Home Blog Page 844

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி – புப்புரஸ்ஸ பகுதியில் சோகம்!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜீகே பகுதியில் மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார்.

வறுமையால் மின் கட்டணம் செலுத்தாததால், இவரின் வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அயல் வீடுகளில் இருந்தே மின் இணைப்பை பெற்று பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை, மின் இணைப்பை பெற முற்பட்டபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் புப்புரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹப்புத்தளையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது!

ஹப்புத்தளை, விகாரகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை, கல்கமுவ, மஹரகம, பண்டாரவளை, அடம்பிட்டிய, வெவெல்தெனிய, மாகொல மற்றும் கொழும்பு 05 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை, விகாரகல கித்துல்கஹவத்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் சிலர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது குறித்த 13 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அத்தோடு மாணிக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தபடும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விசாரணையில் பின்னர் சந்தேக நபர்களை பண்டாரவளை நீதிமான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

‘பூகுடு கண்ணா’வை பழிதீர்க்கவே சயனைட் கலந்த பாலை கொடுத்தாரா ‘குடு செல்வி’?

கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்குற்ற சந்தேக நபர்கள் இருவருக்கு ‘சயனைட்’ கலந்த பாலே வழங்கப்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பாலை வழங்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்கின்றது.
கொழும்பு, ஜிந்துபிட்டிய பகுதியில் ஜனவரி 24 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நபரொருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டனர். இதன்போது ஒருவர் பொதுமக்களால் மடக்கிபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இருவரும் ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த நபர்களை நேற்று முன்தினம் பகல் நபரொருவர் பார்வையிட வந்துள்ளார். இருவருக்கும் பால் பக்கட்டுகளை வழங்கியுள்ளார். பனிசும் வழங்கப்பட்டுள்ளது. பாலை அருந்திய பின்னர் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
அதன்பின்னர் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்கக்ப்பட்டனர். இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஜிந்துபிட்டிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் ‘குடு செல்வி’ யின் தரப்பை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய தரப்பு பாதாள குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் சகாக்களாவர்.
இந்நிலையிலேயே இதற்கு பழிதீர்க்கும் வகையில் பொலிஸில் இருந்த பூகுடு கண்ணாவின் சகாக்களுக்கு, குடு செல்வி தரப்பு இவ்வாறு விஷம் கலந்த பாலை வழங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
விஷம் கலந்த பாலை கொண்டு சென்றவர் பூகுடு கண்ணாவின் குழுவை சேர்ந்தவர் எனவும், அவரை குடு செல்வி தரப்பு விலைக்கு வாங்கியே இந்த செயலை செய்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கும் பேர்த் நகருக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்த திட்டம்

இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான சந்திப்பு இன்று (09) பேர்த் நகரில் நடைபெற்றது.

இலங்கைக்கும் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், இலங்கைக்கும் பேர்த் நகருக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவதற்கும் பிரீமியர் (Premier) ரோஜர் குக் இணக்கம் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் காணப்படும் சாத்தியக்கூறுகளை விவரித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறும், இலங்கைக்கு விஜயம் செய்து, இந்நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கு அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஷ்வர, பாராளுமன்ற உறுப்பினர்களான சிந்தக மாயதுன்ன, இஷாக் ரஹ்மான், ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே மற்றும் ரிஷான் டி சில்வா ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தில் மேற்கொண்டுள்ளதோடு ஏழாவது இந்து சமுத்திர மாநாடு இன்றும் (09) நாளையும் (10) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது.

“நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) பிரதான உரை ஆற்றவுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (08) பிற்பகல் பேர்த் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அதிக மின்சார கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை!

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே அறவிடப்படுவதாக Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகமாக உள்ளதென அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதாரம் மற்றும் தொடர்புபட்ட பகுப்பாய்வுத் தகவல்களை வழங்கும் இலங்கையின் பிரபல நிறுவனமான public finance.lk-வின் பகுப்பாய்வு அறிக்கையில், 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் மின்சார பாவனையாளர்கள் 100, 200, 300 அலகுகளை பயன்படுத்தியபோது செலுத்தியுள்ள கட்டணம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதன் பகுப்பாய்வின் போது வழங்குநரின் உற்பத்திச் செலவு மாத்திரம் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலதிகமாக அறவிடப்படுகின்ற சமூக பாதுகாப்பு வரி போன்ற அரச வரிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவில்லை.

இலங்கைக்கு அடுத்ததாக தெற்காசியாவின் அதிக மின் கட்டணம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் காணப்படுகின்றது.

எனினும், இலங்கையுடன் ஒப்பிடும்போது குறித்த கட்டணம் மிகவும் குறைவாகவுள்ளதெனவும் Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது.

