Home Blog Page 3923

ரணிலை பலப்படுத்துவதே சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் – இராதாகிருஷ்ணன்

– நன்றி வீரகேசரி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதன் ஊடாகவே சிறுபான்மை தேசிய இனங்களின் இருப்பு பாதுகாக்கப்படும் என்பதோடு அபிலாஷைகளும் பூர்த்தியாகும் என்று முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் தெரிவித்தள்ளதாவது,

தற்போதைய சூழலில் சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மலையக மக்களின் இருப்பும், பாதுகாப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தக்கூடிய ஒருயொரு தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே காணப்படுகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் பழையன கழிந்து புதியன புகுந்துள்ளமையால் புத்தெழுச்சியுடன் இளைய தலைமுறையினர் பலர் அரசியல் பிரவேசம் அடைந்துள்ளார்கள். நீண்ட அனுபவம், அறிவாற்றல் கொண்ட ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இளைஞர்களின் பிரவேசம் அக்கட்சி எதிர்காலத்தில் இந்த நாட்டிற்க சிறந்த தலைமைத்துவத்தினை வழங்குவதையே கட்டியங்கூறி நிற்கின்றது.

மேலும் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதும், நியாயமானதுமான தீர்வொன்றை அழிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க என்ற முற்போக்கான, சுயநலனற்ற தலைமையினாலேயே முடியும். பிரஜா உரிமை விடயத்தில் சட்ட திருத்தத்த்தினை மேற்கொண்டு அவ்விடயத்திற்கு நியாயமான முற்றுப்புள்ளி வைப்பதற்கு காரணமாக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க ஆகவே அந்தவொரு விடயமே அவருடைய தெளிவான அணுகுமுறைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

எனவே கொழும்பு மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்தவத்தினை ஐ.தே.க.ஊடாக உறுதி செய்யும் அதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவையும், அவரது அணியையும் வாக்குகளால் பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது என்றார்.

– குருவியின் ஆசிரியர் குறிப்பு : 
மேலே பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி வீரகேசரி இணையத்தளத்தில் வெளிவந்த செய்தியாகும். எனினும், தலைப்பில் இராதா கிருஸ்ணன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணன் என்பவரை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தலைப்பு சரியாக இருக்கின்ற போதிலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கிறார் என்ற வகையில் வாசகர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

செய்தி மூலம் – வீரகேசரி

ஆளப்போவது யார், மலையக கோட்டை யார் வசமாகும்? பொதுத்தேர்தல் குறித்த பார்வை

இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற நாளாக ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாறியுள்ளது. அன்றைய தினம் வாக்களிப்பு முடிவடைந்ததும் மறுநாள் காலை 8 மணி முதலே வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். இதன்படி,மொட்டு மலருமா அல்லது தொலைபேசி ஓங்கி ஒலிக்குமா என்ற வினாவுக்கான விடையை 6 ஆம் திகதி நள்ளிரவுக்குள் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு தடவைகள் பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டது. இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறு பொதுத்தேர்தல் இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட முதல் சந்தரப்பம் இதுவாகும்.

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாலும் இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பிரச்சாரப்போரும் முன்னெடுக்கப்பட்டது. இன்று நள்ளிரவுடன் (02) பிரச்சாரங்கள் யாவும் நிறைவுக்கு வருவதால் கடந்தவாரம் அரசியல் களம் பெரும் பரபரப்பாகவே காணப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் தணியவில்லை.

சுகாதார வழிகாட்டலுக்கமைய பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும் அவை உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. எனவே, வாக்களிப்பு தினத்தன்றாவது சுகாதார நடைமுறைகளை உரியவகையில் பின்பற்றுமாறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்களும் – வாக்காளர்களும்

இலங்கையில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் வாக்களிப்புமூலம் 196 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். 29 தேசியப்பட்டியல் ஆசனங்கள், கட்சிகள்பெறும் செல்லுபடியான வாக்குகளுக்கேற்ப பகிரப்படும்.

