Home Blog Page 3911

எனது மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன் : வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்

தனக்கு வாக்களித்த மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பேன் என்று பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பதுளையில் தனக்கு வாக்களித்த 39,245 வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”பதுளையில் எனக்கு 39,245 பேர் வாக்களித்துள்ளனர். எனினும், தற்போதுள்ள தேர்தல் முறையின்படி நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனினும், பதுளையில் எதிர்க்கட்சியில் என்னைவிட குறைவாக விருப்பு வாக்குகளைப் பெற்ற சமிந்த விஜேசிறி (36,291 வாக்குகள்) கூட நாடாளுமன்றப் பிரதிநிதித்துவப் பெற்றுள்ளார்.

எனினும், எனக்கு மக்கள் தந்த ஆதரவு மனமார்ந்த நன்றிகள். முதன்முறையாக 2009ஆம் ஆண்டு பதுளையில் தேர்தலில் நின்றபோது எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு மாகாண சபையில் சுமார் 32 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. தற்போது அந்த எண்ணிக்கை 40 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இது மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காண்பிக்கிறது.

எனவே, எனது மக்களுக்கு நான் என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பேன். பதுளை மாவட்டத்தில் ஆளும் கட்சியில் வெற்றிபெற்ற பெரும்பான்மை உறுப்பினர்களைப் போல, எனக்கு வாக்களித்த மக்களின் குரலாய் அரசாங்கத்தில் ஒலித்து, அவர்களுக்கான அபிவிருத்தியைக் கொண்டுவர முடிவில்லை என்பதை நினைத்து மனம் வருந்துகிறேன்.

இதேவேளை, மொட்டு சின்னத்தில் எனக்கு வழங்கிய 40 ஆயிரம் வாக்குகளில் சிங்கள பெரும்பான்மையின உறுப்பினர்களுக்கும் இரு விருப்பு வாக்குகளை வழங்கியதால் ஆளும் கட்சியில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது. குறிப்பாக மொட்டு கட்சியில் சாமர சம்பத் தஸநாயக்க, டிலான் பெரேரா, ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோருக்கும் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கை வழங்கியுள்ளனர்.

சிறு தொகை பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்த அவர்கள், தமிழர்களின் விருப்பு வாக்குகளினால் வெற்றிபெற்றுள்ளனர். இதனால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது.

இதுவொரு ஆபத்தான சூழல். பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சூழல் நாடு முழுவதும் பரவும் பட்சத்தில், சிறுபான்மையின மக்களின் விருப்பு வாக்குகளினால் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இந்த விடயத்தில் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தற்போதுள்ள தேர்தல் முறைக்கமைய எதிர்காலத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டுமாயின், எதிர்காலத்தில் ஒரு விருப்பு வாக்கைப் பயன்படுத்து மட்டுமே புத்திசாலித்தனமாக இருக்கும். இதனை சரியாக ஆராய்ந்து, விருப்பு வாக்குகளை அளித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ள எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்.

எவ்வாறாயினும், பதுளை மக்களின் பாதுகாப்பில் எப்போதும் அக்கறையாக இருப்பேன். அத்துடன், எனது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களுக்கான எனது குரல் தேசிய மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும்

” கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக தமிழ்பேசும் சமூகமாக ஓரணியில் திரண்டு வாக்களித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழ் பேசும் மக்களுக்கான எனது குரல் தொடர்ந்தும் தேசிய மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட வேலுகுமார் இம்முறை வரலாற்று வெற்றியை நிலைநாட்டினார். அதாவது கண்டி மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் தேர்தலில் வெற்றிபெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்நிலையில் ஆதரவாளர்கள் மத்தியில்உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” மிகவும் நெருக்கடியான அதேபோல் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலேயே இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுத்தோம். எதிரணி வேட்பாளரான எனக்கு எதிராக ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தீவிரமாக செயற்பட்டது. அதுமட்டுமல்ல திட்டமிட்ட அடிப்படையில் சதிகார அரசியலும் முன்னெடுக்கப்பட்டது. பிரச்சாரங்கள் ஓய்ந்து இறுதிகட்டத்தில்கூட சாக்கடை அரசியலுக்கே உரித்தான சில நடவடிக்கைகளை எனக்கு எதிராக முன்னெடுத்திருந்தனர். சமூகவலைத்தளங்களிலும் வதந்திகள் பரப்பட்டனர்.
மறுபுறத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் பேரினவாதிகளின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக சில வேட்பாளர்கள் தேசிய கட்சிகளில் அணிவகுத்துநின்றனர். இவ்வாறு மக்களை திசைதிருப்புவதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் என்மீது நம்பிக்கைவைத்து கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். கடந்த காலப்பகுதியில் என்னால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதனை கருதுகின்றேன்.
2015 ஆம் ஆண்டு மக்கள் எனக்கு வழங்கிய ஆணையின்பிரகாரம் கண்டி மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்களையும், அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்தேன். எனது மனசாட்சியின் பிரகாரம் சேவைகளில் திருப்தி இருந்தது. இதனால்தான் இம்முறை உரிமையுடன் வாக்கு கேட்டுவந்தேன். எனது மக்கள் சொந்தங்களும் நேசக்கரம் நீட்டியுள்ளனர். எனவே, இனிவரும் காலப்பகுதியிலும் மக்களுக்கான எனது அரசியல் தொடரும். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பேன். ” – என்றார்.

