Home Blog Page 3862

‘ஜீவனின் செயற்பாடுகள் முழு மலையகம் சார்ந்ததாக அமையவேண்டும்’ – அனுசா

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் புதல்வியும், சட்டத்தரணியுமான அனுசா சந்திரசேகரன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு,

நேர்கண்டவர் – பி. கேதீஸ், தலவாக்கலை

கேள்வி – மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பதவிநிலைகளிலிருந்தும் நீங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபையில் முடிவு மேற்கொள்ளபட்டுள்ளதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது இது தொடர்பாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில் – நானும் தேசிய சபையில் இருக்கின்றேன். அதில் நானும் ஒரு உறுப்பினர். எனக்கு தேசிய சபை கூடுவது தொடர்பாக எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. என்னுடைய ஆதரவாளர்களும் எத்தனையோ பேர் தேசிய சபையில் இருக்கின்றனர். அவர்களுக்கும் எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை. தேசிய சபை கூட்டப்படபோகின்ற விஷயம் எங்களில் ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு சார்பானவர்களையும் அவர்களுக்கு தேவையானவர்களையும் வைத்து தேசிய சபை கூட்டப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண ஒரு குழுவினால் என்னை மலையக மக்கள் முன்னணியிலிருந்து நீக்கிவிட முடியாது. மலையக மக்கள் முன்னணயின் உறுப்பினர்கள் என்னுடன் இல்லை என்றால் இந்த 17,107 பேர் யார்? சந்தா பணம் எங்கே செல்கின்றது. நிதி அறிக்கை எங்கே? உறுப்புரிமையை பழி வாங்கும் நோக்கத்தோடு நீக்குவது ஒரு கேவலமான விடயம். அதுதான் இப்போது நடந்தேறியிருக்கின்றது.

இது தொடர்பாக எனக்கு அறிவிக்கும்போது அதற்கான நடவடிக்கையை எடுப்பேன். தனியொருவரை இவர்கள் நீக்கவில்லை. மலையக மக்கள் முன்னணியின் 17107 பேரை நீக்கியிருக்கின்றார்கள். மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்திற்கு எதிராக எனது போராட்டம் அமையாது நான் எந்தவிதத்திலும் கட்சியின் யாப்பை மீறவில்லை. நான் கட்சிக்கு எதிராக செயற்படவுமில்லை.

கேள்வி – பாராளுமன்றத் தேர்தலில் உங்களுக்குக் கிடைத்த ஆதரவு பற்றிய உங்கள் கணிப்பீடு எவ்வாறு உள்ளது? அரசியலில் தொடர்வதற்கான சக்தியை அளித்திருக்கிறதா?

பதில் – நிச்சயமாக, இளைய சமூகத்தவர்களும், குறிப்பாக பெண்களும், மலையக மக்கள் முன்னணியையும் என் தந்தையின் அரசியலை உண்மையாக நேசித்தவர்களும் மலையக அரசியலில் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதனை எனக்கு வாக்களித்ததன் மூலம் நிரூபித்துள்ளார்கள். தனிநபராக பல்வேறு சதிகளையும் தடைகளையும் தாண்டி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது தந்துள்ளது.

கேள்வி- இத் தேர்தலில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

இந்த தேர்தலில் நான் முழுக்க முழுக்க என் தந்தை வழியில் மக்கள் சக்தியை நம்பியே களமிறங்கினேன். எந்த இடத்திலுமே எனக்கு எதிர்ப்புகள் இருக்கவில்லை. ஆனால் எனக்கு ஆதரவளித்த பலர் ஏதாவது வேறு ஸ்தாபனங்களுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகினார்கள். மக்கள் மத்தியில் செல்வதற்கு ஸ்தாபன அமைப்பு முறை அவசியமென்பதனை உணர்கிறேன்.

கேள்வி – வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் இறங்கும் உத்தேசம் உண்டா? மண்வெட்டிச் சின்னத்தில் தானா?

பதில் – மாகாண சபைத் தேர்தலில் நிச்சயமாக களமிறங்குவேன். கள நிலைமைக்கேற்ப நல்ல முடிவுகளை எடுப்பேன்.