196 ஆசனங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 452 பேர் போட்டியிடுகின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 19 ஆசனங்களுக்காக 924 பேர் களமிறங்கியுள்ளனர். அதிகளவான வேட்பாளர்கள் தேர்தலில் குதித்துள்ள மாவட்டமாக இது திகழ்கின்றது. பொலன்னறுவை மாவட்டத்திலேயே குறைந்தளவான வேட்பாளர்கள் (152) களம்கண்டுள்ளனர்.

இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 17 லட்சத்து 9 ஆயிரத்து 209 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 17 லட்சத்து 85 ஆயிரத்து 964 பேரும், வன்னியில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 24 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேரும் வாக்காளர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 808 பேரும், திகாமடுல்ல மாவட்டத்தில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 979 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 868 பேரும் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 20 – 25 சதவீதமானோர் வாக்குரிமையைப்பயன்படுத்துவதில்லை. எனவே, இம்முறையாவது அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

‘சிஸ்டத்தில்’ மாற்றம்

வழமையாக பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான கையோடு தேர்தல் களமும் சூடுபிடித்து அனல்கக்க ஆரம்பிக்கும். ஆனால், கொரோனா வைரஸ் தாண்டவத்தால் இம்முறை எதிர்ப்பார்த்தளவு தேர்தல் திருவிழா களைகட்டவில்லை. பிரமாண்ட கூட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தலொன்றில் சுகாதார பரிசோதகர்கள் நேரடியாக தொடர்புபடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

வழமையாக வாக்களிப்பு முடியும் தினத்தன்றே வாக்கெண்ணும் பணியும் ஆரம்பமாகும். ஆனால், இம்முறை மறுநாளே அப்பணி இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலக்கும், நகர்வும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், பொதுத்தேர்தலிலும் பெருவெற்றியை எதிர்ப்பார்க்கின்றது.அதாவது 150 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அரியணையேறுவதே அதன் பேராசையாக இருக்கின்றது.

அதற்கேற்றவகையிலேயே பிரச்சார வியூகங்கள் வகுக்கப்பட்டு,திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஒரு புறத்தில் இனவாதம் கக்கப்பட்டதுடன் மறுபுறத்தில் தேசிய உணர்வும் தூண்டப்பட்டது. போர் முடிவடைந்த பின்னர் – 2010 இல் – நடைபெற்ற பொதுத்தேர்தலில்கூட மஹிந்த தரப்பால் மூன்றிலிரண்டு பலத்தை மக்கள் வாக்குமூலம் பெறமுயாமல்போனதால்,இம்முறையும் அது சாத்தியப்படாது என்றே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இராணுவ மயமாக்கலை நோக்கி பயணிப்பதாகவும், ஏதேச்சாதிகாரமாக செயற்படுவதாகவும் விமர்சனங்கள் குவிந்துள்ள நிலையில், அத்தரப்புக்கு மூன்றிலிரண்டு பலத்தை வழங்குவது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமமான செயலாகும் எனவும், பலமான எதிர்க்கட்சி இருக்கும் பட்சத்திலேயே அரச இயந்திரம் முறையாக சுழலும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச குருணாகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். மொட்டு அணியின் பங்காளக்கட்சி தலைவர்களான விமல்வீரவன்ஸ, தினேஸ்குணவர்தன, உதயகம்மன்பில ஆகியோர் கொழும்பு மாவட்டத்திலும், வாசுதேவ நாணயக்கார இரத்தினபுரி, மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.

தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா,ஈ.பி.டிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இம்முறை தனித்து களமிறங்கியுள்ளனர்.

தேர்தல்களில் வாக்கு வேட்டை நடத்துவதற்காக வழமையாக புலிப்புராணம்பாடும் ராஜபக்ச தரப்பு, இம்முறையும் அந்தப்புராணத்தை கைவிடவில்லை. மறுபுறத்தில் ஈஸ்டர் குண்டுதாக்குதல், சர்வதேச அழுத்தங்கள் ஆகியவற்றையும் முன்னிலைப்படுத்தி சிங்கள, பௌத்த வாக்குகளை மட்டுமல்ல கத்தோலிக்க வாக்குகளையும் பெறுவதற்கு கங்கணம்கட்டி செயற்பட்டது.

