🛑 பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 கம்பனி பிரதானிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு!!
ஆர்.சனத்
” மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. தோட்ட அதிகாரிகள், பொலிஸாரின் பங்கேற்புடன் கூட்டமொன்றை நடத்துவதற்குரிய ஏற்பாட்டை செய்வதற்கு தயார்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இரத்தினபுரி நீலகாமம், மஸ்கெலியா மொக்கா தோட்டம், நுவரெலியா டெல்மா தோட்டம் ஆகிய பகுதிகளில் தோட்ட நிர்வாக தரப்பினரால், தொழிலாளர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் நாடாளுமன்றத்தில் இன்று கருத்துகளை முன்வைத்தனர்.
ஜீவன் தொண்டமான் கருத்து வெளியிடுகையில்,
” தோட்டப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்துபவர்கள் கைது செய்யப்படுகின்றனர், பிணை வழங்கப்படுகின்றது என்பது எங்களுக்கும் தெரியும். நிரந்தர தீர்வையே நாம் வலியுறுத்துகின்றோம்.’ என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால,
” உங்களது ஆட்சிகாலத்தில்போல் விசாரணைகள் தாமதிக்கப்படுவதில்லை. நேற்று முன்தினமும், நேற்றும் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய நாம் செயல்படுவோம்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இனி இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
இது தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடுவதற்கு உங்களுக்கு (மலையக பிரதிநிதிகள்) சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு நாம் தயார். நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ அல்லது நுவரெலியாவிலோ சந்திப்பை நடத்துவோம்.
எமது பிரதிநிதிகளும் உள்ளனர். அவர்களும் எமது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். நாம் உரிய தலையீடுகளை மேற்கொண்டுவருகின்றோம்.’ – என்றார் அமைச்சர் ஆனந்த விஜேபால.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,
” பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளை அழையுங்கள், நீங்களும் (அமைச்சர்) வாருங்கள், பொலிஸ்மா அதிபரும் வரட்டும். நாம் பேச்சு நடத்துவோம்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.’ – என்றார்.
” உங்களது யோசனை தொடர்பில் பிரச்சினை இல்லை. அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மலையக மக்கள் தொடர்பில் எமக்கு பொறுப்பு உள்ளது.” -என்று அமைச்சர் பதிலளித்தார்.










