Home Blog Page 849

தேசிய மக்கள் சக்தியை டில்லி அழைத்ததன் பின்னணி என்ன?

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, இந்தியா பேச்சுக்கு அழைத்துள்ளமையானது தேசிய அரசியல் களத்தின் மட்டுமல்ல இராஜதந்திர வட்டாரங்களின் பார்வையையும் அக்கட்சி பக்கம் திரும்பிபார்க்க வைத்துள்ளது.
அத்துடன் இலங்கை தொடர்பான டில்லியின் வெளிவிவகாரக் கொள்கையில் இது குறிப்பிடத்தக்க மாற்றமாகவும் கருதப்படுகின்றது.

இந்திய அரசின் அழைப்பின் பிரகாரம் டில்லி சென்ற தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான குழுவினர், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து நேற்று (6) சந்தித்து பேச்சு நடத்தினர்.

இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், அநுர குமார திஸநாயக்கவை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கின்றது எனக் கூறியுள்ளார்.
“நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய ஒரு நல்லதொரு உரையாடல் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதைகள் குறித்தும் பேசினோம்”- என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எனினும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக கொண்டு வரப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டமைக்கு அமைய, தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வு பற்றி தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுடன் இந்திய தரப்பு விவாதித்ததா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே ஜே.வி.பி. இருக்கின்றது. எனினும், அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கிடைக்கப்பெறும் வகையில் புதிய அரசமைப்பொன்று அவசியம் என்ற நிலைப்பாட்டிலும் அக்கட்சி உள்ளது.

ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள அரசியல் மற்றும் வர்த்தகத்துறையின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்திவருகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் தலைநகர் அம்தாவாதிற்கும், இடதுசாரிகள் ஆட்சி செய்யும் தென்னிந்திய மாநிலமான கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்திற்கும் பயணிக்கவுள்ளனர்.
தமது கட்சியை இந்தியா அழைத்துள்ளமையானது நல்லதொரு இராஜதந்திர நகர்வு என தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரச்சாரக் குழுவின் உறுப்பினர் சாந்த ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

“ இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையிலான இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தேசிய மக்கள் சக்தியின் வளர்ந்து வரும் சர்வதேச செல்வாக்கு மற்றும் கேந்திர ரீதியான பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, குறிப்பாக இரண்டு பொருளாதார சக்தி நாடுகளான சீனா மற்றும் இந்தியா இடையேயான உறவுகளுக்கும் இடையே எப்படி சமப்படுத்திச் செல்கிறோம் என்பதையும் இது காட்டுகிறது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை இந்தியா அழைத்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இந்த விஜயம் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மாத்திரமல்லாமல், இலங்கையின் அரசியல் நிலப்பரப்பிற்கு தெளிவான சமிக்ஞையையும் அனுப்புகிறது, இது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தேசிய மக்கள் சக்தியை ஒரு முக்கியமான சக்தியாக இந்தியா அங்கீகரிக்கிறது”. – என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறகலயவின் பின்னர் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு பெருகி வருகின்றது, அக்கட்சிக்கு 3 சதவீத வாக்குகளே உள்ளன என சிலர் விமர்சித்தாலும் அதில் கணிகசமானளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அநுர குமார திஸநாயக்கவுடன் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் பொருளாதார நிபுணர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் சென்றுள்ளனர்.

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

இலங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு மன்னராக முடிசூடிக் கொண்டார்.

அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி, 2022-ல் உயிரிழந்ததை அடுத்து மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியின் தந்தை. அண்மையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். இந்த சூழலில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

“நோய் கண்டறிதல் சோதனையின் மூலம் மன்னர் மூன்றாம் சார்லஸ{க்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார். சிகிச்சை முறையில் பாசிட்டிவ் மனநிலையில் உள்ள மன்னர், விரைந்து பொது வாழ்வுக்கு திரும்புவார்.

ஊகங்களைத் தடுக்கவும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அறிவித்துள்ளார்” என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

கம்பளையில் மரம் முறிந்து விழுந்து மாணவர் பலி:விசாரணை ஆரம்பம்!

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று மாணவர்கள்மீது முறிந்து விழுந்துள்ள சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று அவ்வமைப்பின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், கம்பளை இல்லவத்துர பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது மாணவர் ஒருவர் பலியானார். மேலும் இரு மாணவர்கள் காயம் அடைந்தனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கு மாத இறுதியில் காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி…!

மத்திய மாகாணத்தில் இன்னும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் உள்ள சுமார் 125 உதவி ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் நியமனம் வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மத்திய மாகாணத்தில் உள்ள சுமார் 125 உதவி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவது இழுபறியில் இருந்தது. அரச நிர்வாக சேவை திணைக்களத்திலேயே இதற்கான தடங்கல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த திணைக்களத்துக்கு நான் நேரில் சென்றேன். பணிப்பாளரை சந்தித்து கடும் விசனத்தை வெளியிட்டேன்.
இதனையடுத்து கல்வி அமைச்சிடம் இருந்து இறுதி விளக்க கடிதம் கோரப்பட்டது. அந்த கடிதத்தை வழங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுத்தேன். தற்போது தடைகள் எல்லாம் நீங்கியுள்ளன. இம்மாத இறுதிக்குள் 125 பேருக்கான நியமனங்கள் வழங்கப்படும்.” – என்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார்.

ராமு தனராஜ்

2,535 உதவி ஆசிரியர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

” மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்காக ஆசிரியர் உதவியாளர்களாக 2 ஆயிரத்து 535 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.” – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

“ 863 பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி 2,535 பேர் நியமிக்கப்படவுள்ளனர். மாதம் 20 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இவர்கள் தம்மை பட்டதாரியாக தரமுயர்த்திக்கொள்ள வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிற்சியை நிறைவுசெய்திருக்க வேண்டும். அதன்பின்னர் நியமனம் வழங்கப்படும்.