இதன்ஓர் அங்கமாகவே பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஹரின்பெர்ணான்டோ வெளியிட்ட அறிவிப்பையும் ராஜபக்சக்களின் சகாக்கள் ஊதிப்பெருப்பித்தனர்.

கொழும்பு மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒரு சிறுபான்மையின வேட்பாளர்கூட களமிறக்கப்படவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் மூன்று சிங்களவர்களும், 8 தமிழர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். சுதந்திரக்கட்சியும் அந்த மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகின்றது. இவ்வாறு தமிழ் வாக்குகளை சிறதடிப்பதற்காக மொட்டு அணி மறைமுகமாக சதித்திட்டங்களையும் தீட்டியுள்ளது என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின்
தேர்தல் ஆட்டம்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியானது பல சவால்களுக்கு மத்தியிலேயே பிரச்சாரங்களை முன்னெடுத்தது. ஐக்கிய தேசியக்கட்சி வழங்கிய நெருக்கடிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களின் வெளியேற்றம் என அந்தப்பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம்.

; “ஆட்சியைப்பிடிப்போம்”என சஜித் அணியினர் சூளுரைத்து வந்திருந்தாலும் அதற்கான சாத்தியம் குறைவு என்றே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனில்,ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் தரப்பே பொதுத்தேர்தலிலும் வெற்றிநடைபோடுவது இலங்கையில் வழமையாகவுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி எவ்வாறு முன்நோக்கி பயணிப்பது என்பதை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது.

சஜித் அணியினருக்கு சவால் விடுக்கும்வகையில் ஐக்கிய தேசியக்கட்சியும் சில வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ரணில் அணியில் பல தமிழ் வேட்பாளர்கள் இருப்பதால் கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளமுடியுமா என்ற சந்தேகம் எழுகின்றது. ஒரு தொகை வாக்குகள் சிதறும்பட்சத்தில்கூட,பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி ஓரணியாக களமிறங்கியிருந்தால் இம்முறை கம்பஹா, இரத்தினபுரி மாவட்டங்களிலும் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இலகுவில் பெற்றிருக்கலாம். இரு அணிகளாக பிளவுபட்டுள்ளதாலும் – இரு தரப்புகளுமே தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாலும் – வெற்றியை போராடிபெறவேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.பங்காளிக்கட்சி தலைவர்களான மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கொழும்பு மாவட்டத்திலேயே களமிறங்கியுள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணிலும் கொழும்பிலேயே களம்கண்டுள்ளார். முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதால் விருப்புவாக்கு சமர் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்.சி.சி. உடன்படிக்கை, கருணா அம்மானின் அறிவிப்பு குருணாகலை தொல்லியல் சம்பவம் ஆகியவற்றை பயன்படுத்தி ராஜபக்ச தரப்புக்கு சஜித் அணி நெருக்கடியை கொடுத்தது. .அத்துடன், ஆளுந்தரப்பின் பலவீனங்களை மக்கள் மத்தியில் பட்டியலிட்டுக்காட்டும் வகையிலும், தாம் ஆட்சிக்கு வந்தால் என்னசெய்வோம் என்பதை மையப்படுத்தியுமே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரப்போர் அமைந்திருந்தது.

அதேவேளை, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பாரிய கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ளது. ஏற்கனவே ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டிருந்த ஜே.வி.பி. இம்முறை அவ்வெண்ணிக்கையை அதிகரித்தும்கொள்ளும் நோக்கில் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தாலும் அது கைகூடாது என கூறப்படுகின்றது.

லடக்கு, கிழக்கில் பலமுனைப்போட்டி

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களிடம் எஞ்சியிருந்த ஆயுதமாகும். தற்போது அந்த ஆயுதமும் சிதைக்கப்பட்டுள்ளது. பல அணிகளாக பிரிந்தே தமிழ்க்கட்சிள் தேர்தலில் குதித்துள்ளன. இதனால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைவடைந்து பேரம் பேசும் சக்தி இல்லாமல் போகலாம் என்ற அபாயம் இருக்கின்றது.

