Home Blog Page 3904

‘தேசியப்பட்டியல் தொடர்பில் நாம் எடுத்தது வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும்’ – மனோ

தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை பெறுவது மட்டும்தான் எங்கள் இறுதி இலக்கு அல்ல. அதை பெறாதது எங்கள் பலவீனமும் அல்ல. அது எங்கள் இயலாமையும் அல்ல. இது தொடர்பாக நாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்து செல்லும் ஒரே சிங்கள தலைவராக இருக்கும் சஜித் பிரமதாசவை, சிங்கள மக்கள் மத்தியில், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாக, பலவீனமானவராக காட்ட முயலும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் துணை போக முடியாது.

சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சி தலைவர்கள், சஜித் பிரேமதாசவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியம் செய்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை இந்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசு சார்பு தனியார் ஊடகங்கள் பெரும் முயற்சி எடுத்தன. இப்படி சொல்லியே ரணில் விக்கிரமசிங்கவை இந்த அரசாங்க கட்சி அணி, அரசு சார்பு பெளத்த பிக்குகள் அணி என்பவை அழித்தன.

ஆகவே சஜித் பிரேமதாசவையும், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாகவும், பலவீனமான தலைவராகவும் சித்தரித்து, ஆரம்பத்திலேயே அழித்துவிட இந்த அரசாங்கம் மிகப்பெரும் முயற்சி எடுத்தது. இவற்றை நாம் உணர்ந்தோம்.

இந்த தொலைநோக்கு பார்வையினாலேயே, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய பட்டியல் தொடர்பில் நிதானமாக நெகிழ்வு தன்மையுடன் முடிவெடுத்தது. நாங்களே உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை நாமே சிதைக்க கூடாது என நாம் முடிவு செய்தோம்.

இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்து செல்லும் ஒரேயொரு சிங்கள தலைவராக இருக்கும் சஜித் பிரமதாசவையும், ரணில் விக்கிரமசிங்கவை போன்று, சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமானவராக காட்டும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் துணை போக முடியாது என தீர்மானித்தோம்.

ஆகவே இது தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு நாம் வழங்கினோம். இந்த நிதானமான பொறுப்பு வாய்ந்த தொலைநோக்கு கொண்ட எமது நிலைபாட்டை எமது வாக்காளர்கள், சிவில், சமூக பிரதிநிதிகள், வர்த்தக சமூக பிரதிநிதிகள், மத தலைவர்கள், ஆசிரியர்கள், ஊடகத்துறை தலைமை பிரதானிகள், தமிழ் சமூக ஊடக முன்னோடிகள் உள்ளிட்ட அனைத்து தமிழ் பேசும் மக்களும் இன்று புரிந்துக்கொண்டுள்ளார்கள் என நான் நம்புகிறேன்

தமது முன்னாள் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைமையின் பிடிவாதம் காரணமாக , புதிய ஒரு கட்சியை அமைத்த, சில நாட்களுக்கு உள்ளேயே, தேர்தலை சந்திக்க வேண்டி ஏற்பட்டதால், மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற கூடிய பலரை கொழும்பில் கட்சி தலைமையகத்தில் தங்கியிருந்து தேர்தல் பணி செய்யுமாறு தாம் பணித்துள்ளதாக, சஜித் பிரேமதாச தமிழ், முஸ்லிம் பங்காளி கட்சிகளிடமும், ஜாதிக ஹெல உறுமயவிடமும் விளக்கி கூறினார். நாம் எதிர்பார்த்த பத்து தேசிய பட்டியல் கிடைத்து இருக்குமாயின் இந்த தர்ம சங்கடம் ஏற்பட்டு இருக்காது எனவும் கூறியிருந்தார்.

நமது கட்சிக்கு உரிய தேசிய பட்டியலை தேடி பெறுவது என்பதில் நாம் மிகவும் அக்கறையுடன் இருந்தோம். ஆகவே நாம் அமைதியாக இருக்கவில்லை. அது தொடர்பில் எமது குரலை நாம் உரக்க எழுப்பினோம். எனினும் முடிவு எடுக்கும் போது நாம் நிதானமாக முடிவுகளை எடுத்தோம். எமது தேசிய கூட்டணியை உடைத்துக்கொண்டு நாம் சென்றால் அரசாங்கம் மகிழ்வடையும். அதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. ஐக்கிய மக்கள் சக்தி என்ற எமது தேசிய கூட்டணி உடையுமானால், அது இரண்டு நாட்களுக்கு தலைப்பு செய்திகளாக இருக்கும். பின், இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு எஞ்சி இருக்கும் ஒரே தேசிய நம்பிக்கையும் இழந்து, நாம் மேலும் பலவீனமடைவோம்.