இதன்மூலம் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.” – எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ராமு தனராஜ்

கிராமி விருது வென்ற இந்திய இசைக்குழு

சிறந்த அல்பத்துக்கான கிராமி விருதை இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்று சாதனை படைத்துள்ளது. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவானது அமெரிக்காவில் நடைபெற்றது.

இந்நித லையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகி யோர் அடங்கிய இசைக்குழு இணைந்து உருவாக்கிய சக்தி அல்பத்துக்கு சிறந்த அல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது.

இந்த அல்பத்தில் மொத்தமாக 8 பாடல்கள் உள்ளன. இந்த நிலையில், விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணையுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தற்போதைய அரசாங்கம் பெற்ற முதல் வெற்றி என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 20 இலட்சம் பேர் பயன்பெறும் “அஸ்வெசும” திட்டத்தை அமுல்படுத்தியமையும் 15 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்ததும் ஏனைய சாதனைகளாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தின் ஒரு பகுதியினரின் ஆதரவுடன் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இவ்வாறான பரந்த பணியை அரசாங்கம் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நாட்டை எந்த இடத்தில் வைக்க முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உரித்து (உருமய) திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிற்பகல் ரங்கிரி தம்புலு விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்க காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியுமாக இருந்தால் அந்த உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இருக்க முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில், 08ஆவது பரிந்துரையில், “உரித்து திட்டத்தின் கீழ் 1935ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அனுமதிப்பத்திரம் மற்றும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அரச காணிகளின் முழு உரிமையையும் விவசாயிகளுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், அவர்கள் அனுபவிக்கும் காணிகளுக்கு முழு உரிமை வழங்கும் உரித்து நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதியின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுகிறது. 20 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனாளிகளாக இனங்காணப்பட்டுள்ளன. உரித்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் கீழ் 02 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உரித்து திட்டத்தின் கீழ் காணியின் முழு உரிமைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு காணி உறுதி வழங்குவதற்கு உரிய நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் உரித்து செயற்பாட்டு செயலகமொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அடையாள ரீதியல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விவசாயிகளுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

“தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை” தேசிய திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள மைதானத்தில் நிறுவப்பட்ட ‘விசேட நிலையத்தை’யும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

அத்துடன், தம்புள்ள விளையாட்டரங்க வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீச்சல் தடாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, நீச்சல் தடாகத்தின் நடைமுறை செயற்பாடுகளை அவதானிப்பதற்காகவும் இணைந்துகொண்டார்.

நவீனமயப்படுத்தப்பட்ட விளையாட்டு அரங்கு விளக்கு கட்டமைப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை, ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ‘ஊடக மையம், புதிய கேட்போர் கூடம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கம் என்பன நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி நாட்டினார்.

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை என்பவற்றை பல்கலைக்கழகங்களாக மாற்றுவேன் – சஜித்

“ அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகை என்பன ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஏனைய கட்சித் தலைவர்கள் 2024 இல் கூட மக்களை ஏமாற்றி, மாளிகை அரசியலில் ஈடுபட்டு – அரச மாளிகைகளில் சொகுசுகளை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில்,நாட்டின் மாளிகைகள் நவீன தொழில்நுட்பம், ஆங்கிலம் என்பன கற்பிக்கும் பெரிய பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும். எனவே,மாளிகைகள் பற்றிய கனவுகளை வைத்துக் கொள்ளாதீர்கள்.

மொழியை மையமாக வைத்து அரசியல் நடத்தும் காலத்தை நிறுத்த வேண்டும். நாட்டிலுள்ள 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உயர் ஆங்கில மொழிக் கல்வியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இனம்,மதம், சாதி,குல பேதங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் கோஷங்களுக்கு பணயக்கைதிகளாக இருக்க வேண்டாம்.” – என்றார்.

விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் சனத் நிஷாந்தவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் பலியாகினர்.
இவ்விபத்தையடுத்து சாரதி கைது செய்யப்பட்டார். பொலிஸ் காவலின்கீழ் சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

விபத்து இடம்பெறுவதற்கு முதல் நாள், குறித்த சாரதி பதிவிட்டிருந்த ஒரு சமூகவலைத்தள பதிவு ,விபத்தின் பின்னர் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மரணம் தொடர்பிலேயே அந்த பதிவு அமைந்திருந்தது.

பறிபோனது 14 வயது சிறுவனின் உயிர் – பாதுகாப்பற்ற முறையில் மரம் வெட்டிய ஐவர் கைது!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை விழுந்து பாடசாலை மாணவனொருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரமின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் நியூட்டன் தோட்டத்தை சேர்ந்த முருகன் அஷான் என்ற 14 வயது மாணவன் நேற்று முன்தினம் சிகையலங்கார நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் சிலர் மரம்வெட்டிகொண்டிருந்துள்ளனர். அவ்வேளையில் மரக்கிளையொன்று சிறுவன்மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாறப்பட்டார். வைத்தியசாலை செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனையடுத்து மரம் வெட்டிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு!

0
  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு...

பாலஸ்தீனம் குறித்த கனடாவின் நிலைப்பாட்டுக்கு ட்ரம்ப் போர்க்கொடி!

0
பாலஸ்தீனத்தை ஒரு இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ள கனடாவுடன், வர்த்தக உடன்படிக்கை செய்வது மிகவும் கடினம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவின் பலஸ்தீனை அங்கீகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து...

நாட்டை காத்த படையினர் போர்க்குற்றவாளிகளா? நாமல் கொதிப்பு!

0
" புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின்கீழ் காணப்படுகின்றது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...