தேர்தலில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகள் அரசியல் நிகழ்ச்சி நிரலைக்கைவிடுத்து தமிழ் மக்களுக்காக ஒன்றிணைந்து செயற்படுமென்றால் பரவாயில்லை. ஆனால் இக்கட்சிகளிடையே முரண்பாடுகளே அதிகம் நிலவுகின்றன. சங்கமம் என்பது சாத்தியப்படாததொன்றாகவே விளங்கும். எனவே,பிரதான கட்சியொன்றில் இருந்து கூடுதல் உறுப்பினர்களை சபைக்கு அனுப்புவதே சிறந்ததாக அமையும். தமிழ் மக்களுக்கென அவர்களின் அமோக ஆணையைப்பெற்ற கட்சியொன்று தற்போதைய சூழ்நிலையில் கட்டாயம் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது தமிழர்களின் அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும்.

இணைந்த வடக்கு – கிழக்கில் சுயாட்சி, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றை மையப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரம் அமைந்திருந்தது. மறுபுறத்தில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து மாற்று தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலேயே ஏனையக்கட்சிகளின் பிரச்சாரப்போர் அமைந்தது.

அதேபோல்,அரச அணுசரணையில் பல சுயேட்சைக்குழு உறுப்பினர்களும், வெற்றிபெறமுடியாது என தெரிந்தும் சிலர் தோல்வியடையவேண்டும் என்பதற்காக மேலும் சிலரும் தேர்தலில் குதித்துள்ளமை தமிழர்களுக்கான சாபக்கேடாகும்.
எனவே, வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை தமிழ் மக்கள் மதிநுட்பத்துடன் பயன்படுத்தவேண்டும் என்பது தமிழ் புத்திஜீவிகளின் கோரிக்கையாக இருக்கின்றது.

அதேவேளை, கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை பெரிதாக வன்முறைச்சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. தேர்தல் சட்டத்திட்டங்களைமீறும் வகையில் சில சம்பவங்கள் பதிவாகியிருந்தன. உள்நாட்டு கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் கொவிட் – 19 பிரச்சினையால் இம்முறை சர்வதேச கண்காணிப்பு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகமுக்கியமாக வாக்கு என்பது மக்களின் பிறப்புரிமையாகும். மிகமுக்கிய ஜனநாயக கடமைகளுள் ஒன்றாகும். எனவே, நேரகாலத்துடன் சென்று வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். வாக்களிப்புக்கு தேவையான ஆவணங்களையும், சுகாதார வழிகாட்டல்களையும் உரிய வகையில் கடைபிடிக்குமாறும் கோருகின்றோம்.

எஸ்.பிரதா

வட்டகொடை

பொதுத்தேர்தல் முடிந்தகையோடு விடைபெறுகிறார் மஹிந்த

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய ஓய்வுபெறபோவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதத்திலேயே முடிவடைகின்றது. எனினும் செப்டெம்பர் மாதமே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் 37 வருடங்கள் தேர்தல் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட ஒருவர். அவ்வாறாயின் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலே மஹிந்த தேசபிரியவின் இறுதி தேர்தல் பணியாக கூட அமையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொட்டும் மழைக்கு மத்தியில் மலையகத்தில் இறுதிநாள் ஆட்டம்!

பொதுத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்குவரும் நிலையில், இன்று காலை முதல் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான இரு கட்சிகளும் பரப்புரைகளில் ஈடபட்டுவருகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்துவருகின்றது. இறுதி நாள் என்பதால் மழைக்கு மத்தியிலும் வீடு வீடாகச்சென்றும், பொது மண்டபங்களிலும் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

நகரப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருமித்து வாக்களித்து தனித்துவம் காப்போம் – சந்திரகுமார் அறைகூவல்

ஒருமித்து வாக்களித்து தனித்துவம் காப்போம் என்று இரத்தினப்புரி மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கின்றார் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம்.சந்திரகுமார்.