ஏற்கனவே வடக்கில், கிழக்கில் இந்த அரசாங்கம் தமிழ் கட்சிகளை மிகவும் பலவீனடைய செய்துள்ளது. அங்கே ஊடுருவி உள்ளது. இந்நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்து நாம் உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற இந்த தேசிய கூட்டணியையும் நாம் சிதைக்கவும், பலவீனமடையமும் விட முடியாது. ஆகவேதான் எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உள்ளேயும், தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளிடமும் கலந்து பேசி இந்த முடிவுகளை எடுத்தோம்.

தேசிய பட்டியல் என்பது வேறு. நமது மக்கள் வாழும் மாவட்டங்களில் தமிழ் எம்பீக்கள் தெரிவு செய்யப்படுவது என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது. இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் இன்னமும் சற்று அதிகமாக சிந்தித்து வாக்களித்திருந்தால், கொழும்பு மாவட்டத்தில் இன்னமும் அதிகமாக வாக்களித்து இருந்தால், இந்த மாவட்டங்களில் தமிழ் எம்பீக்கள் மேலதிகமாக உருவாக வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், மக்கள் வாக்களிக்காமல் தவறு செய்து விட்டார்கள்.

இரத்தினபுரியில் மொத்த தமிழ் வாக்காளர் தொகை சுமார் 75 ஆயிரம். ஆனால், எமது வேட்பாளர் சந்திரகுமாருக்கு சுமார் 36 ஆயிரம் பேர்தான் வாக்களித்துள்ளார்கள். இன்னமும் சுமார் 9 ஆயிரம் பேர் அவருக்கு வாக்களித்திருந்தால், சந்திரகுமார் அங்கே தமிழ் எம்பியாக உருவாகி இருப்பார்.

கேகாலை மாவட்டத்தில் மொத்த தமிழ் வாக்கு 40 ஆயிரம். எமது வேட்பாளர் பரணீதரன், சுமார் 23 ஆயிரம் வாக்குகளை பெற்றார். அங்கே இன்னமும் 5 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றிருந்தால் அவர் அங்கே தமிழ் எம்பீயாக வெற்றி பெற்று இருப்பார்.

இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா போன்ற மாவட்டங்களில் எமது தொலைபேசி சின்னத்துக்கு எதிரான அணிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் என்ற போலி நபர்களில் ஒருவர்கூட அவ்வந்த மாவட்டங்களில், இருநூறு (200) விருப்பு வாக்குகள் கூட பெறவில்லை.

பணம் வாக்கிக்கொண்டு எம்மை அழிக்க வேண்டும் என கெட்ட எண்ணத்தோடு மட்டும் செயற்பட்ட இவர்கள் படுதோல்வி அடைந்துள்ளார்கள். ஆனாலும், தேர்தல் காலங்களில் இவர்கள் செய்த பொய், புரட்டு போலி பிரசாரங்கள் மக்களை அதைரியப்படுத்தின. ஆகவே இவர்கள்தான், இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா மாவட்டங்களில் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறாமைக்கு மூலக்காரணங்கள் ஆகும்.

அதேவேளையில், தேர்தல் காலங்களில் எமக்காக ஒரு துரும்பும்கூட எடுத்து போடாத, எமக்கு ஆதரவாக ஒரு ஊடகங்களில் எழுதாத, சமூக ஊடகங்களில் பதிவு போடாத, தேர்தல் நிதி இல்லாமல் நாம் பட்ட எமது நடைமுறை கஷ்டங்களை உணராத, எமக்கு எந்தவித உதவியும் செய்யாத, அதையும் மீறி சென்று எமக்கு உபத்திரவம் செய்வதற்காக, எமக்கு எதிரான அணி அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு,

எமக்கு எதிரான அணியில் சேர்ந்து, போலி வேட்பாளார்களாக போட்டியிட்டு, எமக்கு எதிராக பொய் பிரசாரங்களை செய்து, கூசாமல் எமது வாக்கை சிதறடித்த, சோரம்போன அரசியல் வியாபாரிகள், இன்று வெட்கமில்லாமல் “தேசிய பட்டியலை சண்டையிட்டு எடுங்கள்” என்றும், அதை எடுத்து, “இவருக்கு கொடுங்கள்” என்றும், “அவருக்கு கொடுக்க வேண்டாம்” என்றும் எமக்கு அறிவுரை கூறுகிறார்கள். கூக்குரலிடுகிறார்கள்.

நிறுவனரீதியான பாரம்பரியமற்ற, சில சுயாதீன ஊடகங்களிலும் இத்தகைய பல போலிகள் ஒளிந்து தேர்தல் கால வியாபாரம் செய்து பணம் தேடியுள்ளார்கள். இத்தகைய சோரம்போன போலி நபர்களுக்கு நாம் எமது வெற்றிகளின் மூலம் மறக்க முடியாத பாடங்களை கற்று கொடுத்துள்ளோம். இனியும் இத்தகைய நபர்களிடம் ஏமாற வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கிறேன்.” – என்றுள்ளது.

