பிம்ஸ்டெக் பாதுகாப்பு தலைவர்களின் கூட்டம் 2027 இல் இலங்கையில்

இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (16 ஜூலை) நடைபெற்ற 5ஆவது பிம்ஸ்டெக் (BIMSTEC) தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா , பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

உயர்மட்ட பாதுகாப்புத் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாதுகாப்புச் செயலாளர், வங்காள விரிகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது அனைத்து உறுப்பு நாடுகளினதும் பகிரப்பட்ட பொறுப்பாகும் என்றும், அது பரஸ்பர நம்பிக்கை, தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும் என்றும் வலியுறுத்தினார்.

பிராந்திய பாதுகாப்புச் சூழலில் உருவாகி வரும் சவால்களை எடுத்துரைத்த அவர், பயங்கரவாதம், வன்முறைத் தீவிரவாதம், இணையவழி அச்சுறுத்தல்கள், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தல், தவறான தகவல் பரப்பல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்கள் ஆகியவை தேசிய எல்லைகளைத் தாண்டிய சவால்களாக இருப்பதுடன், அவற்றை எதிர்கொள்ள கூட்டு நடவடிக்கைகள் அவசியம் எனக் குறிப்பிட்டார். எந்தவொரு நாடும் தனித்தனியாக இச்சவால்களை திறம்பட சமாளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெற்காசியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையிலான முக்கிய பாலமாக பிம்ஸ்டெக் உருவெடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான முக்கிய தளமாக இந்த அமைப்பு திகழ்கிறது என்றும் மேலும், புலனாய்வு மற்றும் தகவல் பகிர்வு அமைப்புகளை வலுப்படுத்துதல், நாடுகடந்த குற்றச்செயல்கள் மற்றும் இணையவழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், பிராந்திய நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் கலந்துரையாடல்களை நடைமுறை நடவடிக்கைகளாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நீடித்த பாதுகாப்பு என்பது வலுவான எல்லைகளால் மட்டுமல்லாது, பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் பொதுவான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வலுவான கூட்டாண்மைகளினாலும் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BIMSTECகின் உண்மையான பலம், புவியியல் அண்மையை மூலோபாய ஒற்றுமையாக மாற்றுவதில் இருப்பதாகவும், அதன் மூலம் உறுப்பு நாடுகள் அமைதியான, உறுதியான மற்றும் வளமான வங்காள விரிகுடா பிராந்தியத்தை எதிர்கால சந்ததியினருக்காக இணைந்து உருவாக்க முடியும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்புத் தலைவர்களும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்று, பிராந்திய பாதுகாப்புச் சவால்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர்.

BIMSTEC தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் 6ஆவது கூட்டம் 2027 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles