கடந்த ஜூன் மாத இறுதியில் ஐரோப்பிய கண்டத்தின் மேற்குப் பகுதியை உலுக்கிய, அதியுச்ச வெப்ப அலை காரணமாக ஐரோப்பிய நாடுகளில் 10,000 இற்கும் அதிகமான கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கீழான ‘யூரோமோமோ’ (EuroMOMO) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த மரணங்களில் பெரும்பாலானவை, அதாவது 9,000 இற்கும் மேற்பட்டவை, 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்களாவர்.
தீவிர வெப்ப அலையானது வெப்பவாதம் (Heat stroke) அல்லது இருதய மற்றும் சுவாச நோய்களைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மரணத்தை விளைவிக்கும்; இதில் முதியவர்களே அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.
“வருடத்தின் இந்தத் தருணத்தில் இந்த அளவிலான கூடுதல் மரணங்கள் ஏற்படுவது வழக்கத்திற்கு மாறானது. இது மிக அதிக எண்ணிக்கையாகும்,” என்று EuroMOMO-வை நடத்தும் டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டின் (Statens Serum Institut) முதன்மை மருத்துவர் லாஸ் வெஸ்டர்கார்ட் (Lasse Vestergaard) தெரிவித்தார்.
மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றமே இந்த வெப்ப அலைகள் அடிக்கடி மற்றும் தீவிரமாக உருவாவதற்குக் காரணம் என்றும், இது இல்லாத பட்சத்தில் ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட இத்தகைய வெப்ப அலை “கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று” என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
27 ஐரோப்பிய நாடுகளின் தேசிய இறப்பு புள்ளிவிவரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகளில், பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளில் வெப்ப அலை உச்சத்தை எட்டிய ஜூன் 22 முதல் 28 வரையிலான வாரத்தில், வெப்பம் தொடர்பான மரணங்கள் மட்டுமின்றி, அனைத்துக் காரணங்களினாலும் ஏற்பட்ட கூடுதல் மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அந்த வாரத்தில் கூடுதல் மரணங்களின் எண்ணிக்கை 10,650 ஆக உயர்ந்ததற்கு, வேறு காரணிகள் எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதே ஐரோப்பிய நாடுகளின் முந்தைய எட்டு வாரங்களின் ஒட்டுமொத்த இறப்பு விகிதம், வழக்கமான அளவை விட வாரத்திற்கு சராசரியாக 500 மரணங்கள் குறைவாகவே இருந்தது. வரும் வாரங்களில் கூடுதல் தரவுகள் கிடைக்கும்போது இந்த EuroMOMO தரவுகள் திருத்தப்படலாம்.
ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட இந்த தீவிர வெப்ப அலை மின்சார விநியோகத்தைப் பாதித்தது, பாடசாலைகளை மூடச் செய்தது மற்றும் பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வெப்பநிலைப் பதிவுகளை முறியடித்தது.
EuroMOMO அமைப்பு தனித்தனி நாடுகளுக்கான கூடுதல் மரணங்களை வெளியிடுவதில்லை, ஆனால் ஜூன் கடைசி வாரத்தில் ஐரோப்பாவில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே மிக அதிகப்படியான கூடுதல் மரணங்களை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
