வட்டவளை என்றாலே அனைவரது நினைவிலும் மின்னுவது, அதன் அதிகப்படியான மழைவீழ்ச்சிதான். ஆம்! நேற்றும் இன்றும் வட்டவளைப் பகுதியில் கொட்டித் தீர்த்த பேய் மழையால், வட்டவளை நகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும் வெள்ளக் காடாகக் காட்சியளித்தன.
நகரத்தைச் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளிலும் கிராமங்களிலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பலரும் அனர்த்தங்களுக்கு உள்ளாகினர். வட்டவளை நகரப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மகாவலி கங்கையின் வெள்ள நீர் புகுந்தது.
“உடைமைகள் போனாலும் பரவாயில்லை; உயிரைப் பாதுகாத்துக் கொண்டால் போதும்” என்று எண்ணி, மக்கள் பலர் வட்டவளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் தஞ்சம் புகுந்தனர்.
பலர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே மீட்கப்பட்டனர். இந்த மீட்புப் பணிகளில் தம்பி ஜோன்சிங் மற்றும் ஆசிரியர் பூபாலன் தலைமையிலான இளைஞர்கள் குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டனர்.
சில இடங்களில் அவர்கள் நன்கு பயிற்சி பெற்ற தொழில்முறை மீட்புப் பணியாளர்களைப் போலச் செயற்பட்டனர். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட அப்பாவிப் பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நெஞ்சளவு வெள்ள நீரில், குழந்தைகளையும் சிறுவர்களையும் பாதுகாப்பாக மீட்டு வந்து சேர்த்தனர். அவர்களின் இந்தப் போற்றத்தக்க பணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
நான் எனது உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு, ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் தொண்டாசிரியராக ஒரு வருடம் பணியாற்றினேன். அப்போது நான் கற்பித்த மாணவர்களும் இந்த அர்ப்பணிப்புமிக்க மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டபோதும், அவர்களோடு இணைந்து நானும் பணியாற்றக் கிடைத்தபோதும் எனக்குள் பெருமையாக இருந்தது. இந்த அனர்த்த காலத்தில், ஒரு பிரதேச சபை உறுப்பினராக நேற்றும் இன்றும் என்னால் முடிந்த உயர்ந்த பங்களிப்பைப் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செய்துள்ளேன் என்ற திருப்தி எனக்கும் இருக்கிறது.
அத்தோடு, வட்டவளைக்கு புதிதாகப் பொறுப்பேற்ற கிராம உத்தியோகத்தர் திரு. சௌந்தர் ஒரு அரசாங்க அதிகாரியாகப் போற்றத்தக்க வகையில் பணியாற்றுகின்றார். அதேபோல வட்டவளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு நிறைவான சேவையை ஆற்றி வருகின்றனர்.
“அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்; அனர்த்தத்திற்கு உள்ளானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு விட்டனர்” என்ற திருப்தியில், தஞ்சம் புகுந்த மக்களுக்குப் பசியாற்ற ஏதேனும் செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்த வேளையில்… “யாரோ ஒருவர் குரா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டார்” என்ற செய்தி வந்து எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“குரா” மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு மரியாதைக்குரிய நண்பர். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட நல்ல இதயம் படைத்தவர். அவர் எப்படியாவது உயிர்தப்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் பிரார்த்தனையாகவும் இருந்தது. ஆனால், சில மணி நேரங்களில் ‘குரா’வை உயிரற்ற உடலாகவே மீட்டனர். இன்று வட்டவளையில் இது ஒரு பெருந்துயரமாக மாறியுள்ளது.
இப்போது, 2026 ஆகஸ்ட் மாதம் 3-ஆம் திகதி இரவு 10:36 மணி. வட்டவளையில் வானம் அமைதியாக இருக்கிறது. பல குடும்பங்களின் உடைமைகளையும் வாழ்விடங்களையும் நாசமாக்கி, ஓர் உயிரையும் பலியெடுத்துக் கொண்ட மகாவலி கங்கை, எதுவுமே தெரியாத குழந்தையைப் போல வானத்தைப் போலவே அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது… இயற்கை இப்படித்தானோ!
நாளை மேலும் இதுபோன்ற துயரச் செய்திகள் வரலாம்; அனைத்தையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
இதுபோன்ற அனர்த்த காலத்தில், பொதுமக்கள் ஆறுகள், சிற்றோடைகள் மற்றும் நீர்நிலைகளைக் கடக்க முனையும்போதும், வீதிகளில் பயணிக்கின்ற போதும் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். இதன் மூலம் உயிராபத்துகளையும் பெரும் பாதிப்புகளையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
கடந்த இரண்டு நாள் கனமழையால் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பும் கடமையும் பாதிக்கப்படாத ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. உங்களால் இயன்ற வகையில் மற்றவர்களுக்கு உதவுங்கள்; அது பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரு ஆறுதலாக இருக்கும்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்