கேள்வி – நீங்கள் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்ட மாட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இத்தேர்தலைப் பயன்படுத்தி மண்வெட்டியினதும் தலைவர் சந்திசேகரனினதும் செல்வாக்கு இத்தனை வருடங்களின் பின்னர் எவ்வாறு இருக்கிறது என்பதை நாடிபிடித்துப் பார்க்கவே போட்டியிட்டீர்கள் என்பதும் தெரிந்த விஷயம்தான். இந்த பரீட்சார்த்த முயற்சி வெற்றியளித்துள்ளதா என்பதே கேள்வி

பதில் – வெற்றி தோல்வியென்பது மக்களின் வரவேற்பை பொறுத்தது. எனது தந்தையினது நினைவுகளும் கொள்கைகளும் மக்கள் மத்தியில் இன்றும் நிலைத்து வாழ்வதனை அறிந்து கொண்டேன். அவரது உணர்வுபூர்வமான அரசியல் இன்று மட்டுமல்ல; என்றும் மக்கள் மனதில் வாழும் என்பதில் சந்தேகமே இல்லை. என் தந்தையின் வீரமிக்க அரசியலில் பங்கெடுத்து இன்று ஓய்வு பெற்றவர்களின் பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளும் எனக்கு முழுமையாக ஆதரவளித்து செயற்பட்டமை எனது தந்தையின் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். அதே போன்று இன்றைய இளைஞா்களும் எனது அரசியலையும் மாற்றத்தையும் விரும்பியதும் எனது வெற்றியாகும்.

கேள்வி – இன்றைய பாராளுமன்றத்தில் பல்வகையான கருத்துகளையும் சித்தாந்தங்களையும் கொண்டவர்கள் உள்ளார்கள். இப் பாராளுமன்றத்தை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில் – பாராளுமன்றத்தில் எல்லா வகையான கருத்துக்களையும் பிரதிபலிக்கும் பல கட்சி சார்ந்தவர்கள் இருக்கலாம். ஆனால் நாம் என்ன சொல்கிறோம் எமது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதில்தான் எமது அடையாளம் பதியப்படும். மலையக சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காகவும் முழு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்காவும் என் தந்தை தனிநபராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய போதும் பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தடம் மாறவில்லை. ஒரு களத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதுதான் எமது வலிமை.

கேள்வி- தமிழ் முற்போக்கு கூட்டணியில் அறுவரும் இ.தொ.கா.வில் இருவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒருவருமாக 9 மலையகப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள்ளனர். இவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக, பிரச்சினைகளாக நீங்கள் எவற்றை எல்லாம் பட்டியலிடுவீர்கள்?

பதில்- எத்தனை பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என்பது எமது எண்ணிக்கையாக இருக்கலாம். இவர்களின் செயற்பாடு எமது சமூக உரிமைகளை எவ்வாறு வெற்றிகொள்ளப் போகிறது என்பதில்தான் இதன் உண்மையான அர்த்தம் அடங்கியுள்ளது. ஐந்து வருடகாலத்தை வெறுமனே கழிப்பதிலும், அரச நிதி ஒதுக்கீட்டில் ஒரு சில அபிவிருத்தி வேலைகளை செய்வதும், எனது சமூக உயர்வுக்கு பயனற்ற விடயங்களை பேசுவதிலும் காலத்தை கழிக்காமல் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பல தசாப்தங்கள் பின்னடைந்த நிலையில் காணப்படும் எம் மக்களுக்கு கெளரவமான சமூக அந்தஸ்துக்காக இவர்கள் செயற்பட வேண்டும்.

கேள்வி – மறைந்த ஆறுமுகன் தொண்டமான் பற்றிய உங்கள் அனுபவங்கள் பற்றி?

பதில் – எனது தந்தையுடன் புரிந்துணர்வுடனான உறவினை கொண்டிருந்தார். இ.தொ.கா என்ற மிகப்பெரும் ஸ்தாபனத்தை உயிரோட்டமாக வைத்திருந்த ஆளுமைமிக்கவர். கட்சி ரீதியிலான இடைவெளி இருந்த போதும் கூட சமூகம் என்ற அடிப்படையில் என் தந்தையும் அவரும் பயனுள்ள விடயங்களை உண்மையாகவே ஆராய்ந்து ஒன்றிணைந்து செயற்பட்டமை இருவரிடமுமே இருந்த உயரிய குணமாகும்.

