Home Blog Page 3955

கொட்டகலையில் இராணுவ முகாமா? ராதாவின் கருத்துக்கு ராணுவம் மறுப்பு!

கொட்டகலையில்  இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனக்கு எவ்வித உத்தியோகப்பூர்வத் தகவலும் கிடைக்கவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொட்டகலையில் இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான இராதாகிருஷ்ணன் நேற்று (12) தெரிவித்த கருத்தின் உண்மைத் தன்மை குறித்து வினவியபோதே, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர் சந்தன விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,

” நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானிக்கும் எந்த இடத்திலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படலாம். எனினும், கொட்டகலை சம்பவம் குறித்து எனக்குத் தெரியாது. கொட்டகலையில் இராணுவ முகாமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எவ்வித உத்தியோகப்பூர்வ தகவலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் இல்லை” என்றார்.

கொட்டகலையில் நேற்று (12) மாலை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,

பாதுகாப்பு பற்றி கதைத்தவர்கள் இன்று கொட்டகலையிலும் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு இராணுவ முகாம் அமையுமானால், அது மக்களுக்கு இடைஞ்சலாகவே அமையும். இரவில் நடமாடினால் உள்ளே போட்டுவிடுவார்கள். பொலிஸாரிடம் சரி, உண்மையை எடுத்துக்கூறிவிட்டு வந்துவிடலாம். ஆனால், இராணுவம் வந்தால் அவ்வாறு செய்ய முடியாது. சிவில் நிர்வாகத்துக்கும் இராணுவ நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்.” – என்றார்.

நன்றி – medialk.com

‘மொட்டுக்கு வாக்களித்து அரச பங்காளிகளாகுவோம்’ – சக்திவேல்

“பொதுத் தேர்தலில் ஆளும் பொதுஜன பெரமுன கூடுதலான ஆசனங்களைப் பெற்று பலம் வாய்ந்த அரசாங்கத்தை அமைக்கும். மலையக மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறினை இந்தத் தேர்தலிலும் விடாமல் பொதுஜன முன்னணிக்கு வாக்களித்து அரசாங்கத்தின் பங்காளியாக மாற வேண்டும்.

அப்போதுதான் எமது பிரச்சினைகளையும், தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனவே நுவரெலியா மாவட்ட அரச ஊழியர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு தங்களின் வாக்குகளை வழங்கி எங்களை வெற்றி பெறச் செய்து எங்களின் குரல்களை பாராளுமன்றில் ஒலிக்கச் செய்யுங்கள்.”

இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய பி.சக்திவேல் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலவாக்கலை கிளை காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா அவர்கள் முதன் முறையாக மத்திய மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் தமிழ் கல்வி அமைச்சை கேட்டு பெற்றார். அக்காலகட்டத்தில் மலையகத்தில் கல்வியின் வளர்ச்சி மிக மோசமாக காணப்பட்டது.

அதனை சரிசெய்யவும் மலையக மக்கள் ஏனைய சமூகத்திற்கு மத்தியில் கல்வியில் வளர்ச்சியடைந்து ஏனைய சமூகங்களுக்கு நிகரான சமூகமாக வாழ்வதற்காகவே இந்த கல்வி அமைச்சை மத்திய அரசுடன் பேரம் பேசி பெற்றார்.

இந்த கல்வி அமைச்சினூடாக மலையகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எண்ணிணார்.அவர் அன்று எண்ணியவாறு இன்றுவரை மலையகத்தில் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கமாக இருந்த எமது சமூகம் இன்று பல்வேறு துறைகளில் உயர்ந்திருக்கின்றோம். அன்று அவர் கண்ட கனவு இன்று நனவாகி இருப்பதை காணமுடிகிறது.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சினால் பாரிய மாற்றங்கள் தொடர்ந்து மலையகத்தில் ஏற்ப்பட்ட வண்ணமே இருக்கின்றன. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பெரும்பான்மை அரசியல்வாதிகளும் மலையகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளுக்கும் ஒரு இலக்கு இருந்தது இந்த மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சை எப்படியாவது இல்லாமல் செய்து விட வேண்டும் என இதுவே இந்த அமைச்சு கடந்த சில வருடங்களாக நம்மிடமிருந்து இல்லாமல் போக காரணமாக அமைந்தது.

அதனை எமது சமூகத்திற்கு மீண்டும் தனது பலத்தால் பெற்றுக்கொடுத்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். எனவே எமது புத்திஜீவிகள் நன்கு சிந்திக்க வேண்டும் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக எண்ணில் அடங்காத சேவைகளை செய்து வரும் மாபெரும் ஸ்தாபனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதே உண்மை.