4ஆவது முறையாகவும் பிரதமராக மஹிந்த பதவியேற்பு!

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சராக மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று (09.08.2020) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

1970 முதல் 50 ஆண்டுகாலமாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுவரும் மஹிந்த ராஜபக்ச இதற்கு முன்னர் மூன்று தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளார். இம்முறை நான்காவது தடவையாக அவர் பதவியேற்றுள்ளார்.

அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியென அனைத்து பதவிகளையும் வகித்த ஒரேயொரு அரசியல்வாயாகவும் கருதப்படுகின்றனர்.

டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, சேர். ஜோன் கொத்தலாவ, பண்டாரநாயக்க, ஶ்ரீமா, சந்திரிக்கா, ரணில், மஹிந்த உட்பட இலங்கையில் இதுவரையில் 14 பேர் பிரதமர் பதவியை வகித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பிரதமராக பதவியேற்றுள்ளனர். அதன் அடிப்படையில் கணிப்பிட்டால் மஹிந்த ராஜபக்ச 31ஆவது பிரதமராவார்.

(ரணில் விக்கிமசிங்க – 5 தடவைகள், டட்லி சேனாநாயக்க 4 தடவைகள், மஹிந்த ராஜபக்ச – 4 தடவைகள், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க – 4, ரட்னசிறி விக்கிரமநாயக்க – 3, ரணசிங்க பிரேமதாச – 02, டி.எஸ். சேனாநாயக்க, சேர். ஜோன் கொத்தலாவ, தஸநாயக்க, ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிக்கா, தி.மு. ஜயரத்ன, விஜேதுங்க ஆகியோர் ஒரு தடவை பிரதமர் பதவியை வகித்துள்ளனர். )

1947 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரையில் இலங்கையில் பிரதமர் பதவியை வகித்தவர்கள் விபரம் வருமாறு,

முதலாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)

✍️ டி.எஸ். சேனாநாயக்க – 1947 – செப்டம்பர் 24 – 1952 மார்ச் – 22.

(ஐக்கிய தேசியக் கட்சி). இலங்கையில் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலாகும்.

✍️டி.எஸ். சேனாநாயக்க உயிரிழந்ததால் அவரின் மகனான டட்லி சேனாநாயக்க 1952 மார்ச் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இரண்டாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)

✍️டட்லி சேனாநாயக்க – 1952 ஜூன் 9 – 1953

✍️சேர். ஜோன் கொத்தலாவ – 1953 ஒக்டோபர் 12 – 1956 ஏப்ரல் 12.(சேனாநாயக்க பதவி விலகியதையடுத்தே இவர் நியமிக்கப்பட்டார்.)

மூன்றாம் பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)

✍️எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க 1956 ஏப்ரல் 12 – 1959 செப்டெம்பர் 26. (சுதந்திரக்கட்சி)

✍️கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க 1959 செப்டெம்பர் 26 – 1960.மார்ச் 20

(பண்டாரநாயக்க சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டார்.)

நான்காவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)

✍️டட்லி சேனநாயக்க – 1960 மார்ச் 21 – 1960 ஜூலை 21
(சேனாநாயக்க அரசாங்கம் 1960 ஏப்ரல் 22 இல் சபையில் நடைபெற்ற சிம்மாசன உரையின்போது தோற்கடிக்கப்பட்டது)

ஐந்தாம் பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)

✍️சிறிமாவோ பண்டாரநாயக்க 1960 ஜூலை 21 – 1965 மார்ச் 25 (சுதந்திரக்கட்சி)

ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)

✍️டட்லி சேனநாயக்க 1965 மார்ச் 25 – 1970 மே 29.

ஏழாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)

✍️சிறிமாவோ பண்டாரநாயக்க – 1972 மே 22 – 1977 ஜூலை 23.

இரண்டாவது தேசிய அரசுப் பேரவை

✍️ஜே. ஆர். ஜயவர்தன – 1977 ஜூலை 23 – 1978 பெப்ரவரி 04

✍️ஆர். பிரேமதாச டி1978 பெப்ரவரி 06 – 1978 செப்டெம்பர் 07.

( ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் பிரேமதாச பிரதமரானார்)
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்படும்வரை இலங்கையில் பிரதமர் ஆட்சியே நிலவியது. பிரதமரே அதிகாரம் படைத்த நபராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

?இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம்

✍️ஆர். பிரேமதாச – 1978 செப்டெம்பர் 07 – 1989 ஜனவரி 02.

?2ஆவது பாராளுமன்றம்

✍️டி.பி. விஜயதுங்க – 1989 மார்ச் 06 – 1990 மார்ச் 28.
(1989 ஏப்ரல் 18 ஆம் திகதி இராஜினாமாச் செய்தார்)

✍️டி. பி. விஜயதுங்க 1990 மார்ச் 30 – 1993 மே 07
(மீள் நியமனம் செய்யப்பட்டார்.)

✍️ரணில் விக்கிரமசிங்க 1993 மே 17 – 1994 ஆகஸ்ட் 19.( ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதியாக டி.பி. விஜயதுங்க பதவியேற்றார். பிரதமர் பதவி ரணிலுக்கு வழங்கப்பட்டது.

?3ஆவது பாராளுமன்றம்.

✍️சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க –
1994 ஆகஸ்ட் 19 – 1994 நவம்பர் 12 ( மக்கள் கூட்டணி)

✍️ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க 1994 நவம்பர் 14 – 2000 ஆகஸ்ட் 09.

(பிரதமர் பதவியை வகித்த சந்திரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் – அவ்விடத்துக்கு ஶ்ரீமா நியமிக்கப்பட்டார்)

✍️ரத்னசிறி விக்கிரமநாயக்க – 2000 ஆகஸ்ட் 10 – 2000 ஒக்டோபர் 13.

?4ஆவது பாராளுமன்றம்.

✍️ரத்னசிறி விக்கிரமநாயக்க 2000 ஒக்டோபர் 13 – 2001 டிசம்பர் 07.

?5ஆவது பாராளுமன்றம்.

✍️ -ரணில் விக்கிரமசிங்க – 2001 டிசம்பர் 09 – 2004 ஏப்ரல் 02.

?6ஆவது பாராளுமன்றம்.

✍️ -மஹிந்த ராஜபக்ஷ – 2004 ஏப்ரல் 06 – 2005 நவம்பர் 19.

✍️ ரத்னசிறி விக்கிரமநாயக்க – 2005 நவம்பர் 19 – 2010 ஏப்ரில் 20
(மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நியமிக்கப்பட்டார்.)

?7ஆவது பாராளுமன்றம்.

✍️ தி.மு. ஜயரத்ன – 2010 ஏப்ரல் 21 – 2015 ஜனவரி 09.
✍️ ரணில் விக்கிரமசிங்க – 2015 ஜனவரி 09 – 2015 ஆகஸ்ட் 21.

(2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

?8ஆவது பாராளுமன்றம்.

✍️ரணில் விக்கிரமசிங்க – 2015 ஆகஸ்ட் 24 – 2018 ஒக்டோபர் 26.
✍️மஹிந்த ராஜபக்ச – 2018 ஒக்டோபர் 26 – 2018 டிசம்பர் 15.
(ஒக்டோபர் அரசியல் புரட்சி)

✍️ரணில் விக்கிரமசிங்க – 2018 டிசம்பர் 16 – 2019 நவம்பர் 20.