கேள்வி – ஜீவன் தொண்டமான் – உங்கள் அளவீடுகள் எவ்வாறு உள்ளன?

பதில் – பேசுவதை குறைத்து செயலில் காட்டுவேன் என்று அவரே அடிக்கடி கூறுகின்றார். இ.தொ.கா என்ற ஸ்தாபனத்தின் செயலாளராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தாலும் கூட இவரது செயற்பாடுகள் முழு மலையகம் சார்ந்ததாக அமையும் என்பது என் எதிர்பார்ப்பு.

கேள்வி – ஆயிரம் ரூபா தின வேதனம் கிடைக்குமா? அடிபட்டுப் போய்விடுமா?

பதில் – இது கம்பனிகளும்,கூட்டு ஒப்பந்த கட்சிகளும் மற்றும் அரசாங்கமும் ஒன்றுகூடி முடிவெடுக்கப்பட வேண்டிய விடயம். ஆயிரம் ரூபாய் என்ற அடையாளத்துக்குள் அடக்கப்படாமல் தொழிலாளர்களின் வாழ்க்கை செலவுக்கேற்ற கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதுவே எனது நிலைபாடு.

கேள்வி – இந்தத் தோட்டத் தொழிலுக்கு அப்பால் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்றால் அதுபற்றிய உங்கள் பார்வையை பகிர்ந்து கொள்வீர்களா?

பதில் – இப்போதும் எமது இளைஞர் யுவதிகள் தோட்டத் தொழிலைக் கைவிட்டு விட்டு இடம்பெயர்ந்து செல்வதை காண்கிறோம்.பெருந்தோட்டத்துறையில் காணப்படும் நெருக்கடிகள் குறைபாடுகள் நேர்மையாக இனம் காணப்பட்டு தொழிலாளர்கள் நம்பிக்கை பெறும் வகையில் மாற்றப்படாவிட்டால் எம்மவர்கள் வேறு தொழில் நாட்டம் கொள்வதை தவிர்க்க முடியாது.

கேள்வி – மிளகு, கிராம்பு, கருவா போன்ற உப உணவு உற்பத்திகளை தரம் சார்ந்த பொருட்களாக உயர்த்த வேண்டும் என அரசு நினைக்கிறது. இது ஒரு வாய்ப்பு. காணி உரிமையற்ற தொழிலாளர்கள் இதை எப்படி பயன்படுத்தி முன்னேறலாம் எனக் கருதுகிறீர்கள்?

பதில் – எம் மக்களை காணி உரிமையுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் எனது தந்தை 7 பேர்ச்சஸ் காணியுடன் வீடமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காணி உரிமையற்ற நிலையில் எமது மக்களின் எல்லா தொழிலும் கூலித் தொழிலாகவே அமையும். உற்பத்திசெய்யப்படும் பயிர்கள் எவ்வளவு இலாபம் தருகின்றன என்பதைப் போன்றே அதனை உற்பத்தி செய்பவர்களின் நலன்களும் கவனிக்கப்பட வேண்டும். அல்லது கோப்பி தேயிலை பயிர்ச்செய்கை போலவே இதுவும் அமைந்து விடும். மண் உரிமையே எம் மக்களின் சொத்துரிமையுமாகும்.

இப் பாராளுமன்றத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இல்லை. அதை ஒரு வெற்றிடமாகப் பார்க்கி்றீர்களா? மாகாண சபைக்கு அவர் சுயேட்சையாகவாவது போட்டியிடலாம் எனக் கருதுகிறீர்களா? அவரைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

அவர் பாராளுமன்ற தேர்தலுக்கு நியமிக்கப்படாமை மற்றும் தேசியபட்டியல் கிடைக்காமை பற்றி பல்வேறு கருத்துக்களை அவரும் அவர் சார்ந்த ஸ்தாபனமும் பதிவிட்டுள்ளன.

