொண்டது. இன்று வேறுகோணத்தில் கருத்து வெளியிடப்படுகின்றது.

குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வு அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். அதற்காக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை நீடிக்கவேண்டும். இதுவிடயத்தில் எமது நிலைப்பாடு மாறாது, இது விடயத்தில் அரசாங்கம் தமது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும்.” – என்றார்.

இரத்தினபுரியிலிருந்து கொழும்புக்கு ஒருமணிநேரம் – நெடுஞ்சாலை பணி துரிதம்

கொழும்பையும் இரத்தினபுரியையும் இணைக்கும் ருவன்புற அதிவேக நெடுஞ்சாலையின் அமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நெடுஞ்சாலைகள் காரியாலய பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் இரத்தினபுரியிலிருந்து கொழும்புக்கு ஒரு மணித்தியால துரித பயணத்தில் சென்றடையலாம் என மாவட்ட நெடுஞ்சாலைகள் பொறியியலாளர் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக பிரதான சந்தியான கஹதுடுவ நுழைவாயிலில் இருந்து பெல்மதுளை வரையிலான 73. 9 கிலோ மீற்றர் வீதியே இத்திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்கிணங்க இதன் முதற் கட்டப்பணிகள் கஹதுடுவ முதல் இங்கிரிய வரையுள்ள 23.4 கிலோ மீற்றர்களும் இரண்டாம் கட்ட பணிகள் இங்கிரிய முதல் இரத்தினபுரிவரையுள்ள 21 கிலோ மீற்றர்களும் மூன்றாம் கட்டமாக இரத்தினபுரி முதல் பெல்மதுளை வரையிலான 28.6 கிலோ மீற்றர்களும் மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இவ்வீதி அபிவிருத்திப் பணிகள் மூன்று வருட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளதுடன், கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான இதன் முதற்கட்டப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் 80 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அந்நிறுவனங்களுக்கு அதிகளவு நிதியை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் அமைப்புப் பணிகளை உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

’20’ தொடர்பில் ஆராய்வு – விரைவில் முடிவு! திகா அறிவிப்பு!

” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர்பீடம் விரைவில் கூடி ஆராய்ந்து முடிவை அறிவிக்கும்.” – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 20ஆவது  திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் சமுகத்தில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேற்படி சட்டமூலத்திலுள்ள உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். எமது மலையக புத்திஜீவிகளுக்கும் கருத்துகளை முன்வைப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தச்சட்ட மூலத்திலுள்ள சில சரத்துகள் தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாடு இல்லை. ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி திருத்தப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என்றார்கள். ஆனால், பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போதே திருத்தப்படும் என தற்போது அறிவித்துள்ளனர். எனவே, எவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது எமக்கு தெரியாது.

பாராளுமன்றத்தில் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர்பீடம்கூடி 20 தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும். ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. அதனையே நாமும் விரும்புகின்றோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

ஹப்புத்தளையில் குளவிக்கொட்டு! 10 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு!!

ஹப்புதளையில், ஹப்புத்தளை பெருந்தோட்டப் பிரிவில் தேயிலைத் தளிர்களை கொய்து கொண்டிருந்த 10 பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (19) பிற்பகல் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

குளவிக் கொட்டுக்குஇலக்கான 10 பெண் தொழிலாளர்களும், ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர். இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

தொழில் கடமைகளில் ஈடுபட்டிருந்தவேளையில்,மரமொன்றிலிருந்து குளவிக்கூடு கலைந்து, கடமைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை கொற்றத் தொடங்கின. உடனடியாக அத் தொழிலாளர்கள்,தோட்ட நிருவாகத்தின் மூலம் வாகனமொன்றில் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எம். செல்வராஜா, பதுளை

‘கொவிட் -19’ – இலங்கையில் மேலும் 10 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 10 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,070 ஆக அதிகரித்துள்ளது.

198 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

பிரதேச செயலகத்தை நோர்வூட்டுக்கு மாற்றுக: பொகவந்தலாவயில் நாளை கை எழுத்து இயக்கம் !

0
நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக் கோரும் கை எழுத்து இயக்கம் நாளை (25) பொகவந்தலாவ பகுதியில் இடம்பெறவுள்ளது. மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும் இந்தத் தொடர் கை எழுத்துக்குத் தமது...

சீரற்ற காலநிலை: நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களில் 147 குடும்பங்கள் பாதிப்பு!

0
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நுவரெலியா உட்பட நான்கு மாவட்டங்களில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (24) பகல் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர...

2.5 மில்லியன் டொலர்கள் ஹேக்கர்களுக்கு பூஜை: சஜித் குற்றச்சாட்டு!

0
" நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு மத்திய வங்கியிடமே முன்னர் காணப்பட்டு வந்தது. பின்னர் மேற்கொண்ட புதிய ஒழுங்குமுறைகள் சட்ட விதிகளுக்கு ஏற்ப பொது கடன்...