இரத்தினப்புரி களவான தேர்தல் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

” தேயிலை, இறப்பர், தென்னை போன்ற சகல வளங்களும் விளையும் நாடாக எமது நாடு இருந்தாலும் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது பொருளாதார பின்னடைவுடன் எமது நாடு இருப்பதற்கான காரணம் நம் நாட்டில் காணப்படும் அரசியல் முறைமையே.
நாம் மற்றைய நாடுகளில் தங்கியிருக்க சுதந்திரத்திற்கு பின்னர் இந்நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களே பொறுப்பு கூறவேண்டியவர்களாக காணப்படுகின்றனர். இதற்கு பிரதான காரணமாக அமைவது புத்திஜீவிகள் பாராளுமன்றம் செல்லாமையே. நீதி சட்டம் ஒழுங்கு என்பன என்ன என்பதை அறியாத அரசியல்வாதிகளே எம்மை ஆள்கின்றனர்.
கடந்த அமைச்சரைவையிலே சுமார் 96 பேர் சாதாரண தரம் சித்தியடையாதவர்கள் அதனாலேயே மிளகாய் தூள் கலாசாரமும் சபாநாயகர் ஆசனத்திலே நீர் ஊற்றும் செயற்பாடுகளும் காணப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில் எம் நாடு எவ்வாறு அபிவிருத்தியை நோக்கி நகறும். இதற்கு படித்தவர்கள் நாடாளுமன்றம் செல்லவேண்டும். இதனால்
ரம்புக்கந்தை தோட்டத்திலே பிறந்து பட்டதாரியான தன்னை போன்ற படித்தவர்ளுக்கே தங்களின் வாக்கையளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் சேவையாற்ற கூடிய சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்கவே எமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். இத்தருணத்தில்  சிந்தித்து செயற்பட வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடப்பாடாகும். எனவே இம்முறை பாராளுமன்ற தேர்தலிலே சிந்தித்து செயற்பட்டு 10 இல தொலைபேசிக்கு தங்களது வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
19ஆம் திருத்த சட்டத்தின் பிரகாரம் நாட்டின்  ஜனாதிபதியை விட பிரதமருக்கே அதிகாரங்கள் அதிகம் என்பதோடு ஒரு சிறந்த அமைச்சரைவ அமைந்தால் மாத்திரமே நாட்டை வளமான வழியில் நடாத்தி செல்ல முடியும். அவ்வாறான ஒரு சிறந்த அமைச்சரவை 6ம் திகதி கௌரவ சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையும்.
இன மத மொழி வேறுபாடின்றி எம் சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் எனவே தொலைநோக்குடன் சிந்தித்து இல10 தொலைபேசிக்கு ஒருமித்து வாக்களிப்பதனூடாக  எம் உரிமையை வெளிப்படுத்துவதோடு  தனித்துவம் காப்போம்  என்றார்.

‘சந்தாவுக்காக சதிவேலை செய்த திகாம்பரம் ‘ – பிரபு குற்றச்சாட்டு

” சந்தா பணத்துக்காகவே கடந்த நான்வரை வருடங்களில் நுவரெலியாவில் ஒரு தொழிற்சாலைகூட அமைக்கப்படவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் உரிய தொழில் வாய்ப்புகள் இல்லை. இங்குள்ள அரசியல் முறைமையே இதற்கு காரணம்.

கடந்த நான்கரை வருடங்களில் பாரிய அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளன என்று திகாம்பரம் கூறியுள்ளார். ஆனால், இங்கு தொழிற்சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதற்கும் காரணம் இருக்கின்றது.

தொழிற்சங்கம் மூலமாக அவருக்கு சந்தா வருகின்றது. எனவே, தொழிற்சாலை அமைத்தால் மக்கள் அங்கு வேலைக்கு சென்றுவிடுவார்கள். இதனால் சந்தா பணம் இல்லாமல்போய்விடும். இதனால்தான் அபிவிருத்திகளை முன்னெடுக்கவில்லை.