மாகாண சபையில் போட்டியிடுவது பற்றிய அவரது நிலைபாடு இதுவரை தெரியவில்லை. தனது செயற்பாடு எப்படி அமைய வேண்டும் என்பதனை அவர் தீர்மானிப்பார் என எண்ணுகிறேன்.

கேள்வி – மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளராக பேராசிரியர் விஜயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உங்களுடைய கருத்து எவ்வாறானது?

பதில் – யாராயிருந்தாலும் மாநாட்டின் மூலம் தான் கட்சியின் உயரிய பதவிகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது யாப்பின் அடிப்படையாகும். செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம், பொருளாளர் என மூன்று முக்கிய பதவிகளும் ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கட்சியில் உறுப்பினர்கள் இல்லாமல் வீழ்ச்சி கண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கட்சியின் நிர்வாகம் இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது ஆச்சரியத்தை தரவில்லை என்றாலும் மிக வேதனையை தருகின்றது.

கேள்வி – மலையக மக்கள் முன்னணியின் அங்கத்தவர்களிடம் அறவிடப்படும் சந்தா பணத்தை நிறுத்த போவதாக கூறியிருந்தீர்களே இது தொடர்பாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில் – எமது தோட்டத் தொழிலாளர்கள் வெயிலிலும் கடும் குளிரிலும் மழை காலங்களிலும் உழைக்கிறார்கள். அவ்வாறு உழைத்து தொழிற்சங்கங்களுக்கு கொடுக்கும் பணமே சந்தா. அவ்வாறான பணத்தை கொள்ளை அடிப்பதும், மக்களுக்கான சேவைகளை செய்யாமல் சாட்டுகள் சொல்வதும், காரியாலங்கள் வேலை நாட்களில் கூட இயங்காமல் மூடிக் கிடப்பதும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் செய்யும் ஒப்பந்த மீறலாகும். ஆகவே தொழிலாளர்கள் என் தந்தைக்காக தொழிற்சங்க உறுப்பினர்களாக இருப்போர் இனியும் ஏமாற்ற பட கூடாது என நினைக்கிறேன் அதனால்தான் இந்தத் தீர்மானம்.

புதிய தலைவர் யார்? நாளை இறுதி முடிவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது தொடர்பில் இறுதி முடிவு நாளை (14) எட்டப்படவுள்ளது என சிறிகொத்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்காக கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது தலைமைத்துவப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கருஜயசூரிய, வஜிர அபேவர்தன மற்றும் ருவான் விஜேவர்தன ஆகிய மூவரில் ஒருவர் புதிய தலைவராக தெரிவுசெய்யப்படவுள்ளனர் எனவும் மேற்படி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர், ஐ.தே.க. தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் 74ஆவது ஆண்டு நிறைவு விழாவன்று புதிய தலைவரை பெயரிடுவதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும், கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு காணப்படாததால் அது ஒத்திவைக்கப்பட்டது.

எனினும் தற்போது மூவர் மாத்திரமே போட்டியில் முன்னிலையில் இருப்பதாகவும், இவர்களில் ஒருவரை தலைவராக நியமிப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

’20’ இல் கைவைக்கிறது அரசு புதிய வர்த்தமானி விரைவில்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தப்பட்டு, புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.

பாதுக்க பகுதியில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வொன்றின்பின்னர், 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் விமல்வீரவன்ஸ மேலும் கூறியதாவது,

” உத்தேச அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள குறைப்பாடுகளை நான் உட்பட கட்சி தலைவர்கள் பிரதம அமைச்சரிடம் சுட்டிக்காட்டினோம். இதனையடுத்து 20 தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரை அறிக்கை கிடைக்கும்வரை தற்போதைய 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில்லை எனவும், பரிந்துரைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளியாகும் வர்த்தமானி அறிவித்தலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு திங்கட்கிழமை கூடவுள்ளது. திருத்தப்பட்ட 20 ஐ சமர்ப்பித்தால் நாடாளுமன்றத்தில் எவ்வித சிக்கலும் இன்றி மூன்றிலிரண்டு பெரும்பானமையை பெற்றுவிடலாம்.” – என்றார் விமல்.

