” பிரபாகரனுடனேயே மோதியவன் நான், ஆக மோதல்களை எதிர்கொள்வதும், சவால்களை சந்திப்பதும் எனக்கு புதியவிடயமல்ல. கட்சி சட்டப்பூர்வமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்ள தயார்.” – என்று சூளுரைத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அக்கட்சியின் தவிசாளர் பொன்சேகாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவை கட்சியில் இணைத்துள்ளமையே இம்மோதலுக்கு காரணம்.
இந்நிலையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“சலுகைகளை அனுபவிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.அரசியலுக்கு வந்திருக்காவிட்டால்தான் எனக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும். அமைச்சு செயலாளர் பதவிக்கூட வழங்க தயாராக இருந்தனர்.
ஆனாலும் நான் அவற்றை ஏற்கவில்லை. சலுகைகளுக்கு அடிபணிந்து சோரம்போக தயாரில்லை என்பதால்தான் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசியலுக்கு வந்தேன்.
அன்று ராஜபக்சக்களுடன் மோதுவதற்கு எனக்கு முதுகெலும்பு இருந்தது. எனவே, தவறுகள் இடம்பெறும்போது மௌனம் காக்க முடியாது. அதற்கு எதிராக பொங்கியெழுந்துதான் பழக்கம்.
சரத்பொன்சேகா என்பவர் பிரபாகரனுடனேயே மோதியவர், அதன்பின்னர் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ஆகியோருடனும் மோதியுள்ளேன். எனவே, மோதல், சவால்களை எதிர்கொள்ளல் என்பனவெல்லாம் எனக்கு புதிதல்ல. நான் மாறப்போவதில்லை. இனி மாறவும் முடியாது. தூய்மையான வழியில் எனது கொள்கையின் பிரகாரம் அரசியலை முன்னெடுப்பேன்.
சட்டப்பூர்வமாக கட்சியால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகங்கொடுப்பேன்.
தயாரத்னாயக்கவை கட்சியில் இணைத்துக்கொண்டமை தவறு. கட்சியில் கலந்துரையாடாமல் எடுக்கப்பட்ட முடிவு அது. அதனால்தான் கட்சிக்குள் அல்லாமல் பொதுவெளியில் விமர்சிக்கின்றேன்.” – என்றார்.