நோர்வூட்டில் மாரியம்மன் சிலை கொள்ளை! தேடுதல் வேட்டையில் பொலிஸ்!!

நோர்வூட் கீழ்பிரிவு தோட்ட ஶ்ரீ முத்துமாரியம் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 125 வருடகால பழமைவாய்ந்த மாரியம்மன் சிலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) அதிகாலைவேளையிலேயே இக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருவதால் சாமி சிலைகள், ஆலயத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள அறையொன்றில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவ்வறை உடைக்கப்பட்டு மாரியம்மன் சிலை களவாடப்பட்டுள்ளது. காலையில் குருக்கள் பூஜைக்காக வருகைதந்திருந்தபோதே இது பற்றி தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள பொலிஸார், மோப்ப நாய்களின் உதவியுடன் கொள்கைக்கும்பலை தேடிவருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

மாகாணசபைத் தேர்தல்வரை தலைமைப்பதவியில் ரணில் நீடிப்பார்!

மாகாணசபைத் தேர்தல் நிறைவடையும்வரை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார் என அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (14) கூடியது.

இதன்போது பொதுத்தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டன. கட்சி உறுப்பினர்கள் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்தனர்.

எனினும், கட்சி தலைமைப்பதவியானது இளம் தலைவரொருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

இதன்படி கட்சி தலைமைப்பதவிக்கு போட்டியிடும் அனைவருக்கும் வாய்ப்பளிப்பதற்கும், கட்சி தொண்டர்களின் கோரிக்கைக்கமைய புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், உடனடியாக தலைமைப்பதவியில் மாற்றம் வருவதற்கு இடமில்லை. மாகாணசபைத் தேர்தல் முடிவடையும்வரை அல்லது மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்வரை தலைமைப்பதவியில் ரணில் நீடிப்பார் என அறியமுடிகின்றது.

புதிய தலைவருக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு அவர் எவ்வாறு தேர்தலை கையாள்கிறார் என்பது கண்காணிக்கப்படும்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 12 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 12 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,658 ஆக அதிகரித்துள்ளது.

213 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘மெகா’ கூட்டணியுடன் அதிரடிக்கு தயாராகும் அனுசா!

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தனித்து களமிறங்கி 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகளான அனுசா சந்திரசேகரன், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகின்றார் என தெரியவருகின்றது.

மலையக மக்கள் முன்னணியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்கள் சிலர் அனுசாவுடன் சங்கமித்துள்ள நிலையில், பொதுத்தேர்தலின் பின்னர் இளைஞர்களின் ஆதரவும் அவருக்கு பெருகிவருகின்றது.

பொதுத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தை தற்போது ஆரம்பித்துள்ள அனுசா சந்திரசேகரன், விரைவில் அடுத்தக்கட்டம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

இதன்படி அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் பலமானதொரு கூட்டணி அமைத்து அதன்கீழ் அனுசா சந்திரசேகரன் போட்டியிடுவார் எனவும், பொதுத்தேர்தலின் பின்னர் பல அமைப்புகள் அவருக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன என்றும் தெரியவருகின்றது.

அனுசா தலைமையில் களமிறங்குவதற்கு இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி மாவட்ட இளைஞர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பதவியை குறிவைக்கும் அரசியல் புள்ளிகள்!

2021 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மூவர் இராஜினாமா செய்வார்கள் என தெரியவருகின்றது.

இது தொடர்பில் கட்சி தலைமைகளுக்கு முன்கூட்டியே அவர்கள் அறிவித்துவிட்டனர் எனவும், மாகாண முதல்வர் பதவியை இலக்குவைத்தே அவர்கள் களமிறங்கவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

பதுளை, பொலன்னறுவை மற்றும் குருணாகலை மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் மூவரே இவ்வாறு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரும், சவாலை ஏற்றி மாகாண முதல்வர் பதவிக்காக போட்டியிடக்கூடும் எனவும்,  அவர் இம்முறை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்துள்ளார் எனவும் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ராஜபக்சக்களின் விசுவாசிக்கே நீதி அமைச்சு – சஜித் அணி போர்க்கொடி

மஹிந்த ஆட்சியின்போது ஊழல், மோசடியில் ஈடுபட்ட 14 அமைச்சர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி அலிசப்ரீக்கு நீதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹரின் பெர்ணான்டோ மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது கருத்துவெளியிட்ட ஹரின் பெர்ணான்டோ இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” அலி சப்ரி என்பவர் முஸ்லிம், அதனால் அவரின் நியமனத்தை நாம் எதிர்க்கவில்லை. ஏனெனில் எமது கட்சியிடம் இனவாதம, மதவாதம், குலபேதம் என்பன கிடையாது. கொள்கை அடிப்படையிலான அரசியல் பயணமே முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு சார்பாக செயற்பட்ட அலிசப்ரி, ராஜபக்ச ஆட்சியில் ஊழல், மோசடியில் ஈடுபட்ட 14 அமைச்சர்களுக்கு எதிராக நல்லாட்சியில் வழக்கு தொடுத்தபோது அவர்கள் சார்பிலும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

