இலங்கையின் ஆதிவாசி சமூகமான வேடுவர்களின் தலைவர் உருவரிகே வன்னிலாத்தோ , இந்தியாவின் ‘தம்பதிவ’ (Dambadiva) புண்ணியத் தலங்களை நோக்கிய தமது ஆன்மீகப் பயணத்திற்காக இன்று (25) புறப்பட்டுச் சென்றார்.
வேடுவர் சமூகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது ஆன்மீகப் பயணம் இதுவாகும்.
இப்பயணத்தில் வன்னிலாத்தோவுடன் அவரது பாதுகாப்பு அதிகாரி, மொழிபெயர்ப்பாளர் மற்றும் அவரது இளைய மகனான உருவரிகே களு பண்டியாவும் (Uruwarige Kalu Bandiya) சென்றுள்ளனர்.
தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ‘தம்பதிவ’ ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் ஆன்மீகப் பயண ஏற்பாட்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ள இந்த ஆன்மீகப் பயணம், ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறவுள்ளது.
இந்நிறுவனத்தின் அழைப்பின் பேரிலேயே வன்னிலாத்தோவும் அவரது குழுவினரும் இதில் இணைந்துள்ளனர்.
பயணத்தின் போது ஆதிவாசிகள் தங்கள் வழிபாட்டுப் பொருட்களாகத் தேன் மற்றும் மலர்களை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், புறப்படுவதற்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் வனவிலங்குகளின் படங்கள் பொறிக்கப்பட்ட, சூழலுக்குப் பாதிப்பில்லாத துணிப் பைய ஒன்றையும் அவர்கள் விலைக்கு வாங்கியுள்ளனர்.
வன்னிலாத்தோவின் குழுவினர் உட்பட மொத்தம் 50 யாத்ரீகர்கள் கொண்ட குழுவினர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘UL195’ விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.10 மணிக்கு புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டனர்.