✍️ ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர் பிரதமராக மஹிந்த பதவியேற்பு – 2019

✍️ 4ஆவது தடவையும் பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு – 2020

இரண்டு தடவைகள் அடிக்கல் நாட்டியும் புனரமைக்கப்படாத வீதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட  சாமிமலை  மின்னா தோட்டத்திற்கு  செல்லும் சுமார் 2.5    கி.மீ  பாதையானது நீண்ட காலமாக குன்றும், குழியுமாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றது.

இந்த பாதையை புனரமைத்து தருவதாக பல அரசியல் மேடைகளிலும் தேர்தல் காலங்களிலும் வாக்குறுதிகள் வழங்கியிருந்தாலும் இன்னும் எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆட்சியின்போது இரண்டு தடவைகள் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும் பாதை புனரமைக்கப்படவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்   மயில்வாகனம் திலகராஜால் கடந்த 2016 ம் ஆண்டு  நவம்பர் மாதம் 5 ம் திகதி அன்று முதல் முறையாக அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும், பணிகள் இடம்பெறவில்லை. இது தொடர்பில் ஊடகங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தால்  கடந்த  2019  ஆண்டு ஜூலை மாதம்  7 ம் திகதிஇரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டப்பட்டு ஆமை வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிகள் சுமார் 100 மீற்றர் தூரம் வரை சீர் செய்யப்பட்டு    இடைநிறுத்தப்பட்டது.

இப்பாதை சீரின்மையால் தாம் போக்குவரத்தின்போது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும்   மழை காலங்களில் இப்பாதை  சேற்று நிலமாக காணப்படுவதாகவும் பாடசாலை பிள்ளைகள் முதல் கர்ப்பிணி தாய்மார் வரை இப்பாதையை பயன்படுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்தநல்லாட்சி  அரசாங்கத்தின் மூலமாகவும் தமக்கு உரிய தீர்வு கிடைக்குவில்லை எனவும்  தற்போதைய  அரசாங்கத்திலாவது தமக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(சாமிமலை நிருபர் ஞானராஜ்)

பொதுத்தேர்தலில் 744,373 வாக்குகள் நிராகரிப்பு!

இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் ( 4.58%) நிராகரிக்கப்பட்டுள்ளன.

22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்தாலும் ஒரு கோடியே 23 லட்சத்து 43 ஆயிரத்து 302 பேரே ( 75.89%) வாக்குரிமையைப் பயன்படுத்தினர். 24.11 வீதமானோர் வாக்களிக்கவில்லை.

2019 ஜுலை மாத வாக்காளர் பட்டியலே தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதால் வாக்காளர்களில் சிலர் மரணித்திருக்கலாம், பலர் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர். மறுபுறத்தில் கொரோனா பிரச்சினை வேறு. எனவே, 75 வீதமான வாக்கு பதிவு வரவேற்ககூடிய விடயமாகும்.

ஆனாலும், வாக்களிப்பு தொடர்பில் எவ்வளவுதான் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டாலும் நிராகரிக்கப்படுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டுதான் இருக்கின்றது

அது தொடர்பான பார்வையே இது.

இலங்கையர்களுக்கு 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. இதன்படி இலங்கையின் முதலாவது அரசுப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 1931 ஜுன் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற்றுள்ளது.

1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கான நிறத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.1947 ஆம் ஆண்டுதான் அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் தேர்தல் சின்னங்கள் வழங்கப்பட்டு, தொகுதிவாரி முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.

எனினும், 1978 இல் தொகுதிவாரிமுறைமாறியது. விகிதாசார – விருப்புவாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் அந்தமுறையிலேயே தேர்தல் நடைபெற்றுவருகின்றது.

1. தேர்தல் திகதி – 1989 பெப்ரவரி 15

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59 லட்சத்து 62 ஆயிரத்து 31 ( 63.60%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3 லட்சத்து 65 ஆயிரத்து 563 ( 6.13%)

செல்லுபடியான வாக்குகள் – 55 லட்சத்து 96 ஆயிரத்து 468 ( 93.87%)

2.1994 ஒக்டோபர் 16

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 83 லட்சத்து 44 ஆயிரத்து 95 (76.24%)

நிராகரிக்கப்பட்ட வாக்ககள் – 4 லட்சத்து 389 ( 4.80% )

செல்லுபடியான வாக்குகள் 79 லட்சத்து 43 ஆயிரத்து 706 (95.20%)

3.2000 ஒக்டோபர் 10

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 91 லட்சத்து 28 ஆயிரத்து 823 (75.62%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 481,155 (5.27 %)

