Home Blog Page 88

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசமைப்பு பேரவை இன்று கூடுகிறது!

அரசியலமைப்பு பேரவை இன்று (31) கூடவுள்ள நிலையில், புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படலாம் என அரசியலமைப்பு பேரவை உறுப்பினரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் நான்கு தடவைகள் அனுப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இந்நிலையில் புதிய பெயரை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டிபிள்யூ.பி.சீ, விக்ரமரத்ன 2025 ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இதுவரையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் தெரிவுசெய்யப்படவில்லை.

பதில் கணக்காய்வாளர் நாயகமாக செயல்பட்டவரின் பதவி காலமும் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியான ஒருவரை பிரேரிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது.

பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர், ஜனாதிபதயின் பிரதிநிதி, எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதி, சிறு கட்சிகளின் பிரதிநிதி மற்றும் சிவில் உறுப்பினர்கள் மூவர் உட்பட அரசமைப்பு பேரவையில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசின் மூத்த தலைவர் மாவைக்குச் சிலை திறப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் நினைவுச்சிலை மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்தச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

இதைத் தொடர்ந்து, யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் சா.செ.இளங்கோவன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நினைவுப் பேருரைகளைத் தொடர்ந்து மாவை சோ.சேனாதிராஜாவின் முதலாமாண்டு நினைவுமலர், பேராசிரியர் பாஞ்.இராமலிங்கம் எழுதிய ‘ஈழ அண்ணல் சோ.மாவை சேனாதிராஜா’ ஆகிய இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன.

ஈராண்டுகளுக்கு பிறகு காசா எல்லையை திறக்க இஸ்ரேல் முடிவு!

எகிப்து நாட்டுடனான காசாவின் எல்லையை மீண்டும் திறக்கவுள்ளதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

காசாவில் 2023 முதல் நடைபெற்று வந்த இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையிலான போர் கடந்த 2025 அக்டோபரில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்தை ஏற்று இருதரப்பினரும் தாக்குதல்களைக் கைவிட்டனர்.

இந்த நிலையில், போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக எகிப்து உடனான காசாவின் ரஃபா எல்லையை வரும் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 1) முதல் மீண்டும் திறக்கவுள்ளதாக, இஸ்ரேல் ராணுவத்தின் கோகாட் பிரிவு அறிவித்துள்ளது. இந்தப் பிரிவு, காசாவுக்கு வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ரஃபா எல்லையின் வழியாக முறையான சோதனைகளுக்குப் பிறகு மக்கள் செல்வதற்கு இஸ்ரேல் மற்றும் எகிப்து அதிகாரிகள் அனுமதிப்பார்கள் என்றும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, போரின்போது வெளியேறிய பாலஸ்தீனர்கள் மீண்டும் காசாவுக்குள் இஸ்ரேலின் அனுமதிப்பெற்றவுடன் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காசாவின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு இஸ்ரேல் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், ஹமாஸ் படைகளிடமிருந்து கடைசி இஸ்ரேலிய பிணைக் கைதியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு பிரவேசிக்கும் வாய்ப்பை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தும் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் சுற்றுலா விசாக்களை விரைவாகச் செயற்படுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நாட்டில் உள்நாட்டு விமான சேவைகளை நெறிப்படுத்துதல், அவற்றில் நிலவும் சிக்கல்கள் குறித்தும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரவாவி சுத்திகரிப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீயாய்வு செய்யப்பட்டது.

மேலும், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான விடுதிகளை சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பிலும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுற்றுலா பொலிஸாரின் உதவியுடன் எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

திமிங்கலங்களை பார்வையிடும் மையங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர்/பிரதான நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர ஆகியோருடன் அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், சுற்றுலாத் துறையின் முக்கிய தரப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வு

கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவை இணைந்து, பிள்ளைகள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உள ஆரோக்கியம், சைபர் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள நிபுணர்கள், சிவில் சமூகம் மற்றும் இளைஞர்களின் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்தி, இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆற்றிய முழுமையான உரை,

சமூக ஊடகங்கள் தமது பிள்ளைகள் மீது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதும் இன்று இலங்கையில் பல பெற்றோர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும்.

