டெங்கு நோயிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, நுளம்பு கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடிய ஆடைகளை மாணவர்கள் அணிவதற்கு அனுமதி வழங்குமாறு கல்வி அமைச்சு பாடசாலைகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.
கல்வி அமைச்சின் கூற்றுப்படி, பரிந்துரைக்கப்பட்ட பாடசாலைச் சீருடைக்கு மேலதிகமாக, கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடக்கூடிய பொருத்தமான ஆடைகளை மாணவர்கள் அணிவதற்கு அனுமதி வழங்குமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், தரம் வாய்ந்த நுளம்பு விரட்டிகளை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் டெங்கு அபாய நிலைமைக்கு மத்தியில், டெங்கு நுளம்புகள் கடிப்பதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாடசாலைகளில் டெங்கு பரவல் ஏற்படக்கூடிய அறிகுறிகளை கல்வி அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், மாணவர்களைப் பாதுகாப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது.
இந்த டெங்கு பரவல் உயர்கல்வியை மாணவர்களையும் பாதித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் டெங்கு பரவல் அடையாளங் காணப்பட்டதை அடுத்து பல பீடங்களின் விரிவுரைகள் இணையவழியாக மாற்றப்பட்டுள்ளன.