செல்லுபடியான வாக்குகள் 86 லட்சத்து 47 ஆயிரத்து 668 ( 94.72% )

5.2001 டிசம்பர் 05

அளிக்கப்பட்ட வாக்குகள் – 94 லட்சத்து 49 ஆயிரத்து 813 ( 76.03% )

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4 லட்சத்து 93 ஆயிரத்து 944 ( 5.22%)

செல்லுப்படியான வாக்குகள் – 89லட்சத்து 55 ஆயிரத்து 869 ( 94.77% )

5. 2004 ஏப்ரல் 02  

அளிக்கப்பட்ட வாக்குகள் – 97 லட்சத்து 97 ஆயிரத்து 680

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5 லட்சத்து 34 ஆயிரத்து 948 

செல்லுப்படியான வாக்குகள் – 92 லட்சத்து 62 ஆயிரத்து 732

6.2010 ஏப்ரல் 08 

அளிக்கப்பட்ட வாக்குகள் 86 லட்சத்து 30 ஆயிரத்து 689 ( 61.26% )

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5லட்சத்து 96 ஆயிரத்து 972 ( 6.92% )

செல்லுபடியான வாக்குகள் – 80 லட்சத்து 33 ஆயிரத்து 717 ( 93.08%)

7.2015 ஒக்டோபர் 17 

அளிக்கப்பட்ட வாக்குகள் ஒரு கோடியே 16 லட்சத்து 84 ஆயிரத்து 98 ( 77.66%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5லட்சத்து 17 ஆயிரத்து 123  ( 4.43% )

செல்லுபடியான வாக்குகள் – ஒரு கோடியே 11 லட்சத்து 66 ஆயிரத்து 975 ( 95.57%)

வாக்கு என்பது உங்கள் பலம் – உரிமை. எனவே, அதனை முறையாக அளிக்கவேண்டியதும் உங்கள் பொறுப்பாகும்.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற பின்னர், உங்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் முதலில் தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி (X) இடவேண்டும்.

அதன்பின்னர் அக்கட்சியில் போட்டியிடும் மூவருக்கு விருப்பு வாக்குகளை வழங்கலாம். வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேல் புள்ளடி இடவேண்டும்.

மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாது. நீங்கள் விரும்பும்பட்சத்தில் ஒருவருக்கு மாத்திரம் விருப்பு வாக்கை வழங்கலாம். ( அவ்வாறு வழங்கினால் மூன்று வாக்குகளும் அவருக்கு சென்றடையும் என அர்த்தப்படாது)

கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு முன்னால் புள்ளடி இடாமல் விருப்பு வாக்கு பயன்படுத்தப்படுமானால் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்காகவே கருதப்படும். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்துவதும் பிழையான நடைமுறையாகும். புள்ளடி இடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் இடவும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வாக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஆர்.சனத்

நன்றி – லீட்நியூஸ்7

மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவேன் – ஜனகன் அறிவிப்பு

” தேர்தல்தான் முடிவடைந்துள்ளது. எனது அரசியல் பயணம் முடியவில்லை. எனவே, வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கலாநிதி.வி.ஜனகன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” 2020 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் பேசும் சமூகம் அக்கறையுடன் வாக்களித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம். கொழும்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் கணிசமான அளவு வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

அத்துடன் தமிழ் பேசும் சமூகம் 70 சதவீதம் தமது வாக்கினை பதிவு செய்துள்ளமை பாராட்டதக்க விடயம்.

பாராளுமன்றத் தேர்தல் சுமூகமாக இடம்பெறுவதற்கும், தனக்கு ஆதரவளித்த கொழும்பு மாவட்ட பொது மக்கள், கட்சித் தலைமை, ஆதரவாளர்கள், வாக்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேவேளை, மக்கள் ஆணையைப்பெற்றே எனது அரசியல் பயணம் தொடரவேண்டும் என நினைக்கின்றேன். எனவே, தேசியப்பட்டியல் வாய்ப்பை கோரமாட்டேன். அடுத்து நடைபெறும் மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன், மக்கள் ஆதரவை பெறுவேன்.” – என்றார்.

‘மோடியின் அழைப்பு செய்தியை மஹிந்தவுக்கு தெரியப்படுத்தினார் தூதுவர்’

புதிதாக மேம்படுத்தப்பட்ட குஷினகர் விமான நிலையத்திற்கு முதல் சர்வதேச விமானத்தை தரையிறக்குவதற்கு இலங்கைக்கு அழைப்பு விடுப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தார்.