 

‘இறுதிமூச்சு இருக்கும்வரை மலையக மக்களுக்காக பாடுபடுவேன்’ – திகா

உடலில் இறுதிமூச்சு இருக்கும்வரை மலையக மக்களுக்காக உழைப்பேன் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பெட்டும், போலையும் கொடுத்து எமது இளைஞர்களை ஏமாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். மேலும் சிலர் கனவுகளைப்பற்றி கதைக்கின்றனர். ஆனால், கனவை நிறைவேற்றியது தமிழ் முற்போக்கு கூட்டணிதான்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று எமது ஆட்சி தொடர்ந்திருந்தால் , ஒவ்வொரு தோட்டங்களுக்கும் 50  வீடுகள் வந்திருக்கும். எமது அமைச்சு பறிபோனதால் வேலைத்திட்டங்களும் முடக்கப்பட்டன.

எனவே, எமது வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மக்கள் அங்கீகாரம் வழங்கவேண்டும். நான் இருக்கும்வரை நீங்கள் எதற்கும் அஞ்சவேண்டாம். உயிர் இருக்கும்வரை உங்களுக்காக உழைப்பேன். 5 ஆம் திகதிக்கு பின்னர் நானே அமைச்சர்.” – என்றும் திகாம்பரம் தெரிவித்தார்.

தனிமைக்குட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் – தாயும் சேயும் நலம்

சவூதி அரேபியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலுக்குள்ளான கர்ப்பவதியொருவர் நேற்று குழந்தை பிரசவித்துள்ளார்.

அந்த குழந்தை சுகதேசியாக இருப்பதாக யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் விடத்தல்பளை கொரோனா தடுப்பு முகாமியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.  இராணுவத்தினர் யாழ். வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர். தனியானதொரு அறையில் பாதுகாப்பான முறையில் பிரசவம் இடம்பெற்றுள்ளது.

செந்திலின் வெற்றிக்காக களத்தில் ஜனாதிபதி

பதுளை மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் செந்தில் தொண்டமானை ஆதரித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பிரசாரப் பணிகளில் ஈடுபட்டார்.

பதுளைக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, செந்தில் தொண்டமானுடன் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்ததுடன், செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக பிரசாரத்திலும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது நடு வீதியில் பெருந்திரளான மக்கள் குழுமியிருக்கையில், ஜனாதிபதி வீதியில் இறங்கி மக்களைச் சந்தித்தார்.

அங்கு ஊவா மாகாண முதலமைச்சரின் பிரசாரக் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், அதனைவிட மும்மடங்கு மக்கள் செந்தில் தொண்டமானின் கூடியிருந்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி ஜனாதிபதி முன்னெடுத்துவரும் சூறாவளி சுற்றுப் பயணத்திற்கமைய இன்று பதுளை மாவட்டத்தில் ஜனாதிபதி பிரசாரங்களை முன்னெடுத்தார்.

ஆகஸ்ட் 11 இல் புதிய அரசாங்கம்!

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் பொதுத்தேர்தலில் ஆட்சிக்குவரும் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி பதவியேற்கும் எனவும், அன்றைய தினமே அமைச்சரவையும் நியமிக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.

அமைச்சரவை பதவியேற்க முன்னர் புதிய பிரதமர் பதவியேற்பார். அதன்பின்னர் ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளார்.

புதிய பாராளுமன்றத்தில் முதலாவது கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறவுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மாகாணசபைத் தேர்தல் குறித்த கூட்டம் ஒத்திவைப்பு: மனோ காட்டம்!

0
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நாளை 21ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுத் கூட்டம், திகதி குறிப்பிடப்படாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் முக்கிய...

தாயகம் திரும்பினார் இந்திய துணை ஜனாதிபதி!

0
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இன்று (20) பிற்பகல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது விஜயத்தை நிறைவு செய்த இந்தியத் துணை...

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வலுசக்தி...