100 அலகுகளை நுகரும் இலங்கையிலுள்ள வீடொன்று செலுத்த வேண்டிய மின்சார கட்டணம், அதே அலகுகளைப் பயன்படுத்தும் பாகிஸ்தான் வீடுகளில் அறவிடப்படும் கட்டணங்களை விட 50% அதிகம் என பகுப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கேரள கஞ்சா, சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது!

பலாங்கொடை மற்றும் கல்தொட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை ரத்மலவின்ன பகுதியில் இருவரும் கல்தொட்ட இலுக்பெலஸ்ஸ பிரதேசத்தில் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 24 கிராம் கேரள கஞ்சா, சட்டவிரோத மதுபானம் மற்றும் அவற்றை தயாரிப்பதற்கு தேவையான பொருட்களும் கைப்பற்றப்பட்டன.கைது செய்த மூவரையும் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் படுத்த உள்ளனர்.

எம்.எப்.எம். அலி

 

அநுரவுக்கு டில்லி வலைவிரித்தது ஏன்? சீனாவுக்கு எதிரான வியூகமா?

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுவருவதை காணமுடிகின்றது. இலங்கையிலும் இந்நிலை மாறவில்லை. இலங்கையில் உள்ள ஊடகங்களும் அநுர தரப்பின் இந்திய விஜயம் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

இவ்வருடம் தேர்தலொன்று நடைபெறவுள்ளமையே இதற்கு காரணம். இலங்கையில் தற்போது எல்லா இடங்களிலும் தேர்தல் பற்றி பேசப்படுவதை செவிமடுக்க முடிகின்றது. சமூக வலைத்தளங்களிலும் ஜனாதிபதி தேர்தல் பற்றி அதிகம் பேசப்படுகின்றது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடந்த 5 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது பிராந்திய பாதுகாப்பு, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டன என்று இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர். இந்த சந்திப்புகள் தொடர்பில் இந்திய ஊடகங்களும் பல்வேறு கோணங்களில் செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவின் இந்திய விஜயம் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த பிரதான இந்திய ஊடகமொன்று, ஜே.வி.பியை, மாக்கிசவாத கட்சியாக அறிமுகப்படுத்தி இருந்தது. ‘The JVP, a Marxist-Leninist communist party in Sri Lanka’ என்று டைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த அறிமுகப்படுத்தல் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? 1980களின் பிற்பகுதியில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து, மாகாணசபை முறைமைக்கு போர்க்கொடி தூக்கி தென்னிலங்கை சமூகத்தில் இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி. செயற்பட்டுள்ள வரலாற்றை இந்த அறிமுகப்படுத்தல் நினைவூட்டுகின்றது. இவ்வாறு இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை கடைபிடித்துவந்த கட்சி தற்போது கருத்தியல் ரீதியில் எந்தளவுக்கு மாறியுள்ளது என்பதையும் இந்த அறிமுகம் ஊடாக ஊடகங்கள் எடுத்துக்காட்ட முற்பட்டிருக்கலாம்.

மறுபுறத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய இலங்கையின் பிரதான கட்சியொன்றுடனேயே இந்தியா கொடுக்கல் – வாங்கலை ஆரம்பித்துள்ளது. தெற்காசியாவில் சீனாவின் தலையீட்டை கடுமையாக எதிர்க்கும் – அதற்கு எதிராக செயற்படும் இந்தியா, சீனாவுடன் நட்புறவு கொண்டுள்ள கட்சியொன்றின் தலைமையை அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளது ஏன்?

சிலவேளை இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றினால் அக்கட்சியினர் சீனா பக்கம் சாயாமல், இந்தியா நோக்கி நகரும் வெளிவிவகாரக் கொள்கையை கடைபிடிப்பார்களா? இதை இந்தியா நம்புகிறதா? அவ்வாறு இல்லையேல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிடம் தஞ்சமடைந்துள்ளதாலும் Belt and Road Initiative (BRI)
திட்டத்தில் இலங்கையை அங்கத்தவராக இணைந்துள்ளதாலும் – அதற்கு மாற்றுவழியாக தேசிய மக்கள் சக்தியை இந்தியா தெரிவு செய்துள்ளதா? சுருக்கமாக கூறுவதாயின் விஷத்தை கொண்டு விஷத்தை எடுப்பதற்கு இந்தியா முற்படுகின்றதா?

அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது என்ற கேள்விக்கு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாலேயே அவரை டில்லி அழைத்துள்ளது என்ற பதிலையே பெரும்பாலான ஊடங்கள் வழங்கியுள்ளன.

“ இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் உங்கள் வாக்கு யாருக்கு” என்ற தலைப்பின்கீழ் சுகாதார கொள்கை நிறுவகம் நடத்திய கருத்து கணிப்புகளை அடிப்படையாகக்கொண்டே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கருத்து கணிப்பின் டிசம்பர் மாத முடிவுகளின் அடிப்படையில் 50 வீதமான ஆதரவை அநுரகுமார திஸாநாயக்கவே பெற்றுள்ளார்.

நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அநுரவுக்கான ஆதரவு 52 வீதத்தில் இருந்து 50 வீதமாக குறைவடைந்துள்ளது. எனினும், 32 வீதமாக இருந்த சஜித்துக்கான ஆதரவு டிசம்பரில் 33 வீதமாக அதிகரித்துள்ளது.

2022 ஜனவரி முதல் 2023 டிசம்பர் வரை நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் 20 வீதத்தில் இருந்து 52 வீதம்வரை அதிகரித்திருந்த அநுரவுக்கான ஆதரவு தற்போது குறைய ஆரம்பித்துள்ளது. 40 வீதத்தில் இருந்து 30 ஆக குறைந்திருந்த சஜித்துக்கான ஆதரவு தற்போது எகிற ஆரம்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு 0 இருந்து 22 வீதமாக அதிகரித்து தற்போது 9 வீதமாக குறைவடைந்துள்ளது. 40 வீதத்தில் ஆரம்பமான மொட்டு கட்சிக்கான ஆதரவு தற்போது 8 வீதமாக குறைவடைந்துள்ளது.

குறித்த கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய அரசியல் போட்டியில் மிகவும் பிரபலமான வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவே விளங்குகின்றார். அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தியாவின் தெரிவு சரியானதே. மறுபுறம், இந்நாட்டில் இயங்கும் இந்திய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின்படி, அனுரகுமார திஸாநாயக்கவே மிகவும் பிரபலமான வேட்பாளராக இருக்கலாம். எனவே, இலங்கையின் எதிர்கால அரசியலை இந்தியா கையாள வேண்டுமாயின் ஜே.வி.பி. விளைத்து போட வேண்டும். அந்த கோணத்தில் பார்த்தாலும் இந்தியாவின் வியூகம் சரியானதே…!

எது எப்படி இருந்தாலும் இந்தியா தொடர்பில் ஜே.வி.பியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதே இலங்கை மக்களுக்கு முக்கியம். இந்தியா தொடர்பில் தமது பழைய நிலைப்பாட்டை கைவிட்டு தற்போது ஜே.வி.பி. செயற்படுகின்றதா என்பதும் முக்கியம். மறுபுறத்தில் சீனாவுக்கு எதிரான இந்திய சார்பு வெளிவிவகாரக் கொள்கையை கடைபிடிக்க ஜே.வி.பி. தயாரா என்ற விடயமும் மக்களுக்கு முக்கியம் பெறுகின்றது. சீன வேலைத்திட்டங்கள் மற்றும் சீனக் கடன்களில் சிக்கியுள்ள நாட்டின் பிரஜைகளுக்கு, மேற்படி கேள்விகளுக்கு ஜே.வி.பி. தரப்பில் இருந்து கிடைக்கும் பதில்களும் மிக முக்கியமானவை.

இலங்கை – ஆப்கான் இன்று பலப்பரீட்சை!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

2 ஆவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 11 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 14 ஆம் திகதியும் பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையிலேயே இன்று ஒருநாள் தொடர் ஆரம்பமாகின்றது.

ரூ. 37 கோடி பெறுமதியான நீல மாணிக்கக்கற்களுடன் தேரர் உட்பட இருவர் கைது!

கோப்பு படம்

கொஸ்லாந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸாரால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். புதையல் தோண்டியதன்மூலம் இந்த மாணிக்கக்கற்கள் எடுக்கப்பட்டுள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெறுகின்றது.

வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்பு!

வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர். மிரிஹான ஜுபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று (08) இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பொலிசார் குறித்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டின் அறையில் கட்டிலில் சில நாட்களுக்கு முன் உயிரிழந்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் சமையலறை தரையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சில நாட்களாக குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக அயலவர் ஒருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் படி குறித்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது.

80 வயதுடைய ஆணும் 96 வயதான பெண்ணுமே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

செய்தி

செம்மணியில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக நான்கு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 29ஆம் நாள் அகழ்வுப் பணி...

கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்களுடன் வீட்டில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது

0
சந்தேகத்துக்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில்...

முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும!

0
" முன்னாள் எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும். எனவே. ஓய்வூதியத்தை இரத்து செய்த பின்னர் வாழ்வதற்கு சிரமமெனில் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம். அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்." - அமைச்சர் வசந்த...