அண்மையில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றமை குறித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் இன்று பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தபோதே இந்திய உயர் ஸ்தானிகர் இந்த அழைப்பை விடுத்தார்.

பிரதமர் மோடி பௌத்த மதத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும், சுற்றுலாத்துறை மட்டுமல்லாமல் தொல்பொருள் போன்ற பிற துறைகளுடன் தொடர்புடைய திட்டங்களைத் தொடங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லே இதன்போது கூறினார்.

இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ள எயர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுக்கு மேலதிகமாக, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளிலும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாக  இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லே தெரிவித்தார்.

இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

சூரியன் உதயமாவது போன்று பிரதமரின் வெற்றி குறித்து நம்பிக்கை கொண்டிருந்ததாக தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், பிரதமரின் ஆசீர்வாதத்துடன் முன்னோக்கி செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

புதிய பாராளுமன்றத்தில் 76 புதுமுக எம்.பிக்கள்!

பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 196 உறுப்பினர்களில் 64 பேர் முதன்முறையாக பாராளுமன்றம் செல்லவுள்ளனர். அத்துடன் 12 பேருக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அமையவுள்ள 9 ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரில் 76 பேர் புதுமுக உறுப்பினர்களாவர்.

அதேவேளை, பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவானவர்களில் இளம் வயதுடைய அரசியல்வாதியாக இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் விளங்குகின்றார்.

ஐ.தே.கவை சஜித்திடம் ஒப்படையுங்கள் – ரணிலிடம் கோரிக்கை முன்வைப்பு

மக்கள் எதிர்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வஜிர அபேவர்த்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலை மைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். அதாவது, அவர்கள் இன்னமும் தங்களில் பிழைகளைத் திருத்திக் கொள்ள முற்படுகிறார்கள் இல்லை என்றே தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி இன்று அழிவடைந்துள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ரணில்விக்கிரமசிங்க உள்ளிட்ட இந்த தரப்பிடம் நாம் மீண்டும் ஒன்றைவலியுறுத்துகிறோம்.

அதாவது, இனியேனும் மக்களின் ஆணைக்கு செவிசாய்த்துஅவர்கள் வழங்கிய ஆணைக்குஇணங்க, புதிய மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.மக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள். இப்போதைய நிலைமையில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதலைவராக சஜித் பிரேமதாஸ காணப்படுகிறார்.

இதனைப் புரிந்துக் கொண்டுஐக்கிய தேசியக் கட்சியை இவரிடம் ஒப்படையுங்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்ற ரீதியில் கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமையை எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாதுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

T-20 உலகக்கிண்ண தொடரை இந்தியாவில் நடத்த முடிவு

2021 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கிண்ண தொடரை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

7ஆவது 20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் இந்த போட்டி வேறுவழியின்றி ஒத்திவைக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. ஆனால் 2021ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை.

ஏனெனில், 2022ஆம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தினால், அதற்கு அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்று இந்திய தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 20 ஓவர் உலக கோப்பை போட்டி விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

இதன் முடிவில் 2021ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை (அக்டோபர்-நவம்பர்) திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவது என்றும், தள்ளிவைக்கப்பட்ட 20 ஓவர் உலக கோப்பை போட்டியை 2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

12ஆவது பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் மார்ச் 7 ஆம் திகதிவரை நியூசிலாந்தில் நடக்க இருந்தது.

கொரோனா அபாயத்தால் இதற்கான தகுதி சுற்று முழுமை பெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த உலக கோப்பை போட்டியையும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரிவரை ஒத்திவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவல்கள் ஐ.சி.சி. வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹைதராபாத், டெல்லி அணிகள் இன்று மோதல்!

0
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 31 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி...

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

0
ஐ.பி.எல்.2026 தொடரில் தொடர் தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி . ஐபிஎல் 2026 தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய...

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – சூத்திரதாரிகளை தப்பவிடாமல் பின்னப்படும் சட்ட வலை

0
கட்டுரையாளர் - சதீஸ் செல்வராஜ் நன்றி - தினகரன் மிகக் கொடிய ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஏழு வருடங்கள் பூர்த்தியாகிறது. உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகவிருக்கிறது. கடந்த...