நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது?

நே​பாளத்​தில் அண்​மை​யில் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் ஏற்​படுத்​திய பேரழி​வு​களும், வெள்​ளத்​தில் வீடு​கள் அடித்​துச் செல்லப்​பட்டு ஏராள​மானோர் உயி​ரிழந்த கொடூரக் காட்​சிகளும் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்​தன.

இருப்​பினும், இந்த இயற்​கைப் பேரிடருக்கு மத்​தி​யிலும் நம்பிக்கையளிக்​கும் ஒரு அதிசய மீட்​புச் சம்​பவம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளது. வெள்​ளத்​தில் மற்ற அனைத்துக்கட்டிடங்​களும் அடித்​துச் செல்​லப்​பட்ட நிலை​யில், பச்சை நிறம் பூசப்​பட்ட ஒரு வீடு மட்​டும் சீறிப்​பாய்ந்த சேற்று வெள்​ளத்​துக்கு நடுவே அசைக்க முடி​யாமல் நின்ற காட்சி இணையத்​தில் தீயாகப் பரவியது.

வெள்​ளத்​தின் வேகம் சுற்​றி​யிருந்த கட்​டிடங்​களைத் தரைமட்டமாக்கி அடித்​துச் சென்ற போதி​லும், அந்​தப் பச்சை நிற வீடு மட்​டும் வெள்​ளத்​தின் சீற்​றத்​தைத் தாங்கி உறு​தி​யுடன் நின்றது. அந்த வீட்​டுக்​குள் ஒரு குடும்​பமே சிக்​கி​யிருந்​தது தெரியவந்​ததையடுத்​து, உலகெங்​கிலும் உள்ள சமூக வலை​தளப் பயனாளர்​கள் அவர்​களின் பாது​காப்​புக்​காகப் பிரார்த்​தனை செய்​யத் தொடங்​கினர்.

கட்​டிடத்​தின் அசாத்​தி​ய​மான உறு​தித்​தன்மை இணை​யத்​தில் பெரிய விவாதப் பொருளாக மாறியது. இவ்​வளவு பெரிய வெள்ளத்தின் சீற்​றத்​தை​யும் தாங்கி இந்த வீடு எவ்​வாறு சேதமடையாமல் நின்​றது? எனப் பலரும் வியப்​புத் தெரி​வித்​தனர்.

இதனிடையே, சமூக வலை​தளப் பயனர் ஒரு​வர் வெளி​யிட்ட மற்றொரு வீடியோ​வில், வீட்​டுக்​குள் சிக்​கி​யிருந்த குடும்​பத்​தினர் அனை​வரும் எவ்​வித ஆபத்​து​மின்றி பத்​திர​மாக மீட்​கப்​பட்ட செய்தி உறுதி செய்​யப்​பட்​டது.

கட்டுமான முறை

இமயமலைப் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான பாரம்பர்ய வீடுகள் செங்கல் அல்லது கற்களை மட்டுமே வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன.

இவை மேலே இருந்து வரும் எடையைத் தாங்கும். ஆனால், பக்கவாட்டில் இருந்து பலமான விசை தாக்கும்போது சுவர்கள் எளிதாகப் பிளந்து கூரை உள்நோக்கி விழுந்துவிடும்.

ஆனால், இந்த வீடு வலுவூட்டப்பட்ட கான்கிரீட் சட்டகத்தைக் (Reinforced Concrete Frame) கொண்டு கட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான கம்பிகள் அதன் தூண்கள், விட்டங்கள் மற்றும் அடித்தளத்தை ஒரே வலுவான எலும்புக்கூடு போல ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்துள்ளன.

இதனால், சேற்று வெள்ளம் வந்தடித்தபோது, கான்கிரீட் சட்டகம் அந்த மோதல் விசையைத் தாங்கிக்கொண்டு, அதை அப்படியே தரையின் கீழ் கடத்திவிட்டது.

இரண்டாவது, வீட்டின் அமைவிடமும், வடிவமும் முக்கிய காரணங்களாகும்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மிகப்பெரிய பாறைகள் அதன் மையப் பகுதியில்தான் அதிக வேகத்துடன் பாயும்.

இந்த வீடு அந்தப் பாதையிலிருந்து சற்று விலகி, கொஞ்சம் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது.

மேலும் இதன் கச்சிதமான வடிவத்தால், வந்தடைந்த வெள்ளம் இரண்டாகப் பிரிந்து வீட்டின் இரு பக்கங்களிலும் விலகிச் சென்றிருக்கிறது.

அதுமட்டுமின்றி, முதலில் வந்து படிந்த சேறு ஒரு இயற்கைச் சரிவை உருவாக்கி, அதற்கு அடுத்து வந்த அதிவேக வெள்ள அலைகளை வீட்டின் மீது மோதவிடாமல் மேல்நோக்கி விலக்கிவிட்டுவிட்டது.”

 

 

 

Related Articles

Latest Articles