எனவே இத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஐவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடமை உங்களிடம் உள்ளது என்றார்.

தலவாக்கலை  பி.கேதீஸ்

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக அநுர நீதிமன்றில் மனு!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தமக்கு விடுக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யக் கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவன்காட் நிறுவனத்தை அடிப்படையின்றி கையக்கபடுத்தியதன் ஊடாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக சாட்சியமளிக்க அநுரகுமார திஸாநாயக்க ஜூன் மாதம் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

அவன்கார்ட் நிறுவனத்தை தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நிசங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 17 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செந்தில் தொண்டமானை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர்!

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க, தனது தேர்தல் பிரசாரத்தில் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.

பதுளை தோட்டப்புறங்களில் அசைக்க முடியாது செல்வாக்கு செந்தில் தொண்டமானுக்கு இருப்பதால், அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் பெரும்பான்மையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாகாண சபையில் முதலமைச்சரை தீர்மானிக்கும் சக்தியாக செந்தில் தொண்டமான் இருந்தார். இதற்கு முன்னரும், நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா உள்ளிட்ட முன்னணி அரசியல்வாதிகளும் செந்தில் தொண்டமானின் படத்தைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானின் புகைப்படமின்றி எந்தவொரு பெரும்பான்மை வேட்பாளரும் வாக்குளைப் பெற முடியாது என்பதை அறிந்துள்ளதால் அவர்களது சுவரொட்டிகளுடன் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டுள்ளதைக் காண முடிகிறது..

பலம்மிக்க அமைச்சுப் பதவியொன்று செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் தொண்டமானுக்கு இருந்த பெருமளவிலான ஆதரவு தற்போது இரட்டிப்பாகியுள்ளது. இதனால், செந்தில் தொண்டமானுக்கு முன்னர் இருந்த ஆதரவைவிட தற்போது ஆதரவளிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

பதுளைத் தேர்தல்களம் நாளுக்குநாள் பரபரப்படைந்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தமிழ் வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் தொண்டமானின் செல்வாக்கு தோட்டப்புறங்களில் அசைக்க முடியாத அளவு வளர்ச்சிக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தேர்தலை ஒத்திவைக்குமாறு சஜித் அவசர கோரிக்கை

பொதுத்தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

“கொரோனா 2ஆவது அலை உருவாகியுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, மக்களின் நலனின் கவனம் செலுத்தி தேர்தல் திகதியை பிற்போடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அவ்வாறு செய்யாமல் பிரச்சாரத்துக்கு நிபந்தனைகளை விதிப்பது ஜனநாயக முறைப்படியான நடவடிக்கையாக அமையாது.” எனவும் குறிப்பிட்டார்.

கொட்டின குளவிகள் – 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பதுளை, நமுனுகுல பிங்கராவ தோட்ட தொழிற்சாலை பிரிவில் தேயிலை கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 14 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பள்ளகெட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (13/07) முற்பகல் 10.30 மணியளவில் குளவி கூடொன்று கலைந்து சராமரியாக தொழிலாளர்களை தாக்கியுள்ளது. அண்மை காலமாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குளவிகளின் தாக்கத்திற்குள்ளாவதுடன் மலைகளில் மிகுந்த அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக அந்த நாட்டை சேர்ந்த செய்தி முகமையான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு போலி அரசியல் நடத்துகிறது – விமல் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது போலி அரசியலையே நடத்திவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான பொய் அரசியலை நடத்துகின்றது என்பது உங்களுக்கு தெரியும். நான் 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினேன். 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகின்றேன். இக்காலப்பகுதியில் சம்பந்தன் ஒரே கதையைத்தான் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். ஹன்சாட்டை எடுத்துபார்த்தால் தெரியும். உரையில் சிறு மாற்றங்கள் இருக்குமேதவிர கருப்பொருள் என்பது ஒன்றாகவே இருக்கும்.
இவ்வாறு ஒரே பல்லவியை பாடும் சம்பந்தன் திருகோணமலைக்குகூட செல்லமாட்டார். கடந்த ஆட்சியில் சொகுசுவீடு வழங்கப்பட்டது. ஆனால், வடக்கு மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.  ஒரே கதையைக்கூறிக்கொண்டு இன்னும் எவ்வளவுகாலம்தான் பயணிப்பது?
அந்த கதைக்கு வழங்கக்கூடிய தீர்வுதான் என்ன?  எனவே, இந்த கதையில் இருந்து சம்பந்தன் தரப்பு வெளியில் வரவேண்டும். அனைத்து இன மக்களும் இலங்கையராக வாழக்கூடிய புது கதையை ஆரம்பிக்கமுடியும். இப்படியான கதையே எமக்கு தேவை. அதற்கு உயிர்கொடுக்கவேண்டும்.  நான் இந்த நாட்டை நேசிக்கின்றேன். அது பிளவுபடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.” – என்றார்.