நீதிமன்றம்தான் நாட்டின் காவல் தெய்வம். அப்படியானதொரு ஸ்தானமும் உள்ளடங்கும் நீதி அமைச்சு பதவிக்கு தமது விசுவாசியொருவரை ராஜபக்சக்கள் நியமித்திருப்பது பாரதூரமான விடயமாகும்.

முக்கிய அமைச்சுகள் ராஜபக்ச குடும்பத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. இதற்காகவா மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் வழங்கப்பட்டது? காற்று, களிமண், பித்தளை, பிரம்பு, வெங்கலத்துக்கெல்லாம் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உலகில் எந்தவொரு நாட்டிலும் இப்படியான அமைச்சுகள் இல்லை. பதவி ஏற்றவர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.வியத்மக உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவில்லை.” – என்றார்.

பாராளுமன்றம் வருகிறார் பஸில்! திரைமறைவில் ஏற்பாடுகள்!!

ராஜபக்ச சகோதரர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை உருவாக்கவும் அதனை வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்லவும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளின் பின்னாலும் இருந்து செயற்பட்ட பிரதான நபர் இவரே ஆவார்.

ஆனால், இம்முறை பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பதுடன் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. ஏன் இவர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படவில்லை என்ற கேள்விகள் எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளன.

இவர் இட்டைப் பிரஜாவுரிமையைக்கொண்டவர் என்பதனாலேயே தேர்தலில் போட்டியிடவோ அல்லது தேசியப்பட்டியலில் உள்வாங்கப்படவோ இல்லை. எவ்வாறாயினும் விரைவில் அவர்இரட்டைப் பிரஜாவுரிமையை இல்லாது செய்யவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் அவ்வாறாக இரட்டைப் பிரஜாவுரிமையை இல்லாது செய்யும் பட்சத்தில் சட்டச் சிக்கல்கள் எதுவுமின்றி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும். இதன்படி இவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்லவுள்ளார் எனவும், அவருக்காகத் தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு தற்போது தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள ஒருவர் எவ்வேளையிலும் பதவி விலகத் தயாராக இருக்கின்றார் எனவும் தெரியவருகின்றது.

இதன்படி இவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் பட்சத்தில் இவருக்கு முக்கிய அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

‘மலையக மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவேன்’ – ஜீவன்

“தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்களுக்கு வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த அமைச்சின் மூலம் எம்மீது நம்பிக்கை வைத்த தோட்ட மக்களுக்கும் அனைத்தின மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இன்று (14)   கடமையேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின் அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். இந்த  அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கு ஏனைய மக்களுக்கும் சிறந்த ஒரு சேவையினை முன்னெடுப்பேன்.  இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

கடமையேற்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன்,தேர்தலில் போட்டியிட்ட இ.தொ.கா வேட்பாளர்கள் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

சஜித், ரணில் அணிகள் சங்கமம்! சமாதான தூதுவராக திஸ்ஸ களத்தில்!!

ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் சங்கமிக்க வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன. இதற்கான தூதுவராக திஸ்ஸ அத்தநாயக்க செயற்பட்டுவருகின்றார்.

ஜனாதிபதி தேர்தலின்போது பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஓரணியில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி பொதுத்தேர்தலின்போது இரண்டாக பிரிந்தது.சஜித் பிரேமதாச தலைமையிலான அணி வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியாக களமிறங்கியது. ஐ.தே.கவுடன் கூட்டு வைத்திருந்த தோழமைக்கட்சிகளும் சஜித்துக்கு நேசக்கரம் நீட்டின.

இதனால் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டது. எனினும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப்பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்களாக 54 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து தலைமைப்பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்ததுடன், கட்சியை மறுசீரமைக்குமாறும் கோரியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சஜித் மற்றும் ரணில் அணிகளை இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன. கரு ஜயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் இதன் பின்னணியில் செயற்பட்டுவருகின்றனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேச்சு நடத்த இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவி வழங்கப்படுமானால் ஏற்பதற்கு தயார் என தேர்தலுக்கு முன்னரே சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வஜிர, ரவி கருணாநாயக்க போன்றவர்கள் தனிவழியில் செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதால் புதிய முயற்சி கைக்கூடுமா என்பதும் கேள்விக்குறியே.

அதேவேளை, கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை ஏற்கும்பட்சத்தில் இணைவு சாத்தியம் எனவும் கொழும்பு வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...