இதற்கான தீர்வாக, பிள்ளைகள் தொழில்நுட்பத்தை அணுகுவதை மறுப்பதாக இருக்கக்கூடாது. சமூக ஊடகங்கள் மூலம் கல்வி, படைப்பாற்றலை வளர்த்தல் மற்றும் தொடர்பாடல் போன்ற பல சிறந்த விடயங்கள் இடம்பெறுகின்றன.

ஆனால் அதே நேரத்தில், நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு யதார்த்தமும் உள்ளது. பெரும்பாலும் எமது பிள்ளைகளுக்கு இணைய சூழல் பாதுகாப்பற்றதாகவும், அதற்கு அடிமையாகும் பழக்கத்திற்கும் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அதன் பாதகமான விளைவுகளால், பிள்ளைகளின் தூக்கம், கல்வி, நட்பு மற்றும் உள ஆரோக்கியம் போன்றவை பாதிக்கின்றன.

இதற்கு அடிமையாகும் பழக்கத்தை நிறுத்த முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. மேலும் அதை நிறுத்த முயற்சிக்கும்போது பிடிவாதம், கோபம் மற்றும் கூச்சலிடுதல் போன்ற
நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். இந்த சிக்கல்கள் அவர்களின் கற்றல் மற்றும் மனநிலையைப் பாதிக்கிறது. பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி, தன்னம்பிக்கை இழந்து, துன்பப்படுவதை நாம் கண்டிருக்கிறோம்.

இணையவழி மிரட்டல்கள் என்பது (Cyber Bullying) மற்றொரு பாரிய அச்சுறுத்தலாகும். மேலும் வயதுக்கு பொறுத்தமற்ற, வன்முறை, பாலியல் அல்லது ஆபத்தான விடயங்கள் (Content) போன்றவற்றால் பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.

தீங்கு விளைவிக்கும் விடயங்களை மீண்டும் மீண்டும் தூண்டுவதோடு அதற்கு அடிமையாக்கும் பயன்பாடுகளையும் நாம் பார்த்திருக்கிறோம். அதேபோன்று, பிள்ளைகளுக்கு ஆபத்தான விடயங்களை தூண்டும் சில இணையவழி விளையாட்டுகளும் உள்ளன.

அந்தத் தூண்டல்களின் உச்சக்கட்டமாக சிலநேரம் தற்கொலை செய்யும் மனநிலை கூட உருவாகின்றன. எனவே, பல நாடுகளில், இணையப் பயன்பாடு தொடர்பில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தேசிய முன்னுரிமையாக மாறியுள்ளது. நமது அணுகுமுறையும் 03 கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.

முதலாவதாக,பிள்ளைகளின் பாதுகாப்பு அவசியம். அது நமது அரசாங்கத்தின் அசைக்க முடியாத கொள்கையாகும். இரண்டாவதாக, காரணிகள் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் நாம் செயல்படுவது மிகவும் அவசியம். நாம் ஒருபோதும் கோஷங்களின் பின்னால் செல்வதில்லை.

மூன்றாவதாக, உரிமைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு , அதே வேளையில் அதிகப்படியான கண்காணிப்பை அகற்றுவதே எமது குறிக்கோள். உரிமைகள், பாதுகாப்பு மற்றும் புத்தாக்கம் ஆகிய மூன்று அம்சங்களையும் சமநிலைப்படுத்துவதே எமது முதன்மையான குறிக்கோள் ஆகும்.

பல நாடுகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த அனுபவங்களை கவனமாக ஆராய்ந்து, நமக்கு ஏற்றவாறு மாற்றி நமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிப்பது காலத்தின் தேவையாகும். அதன் முதல் படியாக, கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுடன் கலந்தாலோசித்து, சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

சிறுவர் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உள ஆரோக்கியம், சைபர் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள நிபுணர்கள், சிவில் சமூகம் மற்றும் இளைஞர்களின் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்தி, இந்தப் பணியில் ஈடுபட வேண்டும்.

இது அரசாங்கத்தால் மாத்திரம் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினை அல்ல. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகள் உட்பட அனைத்து தரப்பினரும் இதற்காக ஒன்றிணைய வேண்டும். இது நமது பிள்ளைகள் தொழில்நுட்பத்தை முழுமையாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க உதவும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: ஒப்பந்தம் கைச்சாத்து!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக அதிகரிப்பதற்கான   புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டது.