‘கொரோனா’ கட்டுக்குள் வரும் – தேர்தல் நடக்கும்! எஸ்.பி. நம்பிக்கை

கொரோனா’ வைரஸ் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். திட்டமிட்ட அடிப்படையில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் சாதகமான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்பட்டது. எனினும், துரதிஷ்டவசமாக இடம்பெற்ற ஒரு சம்பவத்தால் மீண்டும் சர்ச்சை நிலை ஏற்பட்டது. இந்நிலைமையையும் கட்டுக்குள்கொண்டுவருவதற்காக பலம் எமது சுகாதார பிரிவினர், முப்படையினர், பொலிஸார் மற்றும் அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

தற்போதைய நிலையால் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பாரியளவு கூட்டங்களை நடத்தாமல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சிறு அளவிலான கூட்டங்களை நடத்துமாறு எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நிலைமை விரைவில் சீராகிவிடும். எனவே, திட்டமிட்டுள்ளவாறு தேர்தல் நடைபெறும்.
சஜித்தின் அறிவிப்புகள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கின்றன. எனவே, அவற்றை செவிமடுத்து சிரிக்கலாம். பதிலளிக்கும் அளவுக்கு அவை முக்கியத்துவம் இல்லை. பொதுத்தேர்தலில் நிச்சயம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவோம்.” – என்றார்.
க.கிசாந்தன்

‘ மலையக மக்களை எந்த கொம்பனும் சீண்டமுடியாது’ – திகா திட்டவட்டம்

” தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியே மலையகத்தின் வெற்றி. எனவே, கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மலையக மக்களை பாதுகாப்பதற்கு நானுஎம், மனோவும், ராதாகிருஷ்ணனும் இருக்கின்றோம். எனவே, எந்த கொம்பனுக்கும் அஞ்சவேண்டாம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துலை மெராயா கௌலினா தோட்டத்தில் நேற்று (12) மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” காணி உரிமை, தனிவீடு, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு என மலையக மக்களுக்கு பலசேவைகளை நான் கடந்த நான்கரை வருடங்களில் செய்திருந்தாலும், திகாம்பரம் ஒன்றுமே செய்யவில்லை என பொய்யுரைத்து சிலர் வாக்குகேட்பதை காணமுடிகின்றது. என்னை விமர்சித்தே சின்ன, சின்ன வாண்டுகளெல்லாம் ஓட்டு கேட்கின்றன. அதுமட்டுமல்ல மலையகத்தை ஒரே நாளில் மாற்றியமைக்கப்போவதாகவும் கொக்கரிக்கின்றனர்.

யார் என்ன சொன்னாலும், எனக்கு எனது மக்களே முக்கியம். நான் உங்களில் ஒருவன். எனது மக்களுக்கு எவராவது துரோகம் செய்தால் அவர் நிம்மதியாகவாழ முடியாத நிலை ஏற்படும் என்பதையும் கூறிவைக்கவிரும்புகின்றேன்.

எனக்கு நம்பிக்கை நிச்சயம் என்னை வெற்றிபெற வைப்பீர்கள். எனது வெற்றியே மலையகத்தின் வெற்றி. மாற்று அணியினரை வெற்றிபெறவைத்தால் அது மலையகத்துக்கு ஏற்படும் தோல்வியாகும்.

மலையக மக்களை காப்பாற்றுவதற்கு யாருமே இல்லையே என குமுறிவருகின்றனர். உங்களை நான் காப்பாற்றுவேன். தோட்டதுரையாக இருந்தாலும் எந்த கொம்பனாக இருந்தாலும் உங்களை சீண்டவிடமாட்டேன். எவருக்கும் பயப்படவேண்டாம்.

கொட்டகலை பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இதனை தட்டிக்கேட்கமாட்டார்கள். ஆனால், துணைபோவார்கள். ” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...

ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக பெண் இராணுவ தளபதி நியமனம் !

0
125 வருடகால ஆஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் முதன்முறையாக இராணுவ தளபதி பதவிக்கு பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுத் திறன்களுக்கான தளபதியாக (Chief of Joint Capabilities) பதவி வகிக்கும் சூசன் கோய்ல் (Susan Coyle), புதிய...