மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால், திங்கட்கிழமையன்று மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக அமைதி உடன்படிக்கையின் பலவீனத்தை இத்தாக்குதல்கள் உணர்த்தியுள்ளதோடு, ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எரிசக்தி கப்பல் போக்குவரத்தை மீண்டும் மந்தமடையச் செய்துள்ளது.
பிரெண்ட் மசகு எண்ணெய் (Brent crude) விலை 52 காசுகள் (0.672%) உயர்ந்து ஒரு பெரல் 72.51 டொலராகவும், அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலை 71 காசுகள் (1.03%) உயர்ந்து ஒரு பெரல் 69.94 டொலராகவும் வர்த்தகமானது.
பெப்ரவரி மாதம் ஈரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் மோதலைத் தொடங்கியதில் இருந்து, ஹோர்முஸ் நீரிணை வழியிலான மசகு எண்ணெய் ஏற்றுமதி கடந்த வாரம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியிருந்தது. இதன் காரணமாக, கடந்த வாரம் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 10.6% சரிவைச் சந்தித்து, தொடர்ந்து மூன்றாவது வாரமாக வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது.
இருப்பினும், கடந்த வியாழக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணையில் கத்தார் நாட்டுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல் உட்பட பல கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, அங்கு கப்பல் போக்குவரத்து மந்தமடைந்துள்ளது. இந்தத் தாக்குதல்கள், அமெரிக்கா – ஈரான் தற்காலிக அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டதற்குப் பிறகு மிக மோசமான பதற்ற நிலையை உருவாக்கியதோடு, இரு நாடுகளும் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபடவும் வழிவகுத்தது.
இதற்கிடையில், வளைகுடா பகுதியில் அண்மைக்காலமாக நிலவி வரும் மோதல் போக்குகளை நிறுத்தவும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான சர்ச்சை குறித்து கத்தாரில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது எண்ணெய் விலை மேலும் உயர்வதைக் கட்டுப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு உற்பத்தியாளர்கள் தற்காலிக உடன்படிக்கைக்கு முன்னதாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரித்ததை அடுத்து, சரக்குகளை விரைவாக அனுப்பும் நோக்கில் சவுதி அரேபியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான அராம்கோ (Aramco) செயல்பட்டு வருகிறது. இதன்படி, ஹோர்முஸ் நீரிணைக்கு மேற்கே உள்ள அதன் ராஸ் தனுரா (Ras Tanura) முனையத்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மசகு எண்ணெய் ஏற்றும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.
அமெரிக்கா-ஈரான் உடன்படிக்கை எண்ணெய் சந்தையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்திருந்தாலும், கப்பல்களின் வரத்துத் தேக்கம், சேதமடைந்த உள்கட்டமைப்பு, உற்பத்தி முடக்கம் ஆகியவற்றால் நேரடி விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “எண்ணெய் விநியோகம் மோதலுக்கு முந்தைய நிலையை எட்டுவதற்கு இந்த ஆண்டின் எஞ்சிய நாட்கள் முழுவதும் தேவைப்படலாம்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