இலங்கையில் 30 ஆயிரத்து 54 கைதிகள்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், கடந்த 9 ஆம் திகதி நிலவரப்படி 30 ஆயிரத்து 54 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைகளில் 11 ஆயிரம் கைதிகள் மட்டுமே இருக்க முடியும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

28 ஆயிரத்து 469 ஆண் கைதிகளும், ஆயிரத்து 585 பெண் கைதிகளும் தற்போது சிறைகளில்தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்த ஆயிரத்து 404 கைதிகளும், வெளிநாட்டு கைதிகள் 195 பேரும் உள்ளனர். தண்டனை பெற்ற தங்களது தாய்மாருடன் 43 குழந்தைகள் சிறைகளில் உள்ளனர்.

‘சுட்டு வீழ்த்துக்கள்’ – வடகொரிய ஜனாதிபதி உத்தரவு!

கொரோனா பரவலை தடுக்க சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார்.

உலகமே கொரோனாவால் நடுங்கிக் கொண்டிருக்க, வடகொரியா மட்டும், கொரோனா பாதிப்பு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடுவது இல்லை.

இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவலை தொடர்ந்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடியது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையையும் வடகொரியா அமுல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட வடகொரியா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.

அரசாங்கத்துடன் சங்கமிக்குமா மு.கா.? உயர்பீடக் கூட்டத்தில் வாக்குவாதம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் பரபரப்புடனேயே ஆரம்பித்தது.

மு.காவின் எம்.பிக்கள் மூவர் அரசுடன் பேச்சு நடத்துகின்றனர் என்று பலராலும் கூறப் படுகின்றது.முகநூல்களிலும் எழுதப்பட்டுள்ளன. இது தொடர்பில் விளக்கம் தர வேண்டும் என்று ஒருமித்த குரலில் பலர் கேள்வி எழுப்பினர்.

” ஆம். பேசுகின்றோம். இதில் என்ன தவறு இருக்கின்றது?” – என்று கேள்வி கேட்டவாறு எழுந்து நின்று ஒரு போடுபோட்டார் அம்பாறை மாவட்ட எம்.பி. பைசல் காசீம். அம்பாறை மாவட்ட மற்றொரு எம்.பியான ஹரீஸும் அடுத்து எழுந்து நின்று கடும் தொனியில் பேச ஆரம்பித்தார்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதா? அல்லது இல்லையா ? என்பதைப் பற்றி பேசும் தருணம் அல்ல இது. முஸ்லிம் சமுகத்தின் பாதுகாப்பு, இருப்பைப் பற்றி பேசும் தருணமே இது.

சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அது தொடர்பில் மக்கள் எங்களிடம்தான் கேள்வி கேட்பார்கள். மாறாக இங்கு வெட்டியாகப் பேசுகின்ற உயர்பீட உறுப்பினர்களிடம் அல்ல.

“இங்குள்ள பலர் என்னைத் தோற் கடிக்கவே முயற்சி செய்தனர். அல்லாஹ்வுக்கு அடுத்து எனது மாவட்ட மக்கள்தான் என்னைத் தோற்கடிக்க முடியும். எனக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்துக்கு இணங்கவேதான் நான் செயற்படுவேன்.

“எனது எந்தவொரு முடிவும் கட்சிக்கோ – தலைவருக்கோ துரோகம் இழைப்பதாக இருக்கமாட்டாது.

”முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினைகளை அரசுடன்தான் பேச வேண்டும். அரசுடன் பேசாமல் வேறு யாருடன் பேச சொல்கிறீர்கள்?

வெட்டித்தனமாக இங்கு யாரும் பேசமுனையக் கூடாது – என்று கடும் ஆக்ரோமாகக் ஹரீஸ் எம்.பி. பேசியபோது உயர்பீடத்தில் பெரும் அமைதி நிலவியது. யாரும் மறு பேச்சு பேசவே இல்லை. ஹரீஸ் எம்.பியின் கருத்துக்களில் நியாயம் உள்ளது என்றார் மு.கா. தலைவர் ஹக்கீம்.

மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான ஹாபீஸ் நஸீர் அஹமட் பேசும்போதும், தேசியப் பட்டியல் தராமல் ஏமாற்றிய வருடன் இனி நமக்கென்ன பேச்சும் உறவும்? நாம் நமது சமூகம் தொடர்பான விட யங்களை அரசுடன்தான் பேச வேண்டும் – என்றார்.

