நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (21) மாலை பெய்த இடியுடன் கூடிய கடும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்து, பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அக்கரப்பத்தனை – டொரிங்டன் பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்ததால், ஆட்லோ தோட்டத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் 25 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 75 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த உடைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள், கற்றல் உபகரணங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் பெறுமதியான வீட்டுப் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது சேதமடைந்த வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் இருந்த மரக்கறி தோட்டங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, நாகவத்தை தோட்டத்தில் பெய்த கனமழையினால் அப்பகுதியில் இருந்த ஆறுகளும் பெருக்கெடுத்தன. இதன் விளைவாக 10 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இச்சம்பவத்தினால் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவி ரதிதேவி நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமைகளை கேட்டறிந்ததுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகள் குறித்து அவர் கவனம் செலுத்தினார்.
மலைவாஞ்சான்
