ஈரானின் மின்சார மற்றும் பொதுக் கட்டமைப்பு வசதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாகச் செங்கடலின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடத்தை முடக்குவதற்குத் தயாராக இருக்குமாறு ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்குப் புதிய மற்றும் மிகக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஈரானியத் தலைமைப் பீடத்திற்குள் இந்த மூலோபாயம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட பின்னர், இந்த செய்தி ஹூதி அமைப்பினருக்கு உத்தியோகப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளதாக ஈரான் மற்றும் பிராந்தியத்தின் உயர் மட்டப் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இது குறித்து ஹூதி அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கையில்:
“செங்கடலின் நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணையை ஒட்டிய ஏமனின் மலைப்பகுதிகளிலும், ஏடன் வளைகுடா மற்றும் ஹொடைடா ஆகிய பகுதிகளை நோக்கியவாறும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நிலைநிறுத்தி, கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான அனைத்துப் பூர்வாங்கத் தயாரிப்புகளையும் ஹூதி அமைப்பினர் முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.
தாக்குதலைத் தொடங்குவதற்கான இறுதி உத்தரவுக்காக மட்டுமே அவர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது செங்கடல் வழித்தடமும் முடக்கப்பட்டால், மத்திய கிழக்கின் இரு பிரதான எண்ணெய் ஏற்றுமதிப் பாதைகளும் ஒரே நேரத்தில் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது அமெரிக்காவுடனான ஈரானின் மோதலில் புதியதொரு முனையைக் திறக்கும் என அஞ்சப்படுகிறது.
ஏமனில் நிலைகொண்டுள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பிரதிநிதிகளே செங்கடல் வழித்தடத்தை எப்போது முடக்குவது என்பது குறித்த இறுதி முடிவை எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்குவாரம்
வழக்கமான வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது 70 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைச் செங்கடலில் உள்ள ‘யான்பு’ (Yanbu) துறைமுகம் வழியாகவே மாற்றுப் பாதையில் மேற்கொண்டு வருகிறது. தற்போதைய சூழலில் செங்கடலிலும் தாக்குதல்கள் தொடங்கினால், அது சவுதி அரேபியாவுக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் மீள முடியாத பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