திருகோணமலை மாவட்ட எம்.பியான தெளபீக் இந்தக் கூட்டத்தில் ஏதும் பேசாவிட்டாலும் ஏனைய எம்.பிக்களின் கருத்துக்களோடு ஒத்துப்போனமையை அவதானிக்க முடிந்தது.

தேசியப் பட்டியல் விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்ற ரீதியில் கருத்துக் கூறிய ஹரீஸ் எம்.பியை மறைமுகமாகச் சாட முனைந்தார் செயலாளர் நிஸாம் காரியப்பர்.

இதற்கும் உயர்பீடத்தினரின் தேசியப் பட்டியல் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார் மு.கா. தலைவர் ஹக்கீம். தேசியப் பட்டியல் விடயத்தில் யாரும் எவருக்கும் துரோகம் செய்யவில்லை. நேர்மையாகவே நடந்தோம் – என்றார் ஹக்கீம்.

அடுத்து தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டன. ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக வன்னி சென்று உரையாற்றியது மகா தவறு என்று ஹக்கீம் மீது ஒட்டுமொத்த உயர் பீடமும் குற்றம் சுமத்தியது.

இதற்குப் பதிலளித்த ஹக்கீம், நான் அவ்வாறு பேசினாலும் பேசாவிட்டாலும் ரிஷாத் வெற்றி பெற்றுத்தான் இருப்பார். ரிஷாத் தோற்கடிக்கப்படும் நேரமல்ல இது. இந்தத் தேர்தலில் அவர் தோல் வியுற்றிருந்தால் இனவாதிகளின் அடுத்த இலக்கு நான்தான் என்று சுருக்கமாகப் பேசி உயர்பீடத்தினரின் வாயை மூடினார்.

பொத்துவில் மற்றும் சாய்ந்தமருது ஆகிய இரு ஊர்களும் நமக்கப் பின்னடைவு. சாய்ந்தமருதில் எனக்குக் காட்டப்பட்டது வெறும் மாயை. இறுதிக் கூட்டத்தைப் பார்த்து முழு சாய்ந்தமருதும் எம்மோடு தான் என்று நினைத்தேன். தேர்தல் முடிவு எனது எண்ணத்தைச் சிதைத்து விட்டது என்று ஹக்கீம் கூறினார்.

மூவாயிரம் வாக்குகளாவது கிடைத்திருக்குமா? என்று உயர்பீடத்தை நோக்கிக்கேள்வி எழுப்பினார் ஹக்கீம். அப்போது, ஒட்டுமொத்த உயர்பீடத்தினரும் ஆம் சேர். அவ்வளவுதான். அதைவிடக் கூடியிருக்காது என்றனர்.

கூட்டத்தின் சுருக்கம் அல்லது முடிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்த உயர்பீட உறுப்பினர் ஒருவர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு மு.கா. எம்.பிக்கள் ஆதரவளிப்பர் அல்லது அரசுடன் இணைவர் போல்தான் உள்ளது. பகிரங்கமாகவே கூறி விட்டார்கள் அரசுடன் பேசுகின்றோம் – பேச வேண்டும் என்று. இதைவிட வேறென்ன வேண்டும்? என்றார்

பொகவந்தலாவையில் கொடூரம்! மாணவனை தரையில் தூக்கி அடித்த நபர் கைது!!

பாடசாலை மாணவரொருவரை தரையில் தூக்கி அடித்ததாக கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரை கைதுசெய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு மாணவர்களையும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எச்சரித்து, கண்டித்து, ஆலோசனை வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தனது மகனை தாக்கிய மாணவனின் வீட்டுக்குசென்ற தந்தை, மாணவனை தாக்கியுள்ளார்.இதனால் காயமடைந்த மாணவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே தரையில் தூக்கி அடித்தார் எனக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்

தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி! தீர்வை பெற்றுக்கொடுத்தார் ஜீவன்!!

ஹட்டன் செம்புவத்த தோட்ட தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று (12.09.2020) நடவடிக்கை எடுத்துள்ளார்.