2026 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, தற்போது 1,350 ரூபாவாக காணப்படும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த 400 ரூபா அதிகரிப்பில் 200 ரூபாவினை அந்தந்த பிராந்திய தோட்ட நிறுவனங்களும், மிகுதி 200 ரூபாவினை அரசாங்கமும் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, தோட்டத் தொழிலாளர் ஒருவரின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாயாக உயர்வடையும்.

தோட்ட நிறுவனங்கள் மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

ஜனவரி மாதம் தொழிலாளர்கள் பணிக்குச் சமூகமளித்த நாட்களின் அடிப்படையில், பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் இந்த அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படும்.

அரசாங்கம் வழங்கும் 200 ரூபா கொடுப்பனவை வைப்பிலிடுவதற்காகத் தொழிலாளர்களின் வங்கித் தகவல்கள் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ளன. பெப்ரவரி 03 ஆம் திகதியளவில் ஊழியர்களின் வருகைப் பதிவேடுகள் கிடைத்தவுடன்,

அரசாங்கத்தின் பங்களிப்புத் தொகையை நிறுவனங்களுக்கு விடுவிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானத்தை ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கருதுவதாக பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொலியத்த குறிப்பிட்டார்.

இந்தச் சம்பள அதிகரிப்பால் தோட்ட நிறுவனங்களுக்கு 6 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மேலதிகச் செலவு ஏற்படும் என்றும், எனவே இத்தொழில்துறையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பதிவு – ஊடகவியலாளர் Parthiban Shanmuganathan

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு கோருகிறது தமிழரசுக் கட்சி!

” கிவுல் ஓயா திட்டம் மூலம் வவுனியா – முல்லைத்தீவு மாவட்டங்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கும் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“வன்னி பிரதேசத்தில் கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவில் வாழ்கின்ற மக்களின் இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கும் நோக்குடனும், எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தை அழிக்கின்ற செயற்பாடாக இந்தத் திட்டம் அமையவுள்ளது.

அத்தோடு வனவளத்திணைக்களமே குறித்த பிரதேசத்தினுடைய பாரியளவான காட்டை அழிப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்கும் நாம் எதிர்ப்புத் தெரிவிப்பதோடு, பாரிய ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளோம்.

அதன் அடிப்படையில், இந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பஸ் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கவுள்ளோம்.

எனவே, எமது எதிர்காலத்தைச் சிந்தித்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என அனைவருக்கும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கின்றோம்.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கூறினார்.

 

IMF பணிப்பாளர் இலங்கை விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ணா சிறிநிவாசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பயணம் சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கை தொடர்பான திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின், குழுவினர், அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

தேசிய சமத்துவம் கட்டியெழுப்படும்!

“ உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு இன நல்லிணக்கம் மிக முக்கியம். இது விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது.” – என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழாவுக்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“ உண்மையான சுதந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நிலையான சமாதானம் அவசியம். இதற்கு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மிக முக்கியம். எமது அரசாங்கம் இது விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகின்றது.

மீண்டும் இனவாத மோதல் ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது. தேசிய சமத்துவம் கட்டியெழுப்படும். உண்மையான சுதந்திரம் நிலைநிறுத்தப்படும்.

சிறப்பானதொரு நாட்டை உருவாக்கவும், வளமானதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.” – என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி மாநாட்டுக்கு முன் ரணில் – சஜித் நேரடி சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு விரைவில் இடம்பெறவுள்ளது உறுதியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உதயமாகி எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் ஆறாண்டுகள் ஆகின்றன.

அதற்கு முன்னதாக இருவரும் நேரடி சந்திப்பில் ஈடுபடுவார்கள் என தெரியவருகின்றது.

இதன்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.

இரு கட்சிகளும் இணைவுக்கு இணங்கி இருந்தாலும் தனிக்கட்சியா, கூட்டணியா என்பது பற்றி இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை.

எனவே, ரணில் மற்றும் சஜித்துக்கிடையிலான சந்திப்பே அடுத்தக்கட்டத்தை நிர்ணயிக்கும் என கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” – ஈரான் ஜனாதிபதி

0
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: எத்தனை புத்தகங்களை எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...

ரஷ்ய போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும்...