சம்பளப் பிரச்சினை, கொழுந்து நிலுவை, வெளிநாட்கள் தோட்ட வேலைக்குவருதல் உட்பட மேலும் சில விடயங்களை மையப்படுத்தி ஹட்டன், செம்புவத்த தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரு நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்றும் வேலைக்கு செல்லவில்லை.

இந்நிலையில் செம்புவத்த தோட்டத்துக்கு இன்று நேரில் பயணம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது தொழிலாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்ததுடன், தீர்வுகளை பெற்றுதருமாறும் கோரினர்.

இதனையடுத்து செம்புவத்த தோட்டத்துக்கு உரித்தான நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க, மக்கள் போராட்டத்தை ஜீவன் தொண்டமான் வெற்றிகரமாக நிறைவுசெய்து வைத்தார்.

இதன்படி தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட நாட்களுக்கு முழு பெயர் வழங்குவதற்கும், குறித்த தோட்டத்திலுள்ள தலைவர்களின் அனுமதியுடனேயே வேறு தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துவருவதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

லிந்துலையில் மோதல் – அறுவர் கைது! மோட்டார் சைக்கிளும் கொளுத்தப்பட்டது!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை ஒடின்டன் தோட்டத்தில் நேற்றிரவு இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், மோட்டார் சைக்கிளொன்றும் தீயிட்டுக்கொளுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மோதல் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸாரால் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

நிருபர் –  பா.பாலேந்திரன்

மலையக மக்கள் முன்னணியின் போலி நாடகம் – அம்பலப்படுத்தும் ஆசிரியர் முன்னணி

” எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மலையக மக்கள் முன்னணி உரிய பதில்களை வழங்குவதில்லை. இதன்காரணமாக அவ்வமைப்புக்கான ஆதரவை கடந்தவருடமே விலக்கிக்கொண்டுவிட்டோம்.இந்நிலையில் எம்மை விலக்கிவிட்டதாக தற்போது போலி தகவல் பரப்பிவருகின்றனர்.” – என்று மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச்செயலாளர் சின்னையா ரவீந்திரன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் 12.09.2020 அன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்கள் முன்னணியிலிருந்து, மலையக ஆசிரியர் முன்னணியை விலக்கிவிட்டதாக கடந்த 31 ஆம் திகதி லோரன்ஸ் அறிவிப்பு விடுத்துள்ளார். இது முற்றிலும் தவறான தகவலாகும். ஏனெனில் முன்னணிக்கான ஆதரவை நாம் கடந்த வருடமே விலக்கிக்கொண்டுவிட்டோம். இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்துவிட்டோம்.

2016 ஆம் ஆண்டு முதல் மலையக மக்கள் முன்னணியின் துணை அமைப்பாக மலையக ஆசிரியர் முன்னணி செயற்பட ஆரம்பித்தது. எனினும், அம்முன்னணியுடனான பயணத்தை தொடரமுடியவில்லை. எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எழுத்துமூலம் பல அறிவித்தல்களைவிடுத்தும் பதில்கள் கிடைக்கவில்லை. எனவே, தனித்து செயற்படபோவதாக கடந்த 2019 ஜுலை மாதமே எழுத்துமூலம் அறிவித்துவிட்டோம். எனவே, கடிதம் கிடைக்கவில்லை என கூறப்படுவதெல்லாம் அப்பட்டமான பொய்யாகும்.

மலையக ஆசிரியர் முன்னணி கடந்த பொதுத்தேர்தலின்போது அனுசா சந்திரசேகரனுடன் இணைந்து செயற்படவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கே ஆதரவு வழங்கியிருந்தது. சமுகப்பிரச்சினை, அரசியல் பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்தியே எமது முடிவுகள் அமையும். எனவே, இவ்விரு பிரச்சினைகளையும் தீர்க்ககூடிய தரப்பொன்று வருமானால் எதிர்காலத்தில் ஆதரவு வழங்கப்படும்.

மலையக ஆசிரியர் முன்னணி, மலையக மக்கள் முன்னணிக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என கூறப்படுவதெல்லாம் பொய்யாகும்.” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...